ராஜாக்கள் நாடுகளை ஆட்சி செய்கின்ற காலங்களில் குதிரைப்படை என்று ஒரு தனிப்படைப் பிரிவே இருந்தது. மேலும் குடிமக்களின் நலன்களைப் பார்ப்பதற்காக மன்னர்கள் குதிரைகளில் சவாரி செய்த கதைகளும் நிறையவே இருக்கன்றன. எனவே ராஜாக்கள் குதிரை ஓடுவது ஒன்றும் அதிசயமல்ல.
ஆனால் நாம் இங்கு சொல்லப் போவது ராஜபக்ஸாக்களின் குதிரை ஓட்டம் பற்றிய தனிக் கதை. ஸ்ரீமா அம்மையார் தனது காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதற்கான கல்வித் தகைமையே இல்லாமல் சட்டத்ரணி பரீட்சைக்கு தோற்ற வாய்ப்பு வழங்கி இருந்தார்.
அப்போது மஹிந்த ராஜபக்ஸாவுக்காக படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பெர்ணண்டோ பிள்ளை ஆள்மாறாட்டம் செய்து குதிரை ஓடினாராம். இது நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் பரவலாகப் பேசப்பட்டு வந்திருக்கின்றது.
மஹிந்த ராஜபக்ஸாவின் அரசியல் வாரிசும் மூத்த மகனுமான நாமல் ராஜபக்ஸ சட்டத்தரணி பரீட்சைக்குத் தோற்றிய போது அவருக்குத் தனி அறை வழங்கப்பட்டது மற்றுமன்றி பரீட்சை எழுதுவதற்கும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
இது தொடர்பான முறைப்பாடுகள் அந்த நாட்களிலே கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படி முறைப்பாடு கொடுத்தவர் ராஜபக்ஸாக்களின் அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலிருந்தே தப்பியோடி இருக்கின்றார்.
இதற்கான நியாயமான விசாரணைகள் நடக்குமாக இருந்தால் தான் நாட்டுக்கு வந்து தான் சாட்சி வழங்கத்தயாராக இருப்பதாக முறைப்பாட்டாளர் தெரிவித்திருக்கின்றார். விவகாரம் இப்போது நீதி மன்றத்தில் இருக்கின்றது.
ராஜபக்ஸாவின் இரண்டாவது மகன் யோசித்த கடற்படை அதிகாரியாகவர அவரது கல்வித் தகைமை போதாமல் இருந்தது. அதனால் அந்தக் கல்வித் தகைமையில் ஊழல்-திருத்தம் நடந்தது. பின்னர் அவர் சிறந்த கடற்படை அதிகாரி விருதும் பெற்றிருந்தார். இது முழுக்க முழுக்க அரசியல் அதிகாரத்தை பாவித்த நடந்த அக்கிரமம்.
மூன்றாவது மகன் ரோஹித்த-சிச்சி உயர்தர கலைப் பிரிவில் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் கோட்டை விட்டார். பின்னர் ரீகெரக்ஸன் போட எல்லாம் பீ தரச் சித்தி என்று பெறுபேரு வந்திருக்கின்றது.
இது எப்படிச் சாத்தியம். விடைதாளையே மாற்றித்தான் இது நடந்ததாம். அத்துடன் இவர் விண்வெளி விஞ்ஞானியாக ரொக்கட் விட்டு நாடகமாடி கதைகள் இப்போது நாட்டில் வைரலாகி வருகின்றது. எனவே ஒட்டுமொத்தமாக இந்த ராஜபக்ஸாக்கள் அனைவரும் குதிரை ஓடியவர்கள்தான்.
அத்துடன் இந்தக் குடும்பத்துக்கு ஊழல் மோசடிகள் கொள்ளை கொலை என்று டசன் கணக்கான முறைப்பாடுகள் நீதி மன்றின் நிலுவையில் இருக்கின்றது.





