குடிகளுக்கோர் பகிரங்க மடல்!

 -நஜீப் பின் கபூர்-

“ஒரு முறை ஜே.ஆர் அவரவர் பாதுகாப்பை

அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்

என்று சொல்லி இருந்தார்.

அது  போல இன்று அரசாங்கம்

மக்களைக் கைவிட்டு விட்டது.

அவர்களிடம் நம்பிக்கையான

எந்தப் பாதுகாப்பும் குடிகளுக்குக் கிடையாது.

எனவே ஒவ்வொருவரும் எப்படி

தமது உயிர்களைத் தமது

குடும்ப உறுப்பினர்களை வரும் இந்த அழிவிலிருந்து 

காப்பாற்றிக் கொள்ளப் போகின்றோம் என்பதனை

அவரவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும்”

 

இந்தப் பகுதியில் இதுவரை காலமும் நாம் பெருந்தொகையான கட்டுரைகளை எழுதி வந்திருக்கின்றோம். அதில் நமது அரசியல் பற்றியும் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் பற்றியும் நிறையவே பேசியும் வந்திருக்கின்றோம்.

நாட்டில் இப்படி ஒரு நெருக்கடி நிலை விரைவில் வர இருக்கின்றது என்று ஜனாதிபதிக்கோர் பகிரங்க கடிதம் என்ற தலைப்பிலும் ஒரு கட்டுரையை நெடுநாளைக்கு முன்னரே எழுதி இருந்தோம்.

இன்று ஒரு பகிரங்கக் கடிதம் மூலம் நமது குடிமக்களுக்கு சில செய்திகளைச் சொல்ல நினைக்கின்றோம். அதற்கு முன்னர் நாம் எமது வார இதழல் எழுதிய கட்டுரைகள் தொடர்பான சில  நினைவூட்டல்களை தொட்டுவிட்டு விடயத்துக்கு வரலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

அக்டோபர் 13 2019 ஞாயிறு

‘வேட்;பாளர்களின் பலம் பலயீனம்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘கோட்டா  பக்குவப்பட்ட ஒரு அரசியல்வாதியோ பேச்சாளரோ அல்ல. பேரினத்தவரின் உச்சகட்ட ஆதரரவு அவருக்கு இருக்கின்றது’ என்றும் எழுதி இருந்தோம்.

நவம்பர் 17 2019 ஞாயிறு

 ‘புதிய ஜனாதிபதி வரவு’ என்ற கட்டுரையில் எழுதும் போது ‘கோட்டா ஒரு அமெரிக்காப் பிரசையாக இருந்தாலும் தேர்தலில் வெற்றி பெற்று அவர் பதிவியேற்பார். சிறுபான்மைத் தலைவர்கள் சஜித் வெற்றி பெறுவார் என்று தமது சமூகத்துக்குப் பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்’ என்றும் எழுதி இருந்தோம். (இது தேர்தல் முடிவுக்குக்கு ஒருநாள் முன்னரான கட்டுரை.)

நவம்பர் 08 2020 ஞாயிறு

‘ஜனாதிபதிக்கோர் ஓர் பகிரங்கக் கடிதம்’ என்ற தலைப்பில் வரவிருக்கும் நெருக்கடிகள் தொடர்ப்பில் எச்சரிக்கை செய்து நாம் எழுதியிருந்த வார்த்தைகள் இவை.

‘உங்கள் தலைமையில்  நாடாளுமன்றத்திலுள்ள அனைத்துத் தரப்பினரையும் உள்வாங்கிய ஒரு செயலணியியை நீங்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். அந்த அனைத்துத் தரப்பினரினதும் சம்மதத்துடன் ஒரு பொது வேலைத் திட்டம் துறைசார் நிபுணர்களின் உதவியுடன் அவசரமாக வடிவமைக்கபப்பட வேண்டும்.

இவ்வேலைத் திட்டம் கட்சிகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பலானதாகவும் அமைய வேண்டும். இதில் தங்களது தனிப்பட்ட தலையீடு கூட தவிர்க்கப்பட வேண்டும்’ என்றும் சொல்லி இருந்தோம்.

இந்த பதிவுகளை நாம் ஏன் இங்கு மீண்டும் குறிப்பிடுகின்றோம் என்றால் வரப்போகும் நெருக்கடிகள் தொடர்பில் நாம் நன்கு அறிந்து வைத்திருந்ததால் இந்த செய்திகளை அன்றே சொல்லி இருந்தோம். ஆனால் இந்த நிமிடம்வரை ஆட்சியாளர்கள் மக்களுக்கு ஆரோக்கியமான எந்தத் தீர்மானங்களை எடுக்கவில்லை.

இன்றும் தமக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றித்தான் நாடாளுமன்றத்தில் முன்னுரிமை கொடுத்து உறுப்பினர்கள் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். தமது இழப்புகளுக்கு நஷ்டஈடு பெற்றுக் கொள்வதில்தான் அவர்கள் ஆர்வமாக இருக்கின்றார்கள்.

அவர்களுக்கு ஏற்பபட்ட இழப்புக்கள், பாதிப்புக்கள் நாகரிகமான நடவடிக்கை என நாம் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் தேன் கூட்டுக்குக் கல்லெறிந்து மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது இருந்த கோபம்தான் இதன் மூலம் வெளிப்பட்டது. இதனை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பகிரங்கமாக பேசியும் இருக்கின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் இருக்கின்ற இரு டசன்களுக்கும் குறைவான உறுப்பினர்கள்  பார்க்கின்ற முட்டால்தன வேலையால் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றாலே கேவலம் கெட்ட ஒரு கூட்டம் என  சமூகத்தின் பார்வை இருக்கின்றது என்று கடந்த அமர்வில் சில ஆளும்தரப்பு உறுப்பினர்களே பேசி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அட்டகாசமான நமது ஆட்சியாளர்கள், டொலர் பற்றக்ககுறை, பொருளாதரா நெருக்கடி, இந்த நெருக்கடிகளில் இருந்து நாம் எப்படி மீள் எழுவது என்பதுதான் இப்போதுள்ள கேள்விகள். இந்த விடயங்கள் தொடர்பில்தான் நாம் குடி மக்களுக்கு சில செய்திகளை பகிரங்கமாக சொல்ல எதிர்பார்க்கின்றோம்.

நாடு விடுதலை பெற்றதிலிருந்து நம்மை ஆட்சி செய்த தலைவர்கள் துவக்க காலத்தில் நம்பிக்கையுடன் காரியம் பார்த்திருக்கின்றார்கள் என்று கூறினாலும், அவர்களும் நமக்கு நிறையவே அப்பட்டமான பொய்களை சொல்லி இருக்கின்றார்கள்.

விண்ணிலிருந்து அரசி எடுத்துவருவது, எட்டுக்கிலோ தானியம் தருவது இவற்றில் ஜனரஞ்சகமான கதைகளாக இருந்தாலும், அதற்கு முன்பிருந்து, அதாவது டட்லி பிரதமராக இருந்து மஹவலி அபிவிருத்தித் திட்டத்தை பொல்கொல்லையில் துவக்கி வைத்து உரையாற்றும் பேது பேசிய ஒரு பத்திரிகைக் குறிப்பை நமக்குப் அண்மையில் பார்க்க முடிந்தது.

அதில் அவர் இந்தியாவுக்கு மின்சாரம் ஏற்றுமதி செய்வது பற்றியும், மீண்டும் பராக்கிரம பாகு யுகம் வருகின்றது. நாம் ஆசியாவின் நெல்களஞ்சியம் இங்குதான் அமைய இருக்கின்றது. உலகிற்கே நாம் அரிசி ஏற்றுமத்தி செய்யப் போகின்றோம் என்றெல்லாம் அதில் சொல்லி இருந்தார்.

இதே போன்று மன்னார் பேசாலையில் ஸ்ரீமா அம்மையார் காலத்தில் எண்ணை ஆய்வு செய்யப்பட்ட போது குபீர் குபீர் என்று மசகு எண்ணை பீரிட்டுக் கொண்டு வருகின்றது என்று அந்தக் காலத்துப் பத்திரிகைகள் அரசியல்வாதிகள் பேச்சை நம்பி தலைப்புச் செய்தி கொடுத்திருந்தன.

ஏன் அவ்வளவு தூரத்துக்குப் போக வேண்டும் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முன்னர் அமைச்சர் பௌசி எரிசக்தி அமைச்சராக இருந்த போது 2012ல் இருந்து நமக்கு நல்ல காலம். உள்நாட்டிலிருந்து வரும் எரி பொருளை நாம் பாவிக்க இருக்கின்றோம். மன்னாரில் எரி பொருள் இருப்பது உறுதியாகிவிட்டது என்றும் கதை விட்டிருந்தார்.

ஆசியவின் ஆச்சர்யம் நாமும் சிங்கப்பூராக போகின்றோம் என்ற கதைகள் எல்லாம் எமது தலைவர்கள் மேடைகளில் சொல்ல எப்படியெல்லாம் நாம் கரகோஷம் எழுப்பி இருக்கின்றோம். ஜயவேவா போட்டிருக்கின்றோம். இந்தக் கதைகள் எல்லாம் தற்போது மூன்று தலைமுறைகளாக நடந்து கொண்டிருக்கின்றன என்பதனை நாம் எப்போது உணர்வுபூர்வமாக அறிந்து அதற்குப் பதில் தேடப்போகின்றோம்.

அரசியல் செய்பவர்கள் தங்களது வெற்றிக்காக சமூகங்களை எபப்படியெல்லாம் பிளவுபடுத்தி வைத்திருந்தார்கள். வன்முறைகளை எப்படியெல்லாம் நாட்டில் கட்விழத்து விட்டிருந்தார்கள். சமகாலத்தில் அது எந்தளவுக்குப் படுபயங்கரமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது என்பதற்கு ஈஸ்டர் தாக்குதல் நல்லதோர் உதாரணம்.

இதற்குப் பின்னரும் இப்படியான சம்பவங்கள் நடக்காது என்தற்கு என்னதான் உத்தரவாதம்.? சில தினங்களுக்கு முன்னர் 18ம் திகதி புலித் தாக்குதல் பற்றி த ஹிந்துவில் வந்த கதைக்கும் நிச்சயம் ஏதோ ஒரு அரசியல் பின்னணி இருக்கத்தான் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற சமூகங்களிடத்தில் நாம் சொல்ல வருகின்ற செய்தி என்ன வென்றால் ஏதோ தேவைகளுக்காக உள்நாட்டுச் சக்திகளும் சர்வதேச சக்கதிகளும் நமக்குள் பிளவுகளை ஏற்படுத்தி வருகின்றன. சமூகத்துக்காக அரசியல் செய்கின்றோம் என்று சொல்லிக் கொண்டு இன ரீதியாக கட்சிகள் அரசியல் வியாபாரம் செய்து கொண்டிருக்கின்றன.

ஒரு காலத்தில் சமூகத்துக்கு நல்லது செய்த இனத் தலைவர்கள் இருந்தார்கள் என்பதனையும் மறக்க முடியாது. ஆனால் இன்று சமூகத்தை ஒட்டு மொத்தமாக சந்தையில் வைத்து வியாபாரம் செய்கின்ற அரசியல்வாதிகள் சமூகத்தின் பேரில் அரசியல் கட்சிகளை வழி நடத்துகின்றார்கள்.

பணத்துக்காக டீல் அரசியல் செய்த தனித்துவத் தலைவர்களே இன்று பணத்துக்காக உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்படுகின்றார்கள் என்று நாடாளுமன்றத்தில் ஊழையிடுகின்றார்கள். டீல் அரசியல் பற்றி விவாதிப்போம் என்று அவர்களுடன் இருந்த சகாக்களே இன்று சவால் விட்டு பகிரங்க விவதத்துக்கு அழைத்தாலும், அவர்கள் தலைமறைவாகி வேறு கதைகளைச் சொல்லிச் சமாளிக்கின்றார்கள்.

அதனால்தான் கட்சிகளை அவர்கள் சமூக மயப்படுத்தாமல் கையாட்களை வைத்து கட்சி அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள் அதற்கேற்ற வகையில் அவர்கள் கட்சி யாப்புக்களையும் செயற்குழுக் குழுக்களையும் வைத்திருக்கின்றார்கள். இதனை சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கட்சிகள் சமூகத்துக்கானதல்ல தலைவர்களினதும் கையாட்களின் பிழைப்புக்கானவை.

சமூகத்தின் அரசியல் தலைமைத்துவமும் பிரதிநித்துவம் முற்றிலும்  பணத்தில்தான் தீர்மானமாகின்றது. கட்சி ரீதியிலான அரசியல் டீல்கள் பல்டிகள், தனி நபர் டீல்கள் பல்டிகள் தற்போது நமது நாடாளமன்றத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள்.

இவை எல்லாம் மாறியாக வேண்டும் என்று இன்று மக்கள் மத்தியில் கடுமையாக விவாதம் ஏற்பட்டிருந்தாலும் தேர்தல் என்ற அறிவிப்பு வந்தால் காசுக்காக அரசியல் தலைவர்கள் மக்களை விலைக்கு வாங்கி தெருவில் படை நகர்த்தி தமது வல்லமையைக் காட்சிப் படுத்துகின்ற நடைமுறை வழக்கம் போல் இருக்கத்தான் செய்யும் என்பது நமது எதிர்பார்ப்பு.

எனவே சமூகங்கள் தமது பேரில் இயங்குகின்ற கட்சிகளை தூய்மைப்படுத்தும் போராட்டங்களைத் துவங்க வேண்டும் என நாம் குடிகளுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.

இன்று இனவாதம் பேசிய சண்டித்தனமான குருமார்களைக் தெருவில் காணவில்லை. அல்லது அவர்கள் தலைமாறைவாகி இருக்கின்றனர். அதே போன்று இனவாதம் கக்கிக் கொண்டிருந்த ஊடகங்களும் சுருதியை மாற்றி இன்று செய்தி சொல்கின்றன. இதனையும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் எந்த நேரத்திலும் தமது பழைய உருவத்தை காட்டலாம் என்று நாம் மக்களை எச்சரிக்கின்றோம்.

மே 9 சம்பவத்துக்கு பின்னரான அரசியலைச் சற்றுப் பாருங்கள் பிரதமர் மஹிந்த போய் அந்த இடத்திற்கு ஒரே ஒரு ஆசனத்தை வைத்திருக்கின்ற ரணில் பிரதமர் என்று வந்திருக்கின்றார். இதனை ஜனாநாயகம் என்று சொல்வதா? அரசியல் வன்முறை என்று சொல்வதா.?

ரணில் நாடாளுமன்த்தில் பேசும் போது தான் எந்தப் பக்கத்தில் இருக்கின்றேன் என்பது தனக்கே புரியவில்லை என்று சொல்லி இருந்ததும் தெரிந்ததே. தனக்கு அதிகாரத்தை தந்தால் சர்வதேசத்துடன் உள்ள நெருக்கத்தைப் பாவித்து நாட்டை மீட்டெடுப்போன் என்று கூவிக் கொண்டிருந்தவர் இப்போது காஜானக் காலி என்ற கதையை சொல்லி கையை விரிக்கின்றார்.

அவருக்குச் சாதகமான சில ஊடகங்கள் அங்கிருந்து காசு வருகின்றது இங்கிருந்து வருகின்றன என்று கதை அளந்து கொண்டிருக்கின்றது. நம்மைப் பொறுத்து மனிதன் ஒரு மாயை.

ஜப்பானிலிருந்து 15000 கோடி வருகின்றது என்று சொல்லப்பட்டது. அது உண்மை என்று வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் செலவுக்கு நாட்டுக்கு 1500 கோடி ரூபா தேவை.

அப்படிப் பார்க்கின்ற போது அந்தக் காசு வெரும் பத்து நாட்களுக்கு மட்டும்தான் போதூனது என்பதனை குடிமக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே வருகின்ற காலம் மிகவும் நெருக்கடிமிக்கது. நமக்குத் தெரிந்த வரை பட்டினிச் சாவு நிச்சயம் வருகின்றது.

கஜானாவில் ஒரு மில்லியம் டொலர்கள் கூட இல்லை என்று சொல்கின்றார் நாட்டை மீட்க வந்த நமது பிரதமர். அப்படியாக இருந்தால் உலகில் எல்லோரையும் அறிந்த அவர்தானே அதற்குப் பரிகாரம் சொல்லவும் வேண்டும். எனவே ரணில் எதையுமே சாதிக்க மாட்டார். அரச ஊழியர்களுக்கு பசில் போல் காசு அச்சடித்துத்தான் வருகின்ற மாதங்களுக்கு சம்பளம் வழங்குவார். பொறுத்திருந்து பாருங்கள்.

அரசியல் கட்சிகள் வன்முறையாக நடந்து கொள்கின்றன. அரசியல்வாதிகள் கட்சிக் கட்டுப்பாடுகளை மறந்து தன்னிச்சயாக தீர்மானங்கள்-கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். எனவேதான் அச்சம் பயம் (ஆசை பயயை) கதை சொல்லி தலைவர்களையே அரசியல்வாதிகள் கேலி செய்யும் நிலை.

சட்டம் ஒழுங்கு நீதி என்றெல்லாம் புத்தகத்தில் இருக்கின்றது. ஆனால் அதற்கு முரனாகத்தான் காரியங்கள் நடக்கின்றன. குடிமக்களின் நலனுக்குத்தான் இவை எல்லாம் என ஏட்டில் சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் அரசாங்கமே வன்முறையைக் கட்டவிழ்து விடுகின்ற போது யாரிடம் நீதியை கேட்பது.

மே 9 நிகழ்வின் போது பொலிஸ் நடந்து கொண்ட ஒழுங்கைப் பாருங்கள்.  நீதி சரியாக தனது கடமையைச் செய்யாமைக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் அரசியல் ஆதிக்கப் போட்டிதான் காரணம் என்று பகிரங்கமாக ஆளும் தரப்பினரே பேசி வருகின்றார்கள்.

குற்றவாளிகளை கைது செய் என்று ஊர்வலம் போனால்தான் பொலிஸ் கண்திறக்கின்ற நிலை. கைதுகளும் முற்றிலும் பக்கச்சார்பானவையாக நடக்கின்றன. பொலிஸ் முற்றிலும் அரசியல் மயப்பட்டிருக்கின்றது.

எஸ்எஸ்பி தரத்தில் இருக்கின்ற ஒரு பொலிஸ் அதிகாரி பல வங்கிக் கொள்ளைகளுடன் தொடர்புடையவராக இருந்தார் என்று கண்டறியப்பட்டிருக்கின்றது. அவருக்கு உயர் பதவி வழங்குவது நிராகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் உயர் மட்டச் சிபார்சில் அவர் இன்று உயர் பதவியில் இருக்கின்றார்.

எப்படி இருக்கின்றது பொலிஸ் திணைக்களம். பொலிஸ் வன்முறைக்கு ஆதரவும் பாதுகாப்பும் கொடுக்கின்ற ஒரு நாட்டில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். படைத்தரப்பு ஜனாதிபதி பிரதமர் ஆதரவு குழுக்கள் எனப் பிரிந்து செயலாற்றி வருவதை நாம் பார்க்கின்றோம். எனவே நிலமை மிகவும் ஆபத்தானது.

நமது நாட்டு நடப்புக்களை சர்வதேசம் உன்னிப்பாக பார்த்தக் கொண்டிருக்கின்றது. ஏற்கெனவே நமது ஆட்சியாளர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுக்கள் இருந்து வருவதும் தெரிந்ததே. ஐ.நா. யஸ்மின் சூக்கா, இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் எவருக்கும் நாடுகள் அடைக்களம் கொடுக்கக் கூடாது என்று கடும்தொனியில் அறிக்கை ஒன்றில் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார். இலங்கையின் சமகால சட்டம் ஒழுங்கு தொடர்ப்பிலும் அவர் கடும் விமர்சனங்களை அதில் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாம் மேற்சொன்ன அனைத்து விடயங்களையும் குடிமக்கள் ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள். எங்காவது ஓரிடத்தில் நல்ல செய்திகளோ நம்பிக்கைகளோ நமக்குத் தெரிகின்றதா? எதிர்காலம் மிகவும் பயங்கரமானது கர்மேகங்கள் சூழ்ந்ததாக இருக்கின்றன. நீங்களும் உங்கள் உறவுகளும் இந்த அவலத்தில்-ஆபத்திலிருந்து எப்படி மீளமுடியும்? அதற்கான ஏதாவது மார்க்கங்கள் இருக்கின்றனவா என்று எண்ணிப்பாருங்கள்.!

ஒரு முறை ஜே.ஆர் அவரவர் பாதுகாப்பை அவரவர்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார். அது  போல இன்று அரசாங்கம் மக்களைக் கைவிட்டு விட்டது. அவர்களிடம் நம்பிக்கையான எந்தப் பாதுகாப்பும் குடிகளுக்குக் கிடையாது. எனவே ஒவ்வொருவரும் எப்படி தமது உயிர்களை-தமது குடும்ப உறுப்பினர்களை வரும் இந்த அழிவிலிருந்து  காப்பாற்றிக் கொள்ளப் போகின்றோம் என்பதனை அவரவர்தான் முடிவு செய்து கொள்ள வேண்டும். நமது பச்சிலம் குழந்தைகளின் நிலையை-எதிர்காலத்தை சற்று எண்ணிப்பாருங்கள்.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 22.05.22

Previous Story

ஆளும் கட்சிக்கு வாக்களித்தவர்களே அவர்ககளைத் தாக்கினார்கள்! பசில் நாட்டை அழித்துவிடுவார்!!

Next Story

அவசர நிலை நீக்கம்