கனடா அரசை அலறவிடும் டிரக் ஓட்டுநர்கள்.

ஒட்டவா: கனடா நாட்டில் கொரோனா வேக்சின் தொடர்பான அறிவிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றால் மறுபுறம் மோசமான பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது.

கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர் தான், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மெல்ல மேம்படத் தொடங்கியது.

கொரோனா வேக்சின்

கொரோனா வேக்சின்கள் தீவிர பாதிப்பு ஏற்படுவதைப் பெரியளவில் குறைக்கிறது. குறிப்பாக, வேக்சின் போட்டுக் கொண்டவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் கூட, அதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படுவதில்லை. இதனால் உலகின் பல்வேறு நாடுகளும் வேக்சின் பணிகளை முன்னெடுத்துள்ளன. வேக்சின் உயிரிழப்புகளைக் குறைப்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் கூட, சிலர் வேக்சின் எடுக்கத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர்.

வேக்சின் கட்டாயம்

இதனால் உலகின் பல நாடுகளும் வேக்சின் போட்டுக் கொள்ள மறுப்பவர்களுக்கு மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி கனடா -அமெரிக்கா எல்லைகளைக் கடக்க வேக்சின் கட்டாயம் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்தார். இது கனடா நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்நாட்டின் டிரக் ஓட்டுநர்கள் கடந்த ஜன. 29ஆம் தேதி முதல் தலைநகர் ஒட்டாவாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டம்

சாலையோரங்களில் டிரக்குகளை நிறுத்திவிட்டு, தற்காலிக கூடாரங்கள் அமைத்து அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆதரவும் போராட்டத்தில் ஈடுபடுவோருக்குத் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அந்நாட்டு அரசுக்கு மிகப் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக டிரக் போராட்டங்களால் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் சில நாட்களுக்கு ரகசிய இடத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டார்.

அவசர நிலை

இருப்பினும் போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. இதையடுத்து ஒடாவா நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அந்நகர மேயர் ஜிம் வாட்சன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இந்தப் போராட்டம் நகருக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த போராட்டத்தை ஒடுக்க அரசின் அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஏனென்றால் இங்கு நிலைமை கட்டுப்பாட்டில் இல்லை. போலீசாரை விட போராட்டக்காரர்கள் அதிகளவில் உள்ளனர்.

போராட்டம் இல்லை பார்ட்டி

அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் எங்களால் அவர்களைச் சமாளிக்க முடியுமா எனத் தெரியவில்லை. டிரக் ஓட்டுநர்கள் அமைதியான முறையில் போராட்டத்தை நடத்துவதில்லை. தொடர்ச்சியாக மிக அதிக சத்தத்துடன் ஹார்ன்கள் மற்றும் சைரன்கள் எழுப்பி வருகின்றனர். சில பகுதிகளில் பட்டாசுகளையும் கூட வெடித்து வருகின்றனர். போராட்டம் என்ற பெயரில் அவர்கள் பார்ட்டி நடத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கடுமையாகச் சாடினார்.

ஸ்தமித்த கனடா

ஒட்டவா மட்டுமின்றி கனடா நாட்டில் பல்வேறு நகரங்களிலும் டிரக் ஓட்டுநர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு நாடு முழுவதும் அமைதியற்ற ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், அவை எதுவும் பெரியளவில் பலன் தருவதாக இல்லை.

Previous Story

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு பிணை

Next Story

லதா மங்கேஷ்கர் உடல் மீது ஷாரூக் கான் துப்பினாரா?