அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வளைகுடாவில் உள்ள முஸ்லிம் மற்றும் அரபு நாடுகள் இஸ்ரேலை முறைப்படி அங்கீகரித்து “ஆபிரகாம் உடன்படிக்கையில்” கட்டாயமாகக் கையெழுத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் டிரம்பின் இந்த வலியுறுத்தலை இப்போது நிராகரித்துள்ளது. இருந்தபோதிலும் அமெரிக்காவின் பிரஷர் காரணமாக பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டைச் சீக்கிரமே மாற்றும் எனத் தெரிகிறது.
அப்படி மாற்றிக் கொள்ளும்போது பாகிஸ்தானுக்கு புதியதொரு தலைவலி ஏற்படும். அது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம். பாலஸ்தீனம்- இஸ்ரேலை சுற்றிக் கடந்த பல ஆண்டுகளாகவே சர்ச்சை நீடிக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் அங்கீகரிக்க மறுக்கும் சூழலில், வளைகுடா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேல் மீது கடுங்கோபத்தில் உள்ளன.
இதனால் இந்த நாடுகள் எப்போதும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும். இதை மாற்ற அமெரிக்கா பல காலமாகத் தொடர்ந்து முயன்று வருகிறது.
டிரம்ப் அதன் ஒரு பகுதியாகவே ஆபிரகாம் உடன்படிக்கையைக் கொண்டு வந்து, அனைத்து வளைகுடா நாடுகளையும் உள்ளே எடுத்து வர அமெரிக்கா முயல்கிறது. இந்தச் சூழலில் தான் டிரம்ப் சமீபத்தில் இந்த உடன்படிக்கையில் பாகிஸ்தானும் இணைய வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ஈரானுடனான அமைதி உடன்படிக்கைக்கு இந்த உடன்படிக்கை அத்தியாவசியம் என டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், தங்கள் சித்தாந்தங்களை விலைபேச முடியாது என்றும் ஒருபோதும் இஸ்ரேலை ஏற்க முடியாது என்றும் பாகிஸ்தான் கூறியது. டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், “இந்த மெகா புதிரை முடிக்கச் சவூதி அரேபியா, கத்தார், பாகிஸ்தான், துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இஸ்ரேலுடன் முறைப்படி உறவை ஏற்படுத்த வேண்டும்..
இந்த உடன்படிக்கை வளைகுடாவை ஒரு மிகப் பெரிய நிதி மற்றும் பொருளாதார வளர்ச்சியை நோக்கி அழைத்துச் செல்லும். இதில் இணைய மறுப்பவர்கள் இந்த அமைதி ஒப்பந்தத்தின் எந்தவொரு பகுதியிலும் இருக்க முடியாது” என பிரஷர் கொடுத்துள்ளார்.
பாகிஸ்தான் டிரம்பின் இந்தக் கட்டளைக்கு உடனடியாகப் பதிலடி கொடுத்துள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் காவாஜா ஆசிப், “எந்தவொரு கட்டாயத்திற்கும் பணிய வேண்டிய அவசியம் பாகிஸ்தானுக்கு இல்லை.. ஒரு நாள் கூட சொன்ன வார்த்தையைக் காப்பாற்றாத, நம்பகத்தன்மை இல்லாத அந்த மனிதர்களுடன் (இஸ்ரேல்) நாம் எப்படி ஒரே மேஜையில் அமர்ந்து பேச முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அந்நாட்டின் துணைப் பிரதமர் இஷாக் தாரும் இதை முற்றிலும் நிராகரித்துள்ளார். 1967ம் ஆண்டின் எல்லைகளின்படி, கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன நாடு அமைவதை இஸ்ரேல் அனுமதிக்கும் வரை, இஸ்ரேலை நாடாக அங்கீகரிக்கப் போவதில்லை என்பதில் பாகிஸ்தான் உறுதியாக நிற்கிறது.
ஈரானுக்கு எதிராக அமெரிக்கா திடீர் தாக்குதல் அதென்ன ஆபிரகாம் உடன்படிக்கை கடந்த 2020ல் டொனால்ட் டிரம்பின் முதல் அதிபர் காலத்தில் அமெரிக்காவின் நேரடி மத்தியஸ்தம் மூலம் இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே சுமுகமான உறவை ஏற்படுத்த இந்த ஆபிரகாம் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது.
யூத மதம், இஸ்லாம் மற்றும் கிறிஸ்துவம் ஆகிய மூன்று மதங்களுக்கும் பொதுவான ‘ஆபிரகாம்’ பெயரால் இது அழைக்கப்படுகிறது இந்த உடன்படிக்கைக்கு முன்பு எகிப்து, ஜோர்டான் மட்டுமே இஸ்ரேலை அங்கீகரித்திருந்த நிலையில், இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகு ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ மற்றும் சூடான் போன்ற நாடுகள் பாலஸ்தீனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு முன்பாகவே இஸ்ரேலுடன் நேரடி தூதரக உறவுகள், வர்த்தகம், நேரடி விமானங்கள் மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகளைத் தொடங்கின.
இதில் தான் பாகிஸ்தானும் இணைய வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். சிக்கல் பாகிஸ்தான் இப்போது இதை நிராகரித்தாலும் கூட அமெரிக்காவின் கடுமையான பொருளாதார நெருக்கடி அழுத்தங்களுக்குப் பயந்து பாகிஸ்தான் இஸ்ரேலை அங்கீகரிக்கலாம்.
அப்படி அங்கீகரித்தாலும் கூட பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய சிக்கல் வரும். அதுதான் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பாஸ்போர்ட் கொள்கைதான். அதாவது உலகிலேயே பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் மட்டும்தான் “இந்த பாஸ்போர்ட் இஸ்ரேல் தவிர அனைத்து நாடுகளுக்கும் செல்லுபடியாகும்” (This passport is valid for all countries of the world except Israel) என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது
டிரம்ப் ஆசைப்படி ஆபிரகாம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டுமானால், பாகிஸ்தான் தனது பாஸ்போர்ட்டில் இந்த வரியை அடியோடு நீக்க வேண்டும். இல்லையெனில், ஒரு நாட்டை முறைப்படி அங்கீகரித்துவிட்டு, அதே நாட்டுக்குத் தங்களின் குடிமக்கள் செல்ல பாஸ்போர்ட்டில் தடை விதிப்பது என்ற விசித்திரமான சட்ட முரண்பாட்டை அது உருவாக்கும்..
சமீபத்தில் வங்கதேசமும் கூட, சர்வதேச இ-பாஸ்போர்ட் தரநிலைகளுக்கு ஏற்ப தங்களின் பாஸ்போர்ட்டிலிருந்து இந்த “Except Israel” வரியை நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.



