“ஒரே மரண ஓலமாக இருந்தது”  நடந்ததை விவரிக்கும் தமிழக பயணிகள்

288 உயிர்களை பலிவாங்கிய கோரமான ஒடிஷா ரயில் விபத்து, எப்படி நடந்தது? இந்த விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து, சென்னை வந்தவர்கள் விவரிக்கும் கண்ணீர் காட்சிகள்.

ஒடிஷாவின் பாலசோருக்கு அருகில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இடையே ஏற்பட்ட விபத்தில் 288 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த ரயிலில் பயணம் செய்த பலர் உயிர் பிழைத்து, விமானம் மூலம் சென்னை திரும்பியுள்ளனர்.

விபத்து நேர்ந்த ரயிலில் சிக்கி, உயிர் பிழைத்த ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ரமேஷ், ஜார்கண்ட் மாநிலத்தில் வசித்து வருகிறார்.

தென்காசியில் உள்ள குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக இவர் தமிழ்நாடு திரும்பிக்கொண்டிருந்தபோதுதான் இந்த விபத்து நேரிட்டது.

ஒடிசா ரயில் விபத்து, இந்தியா

“ஜார்கண்ட் மாநிலத்தில் பாகுர் மாவட்டத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் மிஷினரியாக கிறிஸ்தவப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். எங்கள் குழந்தைகள் தமிழ்நாட்டில் படிக்கிறார்கள்.

அவர்களைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்க இங்கே வரத் திட்டமிட்டிருந்தோம். என் குடும்பத்தினர் முன்பே வந்துவிட்டார்கள். நேற்று பிற்பகல் 3.20க்கு கொல்கத்தாவிலிருந்து இந்த ரயில் புறப்பட்டது. ஏ2 கோச்சில் இருந்தேன்.

ஆறரை மணிக்கு ரயில் பாலசோரை கடந்த பிறகு இந்த விபத்து நடந்தது. முதலில் கேபிள்கள் அறுந்து விழுந்து தீப்பிடித்தது தெரிந்தது. பிறகு ரயில் பயங்கரமாகக் குலுங்கியது. எல்லோரும் கீழே விழுந்தோம். ஒரே ஓலமாக இருந்தது. எங்களுடைய கோச்சுகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கிவிட்டன.

நாங்கள் ஏதோ சின்ன விபத்து என்றுதான் நினைத்தோம். ‘எல்லோரும் பெட்டிகளை எடுங்கள், கோச் தீப்பிடித்துவிடும்’ என்று பலர் கத்தினார்கள்.

ஒடிஷா ரயில் விபத்து எப்படி நடந்தது? – நேரில் பார்த்ததை விவரிக்கும் தமிழக பயணிகள்

எல்லோரும் பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு வெளியில் வந்துவிட்டோம். முன்னால் இருந்த பெட்டிகளில் மரண ஓலமாக இருந்தது. ஒரு ஸ்லீப்பர் கோச் தூரத்தில் விழுந்திருந்தது. விபத்து நடந்த இடத்திற்குப் பக்கத்திலிருந்த ஊரைச் சேர்ந்தவர்கள் பயணிகளை மீட்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள்.

இறந்தவர்களின் உடல்களும் கை கால்களை இழந்தவர்களின் உடல்களும் கிடந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது.

மாலை ஏழு மணியளவில் இந்த விபத்து நடந்தது. மின்சாரக் கம்பிகள் அறுந்துவிட்டதால் ஒரே இருட்டாக இருந்தது. 7:15 மணி வாக்கில் போலீஸ், ஆம்புலன்செல்லாம் வர ஆரம்பித்து, ஏழரை மணியளவில் ஆட்களை தூக்கிச்செல்ல ஆரம்பித்துவிட்டார்கள். கிடைத்த வண்டியில் எல்லாம் ஆட்களை ஏற்றிக் கொண்டு சென்றார்கள்.

ஒடிசா ரயில் விபத்து, இந்தியா

இறந்தவர்களுடன் வந்தவர்கள் அழுததைப் பார்க்கும்போது வேதனையாக இருந்தது. எட்டரை மணிவரைதான் எங்களை அந்த இடத்தில் இருக்க விட்டார்கள். எங்களைப் போல் எந்தக் காயமும் இல்லாதவர்கள் நாங்களே ஏற்பாடுகளைச் செய்து கொண்டோம்.

விபத்து நடந்த இடத்திலிருந்து கால் மணி நேரம் நடந்தோம். பைபாஸ் ரோடு வந்தது. அங்கிருந்து நிறைய பேருந்துகள் புவனேஸ்வருக்கு சென்றன. பேருந்தைப் பிடித்து புவனேஸ்வர் வந்தோம். பிறகு அங்கிருந்து விமானத்தைப் பிடித்து சென்னைக்குப் புறப்பட்டோம்.

தமிழ்நாடு அரசின் தரப்பிலிருந்து தொடர்ந்து போன் செய்து கொண்டே இருந்தார்கள். பணம் அவ்வளவாக இல்லாதவர்கள் புவனேஸ்வரிலிருந்து விசாகப்பட்டணத்திற்குப் பேருந்தைப் பிடித்தனர். சிலர் புவனேஸ்வர் பேருந்து நிலையத்திலிருந்து ரயில் நிலையத்திற்குப் போய், ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டார்கள். அவர்களுக்கு சிறப்பு ரயிலில் இடம் கிடைத்திருக்கலாம்,” என்கிறார் அவர்.

ஒடிசா ரயில் விபத்து, இந்தியா

சென்னை லயோலா கல்லூரியில் படித்துவரும் மாணவியான ராஜலட்சுமி, கொல்கத்தாவில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார். அவர் தனது இன்டர்ன்ஷிப்பை முடித்து சென்னை திரும்ப இந்த ரயிலில் ஏறியிருந்தார்.

“நான் பி8 பெட்டியில் பயணம் செய்தேன். எங்க கோச்சில் பெரிய சேதம் இல்லை என்றாலும் திடீரென ரயில் நின்றதால் நிலை தடுமாறி விழுந்து பலருக்கு முகத்தில் அடிபட்டது. எஞ்சின், முன்பதிவு செய்யாத பெட்டிகள், ஸ்லீப்பர் பெட்டிகள் போன்றவை முழுமையாகச் சேதமடைந்துவிட்டன.

ஒவ்வொரு பெட்டியும் ஒவ்வொரு பக்கம் போய் விழுந்திருந்தது. முன்பதிவு செய்யாத பெட்டியில்தான் நிறைய பேர் இறந்து போயிருப்பார்கள்.

விபத்து நடந்தவுடன் எனது பெட்டி முழுக்கச் சென்று யாருக்காவது அடிபட்டிருக்கிறதா என்று பார்த்தேன். ஐந்தாறு பேருக்கு மட்டும் அடிபட்டிருந்தது. என்னுடன் அமர்ந்திருந்தவருக்கு மூக்கு உடைந்திருந்தது. நான் எனது கோச்சை விட்டு வெளியில் வந்து பார்த்தபோது பல உடல்களைப் பார்க்க முடிந்தது. 15-20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வந்தது.

விபத்து நடந்த பிறகு எங்கே போவதெனத் தெரியாததால், அதே இடத்தில் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டிருந்தோம். சிலர் திரும்பி கொல்கத்தாவுக்கே போய்விட்டார்கள்.

ஒடிஷா ரயில் விபத்து

சிலர் சென்னை வர முயற்சி செய்தார்கள். பொதுப் பெட்டியில் இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சென்னைக்கும் கேரளாவுக்கும் வேலை தேடிச் செல்பவர்கள். 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள்.

அழுதுகொண்டிருந்த ஒருவரிடம் விசாரித்தபோது, அவர் சொன்ன தகவல் திடுக்கிட வைத்தது. அவரோடு வந்தவர் இதயமெல்லாம் வெளியில் வந்து இறந்துவிட்டதாகச் சொன்னார்,” என்கிறார் ராஜலட்சுமி.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் கொல்கத்தாவில் வேலை பார்க்கிறார். சொந்த ஊருக்கு வருவதற்காக இந்த ரயிலில் பயணம் செய்தார்.

“பாலசோரை தாண்டி 25 கி.மீ. தூரத்தில் ஒரு சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. அதிவேகமாகச் சென்ற கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதன் மீது மோதியத்ஹ மட்டும் உள்ளிருந்து பார்த்தபோது தெரிந்தது.

வயர்கள் எல்லாம் அறுந்து விழுந்து தீப்பிடித்தன. ஏதோ நடந்துகொண்டிருக்கிறது என்று யோசித்தபோதுதான் எங்கள் கோச் பயங்கரமாகக் குலுங்க ஆரம்பித்தது.

ஒடிஷா ரயில் விபத்து

படுக்கையில் இருந்தவர்கள் எல்லாம் கீழே விழுந்தார்கள். நானும் கீழே விழுந்துவிட்டேன். எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள், கத்தினார்கள். அதற்குள் வண்டி நின்றுவிட்டது. வெளியில் வந்து பார்த்தபோதுதான் ஒரே மரண ஓலமாக இருந்தது.

விபத்துக்குள்ளாகாத பெட்டிகளில் இருந்தவர்கள் வெளியில் வந்து அடிப்பட்டவர்களைக் காப்பாற்ற ஆரம்பித்தோம். பிறகு அக்கம்பக்கத்து மக்கள் வந்து உதவ வந்தார்கள்.

டிரைவர் பிரேக்கை அழுத்தியதால்தான் நாங்கள் உயிரோடு இருக்கிறோம். இல்லாவிட்டால் நாங்களும் உயிரோடு இருந்திருக்க மாட்டோம். எங்கள் ரயிலின் எஞ்சின் சரக்கு ரயில் மீது ஏறிவிட்டது.

மற்ற பெட்டிகள் பக்கவாட்டில் விழுந்தன. பல பெட்டிகள் குப்புற விழந்தன. இறந்துபோன பலர் 25 வயதிலிருந்து 50 வயதுக்குள் இருப்பார்கள். பெரும்பாலும் வேலைதேடி வந்தவர்கள்.

முன்பதிவில்லாத பெட்டியில் வந்த பலர் ஓபன் டிக்கெட்டில் ஏறியிருந்தார்கள். நான் பி 1இல் வந்தேன். மிகுந்த சேதம் பொதுப் பெட்டிகளுக்கும் ஸ்லீப்பர் கோச்சுக்கும்தான்,” என்கிறார் நாகந்திரன்.

உயிர் பிழைத்தவர்களைச் சென்னை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சிறப்பு ரயில் ஞாயிற்றுக் கிழமையன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.

Previous Story

விமலுக்கு எதிராக வழக்கு!

Next Story

பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? சிகிச்சையை நாடும் பெண்கள்