ஒமிக்ரான்:58 ஆண்டுகளுக்கு முன்பே திரைப்படம் ?

 

கொரோனா வைரசின் புதிய திரிபான ஒமிக்ரான் கடந்த மாதம்தான் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட நிலையில் இது குறித்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னரே திரைப்படம் வெளியானது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது எந்த அளவுக்கு உண்மை?

இதற்கு முன் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுகளுக்கு ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா என கிரேக்க எழுத்துகளில் வைத்த உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபுக்கு ”ஒமிக்ரான்” என்று பெயர் வைத்தது. இதை ”கவலைக்குரிய திரிபு” என்றும் வகைப் படுத்தியுள்ளது.

இதையடுத்து தென் ஆப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு பல நாடுகள் பயணத்தடை விதித்துள்ளன. இந்தியாவில் விமான நிலையங்களில் கூடுதல் பரிசோதனைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. வெளிநாட்டில் இருந்து பெங்களூரு வந்த இருவருக்கு ஒமிக்ரான் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து ஒமிக்ரான் குறித்த தேடல்களும் தகவல்களும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.இதன்படி, “தி ஒமிக்ரான் வேரியன்ட்” என்கிற பெயரில் சினிமா ஒன்று 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது என்று நெட்டிசன்கள் பகிர்ந்தனர். இது வைரலாகியது.

இந்திய அளவில் முக்கிய இயக்குநராக அறியப்பட்டுள்ள ராம்கோபால் வர்மாவும், ”இதை நம்பினால் நம்புங்கள். இந்த படம் 1963ம் ஆண்டே வெளியாகியுள்ளது. டேக்லனை பாருங்கள்,” என்று பதிவிட்டிருந்தார்.

அவர் ட்விட்டரில் பகிந்திருந்த போஸ்டரில் “உலகம் கல்லறயாகிய நாள்” என்கிற,டேக்லைன் இருந்தது.இதைத் தொடர்ந்து பலரும் வேகமாக பகிர்ந்து, இதை வைரலாக்கினர். ஆனால், இது உண்மையில்லை.இது குறித்த நமது உண்மை கண்டறியும் முயற்சியில் உறுதியாகியுள்ளது.

அயர்லாந்தைச் சேர்ந்த இயக்குநரும் எழுத்தாளருமான பெக்கி சீட்டில், கடந்த நவம்பர் 28ம் தேதி தனது ட்வீட்டர் பக்கத்தில், சில திரைப்பட போஸ்டரில் சில திருத்தங்களை போட்டோஷாப்பில் செய்து பகிர்ந்தார். எழுபதுகளில் வந்த படங்களின் போஸ்டரில் ”தி ஒமிக்ரான் வேரியன்ட்” எனத் தாம் போட்டோஷாப் செய்ததாக அவர் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதை ஆதாரமாக் கொண்டு பலரும் பகிர்ந்துள்ளனர்.

ஆனால், “இதை நான் விளையாட்டாக செய்தேன். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்,” என்கிற அவரது மறு பகிர்வை கவனிக்க தவறி விட்டனர். இந்த விளக்கத்தை டிசம்பர் 1ஆம் தேதி அவர் வெளியிட்டிருந்தார். 1963ம் ஆண்டு யுகோ கிரிகோர்டி எனும் இத்தாலிய திரைப்பட இயக்குநரின் இயக்கத்தில் ‘ஒமிக்ரான்’ என்கிற பெயரில் ஒரு படம் வந்துள்ளது. இது ஓர் அறிவியல் புனைவு கதை. ஆனாலும் இதற்கும் கொரோனா திரிபு ஒமிக்ரானுக்கும் தொடர்பு இல்லை.

Previous Story

கார்சல் யுனைட்டட் கிண்ண கிரிக்கட் போட்டி 2021

Next Story

பாரதியார் தினம்: வறுமை வாழ்க்கை ?