
‘ஐ லவ் முகமது’ (I love Mohammad) என்ற வார்த்தைகள் அடங்கிய போஸ்டர்கள் மற்றும் பேனர்களால் வட இந்தியாவில் சில நகரங்களில் பதற்றம் எழுந்த நிலையில், தற்போது கர்நாடக மாநிலம் தேவநகரே மாவட்டத்திலும் இதுதொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, அமைதியை குலைத்ததாக போலீஸார் சிலர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிபிசி இந்தியிடம் பேசிய காவல்துறை அதிகாரிகள், பொதுச் சொத்தாக உள்ள தண்ணீர் தொட்டியின் மீது பேனர் வைக்கப்பட்டுள்ளதாக, உள்ளூர் மக்கள் சிலர் இரு தினங்களுக்கு முன்பு புகார் தெரிவித்ததாக கூறினர்.
இதையடுத்து, அந்த பேனரை நீக்குமாறு இளைஞர்கள் சிலரிடம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
பெயர் தெரிவிக்க விரும்பாத அதிகாரி கூறுகையில், “உள்ளூர் முஸ்லிம் தலைவர்களிடம், பதற்றம் அதிகரிப்பதை தடுக்க அந்த பேனர்களை நீக்குமாறு கூறினோம். ஆனால், அவ்வாறு செய்யப்படவில்லை. புதன்கிழமை இரவு, சில இளைஞர்கள் இந்து குடும்பம் ஒன்றின் வீட்டின் முன்பு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்” என்றார்.
போலீஸாரின் கூற்றுப்படி, இதையடுத்து அப்பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், சிலர் சாதிய ரீதியாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேவநகரே கிழக்கு பகுதியின் ஐஜிபி ரவிகாந்தே கௌடா பிபிசி ஹிந்தியிடம் கூறுகையில், “போலீஸ் தலையீட்டால், நிலைமை மோசமாவது தடுக்கப்பட்டது. இருதரப்பையும் சமாதானம் செய்து, போஸ்டர்கள் மற்றும் பேனர்களை நீக்கினோம்,” என்றார்.
எஸ்.பி உமா பிரசாந்த் கூறுகையில், “இதுதொடர்பாக இரண்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் ஈடுபடுதல், சட்டவிரோதமாக கூடுதல், எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.





