ஏவுகணை சோதனை: பாகிஸ்தானுக்கு பாராட்டு, இந்தியாவுக்கு சில கேள்விகள் 

-சஹர் பலோச்-

“எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்,” என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

2022ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பாகிஸ்தானின் மியான் சன்னுவில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணை கலன் (பிரமோஸ் போன்ற வடிவிலானது) “தற்செயலாக” விழுந்த பிறகு, பாகிஸ்தான் “தீர்க்கமாக சிந்தித்து வெளிப்படுத்திய எதிர்வினையை” பாராட்ட இந்திய கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த உறுப்பினரான சுஷாந்த் சிங்கின் பயன்படுத்திய வார்த்தைகள் இவை.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை பாராட்டிய ஒரே இந்தியர் சுஷாந்த் சிங் மட்டுமல்ல. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான உறவுகள், சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் அணுசக்தி திறன்களை கருத்தில்கொள்ளும்போது, இந்த ‘தற்செயலான ஏவுகணை’ சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையே மோதலுக்கு வழி வகுத்திருக்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆனால் இப்படி நடக்கவில்லை. பாகிஸ்தான் அரசுக்கே இதன் பெருமை சாரும் என்று பல இந்திய ஊடகவியலாளர்கள் மற்றும் ராணுவ நிபுணர்களும் கூறுகின்றனர். குறிப்பாக இந்தியா இதை ஏற்றுக்கொள்ள இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்ட சூழ்நிலையில் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

பாகிஸ்தானின் கானேவால் மாவட்டத்தில் உள்ள மியான் சன்னு நகரில் மார்ச் 9ஆம் தேதி எதிர்பாராத ஒரு சம்பவம் நடந்தது. அதிவேகமாக பறந்துவந்த பொருள் ஒன்று உள்ளூர் குடியிருப்பு பகுதி மீது விழுந்தது.

பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறையின் (ISPR) தலைமை இயக்குநர் ஜெனரல் மேஜர் பாபர் இஃப்திகார், மார்ச் 10 அன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் “மியான் சன்னுவில் விழுந்த அதிவேகப் பொருள் அநேகமாக இந்திய ஏவுகணையாக இருக்கலாம்” என்று கூறினார்.

அடுத்த நாள், மார்ச் 11 ஆம் தேதி, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “வழக்கமான பராமரிப்பு பணியின் போது தொழில்நுட்பக் கோளாறால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டது” என்று ஒப்புக்கொண்டது. மேலும் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

“ஒரு பெரிய நகரத்தை நோக்கி ஏவுகணை சென்றிருந்தால் என்ன ஆகியிருக்கும்?”

இது குறித்து புது டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் சுஷாந்த் சிங் பிபிசியிடம் பேசினார்.

“இந்த ஏவுகணை ஒரு பெரிய நகரத்தை நோக்கிச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதுதான் இப்போது விவாதத்தின் மையமாக உள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை,” என்று குறிப்பிட்டார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று சுஷாந்த் கூறினார்.

“அப்படி இருந்தபோதிலும், எல்லைக்கு அப்பாலில் இருந்து வந்த ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதா இல்லையா என்பதை எந்த பாதுகாப்பு அமைப்பும் கணிக்க முடியாது.”என்கிறார் அவர்.

“எந்தவொரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவே கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற வடிவத்துடன் ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. பாகிஸ்தான் அப்படி செய்யாதது, புத்திசாலித்தனமான முடிவு மட்டுமின்றி ஒரு விவேகமான முடிவாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப், மார்ச் 11ஆம் தேதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,” 40,000 அடி உயரத்தில் இருந்து சூப்பர்சானிக் ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் வந்தது. இந்த ஏவுகணை ஏவப்பட்ட பிறகு, அது தவறுதலாக ஏவப்பட்டது என்று சொல்ல இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் ஆயின,”

Twitter பதிவை கடந்து செல்ல, 1

On March 9th, a supersonic projectile from India traveling at 40,000 feet covered over 250 km & landed inside Pakistani territory. It has taken more than 2 days for India to accept that this was their missile launched ostensibly due to a technical malfunction during maintenance.

— Moeed W. Yusuf (@YusufMoeed) March 11, 2022

Twitter பதிவின் முடிவு, 1

இந்த ஏவுகணை தொடர்பான இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை, சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு அதாவது மார்ச் 11-ம் தேதி வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் குறித்து கவலை தெரிவித்த மொயீத் யூசுப், இந்த நேரத்தில் இந்தியாவில் ‘பாசிச சித்தாந்தம்’ பின்பற்றப்படுவதாகவும், அதன் கீழ் 2019 இல் பாகிஸ்தானைத் தாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகமும் இதேபோன்ற சில கேள்விகளை கேட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘இந்தச் சம்பவம் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு பதில் கிடைப்பது மிகவும் முக்கியம். ஏவுகணை தற்செயலாக ஏவப்படுவது போன்ற சம்பவங்களைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் உள்ளன என்பதை இந்தியா தெளிவுபடுத்த வேண்டும். குறிப்பாக இந்த சம்பவம் குறித்த விவரங்களை பாகிஸ்தானுக்கு தெரிவிக்க வேண்டும்,” என்று கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மண்ணில் விழுந்த ஏவுகணையின் வகை மற்றும் விவரம் என்ன என்பதை பாகிஸ்தானிடம் இந்தியா தெரிவிக்க வேண்டும். அந்த ஏவுகணை எந்தப் பாதையில் சென்றது, எப்படி திடீரென பாகிஸ்தானுக்கு வந்தது என்பது குறித்தும் இந்தியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிடம் பாகிஸ்தான் பல கேள்விகளை கேட்டுள்ளது. உதாரணமாக, வழக்கமான பயிற்சிகள் மற்றும் பராமரிப்பின் போது கூட இந்தியாவில் ஏவுகணைகளை எப்போதும் ஏவுவதற்கு தயார் நிலையில் வைக்கப்படுகிறதா என்றும் வினவப்ட்டுள்ளது. ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டதை இந்தியா உடனடியாக பாகிஸ்தானுக்கு ஏன் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் பாகிஸ்தானால் அறிவிக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்ட பிறகே இந்தியா இது குறித்து தெரிவித்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான குறுகிய தூரம் மற்றும் பதிலடி கொடுக்க ஆகும் குறைவான நேரம் காரணமாக, இதுபோன்ற எந்தவொரு சம்பவமும், இரு தரப்பிலும் ‘தாக்குதல்’ என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். இது மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் அந்த அறிக்கை தெளிவுபடுத்துகிறது. அணுவாற்றல் திறன் கொண்ட நாடுகளிடையே இதுபோன்ற சம்பவங்களை சர்வதேச சமூகம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், இந்த சம்பவம் குறித்து உள்நாட்டு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த இந்தியா எடுத்துள்ள முடிவு போதாது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்துள்ளதாகவும், எனவே இந்த சம்பவத்தின் உண்மைகளை கண்டறிய கூட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இஸ்லாமாபாத் கூறுகிறது.

அணு ஆயுதத்திறன் கொண்ட இரு நாடுகளுக்கிடையே பிரச்னை அதிகரித்தால், பிராந்தியத்தில் நிச்சயமற்ற சூழ்நிலை எவ்வாறு உருவாகும் என்பது குறித்து பல நிபுணர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.

“இரு நாடுகளிடம் அணு ஆயுதங்கள் உள்ளன, அதை பயன்படுத்த முடியும் என்று பேசுவது பொறுப்பற்றதாகும். மேலும் பீதியை உருவாக்கி சண்டையை மூட்டுவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவகிறது,”என்று இந்திய ராணுவ இதழான ‘ஃபோர்ஸ்’ ஆசிரியர் பிரவீன் சாஹ்னி தெரிவித்தார். .

“ஒரு ஜனநாயக அரசிடம் இருக்கவேண்டிய விவேகத்துடன், இந்த விஷயத்தில் பாகிஸ்தான் புத்திசாலித்தனமாகச் செயல்பட்டது. ஆனால் இந்தியா மீது எழுப்பப்பட்ட கேள்விகளை மென்மையாக்கக்கூடாது. கேள்விகள் கேட்கப்பட வேண்டும். ஆனால் ஆயுதங்களைப் பயன்படுத்துதல் மற்றும் பதிலடி கொடுப்பது கொடுப்பதை வலியுறுத்துவது சரியல்ல,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.இந்த கவனக்குறைவை கருத்தில் கொண்டு, இந்தியாவின் ஏவுகணைகள் உண்மையில் ராணுவத்தின் கைகளில் உள்ளதா அல்லது வேறு யாருடைய கைகளிலாவது உள்ளதா என்பதையும் இந்தியா தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

“இந்தியாவின் அறிக்கையை பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது”

இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுஷாந்த் சிங், “இது ஏன் நடந்தது என்பதை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெளிவுபடுத்தாத வரை இது ஒரு மேலோட்டமான அறிக்கைதான். மேலும் விசாரணையின் முடிவுகள் பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்,”என்று குறிப்பிட்டார்.

“இந்திய டிஜிஎம்ஓவின் ஹாட்லைனில் இருந்து கூட எந்த செய்தியும் வழங்கப்படவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

எந்தவொரு அசாதாரண சூழ்நிலையிலும் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கு பாகிஸ்தானின் டைரக்டர் ஜெனரல் மிலிட்டரி ஆபரேஷன்ஸ் (டிஜிஎம்ஓ) மற்றும் இந்திய ராணுவத்திற்கும் இடையே உள்ள ஹாட் லைன் தொடர்பை பயன்படுத்தமுடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு, இது இந்தியத் தேர்தலுடன் தொடர்புடையதா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்தது. சில அறிக்கைகளில் இந்த சம்பவம் ‘மோதியின் சதி’ என்றும் முன்னிறுத்தப்படுகிறது.

ஆனால் இந்தியாவில் ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத்தேர்தல்கள் மார்ச் 7 ஆம் தேதி முடிந்து, மார்ச் 10 ஆம் தேதி முடிவுகளும் வெளியாகிவிட்டன.

பிபிசியிடம் பேசிய சுஷாந்த் சிங், தேர்தலுக்கும் இந்த விஷயத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறினார். “இது குறித்து பாகிஸ்தானிடம் அதிகாரபூர்வமற்ற முறையில் சொல்லப்பட்டிருக்கலாம். ஆனால் அது நடந்திருந்தாலும், இந்திய பாதுகாப்பு அமைச்சகம் இதை தெளிவுபடுத்தியிருக்க வேண்டும்,” என்றார் அவர்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே ஏவுகணைகள் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் செயல்முறை என்ன?

கடந்த 17 ஆண்டுகளில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஆறு பெரிய தாவாக்கள் எழுந்துள்ளன. அவை பேச்சுவார்த்தை மற்றும் சர்வதேச தலையீடு மூலம் தீர்க்கப்பட்டுள்ளன. ஏவுகணை தற்செயலாக ஏவப்பட்டதான அறிக்கையை, இரு நாடுகளிலும் உள்ள வல்லுநர்கள் கவலையுடன் பார்க்கிறார்கள். அதே நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே, அணுசக்தி மற்றும் ஆயுதங்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

1999 பிப்ரவரி 21 ஆம் தேதி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. எந்த வகை பாலிஸ்டிக் ஏவுகணையையும் சோதனை செய்வதற்கு முன், இரு நாடுகளும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்க வேண்டும் என இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்முடிவு செய்யப்பட்டது. தரை அல்லது கடல் இலக்குகளை தாக்கும் ஏவுகணைகளை ஏவுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் இரு நாடுகளும் பரஸ்பரம் அறிவிக்க வேண்டும். மேலும் அறிக்கை வெளியிடும் பொறுப்பு இரு நாடுகளின் வெளியுறவு அலுவலகம் மற்றும் ஹை கமிஷன்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளன.

கூடுதலாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1 ஆம் தேதி பாகிஸ்தானும் இந்தியாவும் அணு ஆயுத தளங்களின் பட்டியலை பரிமாறிக்கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகைசெய்கிறது.

மேலும், எல்லையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஆயுதம் ஏந்திய போர் விமானம் பறந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

பட மூலாதாரம்,GETTY IMAGES

மூன்றாவது ஒப்பந்தம் அணுசக்தி விபத்து தொடர்பானது. இரு நாடுகளிலும் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், பரஸ்பரம் தெரிவிக்க வேண்டும் என்று இந்த ஒப்பந்தம் கூறுகிறது.

கடந்த 17 வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தான போதிலும், ஆயுதங்கள் கொள்முதல் மற்றும் கையிருப்பு போன்றவற்றில்

வேகமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவு என்னவென்றால், பல புதிய ஆயுதங்கள் இந்த ஒப்பந்தங்களின் கீழ் இல்லை.

பாலிஸ்டிக் ஏவுகணைகள் குறித்து முறையாக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. ஆனால் க்ரூயிஸ் ஏவுகணைகள் போன்ற புதிய ஏவுகணைகள் குறித்து இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என்று ஏரோ ஸ்பேஸ் அண்ட் செக்யூரிட்டி ஸ்டடீஸ் மையத்தின் இயக்குனர் சையத் முகமது அலி பிபிசியிடம் தெரிவித்தார்.

2005 ஆம் ஆண்டில், க்ரூயிஸ் ஏவுகணை பரிசோதனை குறித்து இரு நாடுகளும் பரஸ்பரம் முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்வது குறித்து பாகிஸ்தான் பேசியது. ஆனால் இந்தியா அதை ஆதரிக்கவில்லை.

2005, ஆகஸ்ட் 11 ஆம் தேதி ‘ பாபர் ‘ என்று பெயர் சூட்டப்பட்ட முதல் க்ரூயிஸ் ஏவுகணையை பாக்கிஸ்தான் சோதித்தது. அதன் பிறகு பாபரின் நவீன வடிவத்தையும் பாகிஸ்தான் உருவாக்கியது. அதன்பிறகு ஏர் லாஞ்ச் க்ரூயிஸ் ஏவுகணை ‘ராத்’ ம் வந்தது. அதேபோல் இந்தியாவும் பிரம்மோஸ் உள்ளிட்ட க்ரூயிஸ் ஏவுகணைகளை தயாரித்தது.

பிரமோஸில் நான்கு வகைகள் உள்ளன. இதில் நிலத்தில் இருந்து நிலம், வானத்தில் இருந்து நிலம், கடலில் இருந்து நிலம், மற்றும் கடலுக்கு அடியே உள்ள இலக்குகளை தாக்கவல்ல ஏவுகணைகள் அடங்கும்.

“ஆயுதங்களை சேமித்து வைப்பதை விட, அதை பராமரிப்பதும் பாதுகாப்பதும் இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது” என்கிறார் சையது முகமது அலி.

இந்த நேரத்தில் க்ரூயிஸ் ஏவுகணை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டிய அவசியம் உள்ளதாகவும், இதனால் இதுபோன்ற விபத்துகளை தவிர்க்க முடியும் என்றும் அவர் கூறினார். ஏவுகணை “தற்செயலாக” ஏவப்பட்டது என்ற இந்தியாவின் அறிக்கையையும் அவர் ஏற்கவில்லை.

“துணியால் துடைக்கும்போது ஏவுகணை சென்றுவிட்டது என்பது போன்ற விபத்து அல்ல இது. மாறாக இது பல கேள்விகளை எழுப்புகிறது” என்கிறார் அலி.

சுத்தம் செய்யும் போது பட்டன் அழுத்திவிட்டது, ஏவுகணை ஏவப்பட்டது என்பதோடு மட்டும் இது தொடர்புடையது அல்ல என்று கூறிய அவர் தொழில்நுட்ப விஷயங்கள் மட்டுமல்லாது, கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புடனும் தொடர்புடையது இது என்றார். இந்த ஏவுகணைகள் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளன, இந்த ஏவுகணைகள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்ததோ அந்த அதிகாரி அல்லது அவரது குழுவினருக்கு எதிராக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஏவுகணைகளை ஏவுவதற்கு யார் அனுமதி வழங்குகிறார்கள்? .இது மிகவும் முக்கியமான விஷயம் என்பதால் இந்தக்கேள்விகளுக்கான பதில்களை அறிவது அத்தியாவசியமாகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவின் ஏவுகணை அமைப்புகளையும், அணுசக்தித் திட்டத்தையும் பார்த்தால், இந்த அமைப்பு பாதுகாப்பான முறையில் இயக்கப்படவில்லை என்று தெரிகிறது என்றார் முகமது அலி.

இந்தச் சம்பவம் குறித்தும், இந்தியாவின் அணுவாற்றல் மற்றும் ஏவுகணை இயக்க முறைமை குறித்தும் சர்வதேச அளவில் விசாரணை நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.

கடந்த காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. அதன் பிறகு பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘அரிஹந்த்’ல், தற்செயலாக ஹாட்ச் திறக்கப்பட்டதால், அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலுக்குள் கடல் நீர் நுழைந்ததாக,2018 ஆம் ஆண்டு இந்திய நாளிதழான தி இந்துவில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது. லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள இந்த நீர்மூழ்கிக் கப்பலின் சிறப்பு என்னவென்றால், இதை திடீர் தாக்குதலுக்காக பயன்படுத்தலாம்.

புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் பாலாகோட்டில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, மறுநாள் பாகிஸ்தான் விமானப்படை பதிலடி கொடுத்தபோது, இந்திய விமானப்படை தனது சொந்த ஹெலிகாப்டர் ஒன்றை தற்செயலாக சுட்டு வீழ்த்தியது. அதில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் விழுந்த இந்திய ஏவுகணை – சர்ச்சை தகவல்களால் மெளனம் கலைந்த நாடுகள்

மேஜர் ஜெனரல் பப்பர் இஃப்திகார், தலைமை இயக்குநர் – பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்புத்துறை

பாகிஸ்தான் வான் பகுதியில் 124 கி.மீ ஊடுருவி அங்குள்ள மண்ணில் விழுந்த இந்திய ஏவுகணை, தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியிருக்கிறது இந்திய அரசு. நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் அரசு, அது குறித்து விசாரிக்க உயர்நிலைக்குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது?

முன்னதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து தங்கள் நாட்டு வான் பகுதியில் விழுந்த இந்திய ஏவுகணை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.

பயணிகள் விமானங்களுக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்துமாறும் அதன் தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.

“இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் ” என்றும் இந்தியாவை பாகிஸ்தான் எச்சரித்ததாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூறியது.

சம்பவம் மார்ச் 9ஆம் தேதி நடந்தபோதும், அது குறித்து மார்ச் 10ஆம்தேதியும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிவரை – இந்திய பாதுகாப்புத்துறையோ வெளியுறவுத்துறையோ எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தன.

இதேவேளை, இரு தரப்பிலும் உள்ள பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் அல்லது மோதல்கள், இரு தரப்பின் தவறான மதிப்பீடுகளால் விளைந்த அபாயம் குறித்து எச்சரித்தனர்.

மூன்று போர்கள், ஏராளமான எல்லை துப்பாக்கி சண்டைகள், மிக சமீபத்தில் 2019இல் இரு தரப்பு விமானப்படைகளும் வானில் மோதிக் கொண்ட சம்பவங்களை ராணுவ நிபுணர்கள் நினைவுகூர்ந்தனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணு ஆயுத பலத்தைக் கொண்டவை.

இந்த நிலையில், “சமீபத்திய சம்பவத்தைப் பார்க்கும்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் ஆபத்துகளைக் குறைப்பது பற்றி பேச வேண்டும். இரண்டும் அணு ஆயுதங்கள் கட்டுப்பாட்டு விஷயத்தில் நம்பிக்கையுடன் இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்து அதிக விளைவை ஏற்படுத்தினால் என்னவாகும்” என்று ராணுவ விவகாரங்கள் மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணரான ஆயிஷா சித்திக் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Given the incident in Mian Channu India-Pak should be talking about risk mitigation. Both states have remained confident about control of nuclear weapons but what if such accidents happen again & with more serious consequences?

— Ayesha Siddiqa (@iamthedrifter) March 11, 2022

Twitter பதிவின் முடிவு, 1

“இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கையுடன் உள்ளன. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் திடீரென நடந்தால் அவை கடுமையான விளைவுகளுக்கு வித்திடலாம்,” என்றும் ஆயிஷா சித்திக் எச்சரித்தார்.

பாஜக தேர்தல் வெற்றியுடன் ஒப்பிட்ட விஷமிகள்

இதற்கிடையே, மார்ச் 9ஆம் தேதி இந்திய ஏவுகணை பாகிஸ்தான் மண்ணில் விழுந்த செய்தி மார்ச் 10ஆம் தேதி இரவுதான் பரவலாக வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.

இந்த நாளில்தான் இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின.

அந்த முடிவுகள் மத்தியிலும் தேர்தலை எதிர்கொண்ட நான்கு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருந்ததால், அடுத்த கட்டமாக பாகிஸ்தானை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த இந்தியா ஆயத்தமாகி வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிரத் தொடங்கினர்.

Twitter பதிவை கடந்து செல்ல, 2

Indians are doing military build-up in Kargil too…
Clearly they are going to expand the conflict along entire LOC and try to capture strategic regions inside Pakistan.
A massive crackdown inside Kashmir to follow an attack on Pakistan.
Our nation, Govt, media are not ready ! pic.twitter.com/wGpulBbLCB

— Zaid Hamid (@ZaidZamanHamid) August 4, 2019

Twitter பதிவின் முடிவு, 2

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Indian Military must come clean on the crash of one of their objects in Pakistan. Ambiguity will only hurt the strategic stability in South Asia.

— Shahid Raza (@schaheid) March 10, 2022

Twitter பதிவின் முடிவு, 3

இதையடுத்தே இந்த விவகாரத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தயாரானதாகத் தோன்றியது.

அந்த நாட்டின் ராணுவ மக்கள்தொடர்புத்துறையின் தலைமை இயக்குநரும் மேஜர் ஜெனரலுமான பப்பர் இஃப்திகார் ராவல்பிண்டியில் மார்ச் 10ஆம் தேதி மாலையில் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார். சுமார் 30 நிமிடங்கள் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பில் 25 நிமிடங்கள்வரை இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் மட்டுமே பேசப்பட்டது.

YouTube பதிவை கடந்து செல்ல, 1

காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

“பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ராடார் சாதனம் மூலம், இந்தியாவில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு கருவி பாகிஸ்தானுக்குள் மார்ச் 9ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் வந்தது விமானப்படையால் கண்டறியப்பட்டது,” என்று இஃப்திகார் கூறினார்.

“ஆரம்பநிலை விசாரணையில், பாகிஸ்தானின் வான் பகுதிக்குள் ஊடுருவிய அந்த சாதனம், பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட கனேவால் மாவட்டத்தின் மியான் சன்னு என்ற பகுதியில் மாலை 6.50 மணியளவில் விழுந்தது. அதன் விளைவாக சிவில் சொத்துகளுக்கு சிறிது சேதம் ஏற்பட்டது. நல்ல வேளையாக மனித உயிர்களுக்கு காயமோ இழப்போ ஏற்படவில்லை.”

“பாகிஸ்தான் விமானப்படை, தாயகத்தின் வான் பகுதியை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. இந்தியாவின் சிர்சாவில் இருந்து செலுத்தப்பட்ட அந்த சாதனம், பாகிஸ்தான் மண்ணில் மோதி விழும்வரை கண்காணிக்கப்பட்டது.”

“வான் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமானப்படை மேற்கொண்டது. இந்த சாதனம் ஏவப்பட்ட செயல்பாடு, பாகிஸ்தான் மட்டுமின்றி இந்திய வான் பாதையில் பயணம் செய்யும் விமானங்களின் பாதுகாப்புக்கும் தரையில் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்துள்ளது.

“இந்த அப்பட்டமான அத்துமீறலை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் எச்சரிக்கிறது” என்று மேஜர் ஜெனரல் பப்பர் கூறினார்.

‘அப்பட்டமான மீறல்’

பாகிஸ்தான் விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் தாரிக் ஜியா ஊடகங்களிடம் கூறுகையில், இந்த ஏவுகணை விழுந்த நேரத்தில், இரண்டு விமானங்களின் வான் பாதைகள் செயல்பாட்டில் இருந்தன பல வணிக விமான நிறுவனங்கள் அப்பகுதியில் வழித்தடத்தைக் கொண்டிருந்தன என்றார்.

“அந்த ஏவுகணை 40,000 அடி உயரத்தில் பறந்து வந்தது. அந்த பாதையில் விமானங்களும் 35,000 முதல் 42,000 அடி வரை பறக்கும். அந்த வகையில் இது விமான பயணிகளின் உயிருக்கும் ஆபத்தாக அமையக் கூடிய விஷயமாக பார்க்கிறோம்,” என்று தாரிக் ஜியா தெரிவித்தார்.

இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து சென்றதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை கூறியது.

அதே சமயம், ஏவுகணை விழுந்த மியான் சன்னு பகுதியில் எந்தவொரு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தளவாடங்களோ தளமோ இல்லை. அந்த அதிவேக பொருள் ஏவகணையாக இருக்கலாம். ஆனால், அதில் வெடிபொருள் ஏதும் நிச்சமயாக இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு மக்கள்தொடர்புத்துறை தெளிவுபடுத்தியது.

மியான் சன்னு பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரியும் இந்திய ஏவுகணை பாகம்

இந்த விவகாரம் தொடர்பாக நேரலையில் ஒளிபரப்பான செய்தியாளர் சந்திப்பின்போது “இது எப்படி நடந்தது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உள்ளது. வான் பாதுகாப்பை பராமரிப்பதில் அலட்சியம், தொழில்நுட்ப ஆளுமையை நிர்வகிப்பதில் பலவீனம் போன்றவற்றைத்தான் இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது,” என்று பப்பர் இஃப்திகார் தெரிவித்தார்.

“ஒரு பொறுப்புள்ள தேசமாக இந்தியா பதிலளிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நாங்கள் இப்போது தெரிவித்து விட்டோம். ஆனால் மியான் சன்னுவில் என்ன நடந்தது என்பதை இந்தியாதான் விளக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த நிலையில், சம்பவத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து நடந்த நிகழ்வு பற்றிய தமது நிலையை ஓர் செய்திக்குறிப்பு வாயிலாக இந்தியா தெளிவுபடுத்தியது.

தமது பாதுகாப்புத்துறை மூலம் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 9ஆம் தேதி வழக்கமான பராமரிப்பின்போது ஓர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தற்செயலாக இயங்கி விட்டது. இந்த விஷயத்தை இந்திய அரசு தீவிரமானதாகக் கருதி உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், “ஏவுகணை விழுந்த இடம் பாகிஸ்தானின் பகுதி என்பதை அறிந்துள்ளோம். நடந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்துக்குரியது. அதே சமயம், அந்த விபத்தால் எந்த உயிருக்கும் இழப்பு ஏற்படாதது நிவாரணத்தைத் தருகிறது,” என்று இந்திய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ‘டிஃபன்ஸ் கேப்பிட்டல்’ பாதுகாப்பு இதழின் ஆசிரியர் என்.சி. பிபிந்த்ரா, “இந்த ஏவுகணை சம்பவம் தற்செயலாக நடந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். காரணம், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தியாளர் சந்திப்பில் சம்பவத்தை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு ராணுவம், இந்தியா திட்டமிட்டே ஏவுகணையை செலுத்தியதாக எந்த இடத்திலும் குற்றம்சாட்டவில்லை என்று தெரிவித்தார்.

என்.சி. பிபிந்த்ரா பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய தகவல்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வருபவர். இதுபோன்ற ஏவுகணை பராமரிப்பு சோதனை நடத்தப்படும்போது என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும் என அவரிடம் கேட்டோம்.

“சமீபத்திய ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட பகுதி ராஜஸ்தானில் உள்ளது. இதுபோன்ற சோதனை இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ நடந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பே அது குறித்து பக்கத்து நாட்டுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். அவை பெரும்பாலும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்படும். இப்போதும் இந்தியா தமது சோதனை பற்றி நிச்சயமாக தகவல் தெரிவித்திருக்கும். அதனால்தான் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் இந்தியாவை குற்றம்சாட்டி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்,” என்கிறார் பிபிந்த்ரா.

பாகிஸ்தான் ராணுவ தரப்பிலும் இந்திய பாதுகாப்புத்துறை தரப்பிலும் இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சாதனத்தை ‘குறிப்பிட்டு அதன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல்’ பொதுவான கருவி அல்லது ஏவுகணை போன்ற சாதனம் என்றே அதிகாரிகள் அழைத்தனர்.

ஆனால், அந்த சாதனம் பறந்து சென்ற தூரம், உயரம், ஆற்றலை வைத்துப் பார்க்கும்போது அது அதிவேக சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையாகவே இருந்திருக்க வேண்டும். அது வெடிபொருள் நிரப்பப்படாத வெறும் கலனாகவே சோதனைக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

 

Previous Story

அமெரிக்காவில் பசில் செய்த தண்டனைக்குரிய குற்றம்? 

Next Story

ஒபாமாவுக்கு கொரோனா தொற்று உறுதி