எரிமலை: துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்..  

பசிபிக் ஓசியான பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுகளில் ஒன்று டோங்கோ. 177 சிறு தீவுகளைக் கொண்ட இந்த டோங்கோ நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான்.

இந்த தீவு நாட்டை சுற்றி கடலுக்கு அடியே பல்வேறு எரிமலைகள் உள்ளன. இவை வெடித்துச் சிதறினால் டோங்கோ நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பது அனைவருக்கும் தெரியும்.

எரிமலை

டோங்கோ நாட்டின் அருகே நீருக்கு அடியே உள்ள The Hunga Tonga Hunga Ha’apai volcano கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடித்துச் சிதறியது. இதனால் சுமார் 20 கிலோமீட்டர் வரையிலும் சாம்பல் மற்றும் புகை மண்டலம் பரவது. இது அந்தப் பகுதியைக் கடந்து செல்லும் சாட்டிலைட் கூட படம் பிடிக்கும் அளவுக்கு மோசமாக இருந்தது. டோங்கோ தலைநகரில் இருந்து வெறும் 64 கிமீ தொலைவில் இந்த எரிமலை அமைந்துள்ளதால் டோங்கோ நாட்டிற்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. டோங்கோவின் சில தீவுகளில் சுனாமி பாதிப்பும் ஏற்பட்டது.

சாட்டிலைட் படங்கள்

சுமார் 2 முதல் 5 அடி உயரமுள்ள அலைகள் டோங்கோவின் சில தீவுகளைத் தாக்கின. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் Hunga Tonga-Hunga Ha’apai எரிமலை வெடிப்பிற்குப் பின்னர் டோங்கோ எந்தளவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் வகையிலான சில சாட்டிலைட் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. டோங்கோ தலைநகர் உட்படப் பல தீவுகளில் மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதையே அது காட்டுகிறது.

தலைநகர்

Maxar வெளியிட்ட இந்த ஃபோட்டோக்கள் எரிமலை வெடிப்பு எந்தளவு மோசமானதாக இருந்தது என்பதை காட்டுகிறது. அதில் டோங்கோ நாட்டின் தலைவர் Nukuʻalofa அடர் பழுப்பு சாம்பலால் சூழ்ந்துள்ளது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கடலுக்கு அருகே அமைந்துள்ள இந்த Nukuʻalofa நகரில் சுனாமி பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதையும் இந்தப் படங்கள் காட்டுகிறது.

நீரின் அடியே மூழ்கிய தீவு

இதற்கிடையில், எரிமலை வெடிப்பு ஏற்பட்ட தீவு கிட்டத்தட்ட முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. அந்த தீவின் ஒரு பகுதி மட்டுமே நீருக்கு மேல் உள்ளதை சாட்டிலைட் படங்கள் காட்டுகின்றன. நியூசிலாந்து வெளியுறவு அமைச்சகத்தின் படி, பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட குறைந்தது இரண்டு பேர் எரிமலை வெடிப்பில் உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் உயிரிழப்பு குறித்த உறுதியான தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

இணையச் சேவை பாதிப்பு

கடலுக்கு அடியே உள்ள இணைய கேபிளில் ஏற்பட்ட சேதம் காரணமாக டோங்கோ தீவில் இணையச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சுனாமியால் மோசமாகப் பாதிக்கப்பட்ட Nukuʻalofa இல் உள்ள விமான நிலைய ஓடுபாதையைச் சீர் செய்யும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. எரிமலை வெடிப்பால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டோங்கோ நாட்டிற்கு ஏற்கனவே நியூசிலாந்து, மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் உதவிகளை அறிவித்துள்ளன. முதற்கட்டமாகத் தூய்மையான குடிநீரும் நீர் சுத்திகரிப்பு உபகரணங்களும் அங்கு அனுப்பப்பட்டுள்ளது

மிக மோசம்

சமீப காலங்களில் பதிவு செய்யப்பட்ட மிக மோசமான எரிமலை வெடிப்புகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பால் ஏற்பட்ட சாம்பல் மேகம் 63,000 அடி (19,000 மீட்டர்) உயரத்திற்குச் சென்றது. அதேபோல இதனால் ஏற்பட்ட அதிர்ச்சி அலை அலாஸ்கா வரை உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது. சென்னையிலும் கூட இந்த எரிமலை வெடிப்பு அதிர்வலைகள் பதிவானதாகக் கூறப்படுகிறது.

Previous Story

நாடியா நதிம் மருத்துவரும் கூட!

Next Story

உலகின் மிக முதுமையானவர் மரணம்