“என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. தந்தையின் விருப்பம்”.. -பின்லேடன்

தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக கருதப்படும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனையும், நியூயார்கில் இருந்த உலக வர்த்தக மையத்தையும் ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி விமானங்களை மோதி தகர்த்தனர்.

உலகையே உலுக்கிய இந்த அதிபயங்கர தாக்குதலில் 3,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஒசாமா பின்லேடனை பிடிக்க அமெரிக்கா நேரடியாக களத்தில் இறங்கியது. 20 ஆயிரத்துக்கும் அதிகமான அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் புகுந்து ஒசாமா பின்லேடனை தேடினர். ஆனால், அவர் பிடிபடவில்லை.

கடைசியாக, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை அமெரிக்கப் படை கடந்த 2011-ம் ஆண்டு சுட்டுக் கொன்றது.  ஒசாமா பின்லேடன் மகன் இந்நிலையில், ஒசாமா பின்லேடனின் 4-வது மகனான உமர் பின்லேடன் (41), லண்டனில் நடைபெறும் ஓவியக் கண்காட்சிக்கு தனது மனைவி ஜைனாவுடன் நேற்று வருகை தந்தார்.

ஓவியர், எழுத்தாளர், கலச்சாரத் தூதர் என தனது தந்தையின் பாதையில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இதனிடையே, லண்டன் வந்த அவர் ‘தி சன்’ பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “பிஞ்சு கைகளில் துப்பாக்கி கொடுத்தார்” எனது குழந்தை பருவம் ஆப்கானிஸ்தானில் உள்ள தோரா போராவில் தான் கழிந்தது.

அது முழுக்க முழுக்க எனது தந்தையுடன் இருந்த நாட்கள். மற்றவர்களுக்கு அவர்களின் தந்தையுடன் கழித்த காலங்களை மறக்கக்கூடாது என நினைப்பார்கள். ஆனால், நானோ அந்த நாட்களை மறக்க வேண்டும் என நினைக்கிறேன். எனது பிஞ்சு கைகளில் துப்பாக்கியை கொடுத்து பயிற்சி அளித்தவர் என் அப்பா.

தனது மகன்களிலேயே என்னை தான் அவர் மிகவும் நம்பியிருந்தார். என்னை எப்படியாவது மிகப்பெரிய பயங்கரவாதியாக உருவாக்க வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. நான் புத்திசாலி என்பதால் அவர் என்னை தேர்ந்தெடுத்திருப்பார் என நினைக்கிறேன்.

ஆனால், எனக்கோ என் அப்பா தேர்ந்தெடுத்த பாதையும், அவரது வாழ்க்கையும் பிடிக்கவில்லை. அவருடன் இருந்த நாட்கள் மிக மோசமான நாட்களாகவே இருந்தன. என் தந்தையின் ஆட்கள் தயார் செய்யும் சில ரசாயன தாக்குதல் மருந்துகளை, நான் வளர்த்த செல்ல நாய்களை வைத்து என் அப்பா பரிசோதித்தார். அதை இன்று நினைக்கும் போதும் எனக்கு அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

அவரிடம் இருந்து விலகி வந்த பின்னரே, எனக்கான வாழ்க்கையை நான் வாழத் தொடங்கினேன். ஆனால், நான் பிரிந்து சென்றது அவருக்கு வருத்தம் அளித்தது. “தந்தை இறந்ததற்கு அழவில்லை, ஆனால்..” இன்று நான் ஒரு ஓவியனாகவும், எழுத்தானாகவும் இருக்கிறேன். ஓவியங்களை வரைவதில் தான் எனக்கு நிம்மதி கிடைக்கிறது.

என் தந்தையை அமெரிக்க படையினர் சுட்டுக்கொன்ற போது நான் கத்தாரில் இருந்தேன். என் தந்தை இறந்ததற்கு நான் அழவில்லை. ஆனால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. என் தந்தையின் உடலை அமெரிக்கப் படைகள் புதைத்திருக்கலாம்.

குறைந்தபட்சம், அவரது உடல் எங்கு இருக்கிறது என்பதாவது எங்களுக்கு தெரிவித்திருக்கலம். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவரது உடலை கடலில் வீசிவிட்டதாக கூறப்படுகிறது. அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என் தந்தையின் உடலை மக்கள் பார்ப்பதற்காக அவர்கள் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றிருப்பார்கள். இவ்வாறு உமர் பின்லேடன் கூறினார்.

Previous Story

நந்தலால் ஜனாதிபதியாகும் கதை!

Next Story

முன்னாள் நீதவானுக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை