எதிர் நீச்சல்காரி ஜூவைரியாவுக்கு! சர்வதேச விருது

 


இதுவரை ஊடகங்களுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதி இருக்கின்றறேன். அதில் ஐம்பது சதவீதத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் நமது தினக்குரல் வார இதழுக்காக எழுதப்பட்ட உள்ளூர் சர்வதேச அரசியல் தொடர்பான கட்டுரைகள் அல்லது விமர்சனங்களாகும். இன்று இவை அனைத்துக்கும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் தொடர்பான சில தகவல்களை நமது வார இதழுடாக சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர முனைகின்றேன்.

முஸ்லிம் சமூகத்தில் எவருமே கண்டு கொள்ளாமல் சுதந்திரமாக இயங்கிக் கொண்டிருக்கும் பாரிய அளவிலான கள்ளத் திருமணப் பதிவுகள் தொடர்பாக ஆய்வுகளை செய்து கொண்டிருக்கும் விவகாரம் தொடர்பாக எமது சகோதர ஊடகமான விடிவெள்ளி சிரேஸ்ட ஊடகவியலாளருடன் கருத்துப் பரிமாறிக் கொண்டிருந்த போது, அவர் எனக்கு ஜூவைரிய என்ற ஒரு பெயரை அறிமுகம் செய்து வைத்தார்.

முஸ்லிம் சமூகத்தின் செயல்பாடுகள் தொடர்ப்பில் எனக்கு கடுமையான விமர்சனங்களும் கோபப் பார்வையும் இருப்பதை எமது வாசகர்கள் நன்கு அறிவார்கள். இந்த நேரத்தில் நான் எதிர்பார்க்கின்ற விடயத்தில் இந்த ஜூவைரிய என்னதான் பண்ண முடியும். என்ற நம்பிக்கை இல்லாத ஒரு மன நிலை எனக்குள் இருந்தது. என்றாலும் போய் ஊடக நண்பர் சொன்ன ஜூவைரியாவை ஒரு முறை பார்ப்போம் என்ற எண்ணத்தில் புத்தளம்-பாலாவி சந்தியில் இறங்கி ஜூவைரியாவைத் தெரியுமா என்று ஒரு சின்னத் தேனீர் கடையில் கேட்டேன்.

ஹியுமன் ரைட்ஸ் ஜூவைரியாதானே என்று கேட்டார்கள் அங்கு இருந்தவர்கள். ஆம் அவர்தான் என்றேன். பக்கத்தில்தான் என்று கடைக்கு வெளியே வந்து எனக்கு அந்த ஒழுங்கையைக் காட்டினார்கள். ஒழுகையில் புகுந்ததும் எனக்கு எதிர்பட்ட முதல் ஆளிடம் ஜூவைரியா மிஸ்சுடைய ஒபீஸ் எங்கே என்று கேட்க, ஆம் நானும் அங்கு தான் வேலை செய்கின்றேன். வாருங்கள் என்றாள் அந்த யுவதி. ஒரு சில மீற்றர்கள் நடந்து அவளுடனே நானும் உள்ளே நுழைந்தேன்.

அங்கு நுழைந்ததும் என் மனதில் நான் துவக்கத்தில் இருந்த அவநம்பிக்கை தளர்ந்து ஒரு நல் எண்ணம் எனக்குள் பிறப்பெடுத்தது. முஸ்லிம் அமைப்பா, அதுவும் மனித உரிமைக்காக! அங்கே எங்காவது ஒரு மூளையில் ஒரு ஆள் குந்தி இருக்கும். என்பதுதான் எனது துவக்க எதிர்பார்ப்பாக இருந்தது. நான் போய் அங்கு இருக்கும் போது சில நிமிடங்களில் சாரியும் ஸ்காபும் அணிந்த ஒரு நடுத்தர வயது மதிக்கத் தக்க பெண் அங்கே வந்தார். ஆம் அவள்தான் நான் தேடிப் போன ஆள் என்பது அப்போது புரிந்தது.

அங்கிருந்தவர்கள் என்னை அவளுக்கு அறிமுகம் பண்ணியபோது என்னைப் பதிவு செய்து விட்டு வருமாறு கூறி துணைக்கு ஒரு வரையும் என்கூடவே அனுப்பி வைத்தார். அங்கு போய் பார்த்த போது பிரதான காரியாலயத்துக்குப் பக்கத்தில் பிரிதொரு இடத்தில் துணைக் காரியாலயம் ஒன்றும் இருப்பதை அறிந்து கொண்டேன். காரியாலயத்துக்கு வெளியே பல பெண்கள் தமது தேவைகளுக்காக இருந்ததைப் பார்க்க முடிந்தது. காரியாலயத்தில் வேலைபார்க்கும் ஒரு தமிழ் சகோதரி எனது பதிவுகளைச் செய்தார். இப்போது ஜூவைரியாவுக்கு ஒரு பலமான செயலணி இருப்பதும் அதில் டசன் கணக்கானவர்கள் ஒரு குடும்பம் போல் பணிபுரிவதும் எனக்குப் புரிந்தது.

நான் மீண்டும் பிரதான செயலகத்துக்கு அழைத்து வரப்பட்டேன். அங்கிருந்தவர்கள் தனது பணியில் இருந்த ஜூவைரியாவுக்கு எனது வரவை மீண்டும் நினைவு படுத்திய போது கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுமாறு அவர்கள் எனக்கு கூறினார்கள். அது வரை நான் அங்கு போன அலுவழுக்கு மேலான எனக்கு இங்கும் ஒரு கடமை இருக்கின்றது என்று புரிந்தது. அந்த செயலகப் பணிகளை அவதானித்துக் கொண்டே இந்த ஜூவைரிய பற்றி சில தகவல்களைத் தேட வேண்டும். அவளிடமே கேள்விகளைக் கேட்க வேண்டும் என்று சில குறிப்புகனைப் பதிந்து கொண்டேன். ஏறக்குறைய நாட்ப்பத்தி ஐந்து நிமிடங்கள் கடந்திருக்கும். உள்ளே வருமாறு எனக்கு தகவல் தரப்பட்டது.

 

நான் உங்களைத் தாமதிக்க வைத்து விட்டோன் அவசரமாக ஒரு வீடியோவை பதிவு செய்து அனுப்ப வேண்டி இருந்தது மன்னியுங்கள். என்று என்னை வேண்டி, நான் வந்த நோக்கம் பற்றி ஜூவைரிய என்னிடம் விபரம் கேட்டார். அப்போது நான் வந்த நோக்கத்துக்கும் மேலாக இப்போது உங்களைப் பற்றி எனக்கு சில தகவல்கள் தேவைப்படுகின்றது அதற்குத் தேவையான கேள்விகளையும் இங்குள்ள செயல்பாடுகளைப் பார்த்தபோது நான் குறித்துக் கொண்டிருக்கின்றேன் என்று அவரிடம் எடுத்து சொன்ன போது அதற்கும் தனது சம்மதத்தை ஜூவைரிய தந்தார்.

குருனாகலையில் நடைபெற்று வரும் போலித் தகவல்களுடனான விவகப் பதிவுகள் பற்றி ஜூவைரியாவுடன் கலந்து பேசிய போது நாட்டில் மிகப் பெரிய கள்ளத் தனமான முஸ்லிம் திருமணப் பதிவுகள் அங்குதான் நடக்கின்றன. அதுவும் திருமணமாகி இருக்கும் பெண்களை மற்றுமொருவருக்கு பதிவு (ரெஜிஸ்டர்) செய்யும் வேலையும் அங்கு நடக்கின்றது என்று நான் ஆதாரத்துடன் அவரிடம் கூறி அப்படியான எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் என்று குத்த மதிப்பாக சொன்னேன். உங்கள் கணக்குப் பிழையானது அவர்கள் போலித் தகவல்களுடன் சட்டத்துக்கு (ஷரியாவுக்கு) முறனான ஆயிரக் கணக்கில் முஸ்லிம் திருமணங்களை செய்து பணம் சம்பாதித்து வருகின்றார்கள். இதனை யாரும் கண்டு கொள்கின்றார்கள் இல்லை. என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதுடன் பூனைக்கு மணி கட்ட ஆள் இல்லாமல் இருக்கின்றது நமது சமூகம் என்றும் குறிப்பிட்டார்.

அந்த விவகாரம் அப்படி இருக்க இப்போது மனித உரிமை செயல்பாட்டுக்காரி ஜூவைரிய விவகாரத்துக்கு நேரடியாக வருவோம். உங்களுக்கு ஒரு சர்வதேச விருது கிடைத்திருக்கின்றது என்று எனது ஊடக நண்பர் சொன்னார். அது என்ன விருது. அது எப்படி உங்களுக்கு வந்து சேர்ந்தது. அது நீங்கள் விண்ணப்பித்துப் பெற்றுக் கொண்ட விருதா என்று நான் கேள்விகளைத் தொடுத்தேன். பெண்கள் தொடர்பான மனித உரிமைகள் செயல்பாடுகளுக்கான ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கான விருது எனக்கு வழிங்கப்பட்டிருக்கின்றது.

 

உலகில் 2020 வருடத்துக்காக இந்த விருதுகளை புரண்ட் லைன் டிபண்டர்ஸ்-நெதர்லாந்து நிருவனத்தால் வழங்கப்படுகின்றது. அதில் நான்கு தனி நபர்களும் ஒரு நிறுவனமும் இந்த முறை விருது பெருகின்றது, என்று அதற்கான ஆவனங்களை என்னிடம் காட்டினார். நெதர்லாந்திலுள்ள நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் இதற்கான நபர்களைத் தெரிவு செய்கின்றார்கள் ஆபிரிக்காவுக்கான விருது மொரிட்டானியாவைச் சேர்ந்த மெக்புலா மின்ட் பிரர்ஹிம் என்பவரும் வட தென் அமெரிக்காவுக்கான விருது கார்டியா இன்டிகினா டி காகாவுக்கும் கிடைக்கின்றது இவர் கொலம்பியாவைச் சேர்ந்தவர். ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவுக்கான விருதை ஆர்மேனியாவைச் சேர்ந்த லாரா அகாரோனியாவுக்கும் மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவுக்கான விருதை மகளிர் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற ஈராக்கிய அமைப்பும் இந்த விருதை 2020ல் பெருகின்றது. இந்த விருதுக்கு நான் விண்ணப்பிக்கவும் இல்லை இந்த விருது வழங்கும் நிருவனம் பற்றி நான் தெரிந்திருக்கவும் இல்லை. யாரா எனது செயல்பாடுகளை அறிந்தவர்கள்தான் எனது பெயரை அதற்கு சிபர்சு செய்திருக்கின்றார்கள்.

ஆசிய பசுபிக் பிராந்தியம் என்றால் ஏறக்குறைய எழுபது என்பது நாடுகள் வரை இருக்கின்றது. இந்த நாடுகளின் குடித் தொகை ஏறக்குறைய 450-500 கோடி வரை. எனவே இதற்காக ஆயிரக் கணக்கான விண்ணப்பங்கள் அங்கு போய் அதில் ஜூவைரியா தான் இதற்குப் பொருத்தமான ஆள் என்று முடிவாகிய இருக்கின்றது என்று சொன்னால் அவரில் ஏதாவது முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்பது தெரிந்ததே. நமது நாட்டில் மட்டுமல்ல சர்வதேச ஊடகங்களிலும் ஜூவைரிய விருது பெற்றிருக்கின்ற செய்தி வெளி வந்திருக்கின்றது. இந்தியாவிலும் உலக நாடுகளிலும் பல மில்லியன் கணக்கில் பிரதிகள் விற்பனையாகின்ற த இந்து ஆங்கில இதழில்; கூட ஜூவைரிய விருது பற்றி செய்தி வெளி வந்திருக்கின்றது.

 

சரி எனக்கும் பல்லாயிரக் கணக்கான வாசகர்கள் இருக்கின்றார்கள் ஆனால் நான் கூட உங்களைப் பற்றி எதுவுமே இங்கு வரும் வரை அறிந்திருக்கவில்லை. ஒரு ஊடகக்காரன் என்ற வகையில் எனக்குத் தலைகுனிவாகக் கூட இருக்கின்றது என்றேன். உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் எனக் கேட்டபோது, எனது சொந்த ஊர் மன்னார்-எருக்கலாம்பிட்டி. படித்த பாடசாலை எருக்கலாம்பிட்டி மகளிர் கல்லூரி. எனது தந்தை மொஹிடீன் தாய் nஷரிபா அவர்களுக்;கு ஒன்பது பெண் பிள்ளைகள். நாங்கள் வருமைப்பட்ட குடும்பம். தமிழ் ஆயுதக் குழுக்கள் தனி நாட்டுக்கான போரை நடாத்திக் கொண்டிருந்த காலம். இந்தப் பின்னணியில் விடுதலைப் புலிகள் மூன்று நாள் அவகாசத்தில் எங்களை மன்னாரிலிருந்து வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார்கள். எங்கு போவது? இரண்டு தெரிவுகள் இருந்தது. கடல் வழியாக இந்தியாவுக்குப் போவது அல்லது அதே கடல் வழியால் புத்தளம்-கற்பிட்டிக்குப் போவது. கற்பிடடியை எங்களோடு இருந்த பெரியவர்கள் தெரிவாக எடுத்தார்கள். அந்த பயணத்தில் நாங்கள் பட்ட துயரங்கள் இன்றும் என் கண்முன்னே இருக்கின்றது.

ஆண் அதிக்கம் மிக்க இந்த ஆசிய நாடுகளில் அதுவும் முஸ்லிம் சமூகத்தில் நீங்கள் எப்படிக் காரியம் சாதிக்கின்றீர்கள். இந்த விருதை அடையும் அளவுக்குப் போய் இருக்கின்றீர்கள் என்று கேட்ட போது. நான் படித்த கல்லூரி அதிபரின் நெறிப்படுத்தல், பிரதி அதிபர் ஆசிரியர்கள் எனக்குத் தந்த ஆளுமை தான் இதற்கு அடிப்படைக் காரணம் என்று சில நாமங்களை உணர்வுபூர்வமாக உச்சரித்தார் ஜூவைரியா.

ஆப்கானில் பெண்கள் படிக்கப் பள்ளிக் கூடம் போக நினைப்பதே உயிரைப் பணயம் வைத்து செய்கின்ற காரியம். நமது நாட்டில் அந்த நிலை இல்லாவிட்டாலும் முஸ்லிம்கள் மத்தியில் கணிசமான சமூகக் கட்டுப்பாடுகள் இன்றும் இங்கும் வலுவாக இருக்கின்றது என்பதுதான் கட்டுரையாளன் கருத்து. அப்படி இருக்கும் போது ஜூவைரிய மட்டும் எப்படி அந்தப் பிடியிலிருந்து விடுபட முடியும் என்று நான் கேட்க என்னைப் பொருத்தவரை இப்போதுதான் நீங்கள் தலைப்புக்கு வந்திருக்கின்றீர்கள் என்றவள் என்முன் கொட்டித் தீர்த்த ஆதங்கங்களையும் சமூகம் தொடர்ப்பில் அவருக்குள்ள புரிதலையும் நிச்சயமாக இந்த சமூகத்தின் பார்வைக்கு சமர்ப்பிக்க வேண்டியது எனது தார்மீகக் கடமை-கடன் என்ற நிலைப்பாட்டில் எதிர்காலத்தில் சில காரியங்களை மேற் கொள்ள எதிர் பார்க்கின்றேன்.

என்னை பெண்ணியல் வாதி சமஉரிமை வாதி இஸ்லாமிய விரோதி துரோகி என்றெல்லாம் அழைக்கின்றார்கள். நமது சமூகத்தில் இத்துணை பிரச்சினைகள் இரகசியங்கள் இருக்கின்றன. இதற்கு நீதி கேட்டு போரடுகின்ற நான் சமூக விரோதியா என்று அவர் தனது கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். அவளது கேள்விகளுக்கு என்போனவர்களிடத்தில் பதில் இல்லை என்றால் சமூகத்தில் பாமர மக்களின் நிலை என்னவாக இருக்க முடியும்.! நமது சமூகப் பஞ்சயத்துக்களின் நிலை இதனை விட கேவலாம் என்பது நமக்கத் தெரியும்.

எனது நடவடிக்கைகளை விமர்சிப்போர் எனக்கு எதிராக மூகநூல் வாயிலாக சொல்லுகின்ற செய்திகள் கதைகளினால் நான் களங்காமல் நின்னறாலும் எனது உடன் பிறப்புக்கள் உறவுகள் எனது நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு என்னிடத்தில் கெஞ்சிக் கேட்கின்றார்கள். எனது சகோதரியின் பிள்ளைகள் உங்களைப் பற்றி பேஸ்புக்கில் அப்படிக் கேவலமாக சொல்லி இருக்கின்றார்கள் இப்படிச் சொல்லி இருக்கின்றார்கள் என்று என்னிடத்தில் வந்து அழுகின்றார்கள். அவர்களிடத்தில் நீங்கள் உண்மையிலே என்மீது பாசம் உள்ளவராக இருந்தால் அந்த முகநூல்களை; பார்க்க மாட்டேன் என்று சத்தியம் தாருங்கள். அப்படிச் செய்பவர்கள் மனம் மாற வேண்டும் என்று இறைவனைத் தொழும் போது கேளுங்கள் என்று அவர்களிடம் சொல்லி இருக்கின்றேன். என்று கூறுகின்றாள் எதிர் நீச்சல்காரி.

இந்தப் பணியில் நான் எனது கணவருக்கும் பிள்ளைகளுக்கும் மிகப் பெரிய துரோகத்தை பண்ணிக் கொண்டிருக்கின்றேன். என்னைப் பற்றி இப்படியான விமர்சனங்கள் வருகின்றபோது எனது கணவனின் நிலை பிள்ளைகளின் மனத் தாங்கல்கள் எப்படி இருக்கும்? நான் இந்தப் பணியில் ஓடித்திரிகின்ற போது எனது குடும்பக் கடமைகளை நான் செய்யத் தவறுகின்றேன். அதனால் எனது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைள் பாதிக்கப்படுகின்றது என்று கூறும் ஜூவைரியாவிடம் சரி இதுக்கெல்லாம் உங்களுக்கு யாராவது பணம் தருகின்றார்களா என்று கேட்ட போது எனது பொருளாதார நிலமையை முன்பு சொல்லி இருக்கின்றேன். நானே அன்றாடம் எனது வாழ்க்கையை ஓட்டிக் கொள்ள கஸ்டபடுகின்றேன். தேவைகளை யாரிடாவது சொல்லி பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தேடிக் கொடுப்பேன்.

ஒரு சின்னச் சம்பவத்தைக் கூறுகின்றேன். எனது மகளுக்கு ஒரு சின்ன தங்கச் சங்கிலி செய்து கொடுக்க ஒரு இலட்சம் அளவில் பணம் சேர்த்து வைத்திருந்தேன் அப்போது ஒரு பொதுத் தேவை வந்தது. எனது பிள்ளையின் கழுத்தில் தங்கச் சங்கிலி தொங்குவதைப் பார்ப்பதைவிட அந்தப் பணி மேல் என்று அந்தப் பணத்தை அதற்குச் செலவு செய்து விட்டேன். எனது உறவுகள் என்னைத் திட்டித் தீர்க்கின்றார்கள். எனது வீட்டில் கிணறு ஒன்றோ பாத்ரூமோ இல்லை. ஆனால் அடுத்தவர்களுக்கு நான் பல கிணறுகள் டெயிலட்டுகளைக் கட்டிக் கொடுத்திருக்கின்றேன். மிக அண்மையில்தான் இப்படி சமூகப் பணி செய்கின்ற நீங்கள் கிணறு பத்ரூம் இல்லாமல் இருப்பதா என்று பலத்காரமாக அவற்றை எனக்கு ஒரு நிருவனம் அமைத்துத் தந்தது. என்று மளமளவென்று கண்ணீர் சிந்தினார் அந்தத் தியாகி.!

மற்றுமொரு குடும்ப விவகாரம் ஒன்றில் நான் பாதிக்கப்பட்ட பெண் பக்கம் ஆஜராவதால் ஒருவர் என் முன்னே இந்தக் காரியாலயத்துக்கே வந்து எசிட் போத்தலை எடுத்து உன்னை சும்மா விடமாட்டேன். என்று என்னை மிரட்டினார். நான் ஒரு கவுன்சிலரும் கூட. நான் அவரை சமாதனப்படுத்தி பேசிய போது அவர் மனதில் சில மாற்றங்கள் ஏற்பட்டு அங்கிருந்து போய் விட்டார். இப்போது நாட்டில் முஸ்லிம் பெண்கள் மற்றுமல்ல அன்னிய சமூகப் பிரச்சினைகளுக்குக் கூட என்னைத் தேடி மக்கள் வருகின்றார்கள். உண்பதற்கே குளிப்பதற்கே ஆடைமாற்றக்கூட எனக்கு நேரமில்லை.

முஸ்லிம் பள்ளி நிருவாகங்களும் மதத் தலைவர்களும் என்னை கேவலமாக விமர்சித்து வந்தார்கள். என்னை துரோகி இஸ்லாத்தின் விரோதி என்றெல்லாம் மிம்பர்களில் பேசினார்கள். இப்போது நிலமை கனிசமாக மாறிப்போய் இருக்கின்றது. பள்ளி நிருவாகங்கள் மதகுருமார்கள்-ஆலிம்கள் கூட என்னை கருத்தரங்குகளுக்கு அழைக்கின்றார்கள். இது எனது பணிக்குக் கிடைத்துவரும் மிகப் பெரிய அங்கிகாரமாக நான் கருதுகின்றேன்.

கொரோனா நெருக்கடி காரணமாக ஜூவைரியாவுக்கு புரண்ட் லைன் நிருவனம் கடந்த வாரம் திசம்பர் 9ம் திகதி ஒன்லைன் ஊடாக ஆசிய பாசுபிக் பிராந்தியத்துக்கான விருதை வழங்கி இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தளத்துக்கும் இடம் பெயர்ந்த சமூகத்துக்கும் பணியாற்ற முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிதியத்தை (ஆறுனுவு) அமைத்த ஜூவைரியாவின் பணி அந்த எல்லைகளுக்கு அப்பால் சகல இனத்துக்குமான தேசிய பணி என்று போய் இப்போது சர்வதேச மட்டத்தில் அங்கிகாரம் பெற்றிருக்கின்ற போது அவரிடத்தில் சமூகம் பெற்றக் கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் நிறையவே இருக்கின்றது. அதற்கான வசதி வாய்ப்புக்களை சமூகம் அவரது செயலணிக்கு செய்து கொடுக்க வேண்டியது ஒரு புனிதப் பணியாக இருக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

முஸ்லிம்களுக்கு கோமா ஹீரோவான சாணக்கியர்

Next Story

ஊடக அனுசரணை