எகிப்து தலையீட்டால் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் தற்காலிக நிறுத்தம்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் தாக்குதலில் பல கட்டிடங்கள் தரைமட்ட மாகின. மேலும், பாலஸ்தீனத்தின் அகதிகளின் முகாம்களும் தாக்குதலுக்கு உள்ளானது.

பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால், இதில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாலஸ்தீன பொதுமக்கள். பொதுமக்கள் உயிரிழப்புக்கு இஸ்ரேல் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை.

இஸ்ரேலின் தாக்குதலில் பாலஸ்தீனத்தை சேர்ந்த 44 பேர் பலியாகினர். பலியானவர்களில் 15 பேர் குழந்தைகள். 350 பாலஸ்தீனிய பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சூழலில் இரு தரப்புக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுவதற்கு எகிப்து மத்தியஸ்தம் செய்தது. இதன் விளைவாக இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் குழுவுக்கும் இடையே கடந்த மூன்று நாட்களாக நடந்த சண்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

போர் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து மீட்புப் பணிகளில் பாலஸ்தீனம் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.

Previous Story

20 வருடங்களுக்கு முன்பு தொலைந்த இந்திய பெண் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு

Next Story

சீன கப்பல் இலங்கைக்கு வந்தால் இந்தியாவுடனான உறவு?