உலகை மிரள வைத்த தாலிபான்

ஐஎஸ் ஒழிப்பு

Vigneshkumar

உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.  இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கன் மண்ணில் அமெரிக்கப் படைகள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆப்கனில் அமெரிக்கா வந்த பிறகு தான் கடந்த 2001இல் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது.

சுமார் 20 ஆண்டுகளாகப் போராடிய பின்னரும் கூட, ஆப்கனில் அமெரிக்க படைகளால் வெல்ல முடியவில்லை. இதற்காக அமெரிக்கா ஆண்டுதோறும் பல பில்லியன் டாலர் செலவழிக்க வேண்டியிருந்ததால், இது அமெரிக்கர்கள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியிருந்தது.

தாலிபான் ஆட்சி

இதன் காரணமாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகளைத் திரும்பப் பெறப்போவதாக அமெரிக்கா அறிவித்தது. அதன்படி கடந்த ஆண்டில் இருந்தே ஆப்கனில் இருக்கும் அமெரிக்க படைகள் மெல்லச் சொந்த நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினர்.

அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே, ஆப்கன் அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். இந்த முறை அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஆட்சியைத் தருவோம் என்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுப்போம் என்றும் ஆட்சி அமைத்த சமயத்தில் தாலிபான்கள் தெரிவித்தனர்.

சமீபகால அறிவிப்புகள்

இருப்பினும், அதன் பின்னர் அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் இதற்கு நேர்மாறாக இருந்தது. உலகின் பல்வேறு நாடுகளும் இதுவரை தாலிபான்கள் தலைமையிலான அரசை அமெரிக்கா, ஐரோப்பிய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஆனால், இதையெல்லாம் குறித்து தாலிபான்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அந்நாட்டின் சமீப கால அறிவிப்புகள் அனைத்தும் சர்வதேச அளவில் சமீப காலமாக சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது,

புதிய உத்தரவு

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு ஷாக் உத்தரவைத் தாலிபான் அரசு பிறப்பித்துள்ளது. தாலிபான்கள் ஆட்சி அமைக்கும் முன்பு வரை போராளிக் குழுவாக இருக்கும் போதே அவர்களின் ராணுவத்தின் ஒரு அங்கமாகத் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடும் வீரர்களைக் கொண்டிருந்தனர்.

20 ஆண்டுக்கால போரில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்களை எதிர்கொள்ளத் தற்கொலைப் படை வீரர்களைத் தாலிபான்கள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தினர்.

தற்கொலைப் படை

இப்போது நாடு முழுவதும் சிதறிக் கிடக்கும் தற்கொலைப் படை வீரர்களை ஒரே பிரிவின் கீழ் ஒன்றிணைக்கும் பணிகளை ஆப்கான் ராணுவம் எடுத்துள்ளது. இவர்கள் ஆப்கானிஸ்தானைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும் என விரும்புவதாக தாலிபானின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி கூறினார். இந்த வீரர்களை ராணுவத்தில் இணைப்பதாகவும் இவர்களுக்கு ராணுவ அதிகாரிகள் பொறுப்புகளும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஆப்ரேஷன்கள்

இந்த புதிய அதிநவீன மற்றும் சிறப்புப் படை மிக முக்கியமான ஆப்ரேஷன்களுக்கு பயன்படுத்தப்படும் என பிலால் கரிமி தெரிவித்தார். தற்போது ஆப்கனில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் தான் தாலிபான்களுக்கு முக்கிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி அமைந்தவுடன் மட்டும் சுமார் 5 பயங்கரவாத தாக்குதல்களைத் தாலிபான்கள் நிகழ்த்தியுள்ளனர். அவர்களை ஒழிக்கும் நடவடிக்கைகளில் தற்கொலைப் படையை ஆப்கன் ராணுவம் பயன்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Story

கஜகஸ்தான்: ரஷ்ய படை விரைந்தது – பலர் பலி!

Next Story

நாட்டின் பலபகுதிகள் இன்று இருளில்!