ஊர் சிரிக்கும் 2023 பஜெட் நாளை!

-நஜீப் பின் கபூர்- 

எந்த ஒரு வீட்டிலும் நாட்டிலும் வரவும் செலவும் சேர்ந்ததுதான் பஜெட் என்று சொல்லப்படும். ஆனால் நாம் இங்கு பேசப் போவது வரவு பற்றிய நம்பகத்தமைற்ற கடன் காசையும் கல்லில் நார் உரிப்பது போல அட்பமாக நமக்கு வரும் என்று நம்புகின்ற மிகச் சின்ன ஒரு பணத் தொகையை வைத்துத் தயாரிக்கின்ற 2023 வரவு செலவுத் திட்டத்தைப் பற்றித்தான் நாம் இந்த வாரம் பேசப் போகின்றோம்.

இதற்க நல்லதொரு உதாரணம் மொட்டு அரசில் சில நாட்கள் நிதி அமைச்சராக இருந்த அலி சப்ரி தனது வங்கிக் கணக்கில் இருந்த காசு கூட நான் நிதி அமைச்சை பொறுப் பேற்கும் போது அரச கஜானாவில் இருக்கவில்லை என்று சொல்லி இருந்தார். இதிலிருந்து நிலமையின் பாரதூரத்தைப் ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

ஜனரஞ்சகமான மற்றுமொரு முன்னாள் நிதி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அசாதாரணமான வரியை அறவிட்டு மக்களை தொந்தரவு செய்யாமல் கொள்ளையடித்த பணத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்தை வடிவமைத்து அந்தப் பணத்தைப் பெற்று நெருக்கடிகளுக்குத் தீர்வுகான அரசு முனைய வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். பேராசிரியருக்கும் காலம் கடந்து ஞானம்தான் பிறந்திருக்கின்றது. நல்லது.!

2022க்காக பசில் போட்ட வரவும் செலவும் செல்லாக் காசாகியதும். அதன் பின்னர் அதனைச் சரி செய்ய பல நிதி அமைச்சர்கள் வந்து மக்களுக்கு நெருக்கடிகளைக் கொடுத்ததும் ஒன்றும் பழைய கதைகள் அல்ல அண்மைக்கால சம்பவங்கள்தான் அவை. இந்த நிலையில் தற்போது நிதி அமைச்சுப் பதவியை அலங்கரிக்கின்ற ஜனாதிபதி ரணில் புதிய வரவு செலவுத் திட்டமொன்றை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றார்.

அதற்கு முன்னர் அவர் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற நிதிப் பற்றக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்ப்பில் அடிக்கடி மக்களை எச்சரித்துக் கொண்டிருப்பதும் தெரிந்ததே. ஆனால் அதிகாரத்தக்கு வரும் முன்னர் ஆட்சிப் பொருப்பை தன்னிடம் ஒப்படைத்தால் நிலமையை சீராக்கித் தருவதாகவும் பகிரங்கமாகவே சொல்லி இருந்தார்.

அப்படிச் சொன்ன மனிதன் இன்று வருகின்ற நாட்கள் மிகுந்த நெருக்கடி மிக்கதாக இருக்கும் என்று தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டும் எச்சரித்துக் கொண்டும் வருகின்றார். இதற்கிடையில் ஆளும் மொட்டுக் கட்சியினர் குறிப்பாக ராஜபக்ஸாவின் அரசியல் வாரிசு நாமல் ஏதோ ஆகாயத்தில் இருந்து வீழ்ந்தவரைப் போல் மக்களுக்கு சுமைகளை கொடுக்கக் கூடாது கஷடங்களைக் கொடுக்கக் கூடாது என்று புதுக் கதையைச் சொல்ல ஆரம்பித்திருக்கின்றார்.

வருகின்ற வரவு செலவுத் திட்டத்தில் மிகப் பெரிய பெருளாதார நெருக்கடியும் மக்கள் எதிர்ப்பும் வர இருப்பதால் இதனை ரணிலின் தலையில் போடுவதற்கு இப்போதே பிரசாரங்களை அவர்கள் மேற் கொண்டிருக்கின்றார்.

தங்களுக்கு அதிகாரமிக்க அமைச்சுக்கள் தரா விட்டால் 2023 வரவு செலவுத் திட்டங்களுக்கு நாம் ஆதரவாக வாக்களிக்கப் போவதில்லை என்று மொட்டுக் கட்சியில் இருக்கும் பலர் ஜனாதிபதி ரணிலை நச்சரித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் அப்படிச் சொல்வது போல இந்த வரவு செலவுத் திட்டத்தை அமைச்சுப் பதவிகளைக் கொடுக்கவிட்டாலும் எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்று நாம் நம்புகின்றோம். நெருக்கடியான இந்த நேரத்தில் பயமுறுத்தி எப்படியாவது பதவிகளை வாங்கிக் கொள்கின்ற ஒரு முயற்சியைத்தான் அவர்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

எப்படியும் அரசாங்கத்தின் ஆயுள் காலம் முழுவதும் பதவியில் இருந்து விட்டு போவதுதான் மஹிந்த ரணில் மற்றும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமாக இருக்கின்றது. மக்களுக்கு என்ன துன்பங்கள் கஷடங்கள் வந்தாலும் அதனை இவர்கள் ஒரு பொருட்டாக ஒருபோதும் எடுத்தக் கொள்ள மாட்டார்கள்.

மேலும் ஐம்எப். மற்றும் உலக வங்கி என்பன இலங்கையில் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்ற இலவச வசதிகளை அடியோடு நிறுத்தி விடுமாறுதான் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இலவச மருத்துவம் பல்கலைக்கழக கல்வி என்பவற்றை இரத்துச் செய்யுமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன ஆனால் அரசு அதற்குப் பின்னடிக்கின்றது.

இப்படியான ஒரு நிலையிலும் அரசாங்கம் யுத்தமோ பயங்கரவாத அச்சுருத்தலோ நாட்டில் இல்லாத  ஒரு நேரத்தில் 41000 கோடி ரூபாய்களை இராணுவச் செலவுகளுக்கு ஒதுக்கி இருக்கின்றது. இது உலகத்தாரை சிரிக்க வைக்கின்ற ஒரு செயலாக இருக்கும். மேலும் எரி பொருளை இறக்குமதி செய்வதுற்குப் பெருந் தொகைப் பணத்தை செலவு செய்யும் அரசு அது போன்ற ஒரு தொகையை தாமதக் கட்டணமாக வழக்கமாகச் செலுத்திக் கொண்டு வருகின்றது. இந்தத் தாமதக் கட்டணத்துக்குப் பின்னால் ஒரு பெரு பணமோசடி-கொள்ளையே நடந்து கொண்டிருக்கின்றது  என்ற பாரிய குற்றச்சாட்டுக்களும் முறைப்பாடுகளும் இருந்த வருகின்றன.

வரவுகளே இல்லாத ஒரு நாட்டில் அல்லது கம்மியாக இருக்கின்ற நாட்டில் வரவு செலவுத் திட்டம் என்பது குறிப்பாக வரவுகள் பற்றிய கணக்குகள் வெரும் கற்பனை மற்றும் ஊகங்களின் அடிப்படையில் சொல்லப்படுபவையாகவே இருந்து வருகின்றன. இதனை நம்பி வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது கேளிக்கூத்து என்பதனை இலங்கை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக செய்து வந்திருக்கின்றது.

குறிப்பாக பசில் காலத்தில் இந்தப் போலிக் கணக்குகள் உச்சம் தொட்டிருந்தன. அங்கு பொருளாதார வளர்ச்சி விகிதம் என்பது வெரும் ஊகங்களின் அடிப்படையில் செய்யப்பட்டிருந்தன. பின்னர் என்ன நடந்தது என்பது ஏழுதலையார் பதவியல் இருந்து விரட்டப்பட்டதும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் மனிதனே அச்சானி என்று அடையாளப்படுத்தப்பட்டதும் தெரிந்ததே.

அவைகள் ஒரு பக்கம் இருக்க இந்த நாட்டில் பண நெருக்கடியோ பட்டினிகளோ கிடையாது நம்மிடம் போதிய அளவு காசு இருக்கின்றது என்று இதே மொட்டுக் கட்சியைச் சேர்ந்த நாமலும் குருனாகல ஜொனியும் கூவித் திரிந்ததும் தெரிந்ததே. அவர்கள் தம்மிடம் பணம் இருக்கின்றது என்று அன்று கூறி இருப்பது பியகமையில் இருக்கின்ற காகிதங்களையும் அச்சு இயந்திரத்தையும் நம்பி என்பது பின்னர் மக்களுக்குத் தெரிய வந்தது.

அத்துடன் காசு அச்சடிப்பது என்பது நாம் மட்டுமல்ல உலகில் பல நாடுகளும் செய்து கொண்டுதானே வருகின்றன என்பது முன்னாள் மத்திய வங்கி ஆளுனரும் அமைச்சராகவும் இருந்த அஜித் கப்ராலும் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்ததும் தெரிந்ததே.

இது உலகம் சிரிக்கின்ற ஜனாதிபதி ரணில்-மஹிந்த பஜெட் என்று நாம் ஏன் உச்சரிக்கின்றோம் என்றால் அக்கம் பக்கத்தில் அனைவரிடத்திலும் வாங்க வேண்டிய கடன்களை எல்லாம் வாங்கி ஊரெல்லாம் பண்ண வேண்டி வகையில் குடிமக்களிடத்தில் இருந்து பறிக்க வேண்டிய பணத்தைப் பிடுங்கி, நாட்டில் மர்மஸ்தனங்களில் இருக்கின்ற பொருமதிமிக்க சொத்துக்களை எல்லாம் அன்னியனுக்கு விற்று அதன்மூலம் கொமிஷ கொள்ளை என்று வேறு எல்லா சுருட்டிக் கொண்டு நட்பு நாடுகளையும்  சர்வதேச நிதி நிறுவனங்களை சொல்ல வேண்டிய எல்லாப் பொய்களையும் கூறி ஏமாற்றி வஞ்சித்தும் தான் நமது அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக வரவு செலவுத் திட்டங்களை இந்த நாட்டில் சமர்ப்பித்து வந்திருக்கின்றார்கள்.

இதன் பின்னர் எந்த வகையிலும் இந்த நாட்டில் வரவு செலவுத் திட்டங்களை சமர்ப்பிக்க முடியாத ஒரு நிலை. உற்பத்தி துறைகளில் பாரிய சரிவு. கைத்தொழில் துறையில் பின்னடைவு விவசாயத்துறையில் அழிவு இப்படியெல்லாம் நாம் கெட்டுப் போய் இருக்கின்ற நாட்டில் மாற்றானை நம்பி சமர்ப்பிக்கப்படுகின்ற வரவு செலவுத் திட்டங்கள் எவ்வளவு தூரம் நம்பகத் தன்மை உடையவையாக இருக்க முடியும்.?

மேலும் வரவு செலவுத் திட்டங்களில் சொல்லப்படுகின்ற கணக்கு வழக்குகள் இந்த நாட்டில் எப்போதாவது நிறைவேறி இருக்கின்றதா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். கடந்த வருடத்தை விட இந்த வருடம் 165700 கோடி செலவு அதிகம். அதன்படி 2023ல் மொத்த செலவுத் தொகை 788500 கோடி ரூபாய். வரவு பற்றிய தரவுகள் நூறுவீதம் கற்பனையாக இருப்பதால் அவற்றை நாம் இங்கு பதியவில்லை.

இதற்கெல்லாம் ஒருகாலத்தில் குடித் தொகையையும் போரையும் இன்று கொரோனாவையும் குற்றவாளிக் கூண்றில் நிறுத்தி இந்த நாட்டில் உள்ளவர்கள் தாம் தப்பிக் கொள்ள முயன்றதும் அந்த நியாயத்தை உலகும் மக்களும் நிராகரித்தும் தெரிந்ததே.

கொவிட்-19ல் கூட ஒரு தடுப்பூசிக்கு ஐந்து டலர்களை ராசாக்கள் மோசடி செய்ததும், தம்மிடம் இதனை வாங்கிய விலையை வெளியில் சொல்ல வேண்டாம் என்று உத்தியோகபூர்வமாக சீனாவைக் கேட்டவர்கள்தானே நம்ம ஆட்சியாளர்கள். ஊழல் மோசடி நயவஞ்சகம் ஏமாற்ற என்பவற்றின் மொத்த உருவமாகத்தான் வரவு செலவுத் திட்டங்களும் அமையும் என்பது தெளிவானது.

2023 வரவு செலவுத் திடத்தில் இல்லாத ஒன்றுக்கு உருவம் கொடுப்பத போலத்தான் புள்ளி விபரங்களை தயாரித்து கணக்ககளைச் சோடிப்பார்கள் அப்படி சோடித்தவைகள் அனைத்தும் போலியானது பிழையானது என்று தெரியவரும் போது அதனைத் தயாரித்தவர்கள் அதற்காக தலைகுனிவதோ வெட்கப்படுவதோ கூட இல்லை.

இதுதான் இந்த நாட்டு சம்பிரதாயம். நாளை சபைக்கு வருகின்ற வரவு செலவு அறிக்கை ஒரு சோக கீத பணியில்தான் ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான ரணில் சமர்ப்பிப்பார். வழக்கம் போல அவர் வர இருக்கின்ற நெருக்கடிகளையும் பஞ்சத்தையும்தான் சபையில் கொட்டித் தீர்ப்பார் என்று நாம் நம்புகின்றோம்.

இதற்கிடையில் இலங்கையின் பட்டினி இரு மடங்குக்கு மேலாக செல்லும் இது மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதிக்கம் என்று ஐ.நா.சபை எச்சரித்திருக்கின்றது. இதற்காக அவர்கள் இதுவரை எட்டுக் கோடி அமெரிக்க டொலர்களை சேகரித்திருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இன்னும் ஏழு கோடி அமெரிக்க டொலர்கள் இதற்காகத் தேவைப்படுவதாகவும்  தெரிவித்திருக்கின்றார்கள்.

இது ஒரு அரசுக்கு பெருத்த அவமானமாக இருந்தாலும் இந்த நேரத்தில் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இது மகிழ்ச்சியான செய்தியாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் எதியோபியாவுக்கும் சோமலியாவுக்கும் இப்படித்தான் சர்வதேசம் சாப்பாடு போட்டது நமக்கு நினைவுக்கு வருகின்றது. இது கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள ஐ.நா.முகவர்கள் வெளியிட்ட அறிக்கையில் உள்ள தகவல்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமராக இருந்த காலத்தில் மத்திய வங்கியைக் கொள்ளையடித்த ரணிலை நாம் பதவிக்கு வந்ததும் சிறையில் போடுவோம் கொள்ளையடித்த அந்தப் பணத்தை மீட்டு எடுப்போம் என்று மொட்டு மேடைகள்தோரும்; மார்தட்டியவர்கள் பதவிக்கு வந்து இன்று அது தொடர்பாக எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மாறாக இன்று அவர்கள் யாரைக் கொள்ளைகாரன் என்று சொன்னார்களோ அவரையே ஜனாதிபதியாகவும் பதவியில் அமர்த்தி அவர் பதவியைப் பாதுகாத்துக் கொண்டும் வருகின்றார்கள்.

இது எந்தவகையில் நியாயமானது. கடந்து தேர்தலில் மக்கள் எவரைச் சீரோவாக்கி வீட்டுக்கு துரத்தி அடித்தார்களோ அவரையே அதிகாரம் மிக்க பதவிக்கும் கொண்டு வந்து அமர்த்துவது உலகில் வேறு எந்த நாட்டில்தான் நடக்க முடியும். இது என்ன நாடு என்பது அவர்கள் வீட்டு சொத்தா?

இப்படிப்பட்ட ஒருவர்தான் இன்று நாடாளுமனத்தில் நாட்டுக்காக வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பனம் செய்கின்றார். அரசின் புதிய வரி விதிப்புக் கொள்கை பற்றி அண்மையில் ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க உழைக்கும் போதே வரி செலுத்துவது என்ற அரசின் கொள்கைப்படி இப்போது வெறும் 600 ரூபா செலுத்திய ஒருவர் இன்று 21000 ரூபாய்களையும் 8000 ரூபா செலுத்திய ஒருவர் இன்று 280000 ரூபா செலுத்த வேண்டி வருகின்றது.

இப்படியான வரி அரவிடும் போது முதலீட்டாளர்கள் உயர் பதவிகளில் இருப்போர் நாட்டில் இருந்து விரைவில் வெளியேறுவதும் தவிர்க்க முடியாது. இன்று அதுதான் நடந்து கொண்டிருக்கின்றது என்றும் அணுரகுமார அங்கு சுட்டிக் காட்டி இருந்தார்.

பொருளாதார நிதி நெருக்கடியால் வருகின்ற அடுத்த மக்கள் அலை இரத்த வெள்ளோட்டத்தில்தான் போய் முடியும். இதனை எந்த சக்தியாலும் ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது. இப்படிச் சொல்லி இருப்பவர் வேறுயாரும் அல்ல இலங்கையின் தற்போதய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ.

அவர் யதார்த்தமாகத்தான் போசி இருக்கின்றார். இப்படியான ஒரு கருத்தை பகிரங்கமாகப் சொன்னதற்காக அவர் மீது ஆளும் தரப்பு குறிப்பாக ஜனாதிபதி ரணில் விசுவாசிகள் பெருத்த கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

குற்றவாளியாக இனம் காட்டப்பட்ட ஜனாதிபதி. யதார்த்தத்தை பேசுகின்ற மத்திய வங்கி ஆளுநர். இவர்கள்தான் 2023 வரவு செலவு அறிக்கையை நமக்குத் தரப்போகின்றார்கள். அதனைத் தொடர்ந்து நாட்டில் என்ன நடக்கும் என்பதனைப் பொருத்திருந்து பார்ப்போம்.

நன்றி:13.11.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

ஞானசாரரிடம் இரண்டரை மணிநேர விசாரனை

Next Story

சிறைவாசம் பெரிய பல்கலைக்கழகம்-நளினி