காசாவில் கொடூரம்! இஸ்ரேலிய வீரர்கள் வாக்குமூலம்!

காசாவில் பாலஸ்தீன மக்கள் மீது தினமும் துப்பாக்கிச்சூடு நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உணவு வாங்குவதற்கு வரிசையில் நிற்கும் பொதுமக்கள் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்த சொல்லி தங்கள் தளபதிகள் உத்தரவிட்டிருப்பதாக இஸ்ரேல் வீரர்கள் கூறியுள்ளனர் என்று இஸ்ரேலிய செய்தி ஊடகமான ‘ஹாரெட்ஸ்’ தெரிவித்திருக்கிறது.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கும் பணிகளை ‘காசா மனிதாபிமான அறக்கட்டளை’ (GHF) செய்து வருகிறது. இது ஒரு அமெரிக்க அமைப்பாகும்.
இந்த அமைப்பின் மூலம் உதவிகளை பெறுவதற்காக வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள் மீது இஸ்ரேல் படையினர் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறார்கள் என்று புகார்கள் எழுந்து வந்தன.

இஸ்ரேல் வீரர்களின் வாக்குமூலம்
தற்போது இந்த குற்றச்சாட்டை, ‘ஹாரெட்ஸ்’ செய்தி ஊடகம் உறுதி செய்திருக்கிறது. இந்த ஊடகத்திற்கு பேட்டியளித்த இஸ்ரேல் வீரர்கள், “நாங்கள் டாங்கிகளிலிருந்து இயந்திர துப்பாக்கிகளால் சுட்டோம், கையெறி குண்டுகளை வீசினோம். பாலஸ்தீனர்கள் மீது கண்மூடித்தனமாக சுட எங்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டிருந்தது. உதவி தேடி வந்தவர்களில் பலர் முதியவர்கள், பெண்கள் மற்றும் அடிப்படைத் தேவைகளைத் தேடி வந்த குழந்தைகளும் இருந்தனர்” என்று கூறியுள்ளனர்.

பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு
GHF மூலம் உணவு விநியோகிக்கப்படும். ஆனால், எந்த நேரத்தில் விநியோகிக்கப்படும் என்பது சரியாக தெரியாது. பெரும்பாலும் நள்ளிரவு 1 மணிக்கு உணவு விநியோகம் தொடங்கும். உணவு கிடைக்கிறது என்றவுடன் மக்கள் முண்டியடித்துக்கொண்டு வருவார்கள்.
கூட்டம் அலைமோதும். ஒரு கட்டத்தில் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்தவும், வேறு இடத்திற்கு நகர்த்தவும் வேண்டியதிருக்கும். அந்த சமயத்தில் கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்படுவதற்கு பதில், இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
தினமும் 5 பேர்
பொதுமக்கள் நிராயுதபாணி என்று தெரிந்தும் கூட, இஸ்ரேலிய வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ‘ஹாரெட்ஸ்’ செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மேலும் சில வீரர்கள் கூறுகையில், “இந்த உணவு விநியோக மையம் ஒரு படுகொலை களம். அதிகாலை பனிமூட்டத்தின்போது பொதுமக்கள் கூடுவார்கள். நாங்கள் அவர்களை நோக்கி சுடுவோம். தினமும் குறைந்தது 5 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள்”
என்று தெரிவித்திருக்கின்றனர். பெயர் குறிப்பிட விரும்பாத இந்த வீரர்கள், ஆயுதங்கள் பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதால் அதிருப்தியடைந்துள்ளனர்.
இஸ்ரேல் ஊடகம் வெளி கொண்டு வந்த உண்மை
மே மாதம் இறுதி தொடங்கி இன்று வரை, உணவுக்காக காத்திருந்து கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 549. மட்டுமல்லாது 4,066க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காசா அரசு தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்க அரசாங்கங்களின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட இந்த GHF அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து செயல்படவில்லை என்றும் நடுநிலையான மனிதாபிமானக் கொள்கைகளின்படி செயல்படவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஐநா கண்டனம்
GHF உதவி மையம் குறித்து ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரேஸ் கூறுகையில், “இது இயற்கையாகவே பாதுகாப்பற்றது. இந்த உதவிக்கான வழிமுறை உணவளிப்பதற்கு பதில் மக்களைக் கொல்கிறது” என்று விமர்சித்திருக்கிறார்.
உதவி என்ற போர்வையில் படுகொலையை GHF நடத்துவதாக சர்வதேச மருத்துவ தொண்டு நிறுவனமான மெடெசின்ஸ் சான்ஸ் ஃபிரான்டியர்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
விசாரணை நடத்தப்படும்
இந்த குற்றச்சாட்டுகளை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வழக்கம்போல மறுத்திருக்கிறார். அவரது அமைச்சர்களும், ராணுவமும் அவ்வாறே மறுத்திருக்கிறது. “பொதுமக்கள் மீது வேண்டும் என்றே துப்பாக்கிச்சூடு நடத்தப்படதாக சொல்லப்படுவதில் உண்மை இல்லை.
இருப்பினும் சட்டங்கள் மீறப்பட்டிருக்கிறது எனில் நாங்கள் அது குறித்து விசாரணை மேற்கொள்வோம்” என்று ராணுவம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த விஷயத்தில் போர் குற்றம் நடந்திருக்கிறதா? என்பதை விசாரிக்க இராணுவ வழக்கறிஞர் ஜெனரல் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





