இஸ்ரேல்-ஈரான் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இப்போது ஈரான் நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரான் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல்நிலை இப்போது கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான ஒரு சூழல் நிலவி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு ஒரு புறம் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லாவை எதிர்த்து இஸ்ரேல் போரிட்டு வருகிறது.
அதேநேரம் மற்றொருபுறம் இஸ்ரேலுக்கும் ஈரான் நாட்டிற்கும் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நேரடி மோதல் வெடித்தால் அது மிகச் சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் உலக நாடுகள் நிலைமை உற்றுக் கவனித்து வருகிறது.
மத்திய கிழக்கு: இது ஒரு பக்கம் இருக்க ஈரான் நாட்டிலும் இப்போது குழப்பமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் நாட்டில் என்ன தான் அதிபர் பதவி இருந்தாலும் அங்கு உண்மையில் அதிகாரம் என்பது அதன் உச்ச தலைவரிடமே இருக்கும். அதன்படி ஈரான் அதிபராக மசூத் பெசெஷ்கியன் இருந்தாலும் ராணுவம் உட்பட முக்கிய துறைகள் எல்லாம் ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனி வசமே இருக்கும்.
இப்போது ஈரானின் உச்ச தலைவர் அலி கமேனியின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக அவரது இரண்டாவது மகனான மொஜ்தாபா கமேனி ஈரானை வழிநடத்தத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கமேனியின் மறைவுக்கு முன்னதாகவே மோஜ்தபா பொறுப்பேற்கலாம் என்றும் கூறப்படுகிறது.. மத்திய கிழக்கில் இப்போது பதற்றம் நிலவும் சூழலில் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஈரானின் உச்ச தலைவராக மொஜ்தபா கமேனி ரகசியமாகத் தேர்வு செய்யப்பட்டதாக இந்த தகவலை ஈரான் இன்டர்நேஷனல் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது..
அலி கமேனி: ஈரான் உச்ச தலைவராக இருக்கும் அலி கமேனிக்கு இப்போது 85 வயதாகிறது. அவரது உடல்நிலை கடந்த சில காலமாகத் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தே வந்தார்.
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கடந்த அக். 4ம் தேதி நடந்த சிறப்புப் பிரார்த்தனை கூட்டத்தில் தான் கமேனி நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலந்து கொண்டார். கையில் துப்பாக்கியுடன் அந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதற்கு முன்னதாக அதாவது செப். 26ம் தேதியே அலி கமேனியின் உத்தரவின் பேரில் 60 உறுப்பினர்களைக் கொண்ட அந்நாட்டின் வல்லுநர் சபைக் கூட்டம் நடந்துள்ளது. அங்கு கமேனிக்கு பிறகு நாட்டை வழிநடத்துவது யார் என்பதைத் தேர்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தேர்வு: தொடக்கத்தில் சில சலசலப்புகள் இருந்த போதிலும், இறுதியில் கமேனிக்கு பிறகு ஈரான் நாட்டை அவரது மகன் மொஜ்தபா வழிநடத்துவார் என்று முடிவெடுக்கப்பட்டதாக ஈரான் இன்டர்நெஷ்னல் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. அதேநேரம் இது தொடர்பாக இதுவரை ஈரான் எந்தவொரு அறிவிப்பையும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
யார் இவர்: ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி 1969இல் வடகிழக்கு ஈரானில் உள்ள மஷாத் என்ற இடத்தில் பிறந்தார். இஸ்லாமிய மதம் குறித்து பல ஆய்வுகளை அவர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சஹ்ரா ஹத்தாத்-அடெல் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.