.வீடியோ வெளியிட்ட ஈரான்
ஈரான் உயர்மட்ட தலைவர் மொஜ்தபா கமேனி கோமாவில் இருக்கிறார். அவரது உடல்நலம் மோசமாகி உள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தொடர்ந்து இஸ்ரேல் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகின்றன.
இதற்கிடையே தான் மொஜ்தபா கமேனி நலமுடன் மற்றவர்களுடன் பேசி கொண்டு இருக்கும் வீடியோவை ஈரான் வெளியிட்டு இஸ்ரேல், அமெரிக்காவிற்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் போரை தொடங்கி நடத்தின.
பிப்ரவரி மாதம் 28 ம் தேதி நடந்த அட்டாக்கில் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து ஈரானின் உயர்மட்ட தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்வு செய்யப்பட்டார்.
மொஜ்தபா கமேனி உயர்மட்ட தலைவராக தேர்வான பிறகு அவர் பொதுவெளிக்கு வரவே இல்லை. இன்னும் சொல்லப்போனால் தந்தையும், ஈரானி்ன் உயர்மட்ட தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கு நிகழ்வில் கூட மொஜ்தபா கமேனி பங்கேற்கவில்லை.
இதனால் மொஜ்தபா கமேனி குறித்த சந்தேகங்கள் எழுந்தன. இதற்கிடையே தான் இஸ்ரேல் ஊடகங்களில் தொடர்ந்து மொஜ்தபா கமேனியின் உடல்நலம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
”ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதலில் மொஜ்தபா கமேனியின்உடல் சிதைந்துவிட்டது. அவர் கோமாவில் உள்ளார்” என்று தொடர்ந்து செய்திகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் தான் தற்போது இஸ்ரேல் ஊடகங்களில், ”மொஜ்தபா கமேனியின் உடல்நலம் மோசமாகி உள்ளது.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோசமான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறப்பட்டு இருந்தது. இஸ்ரேலி சேனல் 14 என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”மொஜ்தபா கமேனியின் உடல்நலம் மிகவும் மோசமாக உள்ளது” என கூறப்பட்டு உள்ளது.
அதேபோல் ஜெருசலேம் போஸ்ட் வெளியிட்ட செய்தியில் ஈரான் அரசுக்கு நெருக்கமான தரப்பினரிடம் விசாரித்தபோது என்று சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ”மொஜ்தபா கமேனி விரைவில் மரணம் அடைந்தாலும் கூட நாங்கள் ஆச்சரியப்படமாட்டோம்” என்று கூறி அவரது உடல்நலம் மோசமாகி உள்ளதை தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மொஜ்தபா கமேனியின் உடல் நலம் மோசமாகி உள்ளதால் அடுத்த உயர்மட்ட தலைவர் யார்? என்பது தொடர்பான விவாதம் நடந்து வருகிறது என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கிடையே தான் தற்போது ஈரான் அந்த செய்தியை பொய் என சொல்லும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஈரானின் Mehr செய்தி நிறுவனம் மொஜ்தபா கமேனி சிலருடன் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மொஜ்தபா கமேனி மற்றும் சிலர் உள்ளனர். மொஜ்தபா கமேனி இயல்பாக பேசுவது போல் அந்த வீடியோ அமைந்துள்ளது.
இதன்மூலம் மொஜ்தபா கமேனி நலமாக இருக்கிறார். அவரது உடல்நலம் பற்றி பரவும் தகவல் பொய்யானது என்பதை ஈரான் வெளிப்படுத்தி உள்ளது.
இருப்பினும் இந்த வீடியோ எப்போது, எந்த நேரத்தில், எந்த தேதியில் எடுத்தது? என்பது பற்றிய விவரத்தை வெளியிடவில்லை. இதனால் இது பழைய வீடியோவாக கூட இருக்கலாம் என்று ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். அதேவேளையில் இன்னொரு தரப்போ ஒருவேளை மொஜ்தபா கமேனி உயிருடன் நலமாக இருக்கிறாரா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஈரானின் இந்த வீடியோவால் மக்கள் மட்டுமின்றி இஸ்ரேல், அமெரிக்காவும் குழம்பி உள்ளது. மொஜ்தபா கமேனியின் உடல் நலம் பற்றிய அந்த நாடுகளின் உளவுத்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கி உள்ளனர்.




