இலங்கை வெற்றிக்கு உதவிய இந்திய வீரர் !

சர்வதேச அரங்கில் 27 ஆண்டுகளாக இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணியின் செய்துவந்த ஆதிக்கத்தை அந்த அணி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டம் வென்றநிலையில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் 2-0 என்று மண்ணைக் கவ்வவைத்து, 27 ஆண்டுகளுக்குப்பின் தொடரை இலங்கை கைப்பற்றி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டது.

ஜெயசூர்யா

இலங்கை அணியில் ஆடிவரும் பல வீரர்கள் கடைசியாக இலங்கை அணி ஒருநாள் தொடரை வென்றபோது பிறந்திருக்கவே மாட்டார்கள், அல்லது சிறிய குழந்தைகளாக இருந்திருக்கலாம். ஆனால், அவர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியின் ஆதிக்கத்தை இலங்கை அணியின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளர் முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

இலங்கை அணி இந்திய அணிக்கு எதிராக டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இழந்தபின், ஒருநாள் தொடரில் வெகுண்டு எழுந்துள்ளதற்கு பின்புலத்தில் முக்கிய நபர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் இலங்கை அணிக்கு தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் சனத் ஜெயசூர்யா.

முன்னாள் வீரர் ஜெயசூர்யா குறித்து பெரிதாக அறிமுகம் தேவையில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் தொடக்க வீரர் அதிரடியாக ஆடக்கூடிய பாணியை பிரபலப்படுத்தியவரே ஜெயசூர்யாதான். 1996ம் ஆண்டு உலகக் கோப்பை இலங்கை அணி வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஜெயசூர்யாவின் அதிரடியான பேட்டிங்தான். ஜெயசூர்யாவின் இந்த அதிரடி ஆட்டம் வெற்றி பெறவே அதே பாணியை நீண்டகாலத்துக்கு தொடர்ந்தார், பல அணிகளும் இதே பாணியை கையாண்டன.

இன்றைய சூழலில் பல அணிகள் கையாளும் பவர்ப்ளே ஓவர்களில் அதிரடி ஆட்டத்தை கையாள்வது, பிஞ்ச் ஹிட்டர்களாக மாறுவது போன்ற உத்திகளை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே ஜெயசூர்யா பரிசோதித்துவிட்டார். ஜெயசூர்யா போன்ற அனுபவசாலியை இலங்கை அணி பயிற்சியாளராக நியமித்தபோதே இந்திய அணிக்கு இந்தத் தொடர் சவாலாக மாறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றாற்போல் ஜெயசூர்யா பயிற்சியில் இலங்கை அணி டி20, மற்றும் ஒருநாள் தொடரில் சிறப்பாகவே செயல்பட்டது. டி20 தொடரை இழந்தாலும், அதில் செய்த தவறுகள் அனைத்தையும் ஒருநாள் தொடரில் திருத்திக்கொண்டு தொடரை 27 ஆண்டுகளுக்குப்பின் வென்றுள்ளது.

SL vs IND 2024, SL vs IND 3rd ODI Match Report, August 07, 2024 - Wellalage five-for sends India crashing to 2-0 defeat

டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து தொடக்கத்திலேயே இலங்கை அணி வெளியேறிய உடனேயே, இந்திய அணிக்கு எதிரான தொடருக்கு தயாராகத் தொடங்கியது. இந்திய அணிக்கு எதிரான தொடரை மனதில் வைத்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே ஜெயசூர்யாவை இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகவும் இலங்கை கிரி்க்கெட் வாரியம் கொண்டு வந்தது.

இந்திய டி20 அணியில் இருந்து ஜாம்பவான் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றநிலையில் இந்திய அணியை வீழ்த்த இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைத்து உத்திகளை வகுத்தார்.

“பாம்பின் தடம் பாம்பறியும்” என்பதைப் போல இந்திய அணியை வீழ்த்த முன்னாள் இந்திய வீரர் ஒருவரின் உதவியையும், உத்திகளையும் ஜெயசூர்யா நாடினார். அந்த முன்னாள் வீரர் இந்திய அணியில் ஏராளமான இளம் வீரர்களை பட்டைதீட்டி புதிய பரிமாணத்துக்கு கொண்டுவந்தவர், ஐபிஎல் தொடரிலும் அவரின் பங்களிப்பு அளப்பரியதாக இருப்பதால் அவரின் உதவியோடு ஜெயசூர்யா இந்தியத் தொடரை எதிர்கொண்டார்.

ஜெயசூர்யா வகுத்த திட்டங்கள்

இந்திய அணி பேட்டர்கள் பொதுவாகவே சுழற்பந்துவீச்சுக்கு எதிராக திணறக்கூடியவர்கள், பெரிதாக ரன்சேர்க்க முடியாதவர்கள். இந்திய அணியில் இருக்கும் ஷிவம் துபே, சூர்யகுமார் யாதவ், கோலி, ரோஹித் சர்மா, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல், உள்ளிட்ட பேட்டர்கள் சர்வதேச அளவில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பெரிதாக ஜொலித்ததில்லை.

அதிலும் கொழும்பு பிரேமதேசா மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சொர்க்கபுரி. இந்த மைதானத்தில் இந்திய அணியின் பேட்டர்களை எளிதாக வீழ்த்த முடியும் என்பதை ஜெயசூர்யா புரிந்து கொண்டார். டி20 தொடர் நடந்த பல்லேகலே மைதானமும் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கக் கூடியது. இந்த மைதானத்தில் இலங்கை அணியினர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும், பேட்டிங்கில் சொதப்பினர்.

டாப்ஆர்டர் பேட்டர்கள் தவிர மற்ற எந்த பேட்டர்களும் 3 போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்படாததால் தொடரை இழக்க நேர்ந்தது. ஒருவேளை நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் ஓரளவுக்கு பேட் செய்திருந்தாலே, டி20 தொடரில் இந்திய அணிக்கு வலுவான போட்டியை இலங்கை அளித்திருக்கும்.

டி20 தொடரில் செய்த தவறுகளை ஒருநாள் தொடரில் திருத்திக்கொள்ள ஜெயசூர்யா முடிவு செய்து அதற்கான திட்டங்களை வகுத்தார். அதில் குறிப்பானது நடுவரிசை பேட்டிங்கை பலப்படுத்துவது. இதற்காக ஆல்ரவுண்டர் வெனித் வெலாகலேவை அணிக்குள் கொண்டு வந்தார், ஹசரங்காவுக்கு காயம் ஏற்படவே அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சாளரான வேன்டர்சேவையும் அணிக்குள் சேர்த்தார். இவர்கள் இருவருமே இந்திய அணிக்கு எதிரான வெற்றிக்கு முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்தனர்.

அதிலும் வெனித் வெலாகலே நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார். டி20 தொடரில் நடுவரிசை பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தநிலையில், ஒருநாள் தொடரில் வெலாகலே பொறுப்புடன் பேட் செய்து இலங்கை அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுத் தந்தார். அது மட்டுமல்லாமல் கடைசி ஓவர்கள்வரை வெலாகலே களத்தில் இருந்ததால், ஸ்கோர் உயர்வதிலும் இலங்கைக்கு சிக்கல் இல்லாமல் இருந்தது.

இலங்கை அணியின் வெற்றி

இலங்கை அணியில் வெலாகலேவை கீழ்நடுவரிசையில் களமிறக்கியபின் இலங்கை அணியின் பேட்டிங் ஸ்திரமடைந்தது தெளிவாகத் தெரிந்தது. அடுத்ததாக ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைத்தது என்பதால், அணியில் இரு வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குவதற்குப் பதிலாக பெர்னான்டோவை மட்டும் வைத்து ப்ளேயிங் லெவனை உருவாக்கி, சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாக வைத்து களமிறக்க வைத்தார். பெர்னான்டோ ஆல்ரவுண்டர் என்பதால் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. முழுநேர வேகப்பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்புத் தரப்படவில்லை.

தொடக்கத்திலிருந்தே விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களின் தாக்குதலை தொடுத்து இந்திய பேட்டர்களை நிலைகுலைய வைப்பதுதான் ஜெயசூர்யாவின் திட்டமாக இருந்தது. வேகப்பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எளிதாக விளையாடிவிடுவார்கள் ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சு, ஆஃப்ஸ்பின், லெக் ஸ்பின், ரிஸ்ட் ஸ்பின் போன்ற பல்வேறு வகையான பந்துவீச்சை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவதில் சிக்கலைச் சந்திப்பார்கள் என்பதை புரிந்து கொண்டு இந்த திட்டத்தை ஜெயசூர்யா செயல்படுத்தினார்.

ஜெயசூர்யாவின் திட்டத்துக்கு கைமேல் பலன் கிடைத்து. இந்தத் தொடரில் இந்திய அணி 27 விக்கெட்டுகளை சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தது. ஒட்டுமொத்தத்தில் இந்தத் தொடரில் 43 விக்கெட்டுகளை இரு அணிகளும் சுழற்பந்துவீச்சில் மட்டுமே இழந்தன. அந்த அளவு சுழற்பந்துவீச்சாளர்கள் கொழும்பு ஆடுகளத்தில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இந்திய அணியில் தற்போது இடம் பெற்றுள்ள சுழற்பந்துவீச்சாளர்களான குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக் ஆகியோர் இலங்கை கொழும்பு மைதானத்தில் அதிகமாக விளையாடி அனுபவம் இல்லாதவர்கள். அந்த மைதானத்தின் தன்மை, விக்கெட்டின் தன்மை, எப்படி விக்கெட் செயல்படும், எந்த ஓவர்களுக்குப்பின் விக்கெட்டின் தன்மை எப்படி மாறும் என்பது அவர்களுக்குத் தெரியாது.

இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் நன்றாக பந்துவீசினாலும் கொழும்பு ஆடுகளத்தின் தன்மையை இலங்கை பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே அறிந்திருந்தனர். இவை அனைத்தும் இலங்கை அணிக்கு சாதகமாக அமைந்தது.

இலங்கை அணியின் வெற்றி

இந்தக் காரணிகளை பயன்படுத்திக்கொண்டு இந்திய அணி பலத்தையே, அந்த அணிக்கு எதிராக பலவீனமாக ஜெயசூர்யா மாற்றினார். சர்வதேச அரங்கில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சு பெரிதாக மதிக்கக்கூடியதாக, அச்சுறுத்தக்கூடியதாக இருந்து வருகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. அதே சுழற்பந்துவீச்சை பயன்படுத்தி, இந்திய பேட்டர்களை திணறவைத்து, ஜெயசூர்யாவின் உத்திகள் ஒருநாள் தொடரை வென்றுள்ளன.

இதில் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் சர்வதேச ஆடுகளங்களில் விளையாடிய அனுபவம் இருந்தாலும், செட்டில் ஆனபின்புதான் எந்த பந்துவீச்சையும் வெளுக்கும் தன்மைஉடையவர்கள். மற்றவகையில் இருவருமே சுழற்பந்துவீச்சுக்கு பலமுறை விக்கெட்டை இழந்துள்ளனர், அதிலும் விராட் கோலி, லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக ஏராளமானமுறை விக்கெட்டை இழந்துள்ளார்.

இந்த விஷயத்தையும் ஜெயசூர்யா கணக்கில் வைத்து, ரோஹித், கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு ஆயுதத்தை பயன்படுத்தினார். கோலிக்கு எதிராக சுழற்பந்துவீச்சு உத்தி நன்கு பலன் கொடுத்தது. இந்த ஒருநாள் தொடரில் விராட் கோலி பெரிதாக எந்த ஸ்கோரும் செய்யவில்லை, 3 ஆட்டங்களிலும் கோலி காலை நகர்த்தால் ஆடி விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மா வழக்கம்போல் அதிரடியான ஆட்டத்தைக் கையாண்டாலும் அவரின் பலவீனத்தை அறிந்து அவரையும் சுழற்பந்துவீச்சாளர்கள் வெளியேற்றினர்.

சீனியர் வீரர்களுக்கு எதிரான உத்திகள் வெற்றியானதால், அணியில் இருக்கும் இளம் வீரர்களுக்கு எதிராக உத்திகளை வகுப்பது ஜெயசூர்யாவுக்கு எளிதாக இருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர், சாம்ஸன், ராகுல் ஆகியோர் உள்நாட்டு மைதானங்களில் சுழற்பந்துவீச்சை சிறப்பாக கையாண்டு விளையாடியுள்ளார்கள். ஆனால், வெளிநாடுகளில்நடந்த டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் இவர்கள் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது இல்லை.

இந்த தவலை வைத்து நடுவரிசை பேட்டிங் வரிசையை சிதைக்க திட்டம் வகுக்கப்பட்டது. குறிப்பாக வெலாகலே, வேண்டர்சே ஆகியோரின் சுழற்பந்துவீச்சை இதுவரை இந்திய பேட்டர்கள் எதிர்கொண்டது இல்லை. இந்திய பேட்டர்களுக்கு எதிராக புதிய சுழற்பந்துவீச்சாளர்களைப் பந்துவீசச் செய்து திணறவைத்து, விக்கெட்டுகளை எளிதாக வீழ்த்தியது இலங்கை அணி. 2வது ஒருநாள் ஆட்டத்தில் வேண்டர்சே 6 விக்கெட்டுகளையும், 3வதுஆட்டத்தில் வெலாகலே 5 விக்கெட்டுகளை கைப்பற்றியது கவனிக்கத்தக்கது.

யார் அந்த இந்திய வீரர்

அது மட்டுமல்லாமல் இந்திய அணியை வீழ்த்துவதற்காக இந்திய முன்னாள் வீரர் ஒருவரின் உதவியையும் ஜெயசூர்யா கேட்டுப் பெற்றுள்ளார். அந்த வீரரும் ஜெயசூர்யாவுக்கு தேவையான ஆலோசனைகளையும், உத்திகளையும் வகுத்துக் கொடுத்துள்ளார்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள ரியான் பராக், ஜூரெல், சாம்ஸன், கெய்க்வாட், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான வீரர்கள் அவரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜூபின் மினோ பருச்சா என்ற முன்னாள் வீரர்தான் ஜெயசூர்யாவுக்கு உதவியுள்ளார்.

இலங்கை அணியின் வெற்றி

மகாராஷ்டிரா அணிக்காக முதல்தரப் போட்டிகளிலும், ரஞ்சிக் கோப்பையிலும் ஆடியுள்ள பரூச்சா, இந்திய அணியில் இடம் பெறவில்லை. ஆனால், அதிகமான கிரிக்கெட் அனுபவத்தால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநராக 2008 முதல் 2015வரை செயல்பட்டார். அதன்பின் 2018ம் ஆண்டிலிருந்து மீண்டும் அந்த அணியின் இயக்குநராக பருச்சா இருந்து வருகிறார்.

நாக்பூரில் இருந்து 150 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தலேகான் நகரில்தான் பரூச்சா, வேர்ல்ட் கிரிக்கெட் அகாடெமியை நிறுவி ஏராளமான இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வருகிறார். இந்த அகாடெமியில் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் மைதானங்களின் மாதிரிகளும் அமைக்கப்பட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அதாவது ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் பவுன்ஸர் விக்கெட், சென்னையில் இருக்கும் செம்மண் ஆடுகளம், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என ஏராளமான ஆடுகளங்கள் அமைக்கப்பட்டு எந்தெந்த வீரர்களுக்கு என்ன தேவையோ அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த அகாடெமியில் இருந்துதான் ஜெய்ஸ்வால், சாம்ஸன், துருவ் ஜூரெல், ரியான் பராக், சுப்மான் கில் உள்ளிட்ட ஏராளமான இளம் வீரர்கள் தங்களின் பேட்டிங் திறனை மெருகேற்றிக் கொண்டுள்ளனர். இந்த அகாடெமியை நடத்தும் பரூச்சாதான் இலங்கை பயிற்சியாளர் ஜெயசூர்யாவுக்கு தேவைாயான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும், பந்துவீச்சு, பேட்டிங்கில் புதியதொழில்நுட்பங்கள், ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

இலங்கை அணியின் வெற்றி

இது குறித்து ஜெயசூர்யா சமீபத்தில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் “ இலங்கை டி20 லீக் முடிந்தவுடனேயே நாங்கள் பயிற்சியைத் தொடங்கிவிட்டோம். இந்திய அணியில் ரோஹித் சர்மா, கோலி, ஜடேஜா ஆகிய 3 பெரிய வீரர்கள் ஓய்வு அறிவித்தநிலையில், இந்திய அணியை ஆதிக்கம் செய்து வெல்ல இதுதான் சரியான நேரம் என்று நினைத்தேன்.

இதற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உயர்திறன் இயக்குநர் ஜூபின் பருச்சா உதவியை நாடினேன் அவரின் ஆலோசனைகளை கேட்டேன். இலங்கை வீரர்களுக்கு ஏறக்குறைய 6 நாட்கள் பருச்சா பயிற்சிஅளித்து, தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார், நவீன காலத்தில் பேட்டிங், பந்துவீச்சில் இருக்கும் மாற்றங்கள், உத்திகளையும் வழங்கினார்.”

“இதை வைத்துக்கொண்டு டி20 தொடர் தொடங்க 2 நாட்கள் முன்புவரை கண்டி நகரில் பயிற்சியில் இருந்தோம். பரூச்சாவுடன் நாங்கள் செலவிட்ட 6 நாட்களும் மிகுந்த பயனுள்ளதாக இருந்தது, வீரர்களும் ஏராளமான அம்சங்களை, நுணுக்கங்களை பரூச்சாவிடம் இருந்து கற்றனர்” எனத் தெரிவித்தார்.

Previous Story

தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேந்திரன் களமிறங்குகிறார்?

Next Story

ஈரானுக்கு பார்சல் அனுப்பப்பட்ட அணு ஆயுத ஏவுகணைகள்!