இலங்கையிலும்  தப்லிஹ் இயக்கத்துக்குத் தடை?

 

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்களுக்கு அடிப்படை வாதத்தை போதிக்கும் அதற்கு தலைமை வகிக்கும் தப்லிக் ஜமாத் அமைப்பை தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பொது பல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

சவுதி உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள், தப்லிக் ஜமாத் போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்பு என்ற அடிப்படையில் தடை செய்துள்ள நிலையில், இலங்கையில் அந்த அமைப்புகளின் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,“இந்த நாட்டில் இஸ்லாமிய அமைப்பு என்ற பெயரில் செயற்படும் பிரிவினைவாத அமைப்புகளுக்கு, வழிகாட்டுதல், அரசியல் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுளையும் தப்லிக் ஜமாத் அமைப்பே செய்து கொடுக்கிறது.

இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் மத ஆலோசனைகளை வழங்குவதற்கு அவர்கள் ஜமயத்-உல் உலமா சபையை உருவாக்கியுள்ளார்கள். இலங்கையில் வாழும் பாரம்பரிய முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தலைமை வகிக்கின்றார் அந்த அமைப்பின் தலைவர் ரிஸி முப்தி. அவரே தப்லிக் ஜமாத் அமைப்பின் தலைவர்.

ஆகவே நாம் தப்லிக் ஜமாத் அமைப்பை பிரதான சூத்திரதாரியாகவே நாம் கருதுகின்றோம். அவர்களே இஸ்லாமிய மக்களை தவறாக வழிநடத்துகின்றனர். இந்த விடயத்தை நாம் குறிப்பிடவில்லை. சவுதி அரேபிய அரசர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளதோடு, சமூகத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய, தீவிரவாதத்தின் ஒரு கதவாக அறியப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் மற்றும் தவா ஆகிய குழுக்களை தடை செய்வதாக சவுதி அறிவித்துள்ளது.

இஸ்லாமிய சிறுவர்களை அடிப்படைவாதத்திற்கு உள்ளிழுக்கும் கதவே தப்லிக் ஜமாத் அமைப்பு. அதற்குள் பல அமைப்புகள் காணப்படுகின்றன. இது தொடர்பில் பல முஸ்லிம் அமைப்புகளுடன் நாம் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளோம்.

கிழக்கு மாகாணத்தில் பல முஸ்லிம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளைக்கூட ஜமயத்-உல் உலமா சபை இல்லாது செய்துள்ளது. ஆகவே தப்லிக் ஜமாத் அமைப்பை தடை செய்யுமாறு நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

வஹாப் வாதத்திற்கு அனுசரணை வழங்கிய சவுதி அரசு இதனை தடை செய்கின்ற நிலையில், எமது நாட்டில் சஹ்ரான் உள்ளிட்டவர்களை தற்கொலைத் தாக்குதலுக்கு தூண்டிய, இந்த வஹாப் வாதத்திற்கு தலைமை வகித்த தலைவர்கள் மற்றும் அவர்களின் அமைப்புகள் செயற்படுகின்றமை மிகவும் சிக்கலான விடயம். ஆகவே இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

Previous Story

பல்கலையில் இயந்திரம் ஆற்றிய உரை!

Next Story

புஷ்பா: விமர்சனம்