இலங்கை விவகாரத்தில் சர்வதேசம் நடாத்துகின்ற பஞ்சாயத்து பலன்தாரது!

-நஜீப் பின் கபூர்-

முதலில் நாம் இங்கு குறிப்பிடுகின்ற பஞ்சாயம் அல்லது பஞ்சாயத்து என்றால் என்ன என்று சற்றுப் பார்ப்போம். இந்தப் பஞ்சாயத்துப் பற்றி பெரிதாக விளக்கம் கொடுக்க வேண்டி அவசியமும் தமிழ் பேசும் சமூகத்துக்குக் கிடையாது என்றும் சொல்லலாம். இதனை இன்றும் தமிழ் சினிமாப் படங்களில் அவ்வப்போது காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

கிராமத்து பண்ணையாளர் அல்லது அங்கு வசதி படைத்த ஒரு நபர் தலைமையில் ஏதாவது ஒரு மரத்தடியில் கிராமத்தில் நடப்பதுதான் இந்தப் பஞ்சாயத்து. ஏதாவது ஒரு குற்றச் செயல்பற்றி ஊர்பிரமுகர்கள் விசாரித்து தீர்ப்பு வழங்கும் பழங்காலத்து நடை முறைதான் இந்தப் பஞ்சாயத்துத் தீர்ப்புக்கள் என்பதும்.

ஆனால் இதற்கு சட்டரீதிலான அங்கிகாரமோ அனுமதியோ இல்லை. சில சமூக அமைப்புக்களில் இப்படியான நடைமுறை இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆபிரிக்க பலங்குடி மக்கள் மத்தியில் இந்த வழக்கு இன்றும் நடைமுறையில் இருக்கின்றது.

 

பஞ்சாயத்துக்கு பதிவுகளோ ஆவனங்களோ கிடையாது. வாய் வார்த்தை தான் அங்கு சட்டமாக தீர்ப்பில் சொல்லப்படுகின்றது. இது போன்றுதான் இலங்கை விவகாரத்தில் சர்வதேசமும் இந்தியாவும் பஞ்சாயத்து நடாத்திக் கொண்டிருக்கின்றன என்பது நமது குற்றச்சாட்டு.

போர்காலத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள், படுகொலைகள் என்பன தொடர்பாக கடந்த ஒரு தசாப்பதங்களுக்கு மேலாக பஞ்சாயத்து முறையிலான தீர்ப்புக்களைத்தான் அவை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான தீர்ப்புக்களை இலங்கை ஒருபோதும் மதித்து நடப்பதுமில்லை.

இதன் முன்மொழிவுகளைக் கண்டு கொள்வதும் இல்லை. அவர்கள் எப்படியோ சர்வதேசத்தை இந்த விடயங்களில் இன்றுவரை ஏமாற்றிக் கொண்டு காரியம் சாதிப்பதில் வெற்றிபெற்று வந்திருக்கின்றார்கள். இலங்கை விவகாரத்தில் மட்டுமல்ல இன்னும் பல இடங்களில் உள்ள நெருக்கடிகள் முற்றுப் பெறாமல் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு இந்த சர்வதேசத்தின் பஞ்சாயத்து முறைதான் காரணமான இருந்து வருகின்றன.

இதனால் இலங்கை சர்வதேச மனித உரிமை அமர்வுகள் நடக்கின்ற காலங்களில் போலி வாக்குறுதிகளைக் கொடுத்து அதனை ஏமாற்றிக் கொண்டு வருகின்றது. அந்த அமர்வுகள் முற்றுப் பெற்றதும் அது தனது வழக்கமான விளையாட்டை-அட்டகாசத்தை தொடர்ந்து செய்து கொண்டு போகின்றன. இது கடந்த காலங்களில் இலங்கையில் அதிகாரத்தில் இருந்த எல்லா அரசாங்கங்களின் இராஜதந்திரமாகவும் இருந்து வந்திருக்கின்றன.

எனவே வழக்கமாக இலங்கைக்கு எதிரான பிரேணையை நிறைவேற்றுவது ஒரு சம்பிராதாயமாகவும் மாறி இருக்கின்றன. இதானால் ஏதுவுமே நடக்கப் போவதில்லை. இந்த முறையும் தனது 51வது அமர்வில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு இலங்கையில் நடக்க வேண்டிய மாற்றங்கள் பற்றி கடும் தொனியில் அறிக்கை சமர்ப்பித்துதிருக்கின்றது.

நீதிதுறை செயல்பாடுகள், நிதி நடவடிக்கைகள் தொடர்பான குழறுபடிகள், பாதிக்கபட்டவர்களின் உரிமைகளை நிலை நாட்டுவதை இலங்கை தொடர்ந்தும் தட்டிக் கழித்து வந்திருக்கின்றது என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பின் உயர் ஆணையாளர் நாடா அல்-நாசீப் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றார். அவர் தனது அறிக்கையில் இலங்கை கடந்த சில மாதங்களில் இருந்து பணவீக்கம் நம்ப முடியாத அளவு அதாவது 66.7 சதவீதமாகவுள்ளது என்பதனையும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

நாட்டில் அனைத்து இன மக்களும் பக்கச்சார்பின்றி நடாத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கேட்கப்பட்டிருக்கின்றது. மேலும் நாட்டில் மிகப் பெரிய ஊழல் மோசடிகள் நடந்திருக்கின்றது. இது தொடர்பான குற்றவாளிகள் இனம் காணப்பட வேண்டும் என்று அறிக்கை கேட்டிருக்கின்றது. அகிம்சை ரீதியில் நடாத்தப்பட்ட போரட்டம் முடக்கப்பட்ட முறை மற்றும் போரட்டக்காரர்கள் அரச பாதுகாப்பத்துறையினரால் கைது செய்யபபட்டு அவர்கள் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் தொடர்ச்சியாக சிறைகளில் வைத்திருப்பதனையும் நாடால் அல் நாசீப் அறிக்கை கண்டித்திருக்கின்றது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணையில் எந்த முன்னேற்றங்கள் இல்லாதது பற்றியும் அறிக்கையில் கவலை தெரிவிக்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக வெளிப்படையான விசாரணையின் அவசியம் பற்றியும் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. முக்கியமாக 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும். மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடாத்த வேண்டும் என்று அந்த அமர்வில் இந்தியா கேட்டிருக்கின்றது.

இந்தியாவின் இந்த நடவடிக்கைகள் வேண்டுகோள் பற்றியும் எமக்கு நிறையவே ஐயப்பாடுகள் இருக்கின்றன. இந்தியா நினைத்தால் 13வது திருத்தம் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான இலங்கை தீர்மானம் எடுக்க வைப்பதற்கு 24 மணி நேரங்கள் போதும். அப்படி இருக்க இந்தியா மனித உரிமைகள் அமைப்பில் போய் இந்த வேண்டுகோளை விடுப்பது ஒரு நாடகம் என்றுதான் நாம் கருதுகின்றோம்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடர் என்பது வழக்கமாக நடக்கின்ற ஒரு திருவிழா போன்றுதான் இருந்து வருகின்றது. அங்கு எடுக்கப்படுகின்ற தீர்மானங்கள் இலங்கை விவகாரத்தில் கேளிக்கூத்தாகவே இதுவரை இருந்து வந்திருக்கின்றது. இங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சீனா,ரஷ்யா அவர்களுடன் நெருங்கிய உறவுகள் வைத்திருக்கும் இடதுசாரி  நாடுகள் வழக்கம் போல இலங்கைக்கு ஆதரவாக களத்தில் நிற்க்கின்றன.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐநா.வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அறிக்கை தொடர்ப்பில் தனது கடும் ஆட்சேபனையைத் தெரிவித்திருக்கின்றார். இதுதான் இலங்கை தொடர்ச்சியாக செய்து வருகின்;ற ஒரு காரியமாக இருக்கின்றது. எனவே இந்த அறிக்கையையோ தீர்மானங்களையோ இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனைத்தான் இது காட்டுகின்றது.

இந்த முறை போர்காலக்குற்றங்கள் மனித உரிமை மீறல் மட்டுமல்லாது இலங்கையின் பொருளாதாம் சமகாலத்தில் படைத்தரப்பு மற்றும் நீதித்துறைகள் தொடர்பிலும் மனித உரிமைகள் அமைப்பு அதிக கவனம் செலுத்தி இருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஐ.நா மனித உரிமைகள் அமைப்பில் இலங்கை மீதான நடவடிக்கை பற்றி நம்பிக்கை வைப்பது பெரும் முட்டால்தனம் என்றுதான் கருத வேண்டி இருக்கின்றது.

ஜனாதிபதி ரணில் அக்தோபர் 6 அல்லது 7ல் நடக்கின்ற வாக்குப்பதிவில் இந்தியாவின் ஆதரவை நாம் எப்படியாவது பெற்றுக் கொள்ள முயற்ச்சிக்க வேண்டும். அப்போது இன்னும் பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவை வழங்க முன்வரும் என்று சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் பேசி இருந்தார்.

 

அவர் என்ன சொல்ல வருகின்றார் என்றால்,  13 திருத்தத்தை அமுல் படுத்துவது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவற்கான பணிகளை மேற்கொண்டு இந்தியாவின் விருப்பத்தை நிறைவேற்ற நாம் முயன்றால்  இந்தியாவின் ஆதரவை வாக்கெடுப்பில் பெற்றுக் கொண்டு ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு கொண்டு வருகின்ற இலங்கைக்கு எதிரான பிரேரணையைத் தேற்கடிக்க முடியும் என்பதுதான் ரணில் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

ஆனால் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ராஜபக்ஸாக்கள் தலைமையிலான மொட்டுக் கட்சியினர் ஒரு போதும் இடம் கொடுக்க மாட்டார்கள் என்பது நமது வலுவான நம்பிக்கை. அடுத்து இந்த முறை பேரினத்தவர்கள் கூட அரசுக்கு எதிரான பல முறைப்பாடுகளை மனித உரிமைகள் அமைப்பில் முன்வைத்திருக்கின்றாhர்கள். எனவே பேரினத்தவர்கள் கூட இந்த முறை ஐ.நா மனித உரிமைகள் தீர்மானங்கள்-வாக்கெடுப்பில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றார்கள் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

புதிதாக கட்சி துவங்கிய விமல் தரப்பு கம்மன்பில ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு என்பது அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் கருவி என்று கூறி இருக்கின்றார். இவர்கள் அரசிலிருந்து விரட்டப்பட்டாலோ அல்லது தாமாக விலகியதாக விளப்பரப்படுத்திக் கொண்டாலோ அவர்கள் இன்னும் அரசுக்கு விசுவாசமாகத்தான் செலாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் என்று ஒன்றை சந்திக்க வேண்டி வந்தால் இவர்கள் மீண்டும் மஹிந்த கூடாரத்துக்குள் நின்றுதான் அதனைச் சந்திப்பார்கள் என்பதனையும் உறுதியாக கூற முடியும்.

மனித உரிமைகள் விவகாரம் அப்படி இருக்;க இலங்கையில் தற்போது ஒரு விநோதமான அரசியலை நாம் பார்க்க முடிகின்றது. மொட்டுக் கட்சியினின் பலத்த அச்சுறுத்தல்களுக்கு அடிபனிந்து தற்போதய ஜனாதிபதி ரணில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார். இதனை நாம் கடந்த வாரமும் சொல்லி இருந்தோம்.

இந்த வாரம் இரத்தினபுரி மாவட்ட மொட்டுக் கட்சி நாடளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேக்கர  அல்லது சொக்கா மல்லி என்று அழைக்கப்படுகின்றவருக்கு இராஜாங்க அமைச்சுக் கொடுத்து அழகு பார்த்திருக்கின்றார் ஜனாதிபதி ரணில். இந்த சொக்கா மல்லி என்பவர் யார் என்று சற்றுப் பார்ப்போம். தேர்தலின் போது இரத்தினபுரியில் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டமொன்றுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரம் அங்கு துப்பாக்கி;ச்சூடு ஒன்று நடாத்தப்படுகின்றது. இந்த தூப்பாக்கிச் சூட்டில் பலர் காயப்பட்டு ஒருவர் மரணமாகின்றார். மரணமானவர் ஐக்கிய தேசியக் கட்சியன் பிரதேச மட்ட பிரபல ஆதரவாலர். அவரது மரணத்தில் கூட அன்று ரணில் கலந்து கொண்டிருந்தார்.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்த சொக்கா மல்லியை நீதி மன்றம் குற்றவளியாக தீர்ப்பளித்து அவருக்கு மரண தண்டனையும் விதித்திருந்தது. பின்னர் அவருக்கு மொட்டுக் கட்சி கோட்டா ஆட்சியில் மன்னிப்பு வழங்கப்பட்டு சிறையிலிருந்து அவர் வெளியே வந்தது மட்டுமல்லாது நாடாளுமன்ற உறுப்பினராகி இன்று ரணில் கைகளினாலேயே அவருக்கு இராஜங்க அமைச்சுப் பதவி வழங்கப்படுகின்றது என்றால் இந்த ஜனாதிபதி மொட்டுக் கட்சியினரின் அச்சுறுத்தலுக்கு எந்தளவு அஞ்சித் தீர்மானங்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றார் என்பதற்கு இந்த சொக்கா மல்லி கதை நல்ல உதாரணம்.

ரணிலின் இந்த நியமனம் பற்றி ஐக்கிய தேசியக் கட்சியினர் என்ன மன நிலையில் இருப்பார்கள் என்று நாம் யோசிக்க வேண்டி இருக்கின்றது. எனவேதான் ரணில் மொட்டுக் கட்சியினர் எழுதிக் கொடுப்பதை வாசித்துக் காட்டுகின்ற ஒரு கைப் பொம்மையாக செயலாற்றுகின்றார் என்று நாம் சாடுகின்றோம்.  ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு மற்றும் இந்தியா என்னதான் தீர்மானங்களை எடுத்ததாலும் இந்த மொட்டு அரசாங்கம் அவை எதனையுமே கண்டு கொள்ளாது.

இதற்கிடையில் இந்தியா மற்றும் மனித உரிமைகள் அமைப்பு மாகாண சபைத் தேர்தல் நடத்தமாறு கேட்டிருப்பதால் அரச தரப்பிலுள்ளவர்கள் சிலர் தேர்தல் பற்றி பேசுகின்றார்கள். ஆனால் அவர்கள் பேசுவது சொல்லப்பட்ட மாகாணசபைத் தேர்தல் நடாத்தவது பற்றியல்ல. உள்ளாட்சித் தேர்தல் பற்றித்தான் அவர்கள் இப்போது பேசுகின்றார்கள்.

இந்த நேரத்தில் அப்படி ஒரு தேர்தல் நடந்தாலும் அது மாகாணசபைத் தேர்தலாக இருக்காது மாறாக அது உள்ளாட்சித் தேர்தலாகத்தான் இருக்கும் என்பது நமது கணக்கு. இந்தத் தேர்தலில் தனக்கு குறைந்தளவிலான சேத்துடன் சமாளித்துக் கொள்ள முடியும். அத்துடன் அரசு தேர்தலுக்குப் பயப்படவோ தேர்தலை மேலும் ஒத்தி வைக்கவோ இல்லை என்றும் சர்வதேசத்துக்கு காட்ட உள்ளாட்சித் தேர்தல் நல்ல தெரிவாகவும் இருக்கும்.

நன்றி: 18.09.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்-போப் ஆண்டவர்

Next Story

மனித உரிமைகள் பேரவை: அலி சப்ரியின் பங்கு - சாணக்கியன் கேள்வி