இம்ரான் கான் மீது துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் வாசிரிபாத் நகரில் நடந்த போராட்டப் பேரணியில் சுடப்பட்டார். அவருக்கு வயது 70.

Pakistan's former Prime Minister and head of political party Pakistan Tehreek-e-Insaf (PTI) Imran Khan, gestures during a protest march towards Islamabad, in Gakhar, Pakistan, 02 November 2022வியாழக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலில் மேலும் நான்கு பேர் காயமடைந்திருப்பதாக அவரது பிடிஐ கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.

“இது அவரைக் கொல்வதற்கான முயற்சி, படுகொலை செய்வதற்கான முயற்சி,” என்று அவரது மூத்த உதவியாளர் ஒருவர் ஏ எஃப் பி செய்தி முகமையிடம் கூறினார். ஆனால், அவரைக் குறிவைத்துதான் தாக்குதல் நடந்ததா என்பதை போலீஸ் உறுதிப்படுத்தவில்லை.

இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக சந்தேகிக்கப்படும் ஆண் ஒருவர் பிறகு கைது செய்யப்பட்டதாக, பாகிஸ்தான் ஜியோ டிவி தெரிவிக்கிறது.

ஏப்ரல் மாதம் அவர் ஆட்சி கவிழ்ந்த நிலையில், உடனடியாக மறுதேர்தல் நடத்தப்படவேண்டும் என்று கோரி தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்திவந்தார் இம்ரான். ‘நீண்ட பயணம்’ என்று பெயரிடப்பட்ட இந்த பேரணியின்போதுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இது தொடர்பான காட்சிகளில் அவர் உடனடியாக லாகூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவது தெரிந்தது.

அவரது முழங்காலின் முன் பகுதியில் குண்டு பாய்ந்ததாக அவரது பிடிஐ கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இம்ரான்கான் உடல் நிலை ஸ்திரமாக இருப்பதாக பிடிஐ கட்சித் தலைவரும், மாகாண சுகாதார அமைச்சருமான யாஸ்மீன் ரஷீத் கூறினார்.

பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரி கூறுவது என்ன?

இந்த துப்பாக்கிச்சூடு நடந்தபோது பேரணியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி அப்துல் ரஷீத், துப்பாக்கி சுடப்படும் சத்தத்தை தாம் கேட்டதாக பிபிசியிடம் கூறினார்.

இம்ரான் கான் இருந்த கன்டெயினரில் இருந்து தாம் சற்று தொலைவு தள்ளி இருந்ததாகவும், துப்பாக்கி சுடப்படும் சத்தம் தமக்கு கேட்டதாகவும் அவர் கூறினார். இதையடுத்து பேரணியில் பங்கேற்றவர்கள் மத்தியில் நெரிசல் தோன்றியது என்றும், இம்ரான் கான் காலில் சுடப்பட்டார் என்றும் அவர் கூறினார்.

கண்டெயினரிலேயே அவருக்கு முதலுதவி வழங்கப்பட்டு வேறு வண்டிக்கு அவர் மாற்றப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார். அப்படி வேறு வண்டிக்கு இம்ரான் மாற்றப்பட்டபோது, தாம் அருகில் இருந்ததாகவும், அப்போது இம்ரான் நினைவோடு இருந்ததாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.

அகமது சட்டா, ஃபைசல் ஜாவேத் என்பவர்கள் இந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.

தகுதி நீக்கம்

இம்ரான்கான் மீதான புகார் ஒன்றை விசாரித்த அந்நாட்டு தேர்தல் ஆணையம், அவர் பொதுப் பதவிகள் எதையும் இம்ரான்கான் வகிக்கக்கூடாது என்று கடந்த மாதம் உத்தரவிட்டது. தாம் இப்படி தகுதி நீக்கம் செய்யப்படுவதற்குக் காரணமான வழக்கு அரசியல் நோக்கம் கொண்டது என்று இம்ரான் கான் கூறியிருந்தார்.

பிரதமர் பதவி வகித்தபோது வெளிநாட்டு பிரமுகர்களிடம் இருந்து பெற்ற பரிசுப் பொருள்கள் தொடர்பாகவும், அந்தப் பொருள்களை விற்று வந்ததாக கூறப்பட்ட தொகை தொடர்பாகவும் தவறான விவரங்களைத் தாக்கல் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள், மோதிரம், கஃப்லிங்குகள் போன்றவை இந்த சர்ச்சைக்குரிய பரிசுப் பொருள்களில் அடக்கம்.

Previous Story

"ராஜபக்ஷ குடும்பத்துக்கு எதிரான போராட்டம் தொடரும்" - கொழும்பில்  திரண்ட மக்கள்

Next Story

30 வது SLMC தேசிய மாநாடு