இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது. போட்டிக்குப் பிறகு பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமலே இந்திய வீரர்கள் கலைந்து சென்றனர்.
மே மாதம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ மோதலுக்குப் பிறகு இருநாட்டின் அணிகளும் மோதிக் கொள்ளும் முதல் போட்டி இது. போட்டி முடிந்த பிறகு மட்டுமல்ல, தொடக்கத்தில் டாஸ் போடப்பட்ட போதும் இரு அணிகளின் கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை.
பாகிஸ்தான் பயிற்சியாளர் மைக் ஹெஸன் இது தொடர்பாக கூறுகையில், “நாங்கள் போட்டிக்குப் பிறகு கை குலுக்கத் தயாராக இருந்தோம். ஆனால் எங்களின் எதிரணியினர் அதை செய்ய முன்வராதது ஏமாற்றம் அளித்தது.
நாங்கள் கை குலுக்கத் தயாராக இருந்த போது அவர்கள் ஓய்வறைக்குச் சென்றுவிட்டனர். எங்களுடைய ஆட்டம் எதிர்பார்த்தபடி அமையவில்லை என்று ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம். ஆனால் கை குலுக்குவதற்கு தயாராக இருந்தோம். இது இந்தப் போட்டிக்கு ஏமாற்றமான ஒரு முடிவு” என்றார்.
ஆனால் போட்டிக்குப் பிறகான நிகழ்ச்சிக்கு பாகிஸ்தான் கேப்டன் அகா சரியான நேரத்தில் வரவில்லை.
டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது பாகிஸ்தான். ஆனால் அவர்களின் பேட்டிங் மோசமாக இருந்தது. பவுலிங்கிலும் பாகிஸ்தான் அணி சோபிக்கவில்லை. இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி செயல்பட்ட விதம் குறித்து அந்நாட்டின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடமிருந்து மாறுபட்ட எதிர்வினைகள் வந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தையும் ரசிகர்கள் விமர்சித்திருந்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?
போட்டியின்போது தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், “எனக்கு பேச்சில்லை. மனது மிகவும் உடைந்துவிட்டது, எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இந்தியாவிற்கு வாழ்த்துகள்.” என்றார்.
கை குலுக்கல் தொடர்பாக பேசிய அக்தர், “நீங்கள் சிறப்பாக விளையாடியுள்ளீர்கள், ஆனால் இது ஒரு கிரிக்கெட் போட்டி, இதில் அரசியல் கொண்டு வரப்படக் கூடாது. நீங்கள் கை குலுக்கியிருக்க வேண்டும், சில மரியாதை காட்டப்பட்டிருக்க வேண்டும். சண்டைகள் இரு நாடுகள் இடையே நடக்கும்.. அதற்காக நாம் கைகுலுக்கக் கூடாது என அர்த்தம் கிடையாது.” எனத் தெரிவித்தார்.
எனினும் போட்டிக்குப் பிறகான நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாத பாகிஸ்தான் கேப்டனின் முடிவை ஷோயப் அக்தர் நியாயப்படுத்தியுள்ளார். “நிகழ்ச்சிக்குச் செல்லாமல் அவர் சரியான விஷயத்தைத் தான் செய்தார். மிகவும் சிறப்பு” என்றார்.

பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் ஷாஹித் அப்ரிடி, ஷோயப் அக்தர், கம்ரான் அக்மல்
தற்போதைய பாகிஸ்தான் அணி கிளப் அளவிலான தரத்தில் கூட கிரிக்கெட் விளையாடவில்லை என அக்தர் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசுகையில், “இன்று வித்தியாசம் வெளிப்படையாகத் தெரிகிறது. உலகம் உயர் தரத்திலான கிரிக்கெட் விளையாடி வருகிறது. நம்மிடம் சரியான நுட்பம் இல்லை, நமக்கு ஒன்றிரண்டு ரன்களை எவ்வாறு எடுப்பது என்று தெரியவில்லை. நம்மிடம் தரமான பேட்டிங் மற்றும் பவுலிங் இல்லை.” என்று அவர் கூறினார்.
“சூரியகுமார் சிறப்பாக பேட் செய்தார். நாம் சூர்யாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அபிஷேக் பெரிய ஷாட்களை விளையாடுவதற்கான சுதந்திரம் உள்ளது. நம்மிடம் நல்ல ஸ்பின்னர்கள் உள்ளார்கள் எனக் கூறினால், நாம் ஏன் போட்டியைத் தோற்றோம். நாம் தென் ஆப்ரிக்கா, இந்தியா, இங்கிலாந்து போன்ற வலுவான அணிகளுடன் மோதக் கூடிய அணி அல்ல.” என்றார்.
மற்றுமொரு விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல், “நாம் முதல் 6 இடங்களில் உள்ள அணிகளுடன் போட்டிபோட தகுதியானவர்கள் அல்ல. வங்கதேசம் மாதிரியான புள்ளிப்பட்டியலில் கீழ் உள்ள அணிகளுடன் தான் நாம் போட்டியிட தகுதியானவர்கள்.” எனத் தெரிவித்தார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியை புறக்கணிக்கும் பிரசாரங்கள் பற்றி பாகிஸ்தான் தொலைக்காட்சியான சமா டிவியில் பேசிய ஷாஹித் அப்ரிடி, “அரசியல் செய்து கொண்டே இருங்கள். கிரிக்கெட், கிரிக்கெடாகவே இருக்க வேண்டும். கிரிக்கெட்டை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். விளையாடுகிற போது நீங்கள் தான் உங்கள் நாட்டின் தூதுவர். கிரிக்கெட் போட்டிகள் தடைபடக் கூடாது.” என்றார்.
இஸ்லாமாபாத்தில் மனநிலை என்ன?

கிரிக்கெட் போட்டியை காண வந்த ரசிகர்கள்
போட்டி தொடங்குவதற்கு முன்பாக பாகிஸ்தான் ரசிகர்களிடம் உற்சாகம் இருந்தது. ஆனால் போட்டி முடிந்த பிறகு ஏமாற்றம் மிகவும் வெளிப்படையாக இருந்தது.
இஸ்லாமாபாத்தில் இருந்த பிபிசி செய்தியாளர்கள் ஃபர்ஹத் ஜாவேத் மற்றும் ஃபகிர் முனிர், பாகிஸ்தான் அணியின் பெர்ஃபார்மன்ஸைப் பார்த்து சில ரசிகர்கள் கோபமடைந்தாலும் வேறு சிலர் இந்திய அணியின் பெர்ஃபார்மன்ஸுக்கு மகிழ்ச்சி தெரிவித்ததாகக் கூறுகின்றனர்.
போட்டியைக் காட்சிப்படுத்த பாகிஸ்தானின் பெரும்பாலான நகரில் பூங்காக்கள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில் பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இங்கு போட்டியை கண்டு ரசிக்க மக்கள் கூடியிருந்தனர்.
அங்கு வந்திருந்த ரசிகர் ஒருவர், “கடந்த முறை இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதிலிருந்தே நம்பிக்கை இழந்துவிட்டேன். இதுபோல ஒரு கிரிக்கெட் போட்டியை நான் காண வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.” எனத் தெரிவித்தார்.
அங்கு வந்திருந்த ரசிகை ஒருவர், “விளையாட்டு என்பது ஒன்று தான். ஆனால் பாகிஸ்தான் அணி கொஞ்சமாவது முயற்சி செய்ய வேண்டும். நல்ல ரன் அடித்திருந்தால் போட்டி இன்னும் உற்சாகமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்திருக்கும்.” என்றார்.
தனது விடுதியிலிருந்து போட்டியைக் காண வந்த ரசிகையொருவர், “நாங்கள் மிகவும் உற்சாகமாக இருந்தோம். நாங்கள் தோற்றுவிட்டோம். இது நடந்திருக்கக் கூடாது.” எனத் தெரிவித்தார்.
இன்னொரு ரசிகர் பாகிஸ்தான் வீரர்களின் அணுகுமுறை பற்றி கவலை தெரிவித்துள்ளார். “இந்த அணியின் மோசமான அணுகுமுறை என்பது சயின் ஆயுப் மூன்று விக்கெட் எடுப்பதிலிருந்தும் ஷாஹின் ஷா அப்ரிடி மூன்று சிக்ஸர்கள் அடிப்பதிலிருந்தும் வெளிப்படுகிறது. நாம் சரியான நபர்களை சரியான இடத்தில் வைக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.” என்றார்.
சில ரசிகர்கள் இந்திய வீரர்கள் பற்றி புகழ்ந்தும் பேசியுள்ளனர். “நான் இந்திய அணியின் மிகப்பெரிய ரசிகன், விராட் கோலி இருந்தவரை நான் அவரின் மிகப்பெரிய ரசிகன். தற்போது கூட இந்தியாவுக்காக ஒரு நண்பரிடம் பெட் செய்திருந்தேன். ஆனால் என் இதயம் பாகிஸ்தான் மீது தான் உள்ளது” என ரசிகர் ஒருவர் தெரிவித்தார்.
கிரிக்கெட் ராஜதந்திரம் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே சூழ்நிலை சகஜமடையும் என பலர் நம்புவதாக பிபிசி செய்தியாளர் ஃபர்ஹட் ஜாவேத் கூறுகிறார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

பாகிஸ்தான் அணியை சில ரசிகர்கள் விமர்சிக்கும் வேளையில் இந்திய அணியையும் பாராட்டியுள்ளனர்.
அமிர் அலி என்கிற ரசிகர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை விமர்சித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒரே உத்தி தொடர்ந்து அவமானப்பட வேண்டும் என்பதாகவே உள்ளது. அவர்கள் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மாற்றினாலும் அவமானம் என்பது தொடரும்.” எனத் தெரிவித்துள்ளார்.
ஜுனைத் என்கிற ரசிகர் தனது எக்ஸ் தளப் பதிவில், “ஓபனிங் பவுலர் அணிக்கு நல்ல பேட்டராகவும் ஓபனிங் பேட்டர் அணிக்கு நல்ல பவுலராகவும் உள்ளார். இது பாகிஸ்தானில் மட்டுமே சாத்தியம்.” என எழுதியுள்ளார்.
சாதிக் அப்ரிடி என்கிற ரசிகர், “இந்தியா பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்து அவர்களின் டிரஸ்ஸிங் ரூம் கதவையும் அடைத்துவிட்டது. கிரிக்கெட்டில் இத்தகைய சூழ்நிலையை முன்பு பார்த்ததில்லை.” எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் அணியின் பெர்ஃபார்மன்ஸ் பற்றி பேசுகிறபோது பல ரசிகர்களும் முன்னாள் கேப்டன் பாபர் அஸாமை நினைவுகூர்ந்தனர். பலரும் அவரின் புகைப்படங்களையும் பகிர்ந்தனர்.
2021 டி20 உலக கோப்பை போட்டிக்குப் பிறகு முகமது ரிஸ்வானை விராட் கோலி அரவணைத்த தருணத்தையும் பலர் நினைவுகூர்ந்தனர்.