ஆப்கானில் அவலம்: 4 மாசத்தில் மரணத்தின் விளிம்பில் 2.28 கோடி பேர்.

 

ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் வெளியேறியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தன.

ஆப்கான் அரசை கவிழ்த்து இரண்டு வாரங்களில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது. அங்கு தாலிபான்களின் தலைமையிலான ஆட்சி பல்வேறு சர்ச்சைகள், சில உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையில் நடந்து வருகிறது.

பஞ்சம்

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் அங்கு உணவு பஞ்சம் தொடங்கிவிட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. அதேபோல் மேற்கு உலக நாடுகளின் இறக்குமதி குறைந்த காரணத்தால் கொஞ்சம் கொஞ்சமாக கிடங்குகளில் இருந்த உணவுகள் காலியாக தொடங்கின.

உணவுகள் காலி

இப்போது ஆப்கானிஸ்தானில் உணவு தானியங்கள் இல்லாமல், அரசு மக்களுக்கு உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறது. தாலிபான்களும் பெரிய அளவில் சர்வதேச உறவுகளை கொண்டு இருக்கவில்லை என்பதால் அவர்களால் சர்வதேச உதவிகளை அவ்வளவு எளிதாக பெற முடியவில்லை. இதன் காரணமாக தாலிபான்களின் ஆட்சிக்கு கீழ் கொஞ்சம் கொஞ்சமாக உணவுப்பஞ்சம் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

பஞ்சம் அதிகரிப்பு

போரால் ஏற்ப்பட்ட பொருளாதார இழப்பு, வறுமை, இப்போது பஞ்சம் காரணமாக அந்நாட்டு மக்கள் கடுமையாக கஷ்டப்பட்டு உள்ளனர். ஆப்கானிஸ்தானில் 2.28 கோடி மக்கள் பசியால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சத்தால் இவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய பிரிவு தெரிவித்துள்ளது.

பாதி கஷ்டம் ‘

நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் உணவு இன்றி கஷ்டத்தில் இருக்கிறார்கள். அதோடு அங்கு பஞ்சம் காரணமாக 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளது என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அமைப்புகளின் உதவிகள் இன்னும் ஆப்கானிஸ்தானுக்கு சென்று சேராத காரணத்தால் மக்கள் கடும் வறட்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

வறட்சி

ஆப்கானிஸ்தான் மிகப்பெரிய வறட்சியை எதிர்நோக்கி உள்ளது. அந்நாட்டு வரலாற்றில் இதுவரை ஏற்படாத பஞ்சம் ஏற்பட போகிறது. மிகப்பெரிய மனித அவலம் ஏற்பட போகிறது என்று ஐநா தெரிவித்து இருக்கிறது.

தாலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் அங்கு பெரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு கொண்டு வர தாலிபான் அரசிடம் போதிய திட்டங்கள் இல்லை. இந்த நிலையில்தான் ஆப்கான் மிகப்பெரிய பஞ்சத்தை நோக்கி நடைபோட்டு வருகிறது.

Previous Story

அமைச்சரவைக்கு  2 VIP க்கள்

Next Story

மதம் மாறும் மலையாள இயக்குநர் அலி அக்பர்!