பெண் கல்விக்கு ஆதரவாக பேசிய வெளியுறவு மந்திரிக்கு ஆப்கனில் நேர்ந்த கதி
ஆப்கானிஸ்தான் பெண்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்று அந்த நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் பேசினார்.
இதனால் அவர் மீது கோபம் கொண்ட தாலிபான் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி என்பது நடந்து வருகிறது. கடந்த 2021ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறியது. இதையடுத்து உள்நாட்டு போரை தொடங்கி ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
தாலிபான்கள் ஆட்சியை பொறுத்தவரை இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும். இதனால் பல லட்சம் பேர் ஆப்கானிஸ்தானை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.
இதனால் தாலிபான்கள், ‛‛நாங்கள் முன்பு போல் இல்லை. திருந்திவிட்டோம். முந்தைய ஆட்சியைப் போல் கடும் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாட்டோம்” என்று கூறினர்.
ஆனால் தாலிபான்களின் இந்த சொற்கள் வெறும் வாக்குறுதிகளாக மட்டுமே இருந்தன. ஏனென்றால் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்தவுடன் பெண்களுக்கு எதிராக கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தொடங்கினர். குறிப்பாக பெண்கள் தனியார் தொண்டு நிறுவனங்களில் வேலை செய்ய கூடாது.
ஹோட்டல்களில் ஆண், பெண்கள் சேர்ந்து அமர்ந்து சாப்பிட கூடாது. வீட்டை விட்டு வெளியே வந்தால் தலை முதல் பாதம் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும். ஜிம், பூங்காக்களுக்கு செல்ல கூடாது என்று அடுத்தடுத்து உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
அதுமட்டுமின்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் 6ம் வகுப்புக்கு மேல் கல்வி கற்க அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே, பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவ பயிற்சி மற்றும் படிப்புகள் ரத்து செய்யப்பட்டு விட்டது.
இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால் தாலிபான்கள் கண்டுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் தான் கடந்த மாதம் 20ம் தேதி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள கோஸ்ட் மகாணத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் தாலிபான் மூத்த தலைவர்களில் ஒருவரும், அந்த நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சருமான ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு இருப்பதை விமர்சனம் செய்தார். இதுபற்றி அவர், ‛‛நாட்டில் பெண்களுக்கு கல்வி என்பது மறுக்கப்பட்டுள்ளது.
மேல்படிப்பை பயில பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டில் 20 மில்லியன் (ஒரு மில்லியன் என்பது 10 லட்சம். 20 மில்லியன் என்பது 2 கோடி) மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்.
இது அவர்களின் உரிமையை பறிக்கும் செயல். நபிகள் நாயகம் காலத்தில் கல்விக்கான கதவுகள் ஆண்கள், பெண்கள் என்ற இருதரப்பினருக்காக திறக்கப்பட்டு இருந்தது” என்று கூறினார்.
ஆப்கானிஸ்தானில் பெண் கல்விக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து தாலிபான் அமைச்சரே குரல் கொடுத்திருப்பது அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதோடு அவர் மீது தாலிபான் தலைமை கடும் கோபம் கொண்டது. ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாயை கைது செய்ய தாலிபான் சூப்ரீம் லீடர் ஹிபாதுல்லா அகுண்டசதா உத்தரவிட்டார்.
அதோடு அவரது பயணங்களுக்கு தடை விதிக்க உத்தரவிட்டுள்ளதாக ‛தி கார்டியன்’ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் பயந்துபோன அமைச்சர் ஷேர் அப்பாஸ் ஸ்டனிக்ஸாய் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு ஓடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.