ஈரானுக்கு பறந்த பாகிஸ்தான் டீம்!
அடுத்து என்ன நடக்கும்?
ஈரான்-அமெரிக்கா இடையேயான முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்திருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த, பாகிஸ்தான் டீம் ஈரானுக்கு செல்ல இருக்கிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கான திட்டத்தை வகுப்பதற்காக, ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர் தலைமையிலான உயர்மட்ட பாகிஸ்தான் தூதுக்குழு தெஹ்ரான் செல்கிறது என்று ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன.

அமெரிக்காவின் புதிய செய்தியைத் எடுத்து செல்லும் இந்தத் தூதுக்குழு, ஈரானிய அதிகாரிகளுடனான சந்திப்புகளில் வரவிருக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஐ.ஆர்.ஐ.பி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி இந்தத் தூதுக்குழுவை வரவேற்க உள்ளார். அமெரிக்காவும் ஈரானும் தங்கள் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நேரடிப் பேச்சுவார்த்தையை நடத்தின.
ஆனால், அந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை. ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கப்பட்ட கிட்டத்தட்ட 40 நாள் போரைத் தொடர்ந்து இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
இதற்குப் பதிலடியாக, இஸ்ரேலையும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் சொத்துக்களையும் குறி வைத்து தாக்கியிருந்தது. இது மத்திய கிழக்கை தாண்டி, உலகம் முழுவதும் பதற்றத்தையும் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பபையும் ஏற்படுத்தியிருந்தது.

எனவே போரை நிறுத்த பல்வேறு தரப்பினரும் தீவிரமாக முயன்று வருகின்றனர். அமெரிக்கா, பாகிஸ்தான் மூலம் ஈரானை அப்ரோச் செய்து வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கும் நிலையில், 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்த, பாகிஸ்தான் குழு தெஹ்ரானுக்கு செல்ல இருக்கிறது.
அடுத்து என்ன நடக்கும்? இந்த பேச்சுவார்த்தை முயற்சியை ஈரான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்வதெனில், ஈரான் தரப்பிலும் சில டிமாண்ட்கள் வைக்கப்படும்.
இதை அமெரிக்கா ஏற்க தயாராக இருக்கிறது, அல்லது அது குறித்து பேச தயாராக இருக்கிறது எனில், பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஒப்புக்கொள்ளும்.
குறிப்பாக வெளிநாட்டில் உள்ள ஈரானின் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் என்றும், போர் நிறுத்தம் ஈரானை தாண்டி லெபனான் வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்கிற வலியுறுத்தலை ஈரான் வைக்க வாய்ப்பு இருக்கிறது.



