அமெரிக்கா – சீனா அதிபர்கள் பேச்சு

உக்ரைன் போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜிங்பிங் நேற்று பேச்சு நடத்தினர்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை கண்டித்து ஐ.நா.,வில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானங்கள் மீது நடந்த ஓட்டெடுப்பில் சீனா பங்கேற்காமல் நடுநிலை வகித்தது.

அத்துடன் ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளுக்கும் சீனா கண்டனம் தெரிவித்தது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்வதையும் சீனா கண்டித்தது.

இந்நிலையில் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை செய்யவும் பொருளாதார தடைகளை சமாளிக்க நிதியுதவி அளிக்கவும் சீனா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.

இதனால் கவலை அடைந்த அமெரிக்கா, சீனா உடன் பேச்சு நடத்த முடிவு செய்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜிங்பிங் உடன் பேச்சு நடத்தினார்.

இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளின்கன் கூறுகையில், ”ஜிங்பிங் உடனான பேச்சில் ரஷ்யாவுக்கு ஆயுத சப்ளை உள்ளிட்ட உதவிகளை வழங்கினால், அதற்கான பொறுப்பை சீனா ஏற்க நேரும் என்பதுடன் அந்நாட்டின் மீதும் பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா தயங்காது என்பதையும் ஜோ பைடன் தெளிவுபடுத்தியுள்ளார்,”என்றார்.

இதற்கிடையே ”உக்ரைன் பிரச்னையை இரு தரப்பு பேச்சு மூலம் தீர்க்க வேண்டும். அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தடுக்கப்பட வேண்டும்,” என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்துள்ளார்.

Previous Story

பொருளாதார நெருக்கடி: கியூவில் முதல் மரணம் பதிவு.

Next Story

இலங்கை : தங்கம் 161000ரூபா