அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் செனட், பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் டொனால்ட் டிரம்பின் அதிபர் பதவிக் காலம் முடியும் வரை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சியினர் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்க அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பெரிய மாற்றம், அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. இரான் போரும், அதிகரித்து வரும் விலைவாசி உயர்வும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் பலரின் தோல்விக்குக் காரணமாக அமைந்ததாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், “நாங்கள் தோல்வி அடைந்ததற்குக் காரணம் போர்” என்று தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் முதல் சீனாவுடனான வர்த்தக உறவுகள் வரை, இந்தத் தேர்தல் முடிவுகள் உலகின் பிற பகுதிகளுக்கு என்ன அர்த்தத்தை ஏற்படுத்தும் என்பதை பிபிசி செய்தியாளர்கள் விளக்குகின்றனர்.
இரான்

லண்டனில் உள்ள பிபிசி நியூஸ் பெர்ஷிய சேவையின் மூத்த செய்தியாளர் கோன்சே ஹபீபியாசாத்
அமெரிக்க அரசியலில் ஏற்படும் மாற்றங்கள், இரான் மீதான அமெரிக்காவின் விரோதப் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைப்பவர்கள் “மிகப் பெரிய தவறு செய்கிறார்கள்” என்று இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மீண்டும் இரான் மீது தாக்குதல் நடத்தினால், அதற்கான பதில் “இன்னும் மிகப் பெரிய அளவில் விரிவடையும்” என்றும் காமனெயி எச்சரித்துள்ளார்.
பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட தனது தந்தை அலி காமனெயிக்கு பிறகு அதிஉயர் தலைவராகப் பொறுப்பேற்றவர் மொஜ்தபா காமனெயி. அவர் பல மாதங்களாகப் பொதுவெளியில் காணப்படவில்லை.

கடந்த 1979ஆம் ஆண்டு தெஹ்ரானில் உள்ள அமெரிக்க தூதரகம் கைப்பற்றப்பட்டதை நினைவுகூரும் வகையில் புதன்கிழமை வெளியிடப்பட்ட ஆறு பக்க எழுத்துபூர்வ செய்தியில் இந்தக் கருத்துகள் இடம்பெற்றுள்ளன.
வளைகுடா அரபு நாடுகள்

பிராங்க் கார்ட்னர், பிபிசி பாதுகாப்பு செய்தியாளர்
கோட்பாட்டளவில் பார்த்தால், “புராஜெக்ட் டிரம்ப்” திட்டத்திற்கு ஏற்பட்டுள்ள இந்தத் தேர்தல் பின்னடைவு, மற்றொரு காலகட்டத்தில் வளைகுடா அரபு நாடுகளுக்கான பின்னடைவாகக் கருதப்பட்டிருக்கலாம்.
அமெரிக்க அதிபருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அந்த நாடுகள் பலவற்றுடன் நெருக்கமான தனிப்பட்ட மற்றும் வர்த்தக உறவுகள் உள்ளன.
துபையில் டிரம்ப் சர்வதேச கோல்ஃப் மைதானம் உள்ளது. கத்தார் அவருக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான விமானத்தைப் பரிசாக வழங்கியது. அதேவேளையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE), கத்தார், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் இணைந்து டொனால்ட் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னரின் அஃபினிட்டி கேபிடல் நிறுவனத்தில் பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு தனது முதல் அதிபர் பதவிக் காலத்தில், வெளிநாட்டுப் பயணமாக முதலில் ரியாத்துக்கு செல்வதையும் டிரம்ப் தேர்வு செய்தார். டிரம்புக்கு முன்பு அதிபராக இருந்த ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனுடன் சௌதி அரேபியாவுக்கு குறிப்பாக மிகவும் நெருக்கடியான உறவு இருந்தது. 2022ஆம் ஆண்டு சௌதி பட்டத்து இளவரசருடன் பைடன் மேற்கொண்ட அந்தச் சங்கடமான முஷ்டி மோதலை நினைவுகூர்கிறீர்களா?
விஷ வாயுவைப் பயன்படுத்திய சிரிய அதிபர் பஷார் அல்-அசத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிபர் ஒபாமா தவறியதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் தலைவர்களுக்கும் அவர் மீது கடுமையான அதிருப்தி இருந்தது. ஆனால், இந்த ஆண்டு இரானுடன் ஏற்பட்ட போர், டிரம்பை பற்றிய மக்களின் பார்வையை மாற்றியுள்ளது.
ஒரு அரசியல் விமர்சகர் கூறியது போல, “அதிபர் டிரம்ப் வளைகுடா பிராந்தியத்தையே தீக்கிரையாக்கினார்” (பிப்ரவரி 28ஆம் தேதி).
அந்தப் போரை அவர் மீண்டும் தொடங்கிவிடக்கூடும் என்ற அச்சம் இன்னமும் நீடிக்கிறது. அப்படி நடந்தால், இரான் பதிலடி கொடுக்கும் வகையில் வளைகுடா நாடுகளின் முக்கியமான தேசிய உள்கட்டமைப்புகளைப் பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடும்.

தேர்தல் முடிவுகளில் இரானின் பங்கு என்ன?
ரெபெக்கா பியடர், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள பிபிசி செய்தியாளர்
இரானுடனான போர் காரணமாகவே குடியரசுக் கட்சியினர் தேர்தலில் படுதோல்வி அடைந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். இந்தப் போர் அமெரிக்கர்களின் செலவுகளைப் பெருமளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக, பெட்ரோல் செலவு கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த 2024ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக அதிபர் பதவிக்குப் போட்டியிட்டபோது, ஒரு கேலன் பெட்ரோல் விலையை 2 டாலருக்கும் கீழ் குறைப்பதாக டிரம்ப் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அக்டோபர் மாதத்தில் ஒரு கேலன் பெட்ரோலின் சராசரி விலை 4.31 டாலராக இருந்தது. மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்பினால் புதிய போர்கள் எதுவும் இருக்காது என்றும் அவர் வாக்குறுதி அளித்திருந்தார்.
ஆனால், இடைக்காலத் தேர்தலுக்கு முந்தைய நாளில், அமெரிக்கா இரானின் ஒரு தீவு மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தியது. போரைத் தொடங்கியதில் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும் டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இடைக்காலத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் இரானின் தலைமைப் பேச்சுவார்த்தையாளர், அமெரிக்கர்கள் “போருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கவில்லை என இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பிபிசியின் அமெரிக்க செய்திக் கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் சமீபத்தில் பேசிய டிரம்ப், இந்த மோதல் “நான் முடிவுக்கு வருகிறது என்று சொல்லும்போதுதான் முடிவுக்கு வரும்” என்று தெரிவித்துள்ளார்.
சீனா

லாரா பிக்கர், சீனா செய்தியாளர்
தேர்தல் முடிவுகள் வெளியாகி வருவதைப் பார்க்கும் சீனா, இதில் தனக்கான ஒரு வாய்ப்பைக் காணும். சீனா, அமெரிக்கா இடையிலான உறவு, இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வல்லரசுப் போட்டியாக உள்ளது. இந்த மாத இறுதியில் சீனாவில் டொனால்ட் டிரம்பை வரவேற்கத் தயாராகி வரும் அதிபர் ஷி ஜின்பிங், இந்தச் சூழலில் தனக்குச் சாதகமான நிலை இருப்பதாகக் கருதக்கூடும்.
அமெரிக்க உற்பத்தியாளர்களை மலிவான சீனப் பொருட்களிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில், அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் சீனப் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்தார். ஆனால், ஷி ஜின்பிங் தனது தரப்பில் அதிகளவிலான வரிகளை விதித்துப் பதிலடி கொடுத்ததால், டிரம்பின் திட்டம் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது.
இதனால், பொம்மைகள், ஆடைகள் போன்ற குடும்பங்களின் சிறிய அளவிலான ஆடம்பரப் பொருட்கள் உள்படப் பல பொருட்களின் விலைகள் அமெரிக்கர்களுக்கு அதிகரித்தன.
அமெரிக்க வேளாண் பொருட்களை வாங்குவதையும் சீனா நிறுத்தியது. இதனால், டிரம்புக்கு ஆதரவளிக்கும் மாகாணங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த வர்த்தகப் போர் ஒரு தற்காலிக ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்தது. அந்த ஒப்பந்தம் ஜனவரி மாத இறுதியில் காலாவதியாக உள்ளது. இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு டிரம்ப் பின்னடைவைச் சந்தித்து, ஒரு ஒப்பந்தத்தை எட்ட முயல்வார் என்று சீனா கருதக்கூடும்.
சீனாவுக்கு சாதகமான ஒரு சிறந்த ஒப்பந்தத்தை எட்டுவதற்கான வாய்ப்பாக இதை ஷி ஜின்பிங் பார்ப்பார்.
ரஷ்யா

ஸ்டீவ் ரோசன்பெர்க், பிபிசி ரஷ்ய சேவையின் ஆசிரியர்
விளாதிமிர் புதினின் செய்தித் தொடர்பாளரான டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்ய ஊடகங்களிடம், “டொனால்ட் டிரம்ப் தனது சமாதான முயற்சிகளைத் தொடர்வார் என்று நாங்கள் மனபூர்வமாக நம்புகிறோம்” என்று கூறியுள்ளார்.
“சில யோசனைகள் உள்ளன” என்று பெஸ்கோவ் தெரிவித்தார். மேலும், “விரைவில் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளின் மற்றொரு சுற்று நடைபெறும்” என்றும் அவர் கூறினார். அடுத்த வாரம் அபுதாபியில் ரஷ்யா, யுக்ரேன், அமெரிக்கா இடையே நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள முத்தரப்புப் பேச்சுவார்த்தைகளை அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், “மெலனியா டிரம்பின் வெற்றிகரமான மனிதாபிமான அமைதி முயற்சிகளை நாங்கள் பார்த்திருக்கிறோம்” என்றும் அவர் கூறினார். ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள ஒலேஷ்கியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையை அவர் குறிப்பிடுகிறார்.
“இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெறும் என்று நம்புகிறோம்” என்றும் அவர் கூறுகிறார். அமைதி முயற்சிகள் தோல்வியடைந்தால், ஏற்கெனவே செய்ததைப் போலவே ரஷ்யா பெரும்பாலும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா மீது குற்றம் சுமத்தும்.
இப்போது ஜனநாயகக் கட்சியினர் மற்றும் இடைக்காலத் தேர்தல் மீதும் ரஷ்யா குற்றம் சுமத்தக்கூடும். டொனால்ட் டிரம்பை அது குற்றம்சாட்ட வாய்ப்பில்லை. ஏனெனில், டிரம்புடனான உறவில் கிரெம்ளின் அதிக முதலீடு செய்துள்ளது. மேலும், டிரம்ப் நிர்வாகத்துடன் பொருளாதார ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ள ரஷ்யா இன்னமும் நம்பிக்கையுடன் இருப்பது தெளிவாகத் தெரிகிறது.
உலக ஊடகங்கள்

பட மூலாதாரம்,TEHRAN TIMES
யுக்ரேன், இரான் மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் உள்ள மக்களைப் பொறுத்தவரை, அமெரிக்க இடைக்காலத் தேர்தல் என்பது உள்நாட்டுக் கொள்கை தொடர்பான விஷயமாக மட்டுமின்றி, தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்களில் அதன் முடிவுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையே முக்கியமாகக் கொண்டிருந்தது.
யுக்ரேனில், போரை டிரம்ப் கையாளும் விதம் குறித்து அரசியல் விமர்சகர்கள் கவனம் செலுத்தினர். உலகளாவிய மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதாக டிரம்ப் மீண்டும் மீண்டும் கூறி வந்ததைக் குறிப்பிட்டு, செய்தியாளர் ரோமன் சிம்பல்யுக், அதிபர் “தனது சொந்தப் போரைத் தோற்கடித்துவிட்டு, மற்ற அனைத்துப் போர்களையும் முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டார்” என்று கேலியாகக் கூறினார்.
யுக்ரேனின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஜனநாயகக் கட்சியினரின் தேர்தல் வெற்றி மாஸ்கோவுக்கு எதிரான கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கான ஆதரவை வலுப்படுத்தும் என்று கீவ் நகரில் சிலர் நம்புகின்றனர். அதேவேளையில், அமெரிக்காவில் அரசியல் முடக்க நிலை ஏற்படுவது யுக்ரேன் தொடர்பான கொள்கையில் புதிய நிச்சயமற்ற தன்மையை உருவாக்கக்கூடும் என்று மற்றவர்கள் அஞ்சுகின்றனர்.
மாஸ்கோவில், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் டிரம்பின் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று நம்புவதாக கிரெம்ளின் பகிரங்கமாகத் தெரிவித்தது.
இந்த மாதம் ரஷ்யா-யுக்ரேன் இடையே மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஜனநாயகக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் காங்கிரஸ் சென்றால், கிரெம்ளினுடன் எதிர்காலத்தில் எந்தவோர் ஒப்பந்தத்தையும் எட்டுவதற்கோ அல்லது ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துவதற்கோ டிரம்பின் திறனுக்குக் கட்டுப்பாடுகள் ஏற்படக்கூடும் என்று போரை ஆதரிக்கும் ரஷ்ய தரப்பினர் எச்சரித்தனர்.
இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினரின் தேர்தல் வெற்றியை, டிரம்பின் போர் கொள்கைக்கு எதிரான மக்களின் கண்டனமாக இரானின் தலைமை மற்றும் அரசுடன் தொடர்புடைய ஊடகங்கள் சித்தரித்தன. தெஹ்ரானுடனான ராணுவ மோதலால் ஏற்பட்டு வரும் அரசியல் விலை அதிகரிப்பதாகத் தாங்கள் கருதுவதைக் குறித்து இரானிய ஊடகங்கள் கவனம் செலுத்தின.





