அனுரவுக்கு மாற்றீடு தேடும் எதிரணிகள்!

நஜீப் பின் கபூர்

நன்றி: 07.06.2026 ஞாயிறு தினக்குரல் 

நீதிமன்றில் சுரேஸ் சலேக்கு ஒஸ்கார் விருது கூட கிடைக்கும் என வாதம்!
மாகாண சபைத் தேர்தலை தள்ளிப் போட்டால் அனுரா மூக்குடைபடுவார்!
நமது அரசியலில் ரணில் காலாவதியான ஒரு பண்டமாகப் போய்விட்டார்!
இரண்டாம் இடத்தை கைப்பற்றும் பலப்பரீட்சையில் சஜித்-நாமல் அணிகள்!

Fact Check: Sajith Premadasa Did Attend Udaya Gammanpila's Book Launch - Fact Crescendo Sri Lanka English | The leading fact-checking website

தேர்தல் காலங்களில் அரசியல் கூட்டணிகள் சமைவதும் இடையில் அது உடைவதும் புதிய கூட்டணிகள் அமைவதையும் நாம் பல இடங்களில் பார்த்து வந்திருக்கின்றோம். இதற்கு அண்மைக்காலத்து ஒரு முன்னுதாரணம் நமக்கு இருக்கின்றது. தமிழ் நாட்டு அரசியலில் தேர்தலுக்கு முன்னர் அமைந்த கூட்டணி ஒன்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பின்னாலான கூட்டணியையும் நாம் கண்டோம். இதனை ஒரு கேலிக் கூத்தாக அரசியல் விமர்சகர்கள் எடுத்துக் கொண்டு விமர்சித்து வருகின்றனர். நமது பார்வையில் இந்த விமர்சனங்கள் தோல்வியின் வலிகளால் வருபவை என்று தெரிகின்றது.

திமுக. கூட்டணிதான் வெல்லும் விஜய் தனது தொகுதியில் கூட வெற்றி பெறமாட்டார் என்று சொன்னவர்கள் பின்பு, தாம் அப்படிச் சொன்னதற்குக் காரணம் சரியான தகவல்கள் தம்மிடம் இல்லாததால் தவறு நடந்து என்றும் கதை விட்டிருந்தார்கள். இவர்கள் தான் இன்று விஜய் தனது பெரும்பான்மையை நிலைநாட்ட திமுக. கூட்டணியில் இருந்த சகாக்களைத் தன் பக்கம் இழுத்துக் கொண்டதை பெரும் தவறு என்று சொல்லி கதைக்கின்றார்கள். அரசியலில் நிரந்தர நண்பரும் கிடையாது பகைவரும் கிடையாது என்பதற்கு இது நல்ல உதாரணம்.

நமது நாட்டில் அரசியலை எடுத்துக் கொண்டாலும் நிலை இப்படித்தான் இருக்கின்றது. தேர்தல் ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள ரணிலின் ஐதேக. அல்லது சஜித்தின் ஐமச. பாவித்துக் கொள்கின்ற தனித்துவ சிறுபான்மைக் கட்சிகள் தேர்தல் முடிந்தவுடன் தான் தேர்தலில் எதிர்த்து நின்ற கட்சியில் இணைந்து அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டதற்கு நிறையவே உதாரணங்கள் இருப்பது சிறு குழந்தைகளுக்குக்குத் தெரியும். எனவே அரசியலில் சந்தர்ப்பவாதமும் ஒரு இராஜதந்திரம்தான் என்று நாம் குறிப்பிட முடியும். சுருக்கமாக சொல்வதானால் கூட்டணிகள் கட்சி தாவல்கள் ஒன்றும் புதிதல்ல காலத்தினதும் சந்தப்பங்களினதும் தேவை. இதனை நாம் உள்ளாட்சி மன்றங்களை அமைக்கின்ற போது பார்த்தோம்.

இப்போது நமது அரசியல் களத்தில் என்ன நடக்கின்றது என்பதனை சற்று விரிவாக பார்ப்போம். என்பிபி.-ஜேவிபி அணிகளின் தலைவர் அனுரகுமார நாட்டில் செல்வாக்கான ஒரு அரசியல் தலைவராக இருந்து வருகின்றார். அவருக்கு மாற்றீடான ஒரு அரசியல் தலைமை நாட்டில் கண்ணுக்குத் தெரிகின்ற தூரத்தில் கிடையாது என்பது நமது அவதானம். இந்த அரசு மக்களின் நல்லெண்ணத்தை இழந்து விட்டது. அவர்களுக்கு வாக்களித்தவர் இந்த அரசாங்கத்தை எதிர்க்கின்றார்கள். அவர்கள் பொய்காரர்கள் என்று எதிரணி அரசியல்வாதிகளும் அவர்கள் வாடகைக்கு அமர்த்தி இருக்கின்ற சில ஊடகங்களும் செய்திகளைப் பரப்பிக் கொண்டு வருகின்றன.

சரி, இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியாக இருந்தால் அனுராவுக்கு எதிரான மாற்றுத் தலைமைத்துவம் யார்? என்பிபி.க்கு எதிரான அரசியல் தலைவர் தலைமைத்துவம் யார் என்று எவரையாவது அடையாளம் காட்ட முடியுமா என்று நாம் அவர்களிடத்தில் திருப்பிக் கேட்கின்றோம். அதற்காக இந்த அரசுக்கு நாம் வக்காளத்து வாங்குகின்றோம் என்பது அர்த்தம் கிடையாது. நமது அரசியல் களத்தில் இருக்கின்ற ஒரு யதார்த்தத்தைதான் நாம் இங்கு சுட்டிக் காட்டி இருக்கின்றோம். இல்லை அனுராவை விட திறமையான அரசியல்வாதிகள் தான் சஜித் நாமல் ரணில் என்று வாதிடுபவர்களுக்கு அதற்கான உரிமை இருக்கின்றது என்பதனையும் இங்கு சொல்லி வைக்கின்றோம். யாதார்த்தத்தை ஏற்றுக் கொள்வதும் நிராகரிப்பதும் மனட்சாட்சியைப் பொறுத்த விடயங்கள்.

பொதுவாக பார்க்கின்ற போது அனுராவுக்கு எதிரான மாற்றுத் தலைமை ஒன்று சமகாலத்தில் நாட்டில் இல்லை என்பது பெரும்பான்மை மக்களின் அளவீடாக இருக்கின்றது என்பது நமது அவதானம். எனவே இன்று இரண்டாம் இடத்தில் அனுராவுக்கு எதிரான போட்டியாளர் யார் என்பதற்காக ஒரு போட்டி நாட்டில் இருந்து வருகின்றது. அதில் சஜித்துக்கும் நாமலுக்குமிடையில் ஒரு பலப்பரீட்சை நடக்கின்றது. இதனால்தான் சஜித்துக்கு பெரிய தலை இருந்தாலும் சிறியதொரு மூளைதான் இருக்கின்றது என்று மொட்டுக் கட்சி தரப்பில் பரப்புரைகள் திட்டமிட்டு நடந்திக் கொண்டு வருகின்றது. அதே நேரம் தனது கூட்டணியில் இருக்கின்ற தயாசிரி ஜயசேக்கர பேன்றவர்கள் வருகின்ற தேர்தலில் புதிய ஒரு ஜனாதிபதித் வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டி இருக்கின்றது என்று பகிரங்கமாக சொல்லி இருக்கின்றார். ஆனால் சஜித்தான் தமது ஜனாதிபதி வேட்பாளர் என்றும் அங்குள்ள சிலர் ஏற்கெனவே அறிவித்திருக்கின்றார்கள்.

தற்போது மொட்டுக் கட்சி ஆங்காங்கே அரசியல் கூட்டங்களை நடாத்திக் கொண்டு வருவதையும் நாம் பார்க்கின்றோம். அண்மையில் பாணதுறையில் நடந்த அரசியல் கூட்டம் ஒன்று கேலிக் கூத்தாகி முடிந்தது. ஏற்பாட்டாளர்கள் அதற்குப் புது விளக்கங்களையும் நியாயங்களையும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதுதான் அரசியல். தற்போது மொட்டுக் கட்சியினர் நாடுபூராவிலும் கூட்டங்களைப் போட்டு நமது பரப்புரைகளை செய்து கொண்டிருக்கின்றனர். இது அனுராவுடன் போட்டிக்குத் தயாராகும் முன்னர் நாமல் அரசியல் களத்தில் சஜித்தை முந்த வேண்டும் அந்தவகையில் அவர்களது முயற்சிகள் நியாயமானது. அதனால்தான் சஜித்துக்கு எதிரான பரப்புரைகளை அவர்கள் துவங்கி இருக்கின்றார்கள்.

இப்போது தேர்தல் தொடர்பான அண்மைக்கால சில புள்ளி விபரங்களை வைத்து மக்கள் செல்வாக்குப் பற்றி ஆராய்வோம். ஜனாதிபதி தேர்தலில் முதல் சுற்றில்

ஜனாதிபதி தேர்தல்

1. அனுரவுக்கு 42.31 %
2.சஜித்துக்கு 32.76 %
3. ரணிலுக்கு 17.27 %
4. நாமலுக்கு 2.27 %

அரசியல் யாப்பின் படி நடந்த இரண்டாம் சுற்றுப் புள்ளி விபரங்களை நாம் இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்.

பொதுத் தேர்தல்

1. அனுர-என்பிபி 61.56 % (6863186 வாக்குகள்.159 ஆசனம்)
2. சஜித்-ஐமச 17.66 % (1968716 வாக்குகள்.40 ஆசனம்)
3. புதிய ஜனநாயக.க. 04.49 % (500835 வாக்குகள். 5 ஆசனம்)
4. நாமல்-மொட்டுக்கு. 03.14 % (350429 வாக்குகள். 3 ஆசனம்)

இங்கு நாம் பிரதான போட்டியாளர்களை மட்டுமே கருத்தில் எடுத்து ஆராய்கின்றோம் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

அதாவது அனுர சஜித் நாமல் என்ற அரசியல் போட்டியாளர்களைத்தான் நாம் இங்கு கருத்தில் எடுத்துக் கொண்டிருக்கின்றோம். நமது கணக்கில் ரணில் இதன் பின்னர் இலங்கை அரசியலில் ஒரு தீர்க்கமான சக்தியே கிடையாது. ரணில் காலாவதியான ஒரு பண்டம். ஆனால் ரணில் நடாளுமன்றம் வருவார் பிரதமராவார் என்று கருதுகின்ற ஒரு சின்ன கூட்டமும் நாட்டில் இருக்கின்றது. இது அவர்களது அரசியல் புரிதல் தொடர்பான எதிர்பார்ப்புகள். அதனையும் நாம் மதிக்க வேண்டி இருக்கின்றது.

உள்ளாட்சித் தேர்தல்

1. என்பிபி.-அனுர- 4503930 (43.26%) வாக்குகள்.
2. ஐமச.-சஜித்- 2258480 (21.69%) வாக்குகள். 
3. மொட்டு-நாமல்- 954517 (9.17%) வாக்குகள்.
4. ஐதேக.ரணில்- 488406 (4.69%) வாக்குகள்.

மாகாணசபைத் தேர்தல் பற்றி ஒரு கதை இருப்பதால் தேர்தல் வரலாம் எனவே எப்படியாவது நாம் இரண்டாம் இடத்துக்கு வந்தாக வேண்டும் என்று மொட்டுக் கட்சியினர் கருதுகின்றார்கள். அப்போதுதான் ஜனாதிபதி தேர்தலுக்கு தானே நல்ல தெரிவு என்பதனை மக்களுக்கு நிறுவ முடியும். அதனால்தான் சஜித்துக்கு எதிரான பிரச்சாரத்தை அவர்கள் இந்த நாட்களில் முனைப்புடன் நடாத்திக் கொண்டு வருகின்றார்.

இதனால் அரசியல் களத்தில் அனுராவுக்கு எதிரான ஒரு மெகா கூட்டணிக்கு சமகாலத்தில் நாட்டில் வாய்ப்பே கிடையாது. இதனை சஜித்தும் நாமலும் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். இவர்களுக்கிடையே இன்று ஈகோ போட்டி நடந்து கொண்டிருகின்றது. இந்த மெகா கூட்டணி பற்றி சஜித் தெரிவித்திருக்கின்ற ஒரு யதார்த்தமான கதையை நாம் பிரிதொரு இடத்தில் பதிந்திருக்கின்றோம்.

மொட்டுக் கட்சியினர் மஹிந்தவுக்கு பின்னர் நமது தலைவர் நாமல் என்பதனை ஏகமனதாக ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் ஐமச. அணியில் அந்த நிலை இல்லை. கூட்டணியில் இருக்கின்ற சிறுபான்மை கட்சிகள் மற்றும் தயாசிரி போன்றவர்கள் அனுரவுக்கு எதிரான சஜித் ஒரு போட்டியாளரே கிடையாது என்பதனை பகிரங்கமாக பேசுகின்ற ஒரு நிலை கட்சிக்குள்ளேயும் வெளியேயும் காணப்படுகின்றது. இது நாமலுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது. என்றாலும் சிறுபான்மைக் கட்சிகள் ஒரு போதும் மொட்டுக் கட்சியுடன் கூட்டணிக்கு வர மாட்டார்கள். அந்த முயற்சிகளுக்கு குறிப்பட்ட சமூகத்தில் இடம் கிடையாது.

எனவே கிணற்றில் விழுந்தவன் கிணற்று வாயிலூடாகவே வெளியே வர வேண்டும் என்ற வாக்கியத்துக்கு இசைவாக மொட்டுக் கட்சி இனவாத்துடன்தான் மீண்டும் நாட்டில் அதிகாரத்துக்கு வர வேண்டும். அந்த வேலையைத்தான் இப்போது அவர்கள் செய்து வருகின்றார்கள். ஆனால் பெரும்பான்மை சமூகத்தின் மனநிலை சமகாலத்தில் அதற்கு இடம் கொடுக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. அந்த வகையில் அவர்கள் இரண்டாம் இடத்துக்கு-ரனசப் கிண்ணத்துக்கு மொட்டு நடாத்துகின்ற போராட்டத்தை நாம் யதார்த்தமாகவே பார்க்கின்றோம்.

கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சஜித் அணி ஏறக்குறைய இருபத்தி இரண்டு சதவீதமான வாக்குகளைப் பெற்றிருக்கும் போது நாமலின் மொட்டு அணி வெறும் ஏழு சதவீதமான வாக்குகளைத்தான் எடுத்தது. எனவே மொட்டு சஜித்தை அரசியலில் கடந்து போக இன்னும் இரு மடங்கு வாக்குகளை முதலில் பெற்றாக வேண்டும். இது ஹக்கீமின் எளிய கணக்கல்ல. யதார்த்தமான ஒரு வாதம் என்று நாம் சொல்லி வைக்கின்றோம்.

நாட்டில் இருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளையும் மக்களின் வாழ்க்கைச் செலவுகளையும் வைத்துக் கொண்டு எதிரணியினர் அனுரவுக்கும் என்பிபிக்கும் எதிரான பரப்புரைகளைச் செய்து எதிர்பார்க்கப்படுகின்ற மாகாணசபைத் தேர்தலில் வெற்றி கொள்ள எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் தனித்து ஐமச.-சஜித்தாலோ அல்லது மொட்டு கட்சி நாமலாலோ இந்தத் தேர்தலில் வெற்றி கொள்ள முடியாது என்பதும் நமது கணிப்பாக இருக்கின்றது. இந்த நாட்டை மீட்டெடுப்பதற்கான எந்த ஒரு வேலைத் திட்டமும் சஜித்திடமோ அல்லது நாமலிடமோ கிடையாது. இதனை மக்களும்; நன்கு அறிவார்கள்.

சதியும் முரண்பாடுகளும்

Political Tsunami Looms in April as Sajith Unites Opposition, Namal Set to Cross Over I Sri Lanka Latest News - Sri Lanka News Update

இந்த நிலையில் ஐமச. தலைவர் சஜித்துக்கு எதிரான ஒரு சதி முயற்சி நாட்டில் நடந்து கொண்டிருப்பது தெரிய வருகின்றது. சொந்தக் கட்சியில் இருப்போர் சிலரும் ரணில் மற்றும் மொட்டுக் கட்சியினரும் இதன் பின்னணியில் இருப்பதாக ஒரு சந்தேகம் வருகின்றது. இது பற்றி மற்றுமொரு இடத்தில் சற்று விரிவாக பேசி இருக்கின்றோம். இதற்கிடையில் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் பிணைமுறி விடயங்களில் அன்று வீரியத்துடன் குரல் கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இந்த விவகாரங்களில் இன்று ஊமையாகி அடங்கிப் போய் இருப்பது ஏன் என்ற கேள்வி பல தரப்பில் எழுப்பப்பட்டு வருகின்றது.

இதனால் சஜித் அரசியலில் இரட்டை வேடம் போடுகின்றார் என்ற ஒரு கருத்தும் இருக்கின்றது. உதய கம்மன்பில புத்தக வெளியீட்டு நிகழ்வுக்கும் போய் மனிதன் மூக்குடைபட்டிருந்தார். கட்சிக்குள்ளும் கடும் அதிருப்தி தோன்றியது. இதனால் அவருக்கு ஏஐ சஜித் என்று கூட ஒரு நாமம் சூட்டப்பட்டதும் தெரிந்ததே. இதனால் அரசியல் தீர்மானங்களை எடுக்கின்ற விவகாரங்களில் சஜித் இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் செயல்பட்டுக் கொண்டிருப்பதும் தெளிவாகத் தெரிகின்றது. இதனால் நாமல் இரண்டாம் இடத்தை எட்டிப்பிடிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதையும் மறுக்க முடியாது. இது சஜித் பலயீனங்களினால் நடக்கின்ற சேதாரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சலேக்கு ஒஸ்கார் விருது

இதற்கிடையில் இலங்கை அரசியலைப் புரட்டிப்போட்ட ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் அதிரடியான நிகழ்வுகளும் வாக்குமூலங்களும் இப்போது பதிவாகி வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோடாவுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை. தடுப்புக் காவலில் இருக்கின்ற சுரேஸ் சலேக்குத் இரவில் வரும் கனவுகள் குழப்பங்கள் தொடர்பில் தமக்கு ஏதும் பண்ண முடியாது. ஒரு வேலை கனவுகள் முன்செய்த கருமங்களின் விளைவுகளாகவும் இருக்கலாம் என்றும் மன்றில் சலேக்கு சுட்டிக் காட்டப் பட்டிருக்கின்றது.

மேலும் சலே கண்ணீர் வடித்த கதைகளும் நீதி மன்றில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் இவர் போடுகின்ற நடிப்புகளுக்கு ஒஸ்கார் விருது கூட கொடுக்கலாம் என்றும் மேலதிக செலிஸ்டர் ஜெனரல் திலிப பீரிஸ் சுட்டிக் காட்டி இருக்கின்றார்.

Previous Story

සී. අයි.ඩීය සලේගේ ඇදුම් ගලවලා කකුල් ඈත් කරලා..

Next Story

காலை 10 மணி TAMIL NADU தலைப்புச் செய்திகள் - 06 June 2026