-நஜீப் பின் கபூர்-
NPP க்கும் SJB க்கும் நெருக்கமான போட்டி!
ஹமீட் வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி!
டாக்டர் மஹ்ரூபுக்குத் தேசிய பட்டியல்.!
புதிய அரசியல் தலைமைக்கு கதவுகள் திறக்கின்றன.
அகுரண NPP.யிடம் நிறையவே குறைபாடுகள்!

நமது வார்த்தையில் சொல்வதாக இருந்தால் அகுரண என்பது மலையக முஸ்லிம்களின் தலைநகர். தற்போது நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் ஜூரம். கடந்த காலங்களுடன் ஒப்பு நோக்கின்ற போது இந்த முறை அது பெரிய அளவில் இல்லை.
பொது மக்களிடத்திலும் அதற்கான ஆர்வம் பெரிய அளவில் தெரியவில்லை. அத்துடன் பெரும்பான்மையினர் இன்னும் அனுர மோகத்தில் இருந்து விடுபடவில்லை. இந்த பின்னணியில் அக்குரனை அரசியல் பலம் பலயீனங்கள் பற்றி பேசலாம் என்று தோன்றுகின்றது.
நாம் துவக்கத்தில் குறிப்பிட்டது போல மலையக முஸ்லிம்களின் தலை நகர் என்று அகுரண இருந்தலும் அதற்கான அங்கிகாரத்தையும் கவர்ச்சியையும் அகுரணை சமூகம் அந்த நகருக்கு இன்னும் உரிய விதத்தில் பெற்றுக் கொடுக்கவில்லை என்பது எமது வழக்கமான குற்றச்சாட்டாக இருக்கின்றது. வியாபாரம் என்ற ஒன்று மட்டும் அகுரணை சமூகம் என்ற நிலை அங்கு இருக்கின்றது.
அதற்கு அப்பால் எத்தனையோ அம்சங்கள் இருக்கின்றன. அதனை அந்த சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் அகுரண சமூகம் தனது பலத்தை இன்னும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் காட்சிப்படுத்தவில்லை. அது பற்றி அவர்கள் சிந்திப்பதாகவும் நமக்குத் தெரியவில்லை.
இதுபற்றி இங்கு விரிவாக நாம் பேசவரவில்லை. இன்று நமது தலைப்பு அகுரண அரசியல். சுதந்திரத்துக்குப் பின்னர் அகுரண அரசியல் பற்றிப் பார்த்தால் ஏ.சி.எஸ். ஹமீட் என்ற நாமத்தை நாம் பேசித்தான் ஆக வேண்டும். ஆனால் இந்த ஹமீட் என்பவர் அகுரண சமூக அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு சிந்தனையாளர் என்று நாம் ஒரு போது சொல்லவும் முடியாது. அதற்கான சிந்தனை வளம் அவரிடத்தில் இருந்ததில்லை.
அகுரண தேர்தல் தொகுதி பின்னர் ஹரிஸ்பத்துவ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களில் கூட இந்த ஹமீட் கண்டி மாவட்ட ஐதேக.வுக்கு வலுவன தலைமைத்துவத்தைக் கொடுத்து வந்தார் என்பதிலும் எமக்கு உடன்பாடுகள் இருக்கின்றன. ஆனால் சமூக ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு அவர் தலைமைத்துவம் கொடுக்கவில்லை. அதற்காக தனி நபர் பலம் பலயீனங்கள் பற்றியும் நாம் இங்கு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கவுமில்லை.
ஹமீட் சமூக ரீதியில் ஒரு இனத்துக்கு தலைமைத்துவம் கொடுக்கவில்லை என்பதனை நாம் இங்கு ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்க முடியாது. அதற்கான நியாயங்களும் தேவைகளும் அவருக்கு இருந்தது என்பதும் ஏற்றுக் கொள்ளக் கூடியது.
பிற்காலத்தில் கட்சியிலும் கூட கம்பளை காதருக்குச் சமமான விருப்புவாக்குகள் என்ற நிலைக்கு ஹமீட் பலயீனப்பட்டிருந்தார். இது ஜே.ஆரின் விகிதாசாரத்தேர்தலால் ஏற்பட்ட ஒரு சமூக மனநிலை.
கட்சி ரீதியில் மட்டுமல்ல தனக்கு வழங்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சை அவர் அன்று வெற்றிகரமாக முன்னெடுத்தார் என்றும் சொல்ல முடியும். இதற்கு நல்லதொரு உதாரணத்தையும் நாம் இங்கு சுட்டிக்காட்ட முடியும்.
தன்னிடமிருந்த அணிசேர மாநாட்டுத் தலைமைத்துவத்தை திருப்பி கியூபா-ஹவானாவில் வைத்துக் கையாளிக்கின்ற போது, இந்த அணிசேர மாநாடு தனது காலத்தில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட எனது வெளிவிவகார அமைச்சர் ஹமீட்தான் காரணம் என்று ஜே.ஆர். ஜெயவர்தன அன்று அந்த அரங்கில் பகிரங்கமாக புகழ்ந்திருந்தார்.
அந்த வகையில் இது முஸ்லிம் சமூகத்துக்கு ஹமீட் பெற்றுத்தந்த கௌரவம் என்று எடுத்துக் கொள்ள முடியும்.
இப்படி இன ரீதியில் சமூகத்துக்கோ அகுரணைக்கோ ஹமீட் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்யாது போனாலும் அவர் ஐதேக.வுக்கு ஏதாவது செய்துவிட்டுப் போய் இருக்கின்றார். அவர் காலத்தில் டாக்டர் மஹ்ரூப் என்பவர் அகுரணையில் ஒரு எதிர்க் கட்சித் தலைவர் போல ஹமீடுக்கு எதிராக செயலாற்றிக் கொண்டிருந்தார். ஆனால் எந்த ஒரு காலத்திலும் அவரால் அரசியல் ரீதியில் ஹமீடை தோற்கடிக்க முடியவில்லை.
பிற்காலத்தில் இந்த மஹ்ரூப் தான் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் வரை சேவையற்றிய சுதந்திரக் கட்சியிலிருந்தும் ஒதுங்க வேண்டி அல்லது ஓரம் கட்டப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஒரு சந்தர்ப்பத்தில் அவர் தனது பாரம்பரிய சு. கட்சியில் இருந்து விலகி மு.கா. வேட்பாளராகக்கூட பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். அதிலும் அவர் தோற்றுப்போனாலும் ஹக்கீம் மு.கா.வில் வெற்றி பெற அவர் அகுரணையில் பெற்ற வாக்குகள் உதவியது.
மற்றுமொரு சந்தர்ப்பத்தில் நாமும் சில சகாக்களும் ஜனாதிபதி சந்திரிக்க அழைப்பின் பேரில் கண்டி ஜனாதிபதி மளிகையில் சில விவகாரங்கள் பற்றிக் கலந்து பேசிய போது. ஜனாதிபதி சந்திரிக்கா நம்மில் ஒருவருக்கு கண்டியில் பொதுத் தேர்தலில் ஆளும் தரப் வேட்பாளர் வாய்ப்பும் கண்டி ஆண்கள் கல்லூரிக்கான நன்கு கோடியும் தனது நிதியில் ஒதுக்கித் தருவதாக கூறிப்பிட்டு நாளையே கொழும்பு வந்து வேட்பு மனுவில் கையெழுத்துப் போடுங்கள் என்று நம்மை கேட்டுக் கொண்டார்.
ஜனாதிபதி கேட்டுக் கொண்ட படி நம்முடன் இருந்த சட்டத்தரணியும் நண்பருமான ஒருவர் அந்த வேட்பு மனுவில் கையெழுத்துப் போடுவதற்குப் பின்வாங்கியதால், கட்டுரையாளன் இந்த நிலமையை அப்போதய அகுரண தவிசாளராக இருந்த நமது நண்பர் சிம்சானுக்கு இதனைத் தெளிவுபடுத்தி டாக்டர் மஹ்ரூப் அவர்களுக்கு அந்த வாய்ப்பை பெற்றுத் தர முடியும் என்று நாம் சொன்ன பேது, சில நிமிடங்களில் டாக்டர் நம்முடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரி, நான் கையெழுத்துப் போடத் தயார்.! ஆனால் நான் தோற்றுப் போனாலும் எனக்குத் தேசிய பட்டியல் பெற்றுத் தருவீர்களா என்று எம்மை கேட்டார்.
அவரது எதிர்பார்பு நமது செல்வாக்குக்குக்கு அப்பால் பட்ட விடயம். எனவே நீங்கள் அதனை ஜனாதிபதியுடனே பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று நாம் கைவிட்டுவிட்டோம்.
பின்னர் டாக்டர் தரப்பில் கொழும்புடன் தொடர்பு கொண்டு சிலர் தேசிய பட்டியல் எதிர்பார்ப்பை சொன்ன போது அதனை ஜனாதிபதி சந்திரிக்கா எடுத்த எடுப்பிலே நிராகத்து விட்டார்.
ஐதேக. வுக்கு ஹமீட் தேசிய மட்டத்தில் எந்தளவுக்குச் செல்வாக்குச் செலுத்தினாரோ அதேபோன்று அகுரணையில் ஹமீடுக்கு எதிரான பிரதான அரசியல் எதிரியாக டாக்டர் மஹ்ரூப் செயலாற்றி வந்திருக்கின்றார் என்பதனையும் நாம் மறுக்க முடியாது. இன்று அந்த ஆளுமைகள் அகுரணையில் கிடையாது.
ஹமீடுக்கு பின்னர் அவரது வாரிசாக அரசியலுக்கு கொண்டுவரப்பட்ட மருமகனார் ஹலீம் அரசியல் ரீதியில் மிகவும் பலயீனமான ஒரு மனிதன். அதில் நமக்கு எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது.
அவரது சில விசிரிகளுக்கு கையாட்களுக்கு அவர் ஒரு தலைவர் அவ்வளவுதான். மனிதன் நாடாளுமன்றத்தில் இருக்கின்றாரா இல்லையா என்பது கூட தெரியவில்லை.
ஒரு முறை நாம் அவர் பற்றி இப்படி ஒரு குறிப்பை எழுதி இருந்தோம். நாடாளுமன்றத்தில் ஹலீம் என்ற ஒரு உறுப்பினர் இருப்பதற்கான ஒரே ஆதாரம் அவர் சம்பளப்பட்டியலில் கையெழுத்துப் போடுவதில் மட்டும்தான் உறுதியாகி வருகின்றது என்று எழுதி இருந்தோம். அந்த வார்த்தைகள் அவரை மிகவும் சுட்டிருக்கின்றது. அது பற்றி நமக்கு அவரது விசிரி ஒருவர் மூலம் நமக்குத் தகவல் கிடைத்தது.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிந்து யாருக்கும் அகுரணையில் பெரும்பான்மை இல்லை என்ற நிலையில் மசூதீன்-இஸ்திகார் அணி மெட்டுக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த முனைவது தொடர்பான ஒரு தகவல் நமக்குக் கிடைக்க, ஹலீமிக்கு நெருக்கமான உடதலவின்ன சட்டத்தரணி வைஸ் ஊடாக ஹலீமுக்கு இந்த தகவலை எத்தி வைத்து ஒரு கூட்டுக்கு இடமிருக்கின்றது என்ற தகவலை நாம் அவருக்குக் கொடுத்த போது. அது தேவையில்லை. அவர்களுடன் பேசப்போனால் அவர்கள் பெரிய மனிதர்களாகி விடுவார்கள்.
மொட்டுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதைப் பார்ப்போம் என்று நல்ல வாய்ப்பை ஹலீம் அன்று நிராகரித்து விட்டார். இன்று அகுரணையில் ஹலீம் அரசியல் நிலை என்ன என்று கேட்கத் தோற்றுகின்றது. பொதுத் தேர்தலில் தனது கட்சிக்காரர்களே ஹக்கீமுக்கு வோட்டுப் போட்டது ஏன்.
இப்போது அகுரண தேர்தல் களத்தில் ஆளும் அனுர தரப்பினருக்கும் சஜித்தின் அணிக்கும் இடையில் நெருக்கமான ஒரு போட்டி நிலை இருப்பதையும் இங்கு சொல்ல வேண்டும். அவை பற்றி விரிவாகப் பார்ப்போம்.
தொடரும்……!
இஸ்திகார் அரசியல் தீர்மானங்கள்!
அகுரணயைக் கைப்பற்றுவது யார்?
அங்கு ஹக்கீம் தரப்பு மு.க. நிலை!





