சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானத்திலிருந்து, தப்பிய விமானியை, அமெரிக்கா பத்திரமாக ஈரானுக்குள் இறங்கி மீட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதற்கு ஈரான் மறுப்பு தெரிவித்திருக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், விமானி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே ஈரான் அதனை மறுத்துள்ளது.
தெற்கு இஸ்பஹான் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட விமான நிலையம் ஒன்றில் அமெரிக்கா திட்டமிட்ட இந்த மீட்புப் பணி முற்றிலும் முறியடிக்கப்பட்டதாக ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் இப்ராஹிம் சோல்ஃபகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க விமானங்கள் மீது அட்டாக்
இந்த நடவடிக்கையின் போது அமெரிக்காவிற்குச் சொந்தமான இரண்டு சி-130 (C-130) போக்குவரத்து விமானங்கள் மற்றும் இரண்டு பிளாக் ஹாக் ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக ஈரான் ராணுவம் கூறியுள்ளது.
இதற்கான ஆதாரமாக, பாலைவனப் பகுதியில் சிதறிக் கிடக்கும் விமானக் கழிவுகளின் வீடியோ காட்சிகளையும் ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
மீட்புப் பணியின் போது நடந்த தாக்குதல்களில் ஈரானின் தென்மேற்குப் பகுதியில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்கள் பொது மக்களா அல்லது ராணுவ வீரர்களா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் இல்லை.
ஈரான் மறுப்பு
கடந்த வெள்ளிக்கிழமை முதல், அந்த அமெரிக்க விமானியைக் கண்டுபிடித்துத் தருபவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக, அப்பகுதி மக்கள் துப்பாக்கிகள் மற்றும் கொடிகளுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள காட்சிகளும் வெளியாகியுள்ளன. தற்போது இந்த விவகாரத்தில் இரண்டு முரண்பட்ட தகவல்கள் உள்ளன.
அமெரிக்க தரப்பில், விமானி மீட்கப்பட்டுவிட்டார், அவர் நலமுடன் உள்ளார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், ஈரான் மீட்பு முயற்சி தோல்வி அடைந்தது, அமெரிக்க விமானங்கள் அழிக்கப்பட்டதாக கூறியுள்ளது. இருப்பினும் விமானி பிடிபட்டாரா இல்லையா என்பதை ஈரான் உறுதிப்படுத்தவில்லை.



