UK: மனைவி குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்!

திங்கட்கிழமை, 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார். தனது இறுதி பிரச்சாரத்தில் தனது பெற்றோர், மனைவி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் ரிஷி சுனக்.

பிரித்தானிய பிரதமர் தேர்வுக்கான பிரச்சாரம் இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், வரும் திங்கட்கிழமை, அதாவது 5.9.2022 அன்று பிரித்தானியாவின் புதிய பிரதமர் அறிவிக்கப்பட உள்ளார்.

இந்நிலையில், தனது ஆதரவாளர்களிடையே இறுதி உரை ஆற்றினார் இந்திய வம்சாவளி வேட்பாளரான ரிஷி சுனக்.

ரிஷியை எதிர்த்துப் போட்டியிடும் லிஸ் ட்ரஸ் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது என கூறப்படும் நிலையிலும், எங்கு சென்றாலும் ரிஷிக்கு மக்கள் அளிக்கும் வரவேற்பைப் பார்க்கும்போது, அவரது ஆதரவாளர்களைப் பொருத்தவரையிலாவது அவர்தான் அடுத்த பிரதமர் என்பது போல அவரை நடத்துகிறார்கள் அவர்கள்.

இசை நிகழ்ச்சிகள் நடத்தும் பிரபலங்களின் பெயரை அவர்களுடைய ரசிகர்கள் ஓயாமல் உச்சரிப்பதைப் போல, ரிஷியின் பெயரை சொல்லி கூச்சலிடுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

கடந்த புதன்கிழமை இரவு, தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றினார் ரிஷி.

அப்போது, தான் பொதுவாழ்க்கையில் நுழைவதற்கு காரணமாக இருந்தவர்கள் இருவர், அது என் தந்தையும் தாயும்தான் என்றார் ரிஷி.

பொது மருத்துவரான ரிஷியின் தந்தை Yashvirம், மருந்தாளுநரான ரிஷியின் தாய் Ushaவும் தாங்கள் அனுபவித்த வாழ்வைவிட பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கவேண்டும் என்பதற்காக செய்த தியாகங்களை ரிஷி குறிப்பிட, கூட்டம் கரவொலி எழுப்பி அவர்களையும் கௌரவிக்கிறது.

அடுத்து தன்னில் பாதியான தன் துணைவி அக்‌ஷதா குறித்து பேசிய ரிஷி, 18 ஆண்டு கால இரகசியம் ஒன்றை போட்டு உடைக்கிறார்.

தானும் அக்‌ஷதாவும் அமெரிக்காவில் கல்வி பயின்றபோது காதலித்த நாட்களை நினைவுகூர்ந்த ரிஷி, 18 வருடங்களுக்கு முன் தனக்காக அக்‌ஷதா செய்த தியாகத்தை நினைவுகூருகிறார்.

ஹை ஹீல்ஸ் செருப்பு போட்டால், தன் கணவரைவிட தான் உயரமாகத் தெரியக்கூடாது என்பதற்காக, 18 வருடங்களுக்கு முன் ஹை ஹீல்ஸ் செருப்பு போடுவதையே விட்டுவிட்டாராம் அக்‌ஷதா.

அரசியல் வாழ்வுக்காக நீங்கள் செய்த மிகபெரிய தியாகம் எது என ரிஷியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

என் குழந்தைகளை நான் அவ்வளவு நேசிக்கிறேன், என் மனைவியையும் அவ்வளவு நேசிக்கிறேன். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பொதுவாழ்க்கையில் இருப்பதால், அவர்களுடன் செலவிடவேண்டிய நேரத்தில் நான் அவர்களுடன் இல்லை. அதுதான் நான் செய்த மிகப்பெரிய தியாகம்.

ஆனால், நாட்டுக்காக உழைக்கும் இவ்வளவு பெரிய பொறுப்பு எனக்கு கிடைத்திருப்பது பாக்கியம் என நான் நம்புகிறேன். என் நாட்டை நான் நேசிக்கிறேன். இத்தனை கோடி மக்களுக்கு உதவும் வகையில் என்னாலும் ஏதோ செய்யமுடிகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி என்கிறார் ரிஷி.

 வெற்றி யாருக்கு?

ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ்
பிரிட்டன் பிரதமருக்கான தேர்தல் பிரச்சாரம் 6 வாரங்களாக நடந்த நிலையில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

பிரிட்டன் பிரதமராக கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்றார். அவருக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சன் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

பிரிட்டன் அரசியலமைப்பு சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராகவும் பதவியேற்பார்.

அந்த வகையில் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் பிரச்சாரம் கடந்த ஆறு வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தல் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் போட்டியில் முன்னாள் நிதியமைச்சரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சுனக், முன்னாள் வெளியுறவு அமைச்சரான லிஸ் ட்ரஸ் ஆகியோர் உள்ளனர்.

இந்தத் தேர்தலில் கட்சி உறுப்பினர்கள் 2 லட்சம் பேர்வரை வாக்களிக்க உள்ளனர்.

வாக்குப் பதிவின்போது கன்சர்வேடிவ் கட்சியின் பல உறுப்பினர்களுக்கு இருவர் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துள்ளதாக லண்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முன்னதாக, பிரட்டன் பிரதமர் போட்டியில் ரிஷி சுனக்கை பின்னுக்குத் தள்ளி லிஸ் ட்ரஸ் முன்னிலை இருக்கிறார் என்று பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

லிஸ் ட்ரஸ் வெல்லும் பட்சத்தில் அவரது தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற மாட்டேன் என்று ரிஷி சுனக் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான  ஏரி

Next Story

உய்குர் முஸ்லிம் சித்ரவதை ஐ.நா.  குற்றச்சாட்டு!சீனா மறுப்பு!!