T20 உலக கோப்பை 2022 தகவல்கள்

ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது. போட்டியின் முதல் பந்தயம் அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப்பந்தயம் நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறும்.

டி20 உலகக் கோப்பை 2022

இந்த டி20 உலக கோப்பை தொடர்பான முக்கிய விவரங்களை தெரிந்து கொள்வோம்.

 எத்தனை அணிகள்

இந்த போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. முழு போட்டியும் குரூப் ஸ்டேஜ் மற்றும் சூப்பர்-12 என பிரிக்கப்பட்டுள்ளது.

முதலில் க்ரூப் ஸ்டேஜ் பற்றிப்பேசலாம். இந்த சுற்றில் இரண்டு பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஏ பிரிவில் இலங்கை, நமீபியா மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் உள்ளன. மறுபுறம், மேற்கிந்திய தீவுகள், ஸ்காட்லாந்து மற்றும் இரண்டு தகுதிச் சுற்று அணிகள் B பிரிவில் உள்ளன.

இந்த இரு பிரிவிலும் முதல்-2 இடங்களை பிடிக்கும் அணிக்கு சூப்பர்-12ல் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

இப்போது சூப்பர்-12 நிலை பற்றி பேசலாம். இப்போட்டியின் சூப்பர்-12 சுற்றில் ஏற்கனவே 8 அணிகள் இடம்பிடித்துள்ளன. 2021 டி20 உலகக் கோப்பையின் டாப்-8 அணிகள் இவைதான்.

இந்த அணிகள் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம்.

இப்போது சூப்பர்-12ல், இந்த 8 அணிகளைத் தவிர, குரூப் ஏ மற்றும் குரூப் பி-யின் டாப்-2 அணிகளும் சேர்க்கப்படும். சூப்பர்-12 இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

குரூப்-1ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வெற்றியாளர் மற்றும் குரூப் ‘பி’யில் இரண்டாம் இடத்தை பிடிக்கும் அணியும் இருக்கும்.

குரூப்-2ல், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், குரூப் பி வெற்றியாளர் மற்றும் குரூப் ‘ஏ’யில் இரண்டாம் இடத்தைப்பெறும் அணியும் இருக்கும்.

 எங்கு நடைபெறவுள்ளது?

இந்தப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. ஆஸ்திரேலியாவில் மொத்தம் ஏழு இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

முதல் சுற்றின் ஆறு பந்தயங்கள் ஜிலாங் நகரில் உள்ள கார்டினியா பார்க்கில் நடைபெறும். அதே நேரத்தில், போபார்ட்டின் பெலரீவ் ஓவல் மைதானத்தில் மொத்தம் ஒன்பது பந்தயங்கள் நடைபெறும், இதில் முதல் சுற்றின் ஆறு மற்றும் சூப்பர் 12 கட்டத்தின் மூன்று போட்டிகள் விளையாடப்படும்.

இது தவிர, மீதமுள்ள சூப்பர் 12 போட்டிகள் இந்த மைதானங்களில் நடைபெறும்:

• தி கப்பா, பிரிஸ்பேன்

• பெர்த் ஸ்டேடியம், பெர்த்

• அடிலெய்டு ஓவல், அடிலெய்டு

• சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி

• மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம், மெல்போர்ன்

டி20 உலகக் கோப்பை 2022

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

2022 டி20 உலக கோப்பையில் சூப்பர்-12 பந்தயங்கள் எப்போது தொடங்கும்?

போட்டியின் முதல் பந்தயம் இலங்கை மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையே அக்டோபர் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குரூப் ஸ்டேஜ் போட்டி. சூப்பர்-12 போட்டிகள் அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கும்.

இந்த கட்டத்தின் முதல் பந்தயத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 2021 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் மோதின என்பது நினைவுகூரத்தக்கது. இரண்டாவது பந்தயம் அக்டோபர் 22 ஆம் தேதி இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் முதல் பந்தயம் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தியாவின் முக்கியமான போட்டிகள் பின்வருமாறு:

• 23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்

• 27 அக்டோபர்: இந்தியா vs குரூப் 1 ரன்னர் அப்

• 30 அக்டோபர்: இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

• நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்

• நவம்பர் 6: இந்தியா vs குரூப்-2 வெற்றியாளர்

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி எப்போது ?

முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 9ஆம் தேதி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இரண்டாவது அரையிறுதிப் போட்டி நவம்பர் 10ஆம் தேதி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இறுதிப்பந்தயம் நவம்பர் 13 ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். இதன் மூலம் டி20 உலகக் கோப்பையின் புதிய வெற்றியாளரை கிரிக்கெட் உலகம் பெறும்.

2021 டி20 உலக கோப்பையின் முடிவு என்ன?

டி20 உலகக் கோப்பை 2022

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்

கடந்த ஆண்டு ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

இறுதிப் போட்டியில் ‘பூவா தலையா’வை இழந்த நியூசிலாந்து அணி, கேப்டன் கேன் வில்லியம்சனின் 85 ரன்களின் உதவியுடன் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது. பின்னர் மட்டை வீசிய ஆஸ்திரேலியா 18.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. டேவிட் வார்னர் 53 ரன் எடுத்தார். மிட்செல் மார்ஷ் அவுட்டாகாமல் 77 ரன் குவித்தார்.

இந்த போட்டியில் இந்தியாவால் அரையிறுதிக்கு கூட தகுதிபெற முடியவில்லை.

யார் எப்போது வென்றார்கள்?

முதல் டி20 உலகக் கோப்பை போட்டி 2007 செப்டம்பரில் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்ட இதில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அப்போது ஒரே குழுவில் இருந்தன.

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இறுதிப்பந்தயம் ஜோஹேனஸ்பெர்கில் நடைபெற்றது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தான் அணியால் 19.3 ஓவர்களில் 152 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி பாகிஸ்தானை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதுவரை வெற்றி வாகை சூடிய நாடுகள்:

• T20 உலகக் கோப்பை 2007- இந்தியா

• T20 உலகக் கோப்பை 2009- பாகிஸ்தான்

• T20 உலகக் கோப்பை 2010- இங்கிலாந்து

• டி20 உலகக் கோப்பை 2012- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2014- இலங்கை

• டி20 உலகக் கோப்பை 2016- வெஸ்ட் இண்டீஸ்

• T20 உலகக் கோப்பை 2021- ஆஸ்திரேலியா

Previous Story

நாடில்லாத ஜுலு மன்னருக்கு 6 மனைவிகள்; ஒருவருக்கு சலுகை காட்டியதால்  சண்டை

Next Story

ஆசிய கோப்பை கிரிக்கெட்2022