இம்டியாஸ் பாக்கர் மாக்கார் என்ற மனிதன் மீது முஸ்லிம் சமூகத்தினருக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் ஒரு நல்லெண்ணம் இருக்கின்றது. அதில் நமக்கு மாற்றுக் கருத்துக்கள் கிடையாது.
ஐதேக.கட்சி மீது அவர் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்தார். ஆனால் ரணில் அவரை ஓரம்கட்டி வந்தார். இதனால் அவர் தனது கோட்டையான களுத்துரை அரசியலிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.
இன்று சஜித்துக்கு எதிராக தடியெடுத்து இருக்கின்ற அவர் ஐதேக.வுக்குள் இருக்கும் வரை ரணிலுக்கு எதிராக போர்ப்பிரகடனங்கள் ஏதையுமே செய்யாது மௌமாக ஒரு போக்கை கடைப்பிடித்து வந்தார் அல்லது பெட்டிப் பாம்பாக இருந்தார் என்பது நமது அவதானம்.
ஆனால் சஜித் என்ற பலயீனமான ஒரு தலைவருக்கு எதிராக இன்று அவர் போர்பிரகடணம் செய்து வருகின்றார். அல்லது மோதிப்பார்க்கின்றார் என்று எடுத்துக் கொள்ள முடியும். ஆனால் இது ஒரு காலம் கடந்த நடவடிக்கை.
அவரை கட்சியின் தவிசாளராக சஜித் நியமனம் செய்து நெடுநாள் ஆகவில்லை. ஆனால் இந்த தவிசாளர் பதவி என்பது ஒரு கண்துடைப்புத்தான். அதை வைத்து அவருக்கு எதுவுமே பண்ண முடியவில்லை. ஆனாலும் கட்சியில் அவருக்கு ஒரு அனுதாபம் இருப்பதும் உண்மைதான்.
தன்னை சஜித் தேசிய பட்டியல் உறுப்பினராக நியமனம் செய்திருந்தால் அவர் இப்படி எல்லாம் நடந்து கொள்வார என்று கேட்கத் தோன்றுகின்றது.
அடுத்து கடந்த பொதுத் தேர்தலில் தனது மகனை அவர் களுத்துரை மாவட்டத்தில் இருந்து களமிறக்க விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
அதனால் இம்டியாஸ் பெயர் தேசிய பட்டியலில் உள்வாங்கப்பட்டிருந்தது. தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவர் உறுதியாக நம்பி இருந்தார். ஆனாலும் அவரை நாடாளுமன்றத்துக்கு உள்வாங்குவதை சஜித் தடுத்துவிட்டார்.
எனவே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு நெருக்கமான ஒரு நேரத்தில் இம்டியாஸ் எடுத்திருக்கின்ற இராஜினாமாத் தீர்மனம் ஒரு கோமாளித்தனத்தினதும் ஏமாளித்தனத்தினதும் வெளிப்பாடு என்றுதான் சொல்ல வேண்டும்.
வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் இம்டியாஸ் கட்சிக்குள் இருந்தாலும் வெளியே போனாலும் முடிவுகள் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமானால் இம்டியாஸ் நாமத்தை ஒரு உச்சரிப்புக்காக எடுத்துக் கொள்ளக் கூடும். ஆனால் ஆளும் தரப்பு இதனை எல்லாம் கண்டு கொள்ள மாட்டாது.
சஜித் அறிவியல் ரீதியிலும் ஆளுமையிலும் மிகவும் பலயீனமான ஒரு தலைவர் என்பதால்தான் இது. எனவே கட்சிக்கு தலைமைத்துவத்துக்கான இடைவெளி இருக்கின்றது.