PJP எம்.பியுடன் மேடையில் அமர்ந்திருந்த பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி!

”கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கடுமையான குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்றவர்கள், ஆளுங்கட்சியின் உயர்மட்ட தலைவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்வதைப் பார்ப்பது அச்சத்தை ஏற்படுத்துகிறது.”

2002 குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பில்கிஸ் பானு, தனது விரக்தியையும் பயத்தையும் வெளிப்படுத்தி தெரிவித்த வார்த்தைகள் இவை.

கடந்த வாரம், குஜராத்தின் பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் பாபோரின் முகநூல் பதிவில் உள்ள படங்களைப் பார்த்து பில்கிஸ் அதிர்ச்சியடைந்தார்.

பில்கிஸ் பானு

தாஹோத் மாவட்டத்தின் லிம்கேடா தாலுகாவின் சிங்வாட் கிராமத்தில் 2023 மார்ச் 25 ஆம் தேதி மாநில நீர்வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியைப் பற்றி ஜஸ்வந்த்சிங் பாபோர் இதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த இடுகையில் உள்ள படங்களில், பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளில் ஒருவரான ஷைலேஷ் பட், பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் பாபோர் மற்றும் லிம்கேடா எம்எல்ஏ ஷைலேஷ் பாபோர் ஆகியோருடன் மேடையில் அமர்ந்திருந்தார்.

நிகழ்ச்சி மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஷைலேஷ் பட்

நிகழ்ச்சி மேடையின் முன் வரிசையில் அமர்ந்திருந்த ஷைலேஷ் பட்

எம்பி மற்றும் எம்எல்ஏ இருவரும் பாஜகவின் தலைவர்கள் மற்றும் உறவுமுறையில் சகோதரர்கள்.

பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரைக் கொன்ற குற்றத்திற்காக ஷைலேஷ் பட் உட்பட 11 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டனர். 14 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர்களுக்கு குஜராத் அரசு கடந்த ஆண்டு பொதுமன்னிப்பு வழங்கியது. அதன் பிறகு அவர்கள் அனைவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த குற்றவாளிகள் அனைவரும் இப்போது சுதந்திரமாக உள்ளனர். ஆனால் சமீபத்திய படங்களைப் பார்த்து, பில்கிஸ் பானு மற்றும் அவரது முழு குடும்பமும் அச்சத்தில் வாழ்கிறது.

விடுதலையான பிறகு இவர்கள் பாஜகவின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேரணிகளிலும் அடிக்கடி காணப்படுவதாக உள்ளூர் மக்கள் பலர் தெரிவித்தனர்.

இது முதல் முறை அல்ல

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் படேலிடம் பிபிசி பேசியது. தற்போது தாஹோதில் ஒரு கூட்டுக்குடும்பத்தில் அவர்கள் வசித்து வருகின்றனர். சிறு சிறு வேலைகள் செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

“நாங்கள் அனைவரும் மன அதிர்ச்சியில் இருக்கிறோம். அரசு இந்தக் குற்றவாளிகளுடன் இருக்கிறது என்பதை அனைவரும் அறிய இந்தப் படங்களே ஆதாரம்,”என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

பில்கிஸ் பானு தனது குடும்ப உறுப்பினர்களுடன் ரமலான் மாதத்தின் நோன்பை கடைப்பிடித்துவருகிறார். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு அவரது உடல்நிலை மோசமடைந்தது.

“இந்தப் படங்களைப் பார்த்த பிறகு பில்கிஸின் உடல்நிலை சரியில்லை. இரவும் பகலும் எப்படி பயத்தில் கழிக்கிறோம் என்பது எங்களுக்கு மட்டுமே தெரியும். எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று நாங்கள் அனைவரும் பயப்படுகிறோம்,” என்று அவரது கணவர் யாகூப் படேல் கூறினார்.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்றவர்களை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாநில அரசு எந்தக் கொள்கையின் கீழ் விடுதலை செய்தது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“எங்கள் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீதித்துறை மீது எங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது,” என்று யாகூப் குறிப்பிட்டார்.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டனை பெற்ற 11 பேர் கடந்த ஆண்டு கோத்ரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்

இந்த குற்றவாளிகள் பாஜகவில் இணைந்துவிட்டார்களா?

பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேரும் பல ஆண்டுகளாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ல் உள்ளனர் என்று ரந்திக்பூரின் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் கட்சியுடனான அவர்களின் தொடர்பை எந்த அதிகாரியும் சமீபத்தில் உறுதிப்படுத்தவில்லை.

“பட் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேரவில்லை. வேறு எந்த குற்றவாளிகளும் கட்சியில் சேர ஆர்வம் காட்டவில்லை” என்று தஹோத் பாஜக தலைவர் சங்கர் அம்லியார் தெரிவித்தார்.

”இந்த நிகழ்ச்சியில் ஷைலேஷ் பட்டை கட்சி அழைக்கவில்லை. ஆனால் ஒரு சாமானியராக அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம். அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை,” என்றார் அவர்.

”இது மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பொது விழா. இதில் பட் உட்பட பலர் கலந்து கொண்டனர்,” என்று தஹோத் மாவட்டத்தின் மற்றொரு உயர்மட்ட பாஜக தலைவரான நரேந்திர சோனி கூறினார்.

மேடையின் முன்வரிசையில் அவருக்கு எப்படி இருக்கை கிடைத்தது என்று கேட்டதற்கு, “நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளாததால் எனக்கு அதுபற்றித் தெரியாது” என்றார்.

பாஜக எம்பி ஜஸ்வந்த்சிங் பாபோர் மற்றும் லிம்கேடா எம்எல்ஏ ஷைலேஷ் பாபோர் ஆகியோரிடம் பேச பிபிசி பலமுறை முயற்சித்தது. ஆனால் பலமுறை முயற்சித்தும் இருவரும் பேசவில்லை.

எம்எல்ஏ என்ற வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் யார் என்பது எனக்கு தெரியாது என்று இந்த சம்பவம் குறித்து ஷைலேஷ் பாபர் சில நாட்களுக்கு முன்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

இந்தக் குற்றவாளிகள் பாஜக தலைவர்களுடன் காணப்படுவது இது முதல் முறையல்ல.

ஷைலேஷ் பட் பாஜக தலைவர்களுடன் இருப்பது இது முதல் முறையல்ல என்று பில்கிஸ் பானுவின் கணவர் யாகூப் படேல் கூறினார்.

ஜஸ்வந்த் சிங் பாபோரின் பேஸ்புக் கணக்கின் ஸ்கிரீன் ஷாட்டை அளித்த யாகூப், 2020 ஆம் ஆண்டும் ஒரு நிகழ்ச்சியில் பாபோரும் ஷைலேஷ் பட்டும் காணப்பட்டதாக கூறினார். அப்போது ஷைலேஷ் பட் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்திருந்தார்.

இன்றும் பாஜகவின் பல நிகழ்ச்சிகளில் இந்த 11 பேரும் காணப்படும் பல ஆதாரங்கள் உள்ளன என்று யாகூப் கூறினார்.

2002 ஆம் ஆண்டு தனது இரண்டரை வயது மகள் உட்பட தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்டதை அவர் நினைவு கூர்ந்தார்.

“குற்றம் சாட்டப்பட்ட இந்த 11 பேரும் ஆரம்பத்திலிருந்தே பாஜகவில் அங்கம் வகித்தவர்கள்” என்றார் யாகூப் படேல்.

இந்த பகுதியில் பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக ஷைலேஷ் பட் இருந்ததாக அவர் கூறினார். அவர் நீண்ட காலமாக ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்துடன் தொடர்பு கொண்டுள்ளார்.

கணவருடன் பில்கிஸ் பானு

கணவருடன் பில்கிஸ் பான

ஷைலேஷ் பட்டை அழைத்தது யார்?

ஷைலேஷ் பட்டை அழைத்தது யார் என்பதை கண்டறிய பிபிசி, பாஜக தலைவர்கள் மற்றும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாநில நீர்வளத் துறை அதிகாரிகளிடமும் பேசியது.

ஷைலேஷ் பட் எப்படி அரசு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தார் மற்றும் அவரை அழைத்தது யார் என்பதை அறிய பிபிசி விரும்பியது. ஆனால் இதற்கு கட்சியோ, அரசோ பொறுப்பேற்கவில்லை.

பாஜக மற்றும் அரசு ஆகிய இரண்டுமே, ஷைலேஷ் பட்டிற்கு எந்த அழைப்பையும் வழங்கவில்லை என்று கூறின.

“நிகழ்ச்சியை நாங்கள் ஏற்பாடு செய்தோம் என்பது உண்மைதான், ஆனால் நிகழ்ச்சியில் விருந்தினர்களாகக் கலந்துகொண்டவர்கள் பற்றிய தகவல் எங்களிடம் இல்லை. அதில் விருந்தினர்கள் உட்கார என்ன ஏற்பாடு இருந்தது என்பது குறித்தும் எங்களுக்குத் தகவல் இல்லை” என்று தஹோதின் நீர்வளத் துறையின் துணைப் பொறியாளர் பி.எம். பர்மார் பிபிசியிடம் கூறினார்.

இந்த நிகழ்ச்சி தஹோத் மாவட்டத்தில் உள்ள சிங்வாட் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. சிங்வாட் கிராமத்தின் தலைவர் லக்கி வஹோரியாவிடம் பேசவும் பிபிசி முயன்றது. அவருக்கு பதிலாக அவரது மகன் ஜீவன்லால் வஹோரியா பிபிசியிடம் பேசினார். மேலும் அவர் எந்த அழைப்பையும் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகள்

கடந்த வருடம் விடுவிக்கப்பட்ட 11 குற்றவாளிகள்

குடிநீர் குழாய் பதிக்கும் பணியை தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கு மாநில நீர்வளத்துறை ஏற்பாடு செய்தது.

இந்த செய்தி கட்சிக்கு மிக முக்கியமானது என்று அரசியல் ஆய்வாளர் கன்ஷியாம் ஷா கூறினார். “இதுபோன்ற சிறிய ஆனால் முக்கிய நிகழ்வுகள் மூலம் பாஜக, தான் இந்துத்துவ சித்தாந்தத்துடன் நிற்பதான செய்தியை உள்ளூர் மற்றும் தேசிய அளவில் தனது வாக்காளர்களுக்கு தெரிவிக்க முயற்சிக்கிறது.” என்றார்.

பில்கிஸ் பானு வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். இதுவும் மாநிலத்தின் சாதி சமன்பாட்டுடன் இணைத்து பார்க்கப்படுகிறது.

“இந்த நபர்களை நீதிமன்றம் ஏற்கனவே தண்டித்துவிட்டது. 14 ஆண்டுகள் சிறையில் இருந்த பிறகு அவர்கள் வெளியே வந்துள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ இவர்களுக்கும் ஜனநாயக உரிமை உண்டு,” என்று அரசியல் ஆய்வாளர் விஷ்ணு பாண்டியா பிபிசியிடம் கூறினார்.

Previous Story

ஏப்ரல் 4ம் திகதி அதிரடிகள்!  

Next Story

அரசியல் இருப்புக்கான சதிகளும் சவால்களும்