IMFகடன் கிடைக்க சீனா இணக்கம்! இது என்ன தாக்கத்தை ஏற்படும்?

சீனாவிடமிருந்து கிடைக்கப் பெற்ற கடன் மறுசீரமைப்பிற்கான நிதி உறுதிப்பாட்டு கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தின் தற்போதைய நிலைமை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆகியன குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்று (மார்ச்.07) விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்படி, சீனாவின் எக்ஸிம் வங்கியிடமிருந்து கடன் மறுசீரமைப்புக்கான நிதி உறுதி கடிதம் தனக்கு நேற்றிரவு கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு கிடைக்கப் பெற்ற கடிதத்தில் தானும், இலங்கை மத்திய வங்கி ஆளுநரும் கையெழுத்திட்டு, அதனை உடனடியாக சர்வதேச நாணய நிதியத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் கூறுகின்றார்.

இதன்படி, நாட்டிற்கான தனது கடமையை நிறைவேற்றியுள்ளதாக கூறிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியம் தனது கடமையை இந்த மாதம் இறுதிக்குள் நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைக்கப் பெற்றவுடன், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் முதலாம் கட்ட நிதி கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ரணில்

பொருளாதாரம் சாதகமான நிலையை அடைந்துள்ளது – ரணில் !

இலங்கையின் பொருளாதாரத்தை மிகவும் சிரமமான நிலைமைக்கு மத்தியில் சாதகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

”பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த பல கடினமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தோம். பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொண்டு வருகிறோம். இதனால் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக இன்னல்கள் ஏற்படும். இத்தகைய கடினமான மற்றும் சிக்கலான சூழ்நிலைக்கு மத்தியில், கடந்த 7-8 மாதங்களாக செலவழித்து, அதை ஒரு சாதகமான நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். இதிலிருந்து முன்னேற பொருளாதார சீர்திருத்தங்கள் தேவை. இதை நாட்டில் உள்ள அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு செல்வாக்குச் செலுத்தும் குழுக்கள், அரசியல் கட்சிகள், தொண்டர் குழுக்கள், தொழிற்சங்கங்கள் போன்றவை இது குறித்து ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.

அதிகரிக்கப்பட்டுள்ள வரிச்சுமையை குறுகிய காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லையாயின், மிக ஆபத்தான நிலையை எதிர்நோக்க வேண்டும் எனவும் ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

”வரிச்சுமை அதிகமாக உள்ளதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த நிலைமை ஒரு குறுகிய காலத்திற்கு பராமரிக்கப்பட வேண்டும். இல்லையெனில், இந்தத் திட்டம் சீர்குலைந்தால், 2022 பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இருந்த நிலையை விட மிகவும் ஆபத்தான இடத்திற்கு நாடு தள்ளப்படலாம். அப்போது சம்பளம், ஓய்வூதியம், வேலை என்பன பறிபோகும் தொழிற்சாலைகள் மூடப்படும், பாடசாலைகள் தினமும் மூடப்படும் என்று பலரும் நினைத்தார்கள். அவற்றை நாம் ஓரளவு கட்டுப்படுத்தியுள்ளோம். ஆனால், சமூகத்தில் செல்வாக்கு மிக்க குழுக்கள் நாம் முன்வைத்த வேலைத்திட்டத்தை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் நாசமாக்கினால், அதிலிருந்து உருவாகும் சமூக மாற்றம், மிகவும் ஆபத்தானதாக இருக்கும். இது நம் சமூகத்தில் முன்னெப்போதும் இல்லாத சோகமான காலத்திற்கு வழிவகுக்கும்.” என ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார்.

கருத்துக்களை வெளியிடும் உரிமையை தாம் ஏற்றுக்கொள்வதாக கூறிய ரணில் விக்ரமசிங்க, அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைக்கும் வகையில் செயற்பட்டால், அதற்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் எச்சரித்துள்ளார்.

”கருத்துக்களை வெளியிடும் உரிமையை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதனை அமைதியாக செய்யுங்கள். கூட்டங்கள் நடத்துவதும், போராட்டம் நடத்துவதும் ஒரு பிரச்சினையல்ல. ஆனால், இந்தப் போராட்டத்தின் மூலம் இந்த வேலைத்திட்டத்தை சீர்குலைத்தால், அதற்கு எதிராக இந்த அரசாங்கம் கடுமையாகச் செயல்படும் என்று கூற விரும்புகிறேன்.”

ரணில்

ரூபா வலுவடைகின்றமை தொடர்பிலும் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்தார்.

”இப்போது டொலர் விலை குறைந்து வருகிறது. ஜூலை 9ஆம் திகதி இந்த நாடு வீழ்ந்திருந்தால் இன்று இந்த நிலை இருந்திருக்காது. அப்போது யாரின் உதவியும் இருக்கவில்லை. இதற்கு நடவடிக்கை எடுத்த முப்படை மற்றும் பொலிஸாருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.அவர்கள் எடுத்த அந்த நடவடிக்கையால்தான் இன்று நமக்கு எரிபொருளும் மின்சாரமும் கிடைத்துள்ளது. எனவே, அந்த சக்திகளுக்கு இந்த நிலைமையை தகர்க்க அனுமதிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்கான பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சியை நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை நிறைவேற்றிய பின்னர் ஜனாதிபதி தேர்தலா பொதுத் தேர்தலா எது தேவை என்பதை தீர்மானிக்க முடியும். அதுவரை நீங்கள் காத்திருக்கத் தயாரா இல்லையா என்று கேட்கிறேன். உங்களுக்கு இதை ஏற்கவோ நிராகரிக்கவோ முடியும். குறிப்பாக ஜூன் நடுப்பகுதிக்குள் நாட்டின் வருமான நிலைமையை குறித்து கருத்தில் கொள்ள வேண்டும். அதிலிருந்து முடிவுகளை எடுக்கலாம். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி கிடைத்தவுடன் ஒப்பந்தத்தை சபையில் சமர்ப்பித்து முன்மொழிவொன்றை கொண்டு வருவேன். அதை சபை ஏற்பதா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இன்றேல் எங்களுக்கு மாற்று வழியைக் தாருங்கள்.” என அவர் குறிப்பிட்டார்.

சீனாவின் நிதி உறுதி கடிதம், இலங்கைக்கு எவ்வாறான தாக்கத்தை செலுத்தும்?

சீனாவின் நிதி உறுதி கடிதம் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ள நிலையில், அது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என்பது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில், அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சனிடம், பிபிசி தமிழ் வினவியது.

சீனா மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையிலான உடன்படிக்கைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பிலான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை என அவர் கூறுகின்றார்.

”அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு, சீனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு ஆகியன எந்தவொரு ஊடகத்திலும் வரவில்லை. அது தொடர்பில் ஊடகங்களுக்கு சொல்லப்படவும் இல்லை. முழுமையாக சொல்லப்படாது. நான் அறிவிந்த விதத்தில் இரண்டு வருடங்களுக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் சீனாவின் மொத்த கடனையும் இலங்கையினால் செலுத்த முடியாது. எல்லா கடித பரிமாற்றங்களும் நடக்கின்றன. ஆனால், எது உண்மை?. சீனா என்ன சொல்கின்றது.

இலங்கை என்ன கேட்டது என்ற உண்மை தெரியாது. சீனா எத்தனை காலத்திற்கு இந்த கடனை நீடித்து கேட்கின்றது? இலங்கை எத்தனை காலத்திற்கு கேட்டது என்ற ஒன்றும் தெரியாது. இந்த விடயங்கள் அனைத்தும் சர்வதேச நாணய நிதியத்திற்கு மாத்திரமே தெரியும். எல்லா விடயத்தையும் ஊடகங்களுக்கு கொடுக்கவில்லை. இலங்கை அரசாங்கமும் வெளியிடவில்லை. இதனை எதிர்கட்சிகள் அரசியல் ரீதியில் பார்ப்பார்கள் என்பதற்கான வெளியிடவில்லை. அனைத்து நிபந்தனைகளையும் எதிர்கட்சிகளுடன் இணைந்து இணத்திற்கு வருமாறே சர்வதேச நாணய நிதியம் கூறுகின்றது.இலங்கை பொருளாதார நெருக்கடி

கடந்த ஆகஸ்டு மாதம் எரிபொருள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்

ரணில் விக்ரமசிங்கவின் உரையை பார்த்தால், சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை நாடாளுமன்றத்தில் அவர் சமர்ப்பிக்க போகின்றார். இந்த உடன்படிக்கையை நாட்டின் அபிவிருத்தியாக பார்க்காது, கட்டாயம் நாட்டின் வீழ்ச்சியாக கருதி, அதற்கு எதிர்கட்சிகள் எதிர்ப்பை வெளியிடும். இந்த உடன்படிக்கையிலுள்ள ஒவ்வொன்றையும் பிடித்துக்கொண்டு, அதனை அரசியலாக்க எதிர்கட்சிகள் முயற்சிக்கும். இது பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது. பொருளாதார நெருக்கடியை அரசியல் ரீதியான நோக்காமல், இலங்கை தீவிற்கான வளர்ச்சியாக பார்த்தால் தான் தீர்வு வரும்.

பொருளாதாரத்திற்கான ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும். தமிழர்கள், முஸ்லிம்கள் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும். நிரந்தரமான அரசியல் தீர்வை கொண்டு வர வேண்டும். நிரந்தர அரசியல் தீர்வு என்றால், என்ன என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கான பதில் இருக்காது. முதலில் 13வது திருத்தத்தையாவது நிறைவேற்ற வேண்டும். அதனூடாக தீர்வை பெற்றக்கொள்ள முடியும். தேசத்தை கட்டியெழுப்பும் நோக்கத்தோடு எதிர்கட்சிகள் இணைய வேண்டும். எதிர்கட்சிகளின் இணக்கத்தையும் சர்வதேச நாணய நிதியம் கோருகின்றது.” என அரசியல் ஆய்வாளரும், மூத்த பத்திரிகையாளருமான அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.

Previous Story

இலங்கை:  திரும்பி சென்ற 17 கப்பல்கள்

Next Story

தலைநகரை மாற்றுவதில் இந்தோனேசியா தீவிரம் !