‘Gotta Go Home” என்ற பிரசாரத்தை ஆரம்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, சனிக்கிழமை (ஏப். 2) இரவு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட திசர அனுருத்த, மோதரை காவல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டார்.
திசர அனுருத்த பண்டார குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கம்பளை எத்கல பகுதியில் வைத்து கொழும்பு வடக்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் அவர் கைது செய்யப்பட்டார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், ஏராளமான சட்டத்தரணிகள், சமூக, அரசியல் ஆர்வலர்கள் மோதரை காவல்துறை நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், சட்டத்தரணிகள் பலர் அவர் சார்பில் சுயமாகவே முன்வந்தனர்.





