GOTA GO HOME காட்சிகள் கனவா நிஜமா

-நஜீப் பின் கபூர்-

நமது நாட்டு அரசியலில் சுதந்திரத்துக்குப் பின்னரும் அதற்கு முன்னர் மன்னர்கள் நமது மூதாதையர்களை ஆட்சி செய்த காலத்திலும் கூட நாட்டில் இந்தளவுக்கு ஒரு தலைவர் மக்களால் தூசிக்கப்பட்டதை நாம் வரலாற்றில் எங்கும் பார்க்கவுமில்லை அப்படிப்பட்ட குறிப்புக்களைப் படிக்கவுமில்லை. பிரான்சியப் புரட்சி, ரஷ்யப் புரட்சி என்றெல்லாம் படித்திருக்கின்றோம். அங்கு கூட ஆட்சியாளர்கள் இந்தளவுக்கு கேவலமான வார்த்தைகளால் மக்கள் விமர்சித்ததை இதுவரை கேள்விப்படவுமில்லை. ஆனால் அரசியல் ரீதியான போராட்டங்கள் நடந்து மக்களால் ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப் பட்டிருக்கின்றார்கள். அப்படி அங்கு அவர்கள் மீது வெறுப்பு வளர்வதற்கு பரம்பரை பரம்பரையாக குடும்ப ஆட்சி அந்த நாடுகளில் தெடர்ந்ததால், ஆட்சியாளர்கள் மீது மக்கள் வெறுப்படைய காரணங்களாக இருந்து வந்திருக்கின்றன.

அண்மையில் நமக்குத் தெரிந்த ஈராக், சதம் ஹூசைன் (26 வருடங்கள்) லிபிய, முவம்மர் கடாபி (42 வருடங்கள்) போன்றவர்கள் கூட பல தசாப்தங்களாக தொடர்ச்சியாக நாட்டை ஆட்சி செய்ததால் மக்களுக்கு அவர்கள் மீது ஒருவகை வெறுப்பு வளந்திருக்கலாம். ஆனால் அங்கெல்லம் பெரும்பாலும் தனிக் கட்சி ஆட்சி முறை. அதில் தேர்தல்களை வைத்து 95 சதவீதம் அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தான் அவர்கள் அதில் வெற்றி பெற்றிருந்தார்கள் என்று அந்த நாட்டு அரசியல் பதிவுகளில் பார்க்க முடிகின்றது.!

அவர்கள் தமது இறுதிக் காலத்தில் சந்துக்குள்ளும் பொந்துக்குள்ளும் ஒளித்திருந்த போது வெளியே இழுத்து  எடுக்கப்பட்டார்கள். சதாம் மரண தண்டை பெற்றும், கடாபி மக்களால் அடித்தும் கொல்லப்பட்டார். அது பற்றி விமர்சனங்கள் இருந்தாலும் அவர்கள் முடிவு அப்படித்தான் அமைந்தது. அவர்கள் இருவரும் இராணுவத்தை வைத்துத்தான் ஆட்சி செய்தார்கள். தெருக்களில் அவர்களுக்கு சிலைகள் கூட  ஒரு காலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் நமது நாட்டில் சுதந்திரத்தின் பின்னர் இன்று வரை ஆட்சியாளர்கள் மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஜனநாயக முறையில் தெரிவாகி வந்திருக்கின்றார்கள். நாட்டில் நடந்த போர் காலப் பின்னணியல் ராஜபக்ஸாக்கள் தமக்கென பேரின மக்கள் மத்தில் மிகப் பெரிய செல்வாக்கை பெற்று ஹீரோக்களாக அரசியல் பிரவேசம் எடுத்திருந்தார்கள். இதன் பின்னர் ஒரு அரை நூற்றாண்டு காலம் ராஜபக்ஸா குடும்பம்தான் இந்த நாட்டை ஆளப் பேகின்றது. என சர்வதேசமும் நாடும் நம்பியது. ஆனால் அதிசயம்! இந்த நம்பிக்கை ஒரு தசாப்தங்கள் கூட நிலைத்திருக்கவில்லை. 2009 போர் வெற்றி. 2015ல் நடந்த ஜனாதிபத் தேர்தலில் பதவியில் இருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அதிர்ச்சித் தோல்வியைத் தழுவி இருந்தார். அதற்குப் பின்னர் தனிக் கட்சி துவங்கிய ராஜபக்ஸாக்கள் குறுகிய காலத்துக்குள் நாட்டில் சரிந்திருந்த தமது செல்வாக்கை சரி செய்து கொண்டு பதவியில் இருந்த மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு பெரும் சவாலாக எழுந்து நின்றார்கள்.

தான் தோற்றுப் போய் இருந்தால் இந்த நேரத்தில் என்னை ஆறுடிக்குள் மண்ணுக்குள் ராஜக்கள் புதைத்திருப்பார்கள் என்று பகிரங்கமாக மேடைகளில் பேசி வந்த ஜனாதிபதி மைத்திரியே கடந்த தேர்தலில் ராஜபக்ஸாக்களிடம் மண்டியிட வேண்டி வந்தது. அப்படி வந்தவரை அவர்கள் எப்படியெல்லாம் பழிவாங்கினார்கள் என்று நாம் சொல்லத் தேவையில்லை அது நாடே அறியும். ஈஸ்டர் தாக்குதல் தொடர்ப்பில் தன்மீதுள்ள குற்றச்சாட்டுக்களுக்குப் பயந்த மைத்திரி கடைசி நிமிடம் வரை அவமானப்பட்டுக் கொண்டு ராஜாக்கள் கூட்டணியிலே இருந்து வந்தார்.

இன்றும் அவர் மதில் மேல் பூனையாத்தான் இருக்கின்றார். இந்த அரசு அதிகாரத்தில் இருக்கும் வரை அவர் ஆளும் தரப்பிலிருந்து வெளியே வர மாட்டார் என்பதனை நாம் தொடர்ச்சியாக சொல்லி வந்திருக்கின்றோம். இன்று மக்கள் ராஜபக்ஸாக்களுக்கு எதிராக வீதியில் இறங்கி எழுர்ச்சி கொண்டு களத்தில் இருப்பதால் அந்த துனிவில்-நம்பிக்கையில் மைத்திரி ஆளும் தரப்புக்குக் கொடுத்து வந்த ஆதரவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் விலக்கிக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே.

இதுவரையும் நாம் சொன்னவை மிக அண்மைக்கால நடப்புக்கள் அதனை அனைவரும் அறிவார்கள். நாம் இங்கு பெரிதாக எந்தக் கண்டு பிடிப்புக்களையும் புதிதாகப் பதியவுமில்லை. என்றாலும் நாம் இந்த அரசியல் பகுதியில் சொல்லி வருகின்ற கருத்துக்கள் எதிர்வு கூரல்கள் இது வரை அச்சொட்டாக நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நாம் சமகால அரசியலை விஞ்ஞான ரீதியில் ஆய்வு செய்து செய்திகளைச் சொல்லி வருவது காரணமாக இருக்கலாம் என்று நாம் நினைக்கின்றோம்.

ஜனாதிபதித் தேர்தல் களத்துக்கு வந்த கோட்டாபே ராஜபக்ஸ தனது அரசியல் நகர்வுகளை பேரினத்தாரை உசுப்பேற்றி பெரும் இனவாத்துடனே முன்னெடுத்து வந்தார். அப்படி இல்லாமல் அனைத்து மக்களையும் அவர் அனைத்துக் கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்திருந்தாலும் இந்தத் தேர்தலில் அவர் சுலபமாக வெற்றி பெற்றிருப்பார் என்பது நமது கணிப்பு. குறிப்பாக சிறுபான்மை சமூகங்களை அச்சுறுத்தி அவர்களை அடக்கி வைத்துத்தான் பேரினத்தாரின் மிகப் பெரிய செல்வாக்குடன் அவர்கள் அரியாசனத்தில் ஏறினார்கள். சிறுபான்மையினருக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. அதிகாரப் பகிர்வும் கிடையாது. மாகாண சபைகளும் தேவையில்லை என்பதனை அவர்கள் பகிரங்கமாகவே தமது பிச்சார மேடைகளில் பேசி வந்தார்கள். அப்போது நாட்டில் இருந்த பேரின எழுர்ச்சி காரணமாக இந்தியா கூட இது பற்றி எந்த ஒரு வார்த்தைகளையும் பேசவில்லை.

இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிராக வரலாற்றில் என்றும் இல்லாத அச்சுறுத்களையும் அபாண்டங்களையும்-போலிப் பரப்புரைகளையும் முன்வைத்துத்தான் சிங்கள மக்களின் வாக்குகளை இவர்கள் கொள்ளையடித்தார்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினர் தங்களது உயிர்களைக் கையில் பிடித்துக் கொண்டு இவர் ஆட்சியில் வாழ்ந்;து வருகின்றார்கள். இது கையில் கல்லை வைத்திருக்கின்ற ஒருவனைக் கண்டால் தெருவில் போகும் நாய் எப்படி தனது வலை சுருட்டிக் கொண்டு ஒதுங்கிப் போகுமோ அது போன்றுதான் முஸ்லிம்கள் இவர்களது ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

தேர்தல் காலங்களில் வன்முறைகள். அதற்குப் பின்னர் அச்சுறுத்தல்கள். இறுதியில் சட்டரீதியான அழுத்தங்கள் பிரயோகித்தும் வந்தனர். எனவேதான் முஸ்லிம் சட்டங்கள் தொடர்பான தீர்மானம் எடுக்கும் குழுவுக்கு ஞானசாரர் போன்ற ஒரு வன்முறையாளரை ஜனாதிபதி தலைவராக நியமனம் செய்தார். எப்படி சிங்கள மக்களின் ஹீரோக்களாக ராஜபக்ஸக்கள் இருந்தார்களோ அதே போன்று மிகக் குறுகிய காலத்துக்குள் இன்று அவர்கள் மிகவும் கேவமாக இந்த நாட்டில் வாழ்கின்ற இரண்டு கோடி இருபத்தி மூன்று இலட்சம் மக்களாலும் திட்டித் தீர்க்கப்படுகின்றார்கள்- சபிக்கப்படுகின்றார்கள் அப்பட்டமான தூசன வார்த்தைகளினால் மக்கள் அவர்களை ஏசிக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு கேவலமான நிலை இவர்களுக்கு வரும் என்று நாமும் நம்பவில்லை. நடப்பவை கனவா என்று கூட நாம் யோசித்த சந்தர்ப்பங்களும் இருக்கின்றன. தான் பதவிக்கு வந்த இரண்டு வருடங்களுக்குள்ளே இந்த நிலை என்பது இது கடவுள் கொடுத்த தண்டனையாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கின்றது. ஆனால் நடப்பவைகள் நிஜம்தான். மக்கள் ராஜபக்ஸாக்களை மட்டுமல்ல அவரது கையாட்களைக் கூட விட்டு வைக்காமல் விரட்டியடிக்கின்ற காட்சிகள் நாட்டில். மறுபுறத்தில் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடிக் கொண்டிருக்கின்றார்கள். தமது கோட்டையான ஹம்பாந்தோட்டையில் கூட ராஜபக்ஸாக்களுக்கு இருக்க முடியாத நிலை. மக்கள் அவர்களது வீடுகளை முற்றுகையிடுகின்றார்கள். கல் லெறிகின்றார்கள் என்ற தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

மக்கள் எதிர்ப்புக்களில் இருந்து தப்பிக்க இப்போது ஒட்டு மொத்த அமைச்சரவையும் பதவி விலகி விட்டது என்ற செய்தியைச் சொல்லி ஆட்சியாளர்கள் மக்களை அமைதிப்டுத்த முனைகின்றார்கள். இன்னும் பல கபட நாடகங்களைத் தினந்தோரும் அவர்கள் அரங்கேற்றி வருகின்றார்கள். ஆனால் மக்கள் அவர்களை விட்ட பாடிலில்லை. பதவி விலகினால் போதாது எங்களிடம் கொள்ளையடித்த பணத்தையும் தந்து விட்டுப் போ என்று கோஷங்களை எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதே ராஜபக்ஸாக்களை அதிகாரத்தில் கொண்டு வந்த பிரபல்யங்கள் தாம் செய்த தவறுகளுக்கு மக்களிடம் இன்று பகிரங்க மன்னிப்புக் கேட்டுக் வருகின்றார்கள். மேலும் இவர்களைப் பிடித்து சிறையில தள்ளுங்கள் என்று அவர்களுக்கு கடந்த தேர்தலில் கடைக்குப் போன கலைஞர் கூட்டம் பகிரங்கமாக ஊடகங்கள் முன் பேசி வருகின்றார்கள்.

அடுத்த வேடிக்கை என்னவென்றால் இலங்கை அரசியல் வரலாற்றில் இது வரை நடக்காத பல  காட்சிகளைத்தான் சமகாலத் தலைமுறையினர் இன்று பார்த்து வருகின்றனர். ஒரு நாள் அமைச்சர்கள். திடீர் திடீர் அமைச்சரவை மாற்றங்கள். அரசியல்வாதிகள் ஒளித்து ஓடுகின்ற காட்சிகள். கூட இருந்தவர்களே முதுகில் குத்துகின்ற சம்பவங்கள். நிதி அமைச்சைப் பொறுப்பேற்க எவரும் முன் வராமை. அரசை ஜனாதிபதி ஏலம் போட்டு விற்க முன்வந்தாலும் கூட அதனை ஒருவரும் கையேற்க-வாங்க முன்வராமல் இருக்கின்றார்கள். இப்போது இருபதுக்கு கை தூக்கியவர்களே மிகக் குறுகிய காலத்தில் அதனைத் தூக்கி எறிய வேண்டும் என்று பேசிவருகின்றார்கள். தரைவழியே போக முடியாத அரசியல் வாதிகள் ஆகாய மார்க்கமாக ஓடுடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கெனவே தங்களது குடும்பத்தினரை பல அரசியல்வாதிகள் வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டிருக்கின்றார்கள்.

மக்கள் அமைச்சர்களை பதவி விலக்கி ஏமாற்ற வேண்டாம் ஒட்டு மொத்த ராஜபக்ஸாக்களும் வெளியேற வேண்டும் என்று விடாப்பிடியாக நிற்க்கின்றார்கள். எக்காரணம் கொண்டும் இராசாயனப் பசளையை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டேன் என்ற ஜனாதிபதி, தற்போது அதற்கு அனுமதி என்று அந்தர் பல்டி அடித்திருக்கின்றார். உலக மா நாடுகள் நடக்கின்ற இடங்களில் இவர் தனது உரக் கொள்கை பற்றி உலகத் தலைவர்கள் முன்னிலையில் என்வெல்லாம் பேசி இருந்தார் என்பதனை ஒரு முறை நினைத்துப் பாருங்கள்.

ஆனால் அவர் என்னதான் பல்டி அடித்தாலும் இதன் பின்னர் ராஜபக்ஸாக்கள் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க முடியாது என்பது உறுதியாக சொல்ல முடியும். இந்தியா கை கொடுத்ததால் அவர்கள் வேண்டுமானால் இன்னும் ஒரிரு மதாங்கள் பதவியைத் தொடர முடியும். ஆனால் யார் பதவிக்கு வந்தாலும் நாட்டில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி பஞ்சம் வர இருக்கின்றது. இந்த நெருக்கடி நிலைக்கு கொடூராமாக ராஜபக்ஸாக்களின் அடவடித்தனங்களும் சுரண்டல்களும் தவறான அனுகு முறைகளும் குடும்ப அரசியலுமே பிரதான காரணம்.

சட்ட ரீதியாகவும்  அதற்கு வெளியிலும் தீர்வு

நாம் முன்பு சொன்னது போல இந்த வண்டி இதற்கு மேலும் இழுக்காது. அரசாங்கத்தை பொறுப்பேற்க யாராவது வாருங்கள் என்று ஜனாதிபதி சொன்னாலும் இதுவரை எவரும் அதற்க முன்வரவில்லை. மக்கள் கோட்டா வீட்டுக்குப் போ. அத்துடன் எங்களிடம் கொள்ளை அடித்த பணத்தை தந்த விட்டுத்தான் போக வேண்டும் என்றும் உறுதியாக நிற்க்கின்றார்கள். ஆனால் ஜனாதிபதி அரசை யாருக்காவது கை மாற்றி போராட்டத்தை வேறு திசைக்கு திருப்ப முனைகின்றார்.  மேலும் அவர் பதவி விலக மாட்டார் என்று அவரது சகா ஜென்ஸ்டன் கூறுகின்றார்கள். இவர்தான் கடந்த காலங்களில் எங்களுக்குத் தேவையான அளவு காசு இருக்கின்றது என்று சொன்னவரும் கூட, எனவே அந்த மனிதனுடடைய கதையை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.

இந்தப் பின்னணியில் அரசியல் யாப்புப்படி ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் ஜனாதிபதி பொறுப்பை ஏற்கலாம். ஆர். பிரேமதாச கொல்லப்பட்ட போது ரீ.பி. விஜேதுங்க ஜனாதிபதியானர். ரணில் பிரதமரானர். ஆனால் இன்று ராஜபக்ஸாக்கள் துரோகிகள் கள்வர்கள் என்பதுதான் மக்களது கோஷமாக இருக்கின்றது எனவே அப்படி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றாலும் இந்தப் போராட்டம் முடிவடையுமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.

நாம் மேற்சொல்லி இருக்கின்ற சட்டத்துக்கு வெளியே என்ன செய்யலாம் என்று பார்த்தால், இந்த நெருக்கடியான நிலையில் புதிதாக அல்லது தற்காலிகமாக அரசங்கத்தை முன்னெடுக்க  ஒரு திட்டத்தை முன்வைத்து அதற்கு பாராளுமன்ற்ததில் இருக்கின்ற  உறுப்பினர்களின் மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவுடன் ஒப்புதலைப் பெற்று அரசாஙகத்தை பொதுத் தேர்தல் ஒன்று நடக்கும் வரை முன்னெடுக்க முடியும்.

அது ஜனாதிபதியின் அதிகாரத்தை நீக்கிவிட்டு பிரதமருக்கே அல்லது ஒரு அதிகார சபைக்கே பொறுப்பை ஒப்படைக்கின்ற முறையிலோ அல்லது மாற்றுத் திடங்களாகவோ அவை இருக்கலாம். எனவே தீர்வே கிடையாது என்று எதுவுமேயில்லை என்பது நமது வாதம். இப்படி அராஜக நிலை இருந்த பல நாடுகள் உலகில் மீள் ஏழுந்த முன்னுதாரணங்கள் நிறையவே இருக்கின்றன. யாப்பு ரீதியில்தான் தீர்வு தேட வேண்டும் என்று நிற்பவர்கள் பெரும் பாலும் இந்த அரசுக்கு விசுவாசமாக பேசுபவர்களாகவே நாம் பார்க்கின்றோம்.

அதே நேரம் அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு இனங்காத இடத்தில் நாட்டில் வன்முறை அல்லது சிவில் யுத்தத்திற்குக் கூட இடமிருக்கின்றது. அப்போது வெளிநாடுகள் கூட நமது அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துக்களுக்கும் இடமிருக்கின்றது என்றும் நாம் எச்சரிக்கின்றோம். இன்று கூட அப்படியான ஊடுவல்கள் இருக்கின்றதோ என்ற சந்தேமும் நமக்கு இருக்கின்றது. எப்படியும் இதன் பின்னர் ராஜபக்ஸாக்கள் அரசியல் அதிகாரதட்தில் இருக்க முனைந்தால் பெரும் நெருக்கடிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறன என நாம் நம்புகின்றோம்.

அடுத்து தற்போது நமது தெருக்களில் நடக்கின்ற போராட்டங்கள் பற்றிப் பார்ப்போம். பொதுவாக பார்க்கின்ற போது இது சிவில் அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுவது போல் தெரிகின்றது. கோட்டா கோ  அல்லது வீட்டுக்குப் போ என்று கோஷம் எழுப்புபவர்களைப் பார்க்கின்றள போது அதில் அதிகளவு இள வயத்துக்காரர்கள் இருந்தாலும் பல்வேறு சமூக மட்டங்களில் சூழல்களில் இருந்து வந்தவர்கள் களத்தில் இருப்பதால் பேராட்டக் கோஷங்களிலும் வடிவங்கிலும் ஏன் வார்த்தைகளிலும் கூட  ஜீரணிக்க முடியாத சில அம்சங்களைக் பார்க்க முடிகின்றது.

இது விடயத்தில் கட்டுரையாளனான எனது அவதானம், அதன் மீதான கேள்விகள் அதற்கு கிடைத்த பதில்கைளையும்  இங்கு சொல்ல முனைகின்றேன். அரசியல் ஆய்வாலர்கள் என்ற வகையில் நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளை நாம் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டும் களத்தில் நேரடியாக பார்த்தும் வருகின்றோம். அப்படி கண்டி நகரில் சில தினங்களுக்கு முன்னர் பெரும் ஆர்ப்பட்டம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது நாம் மேற்சொன்ன முரன்பாடுகளைப் பார்த்தோம். களத்தில் நமக்குத் தெரிந்த பேராதனை பல்கலைக்கழக மாணவன் ஒருவர் இருந்தார். அவர் அந்த போராட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவரும் கூட. அவரை அனுகி இந்தப் போரட்டம் யாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது என்று கேட்டதற்கு, இது சிவில் அமைப்புக்களின் ஏற்பாடு அதில் பல்கலைக்கழக மாணவர்களாகிய நாமும் இருக்கின்றோம். இன்னும் பல தரப்பினரும் இந்தப் போராட்டத்தில் இருக்கின்றார்கள் என்றார். அதனால் வித்தியாசமான காட்சிகளும் கோஷங்களும் இங்கு காணப்படுகின்றது.

இந்தப் போராட்த்தில் நாம் ஜீரணிக்க முடியாத சில காட்சிகளும் தெரிகின்றதே அதே பாருங்கள் பச்சை தூசனத்தில் பதாகைளை காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். அங்கே பாருங்கள் பாகிரங்கமாக மது போத்தல்களை வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டு சிலர் இங்கு சம்பந்தமே இல்லாது கும்மாலம் அடித்துக் கொண்டிருக்கின்றார்களே என்று நான் தெடர்ந்தபோது. சேர். நல்ல விடயம் நீங்கள் கூறுவது அத்தனையும் உண்மைகள்.

ஆனால் இது ஒரு கட்டுக் கோப்பான ஒரு கூட்டமல்ல. இது நமது அரசியல் வரலாற்றில் வித்தியாசமான ஒரு போராட்டம். இங்கு வந்திருப்பவர்களை யார் யார் என்று எமக்குத் தெரியாது. அனைவரும் பசி பட்டனி வாழ முடியாத என்று தங்களது  ஆதங்கத்தை எதிர்ப்பை-கோபத்தை காட்ட தெருவில் இருக்கின்றார்கள். அவர்கள் வாழ்கின்ற சமூகப் பின்னணி அதன் ஏற்றத் தாழ்வுகள் அவர்களது சூழல் மற்றும் அறிவு மட்டங்கள் எல்லாம்தான் இங்கு தெரிகின்றது என்றார் அவர். யதார்த்தமான கருத்து-நிகழ்வுகள் என்பதனை நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டி வந்தது. உங்கள் கேள்விகளையும் நமது பதில்களையும் இந்தவாரம் எழுதி விடுங்கள் என்றும் அவர் என்னிடத்தில் கேட்டுக் கொண்டார்.

அதே நேரம் இந்தப் போரட்டத்தில் அரசியல் காட்சிகளினால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளும் இருக்கின்றன. அங்கு கட்சிகள் அமைப்புக்கள் தமது சுலோகங்களில் தமது குறியீடுகளைப் காட்சிப்படுத்துகின்றன. உதாரணம்: தொழிற் சங்கங்கள். சஜித் அணி, ஜேவிபி போன்றவற்றைக் இங்கு குறிப்பிடலாம். மேலும் இந்தப் போரட்டங்களுக்குள் அரசும் தனது கையாட்களை அனுப்பி வைத்து போராட்டத்தில் களங்கத்தை ஏற்படுத்தும் சம்பங்களும் பரவலாக நடந்து கொண்டிருக்கின்றன.

அவன் கார்ட் நிசங்க சேனதிபதி மிரிகானை சம்பவத்தில் தனது ஆட்கள் 200 பேர் போராட்டக் காரர்களுடன் உள்ளே இருக்கின்றார்கள் என்று உயர் மட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்திப்பில் கூறி இருக்கின்றார். அவர் அந்தக் கூட்டத்திற்கு எப்படிப் போனார்? போக முடியும்? படைகளுக்கு செந்தமான பேருந்துகளை அங்கே வெளியாட்கள் எடுத்து வந்தது மட்மல்லது அதற்கு தீயும் வைத்துக் கொழுத்தி இருக்கின்றார்கள். பாராளுமன்றத்துக்கு முன் அண்மையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இலக்கத் தகடுகள் இல்லாத மோட்டார் சைக்கில்களில் ஆயுததாரிகள் ஊடுவி, அது தற்போது சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகின்றது. தெற்கிலே இப்படி என்றால் வடக்கு கிழக்கில் யுத்த காலத்தில் என்ன நடந்திருக்கும் என்று கேள்விகளும் தற்போது பேரினத்தவர்களினாலேயே எழுப்பப்படுகின்றது.

நன்றி: ஞாயிறு தினக்குரல் 10.04.2022

 

Previous Story

 நமது பசி போக்க உதவிய பிச்சைக்காரர்: நன்றி ஐயா

Next Story

புதிய பிரதமர் டலஸ் அழகப்பெரும?