“இந்தியா-பாகிஸ்தான் போர் உட்பட, ஏராளமான போரை நிறுத்தியிருக்கிறேன். எனவே எனக்கு நோபல் பரிசு வேண்டும்” என்று டிரம்ப் தொடர்ந்து கோரி வந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு டிரம்புக்குதான் நிச்சயம் நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இஸ்ரேல்-ஹமாஸுக்கு இடையே நடைபெற்று வந்த போரானது தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. நோபல் பரிசு அறிவிக்கப்படும் நேரமாக பார்த்து, போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுக்க, போர் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், சோகம் என்னவெனில் டிரம்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு டிரம்ப் வந்திருந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்பை வரவேற்று பேசிய நெதன்யாகு, அவர் நல்லவர், வல்லவர், நாலும் தெரிந்தவர் என்று நீட்டி முழங்கியிருக்கிறார்.
குறிப்பாக “வெள்ளை மாளிகையில் இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகச் சிறந்த நண்பர். எந்த ஒரு அமெரிக்க அதிபரும் இஸ்ரேலுக்காக இவ்வளவு செய்ததில்லை. இந்த அமைதிக்கு நீங்கள் உறுதிபூண்டுள்ளீர்கள், நானும் உறுதிபூண்டுள்ளேன், சேர்ந்து நாம் அமைதியை அடைவோம்.
டிரம்ப்பின் போர் நிறுத்தத் திட்டம், எங்கள் பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு பத்திரமாக கொண்டு வருகிறது. எங்கள் இலக்குகள் அனைத்தையும் அடைந்து, போரை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
எங்கள் பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் அமைதியின் விரிவாக்கத்திற்கான கதவைத் திறக்கிறது” என்று டிரம்ப் புராணம் பாடியிருக்கிறார்.
அதேபோல, இஸ்ரேல் சபாநாயகர் அமீர் ஓஹானா, அமெரிக்க அதிபரைப் பாராட்டிப் பேசினார். நோபல் அமைதிப் பரிசுக்கு டிரம்ப்பை விட யாரும் தகுதியானவர் இல்லை என்றும், அடுத்த ஆண்டு இஸ்ரேல் அவரைப் பரிந்துரைக்கும் என்றும் அறிவித்தார். மட்டுமல்லாது இஸ்ரேலுக்கு டிரம்ப் அளித்த ஆதரவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரான் உடனான 12 நாள் போரின் போதும், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான போர் நிறுத்தத்தை அடைவதற்கான முயற்சிகளும் டிரம்பால் மேற்கொள்ளப்பட்டவைதான் என்று கூறியுள்ளார்.
“ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் கூட, யூத மக்கள் உங்களை நினைவில் கொள்வார்கள். நாங்கள் நினைவில் கொள்ளும் ஒரு தேசம் அமெரிக்காவும் அதன் அதிபர் டிரம்பும்தான்.
இந்த கிரகத்தில் அமைதியை மேம்படுத்த உங்களை விட யாரும் அதிகம் செய்யவில்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த பேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேல் தனது சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 2,000 கைதிகளை விடுவிக்க வேண்டும். ஹமாஸ், சிறைப்பிடிப்பில் இறந்த அல்லது கொல்லப்பட்ட 27 பணயக்கைதிகளின் உடல்களையும், 2014 ஆம் ஆண்டு முந்தைய காசா மோதலில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் உடலையும் ஒப்படைக்க வேண்டும்.
இஸ்ரேல் விடுவிக்க வேண்டியவர்களில் 250 பாதுகாப்பு கைதிகளும் அடங்குவர். அவர்களில் பலர் இஸ்ரேலியர்களைக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் என்பது குறிப்பிடதக்கது.