கடல்  புயல் ஏன் நிலத்தை நோக்கி வருகிறது? – எதிர்கொள்வது எப்படி ?

-இரா.சிவா-

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ‘மேன்டோஸ்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் புதுச்சேரிக்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கும் இடையே இன்று இரவு கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றம் காரணமாக அண்மைக்காலங்களில் நாம் அடிக்கடி புயல்களைச் சந்திக்கிறோம். சில புயல்களை எதிர்கொள்ள நாம் பரபரப்பாக தயாராகும் வேளையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே அவை வலுவிழந்துவிடுகின்றன. சில புயல்கள் அதிதீவிர புயலாக மாறி நம் கணிப்பையும் தாண்டி பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இதற்கு என்ன காரணம்? புயல் குறித்த பல்வேறு கேள்விகளை தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷிடம் முன்வைத்தோம். அவர் அளித்த பதில்களை எளிய மொழியில் இங்கு வழங்குகிறோம்.

புயல் எப்படி உருவாகும்? ஏன் அவை நிலப்பரப்பை நோக்கி வருகின்றன?

கடல் அல்லது பெரிய நீர்ப்பரப்பு கொண்ட பகுதிகளில்தான் புயல் உருவாகும். பெரும்பாலான புயல்கள் கடலில்தான் உருவாகின்றன. கடல் மட்டத்தில் உள்ள நீர் ஆவியாகி மேலெழும்பும் போது குறிப்பிட்ட உயரத்தை அடைந்தவுடன் சிறு மேகமாக உருவாகும். தொடர்ந்து நீர் ஆவியாகி மேலே செல்லும் போது சிறிய மேகம் பெரிய மேகமாக மாறுகிறது. குறிப்பிட்ட அளவை அடைந்தவுடன் அவை சுழல ஆரம்பிக்கும். பின்னர் அது, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல், அதிதீவிர புயல் எனப் பல்வேறு நிலைகளை அடையும்.

பூமத்திய ரேகைக்கு கீழே உருவாகும் புயல்கள் கடிகார திசையிலும், பூமத்திய ரேகைக்கு மேலே உருவாகும் புயல்கள் கடிகார எதிர்த்திசையிலும் சுழலும். புயலுக்கான உணவே நீர்தான். எனவே எங்கெல்லாம் நீர் ஆவியாகி மேலே வருகிறதோ அந்தப் பகுதியை நோக்கி புயல் நகர ஆரம்பிக்கும்.

பொதுவாக நிலப்பரப்பிற்கு அருகேயுள்ள பகுதிகளில்தான் வெப்பம் அதிகமாக இருக்கும். எனவேதான் எல்லா புயல்களும் கரையை நோக்கி வருகின்றன.

புயல் கரையைக் கடக்கும் போது மழை பொழிவது ஏன்?

கடலோடு ஒப்பிடும் போது நிலப்பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். கடலில் இருந்து மேலே செல்லும் வெப்பம் நீராவியாக இருக்கும். ஆனால், நிலத்திலிருந்து செல்லும் வெப்பம் வறண்ட காற்றாக இருக்கும். எனவே பூமியிலிருக்கும் வெப்பம் புயலோடு சேரும் போது அது மேலே இருக்கும் மேகங்களை கீழ் நோக்கி இழுக்கும். அதனால் மழை பொழிகிறது.

புயலை தலைப்பகுதி, மையம், முனைப் பகுதி என்று பிரிக்கிறார்களே, அதற்கு என்ன அர்த்தம்?

மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். நடுப்பகுதி காலியாக இருப்பதால் புயலின் மையம் காலியாக இருக்கும். எனவே அந்தப் பகுதி நிலத்தைக் கடக்கும் போது எந்தத் தாக்கத்தையும் நாம் உணர மாட்டோம். புயல் கடந்துவிட்டதோ என்று நினைக்கும் அளவிற்கு சூழல் அப்போது இயல்பாக இருக்கும். ஆனால், முனைப் பகுதி நிலத்தை அடையும் போது அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். தலைப்பகுதி கடக்கும் போது எந்தத் திசையில் காற்று வீசியதோ அதற்கு எதிர்த்திசையில் முனைப்பகுதி கடக்கும் போது காற்று வீசும்.

எல்லா காற்றழுத்த தாழ்வு மண்டலமும் ஏன் புயலாக மாறுவதில்லை?

கடலில் எப்போதும் வெப்ப நிலை வேறுபாடு இருந்து கொண்டே இருக்க வேண்டும். கடலில் இருந்து மேலே செல்லும் நீராவி அந்த மேகக் கூட்டங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அது கிடைக்க கூடிய இடத்தை நோக்கி மேகங்களும் நகர்ந்து கொண்டே இருக்கும். எங்கும் போதுமான அளவு வெப்பம் கிடைக்காதபட்சத்தில் அது வலுவிழந்துவிடும்.

வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ்
வானிலை ஆராய்ச்சியாளர் ராஜேஷ்

புயல் எந்தப் பகுதியில் கரையைக் கடக்கும் என்பதை எப்படி கணிக்கிறார்கள்?

கடலில் எங்கெல்லாம் வெப்பம் அதிகமாக இருக்கிறது என்பதை செயற்கைக்கோள் படங்கள் சொல்லும். அதை அடிப்படையாக வைத்து எந்தப் பகுதியில் புயல் பயணிக்கும் என்பதை எளிதாக கணிக்க முடியும்.

புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன?

புயலின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதற்கேற்ப எச்சரிக்கை எண் வழங்கப்படும். பதினொன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால் மிகப்பெரிய ஆபத்து என்று அர்த்தம். செயற்கைக் கோள் பட உதவியுடன் செய்த கணிப்பை அடிப்படையாக வைத்து இந்த எண்ணை வானிலை ஆய்வு மையம்தான் அறிவிப்பார்கள். அதற்கேற்ப புயல் கூண்டு ஏற்றப்படும்.

புயலை எப்படி எதிர்கொள்வது?

புயலை எப்படி எதிர்கொள்வது?

புயலின் போது நாம் செய்ய வேண்டியது மற்றும் செய்யக் கூடாதவை குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

புயல் தொடங்குவதற்கு முன்பாகவே வீட்டின் மேற்கூரை, ஜன்னல்கள் மற்றும் கதவுகளை பழுது பார்த்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிற்கு அருகே இருக்கும் முறிந்து விழ வாய்ப்புள்ள மரங்கள் அல்லது மரக்கிளையை அப்புறப்படுத்திவிட வேண்டும்.

மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதால் எண்ணெயில் எறியும் விளக்குகள் மற்றும் மின்கலத்தில் இயங்கும் விளக்குகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

அவசர காலத்தில் பயன்படுத்துவதற்காக விரைவில் கெட்டுப்போகாத உணவுகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மூடிய பாத்திரங்களில் குடிநீரை சேமித்துக்கொள்ள வேண்டும். குழந்தைகள் இருந்தால் அவர்களுக்கு தேவையான சிறப்பு உணவுகளையும் தயார் செய்துகொள்ள வேண்டும்.

அரசு தரப்பில் விடுக்கப்படும் புயல் குறித்த எச்சரிக்கைகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.

தவறான தகவல்களை அனுப்பி மற்றவர்களை பதட்டம் கொள்ள செய்யக்கூடாது.

தாழ்வான பகுதிகளிலோ அல்லது கரையோரப் பகுதிகளிலோ வசித்தால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

உங்கள் வீட்டை விட்டு நீங்கள் வெளியேறுவதாக இருந்தால் முக்கியமான பொருட்களை உயரத்தில் வைக்க வேண்டும். அது, வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டால் அவற்றை பாதுகாக்க உதவும்.

புயல் உங்கள் பகுதியைக் கடக்கும் போது பலத்த காற்று வீசும் என்பதால் காரணமின்றி வெளியே செல்லக் கூடாது.

புயல் கரையைக் கடந்த பின் வெளியே செல்லும் போது விளக்கு கம்பங்களில் உள்ள தளர்வான மின்வயர்களை தொடுவதையோ அப்புறப்படுத்த முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும்.

வாகனம் ஓட்டும் போது கவனமாக ஓட்ட வேண்டும்.

உங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

உங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உரிய அதிகாரிகளிடம் உடனடியாக தெரிவிக்க வேண்டும்.

Previous Story

ஸ்பெயினில் பிறந்த தெருவோர வியாபாரியின் மகன் அஷ்ரஃப் ஹக்கிமி ஸ்பெயின் அணியை வீழ்த்தியது ஏன்!

Next Story

நடனத்தில் தொடங்கி கண்ணீரில் முடிந்த பிரேசிலின் உலகக் கோப்பை கனவு