2022 BBC100 பெண்கள் பட்டியல்!

சந்தியா எக்னலிகொடவுக்கும் இடம் 

100 பெண்கள் - பிபிசி உலக சேவை

100 பெண்கள் என்றால் என்ன?

பிபிசி 100 பெண்கள் ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் உள்ள 100 செல்வாக்கு மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் பெண்களை பட்டியலிடுகிறது. நாங்கள் ஆவணப்படங்கள், அம்சங்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நேர்காணல்களை உருவாக்குகிறோம் – அந்த கதைகள் பெண்களை மையமாகக் கொண்டவை.

இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பிபிசி 100 பெண்கள் பற்றிய தகவல்களைப் பின்தொடரவும். #BBC100Women ஹேஷ்டேக்கை பயன்படுத்தி எங்களுடனான உரையாடலில் சேரவும்.

100 பெண்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர்?

பிபிசியின் 100 பெண்கள் குழு, தாங்கள் சேகரித்த பெயர்கள் மற்றும் பிபிசியின் உலக சேவை மொழி குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்களின் அடிப்படையில் ஒரு பட்டியலை உருவாக்கியது. கடந்த 12 மாதங்களில் தலைப்புச் செய்திகளை உருவாக்கிய அல்லது முக்கிய தாக்கத்தை ஏற்படுத்திய பெண்களைத் தேடினோம். மேலும், சொல்லத் தூண்டும் கதைகளைக் கொண்டவர்கள் அல்லது குறிப்பிடத்தக்க ஒன்றைச் சாதித்தவர்கள் அல்லது தங்கள் சமூகங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களையும் பதிவு செய்கிறோம். கடந்த தசாப்தத்தில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் இந்த ஆண்டின் கருப்பொருளுக்கு ஏற்ப பெயர்களின் தொகுப்பு மதிப்பீடு செய்தோம்.

ஒரு பெண்ணின் முன்னேற்றம் மற்றொரு பெண்ணின் பின்னடைவாக இருக்கக்கூடிய இனப்பெருக்க உரிமைகள் மற்றும் அவர்களின் சொந்த மாற்றத்தை உருவாக்கிய பெண்களை பரிந்துரைப்பது போன்ற கருத்துக்களைப் பிரிக்கும் தலைப்புகளை நாங்கள் ஆராய்ந்தோம். இறுதிப் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன், இந்தப் பட்டியல் பிராந்திய பிரதிநிதித்துவம் மற்றும் சரியான பாரபட்சமற்ற தன்மைக்காகவும் அளவிடப்பட்டது.

2022ஆம் ஆண்டு பிபிசி 100 பெண்கள் பட்டியல்

100 பெண்கள் - பிபிசி உலக சேவை

2022ஆம் ஆண்டுக்கான உலகம் முழுவதும் உள்ள ஊக்கமளிக்கும் மற்றும் செல்வாக்கு மிக்க 100 பெண்களின் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றவர்கள் உலகப் புகழ் இசைப் பாடகி பில்லி எய்லிஷ், யுக்ரேனின் முதல் பெண்மணி ஒலேனா ஸெலென்ஸ்கா, நடிகைகள் பிரியங்கா சோப்ரா ஜோனஸ் மற்றும் செல்மா பிளேர், ‘ரஷ்ய பாப்’ புகழ் ட்சரினா அல்லா புகச்சேவா, இரானிய மலையேறும் வீராங்கனை எல்னாஸ் ரெகாபி, ட்ரிபிள் ஜம்ப் தடகள வீராங்கனை யூலிமர் ரோஜாஸ் மற்றும் கானா எழுத்தாளர் டார்கோவா செக்கியாமா.

இது 100 பெண்களின் பத்தாவது சீசன். எனவே, கடந்த பத்து ஆண்டுகளில் என்ன முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதை ஆராய இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறோம். பெண்களின் உரிமைகளுக்காக பெண் தலைவர்களின் அதிகரிக்கும் எண்ணிக்கையில் இருந்து ‘மீ டூ’ இயக்கம் வரை பல பெரிய அடிகளை எடுத்து வைத்துள்ளோம். உலகின் பல மூலைகளில் உள்ள பெண்களுக்கு இந்த தூரத்தைக் கடக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியது போல தோன்றுகிறது.

இந்தப் பட்டியல் 2022இல் உலக அளவில் மோதல் களத்தின் மையத்தில் பணியாற்றிய பெண்களின் பங்களிப்பைப் பிரதிபலிக்கிறது – இரானில் துணிச்சலுடன் மாற்றத்தைக் கோரிய எதிர்ப்பாளர்கள் முதல் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவில் மோதலையும் எதிர்ப்புணர்வையும் வெளிப்படுத்தும் பெண் முகங்கள் வரை இதில் உள்ளனர். இந்த ஆண்டு முதன் முதலாக, 2022ஆம் ஆண்டின் 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற தகுதிவாய்ந்தவர்கள் யார் என்பதை முன்மொழியும்படி முந்தைய 100 பெண்கள் பட்டியலில் இடம்பெற்றவர்களிடம் கேட்டுள்ளோம்.

வூர்சூலா ஃபொன்டேர் லையன்

வூர்சூலா ஃபொன்டேர் லையன் , ஜெர்மனி

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர்

ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவரான வூர்சூலா ஃபொன்டேர் லையன் ஒரு ஜெர்மன் அரசியல்வாதி. அவர் ஏங்கலா மெர்க்கலின் அமைச்சரவையில் பணியாற்றினார். ஜெர்மனியில் நியமிக்கப்பட்ட முதல் பெண் பாதுகாப்பு அமைச்சரும் இவரே.

பிரஸ்ஸல்ஸில் பிறந்த இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு பொருளாதாரம் மற்றும் மருத்துவம் படித்தார். 2019இல் ஐரோப்பிய ஒன்றிய உயர் பதவி வேலையில் சேர்ந்தார். பின்னர் ப்ரெக்ஸிட், கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் யுக்ரேனில் நடந்த போர் காலத்தில் ஆணையத்தை வழிநடத்தினார். இந்த ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பாலின சமநிலை தேவைப்படும் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்தின் பின்னணியில் இவர் ஓர் உந்து சக்தியாக விளங்கினார்.

Sanna Marin

2020 வெற்றியாளரான ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரினால் பரிந்துரைக்கப்பட்டவர்.

“ஐரோப்பா ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இந்த சவால்களை ஒன்றாகக் கடக்க ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உதவுவதில் வூர்சூலா ஃபொன்டேர் லையன் அற்புதமான உறுதியைக் காட்டினார். இவரது தலைமை தளராமல் இருந்தது. காலங்கள் கடினமானவை என்றாலும் கூட அவர் அதை விட கடினமானவராக இருக்கிறார்.”

இபிஜோக் ஃபரோட்

இபிஜோக் ஃபரோட், நைஜீரியா

ElectHER நிறுவனர்

ElectHER மூலம், இபிஜோக் ஃபாபரோட் நைஜீரியாவில் பெண்கள் அரசியல் இயக்கத்தை நிறுவினார். இவரது அமைப்பு அரசியல் பிரதிநிதித்துவத்தில் உள்ள சமத்துவமின்மை இடைவெளிகளைக் குறைக்க உதவுகிறது. ஆஃப்ரிக்கா முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட பெண்களை அரசியலில் ஈடுபடுத்தியுள்ளது. #Agender35 பிரசாரத்தின் மூலம், 2023ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் உள்ளூர் அல்லது மத்திய தேர்தல் பதவிக்கு போட்டியிடும் 35 பெண்களுக்கு இவரது அமைப்பு நேரடியாக ஆதரவளித்து மனித மற்றும் நிதி ஆதாரங்களை வழங்கி வருகிறது.

தேர்தல் தரவு பகுப்பாய்வுக்கான முதல் ஆஃப்ரிக்க பெண்ணிய செல்பேசி செயலியின் பின்னால் இருப்பவர் இவர். ஃபாபரோட் தற்போது ஜனநாயக மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைமை கவுன்சிலில் பணியாற்றுகிறார். இது ஜனநாயக செயல்முறைகளை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளை அடையாளம் காட்டுகிறது.

சாம்ராவிட் ஃபிக்ரு

சாம்ராவிட் ஃபிக்ரு, எத்தியோப்பியா

தொழில்நுட்ப தொழில்முனைவோர்

சாம்ராவிட் தமது பதினேழாவது வயது வரை கணினியைப் பயன்படுத்தவில்லை என்றாலும், தற்போது புரோகிராமர் ஆகியிருக்கும் சாம்ராவிட் ஃபிக்ரு ஹைப்ரிட் டிசைன்ஸின் நிறுவனர். இது எத்தியோப்பியாவின் டாக்ஸி செயலியான RIDE-க்குப் பின்னால் உள்ள நிறுவனங்களில் ஒன்றாகும்.

வேலைக்குப் பிறகு டாக்சிகளை எடுத்துச் செல்வது பாதுகாப்பற்றதாக உணர்ந்தது. தன்னிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க விரும்பும் ஓட்டுநர்களுடன் பேரம் பேசுவது போன்ற தமது சொந்த அனுபவம் இவரை $2,000க்கும் (சுமார் £1,700) குறைவான செலவில் தொழில் தொடங்க வழிவகுத்தது. இவரது நிறுவனம் இப்போது பெரும்பான்மையான பெண் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. எத்தியோப்பியாவின் தொழில்நுட்பத் துறையில் பெண்கள் குறைவாகவே உள்ளனர். ஃபிக்ரு அடுத்த தலைமுறை இளம் பெண் தொழில்முனைவோரை அதிகளவில் ஊக்குவிக்க விரும்புகிறார்.

பெண்களே சுயமாக நடத்தும் வணிகம் வளர்ந்து வருகிறது. ஆக்கபூர்வ யோசனைகளை நிறைவேற்றுவதற்கான நிதியை அணுக இப்போது அதிகமான இளம் பெண்கள் தேவை.

சாம்ராவிட் ஃபிக்ரு

டிமா அக்தா

டிமா அக்தா, சிரியா

ரன்னர்

2012இல், சிரியாவில் உள்ள டிமா அக்டாவின் வீடு குண்டுவெடிப்புக்கு உள்ளானது. அவர் தன் காலையும் தனக்குப் பிடித்தமான ஒன்றான ஓடும் திறனையும் இழந்தார்.ஐ.நா தரவுகளின்படி, கிட்டத்தட்ட 28% சிரியர்கள் அந்நாட்டில் ஊனமுற்றுள்ளனர். இது உலக சராசரியை விட இரு மடங்காகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அக்தா பிரிட்டனில் இருக்கிறார். 2024இல் பாராலிம்பிக்கில் போட்டியிட பயிற்சி பெற்று வருகிறார்.

தொற்றுநோய்களின் போது அகதிகளுக்காக பணம் திரட்டிய பிறகு, பிரிட்டன் மாற்றுத்திறனாளிகள் கால்பந்து அணியான லயன்ஹார்ட்ஸில் உறுப்பினராக அவர் அங்கீகரிக்கப்பட்டார். இவரது கதை சமீபத்தில் பாப் நட்சத்திரமான அன்னே-மேரியின் பியூட்டிஃபுல் என்ற இசை ஆல்பத்தில் இடம்பெற்றது. உடல் குறைபாடுகள் உள்ளவர்களின் வலிமையை வெளிப்படுத்தும் விழிப்புணர்வுப் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார்.

லினா அபு அக்லே

லினா அபு அக்லே, பாலத்தீன பிராந்தியங்கள்

மனித உரிமைகளுக்காக பிரசாரம் செய்பவர்

பாலத்தீன-ஆர்மேனிய மனித உரிமைகள் வழக்கறிஞர் லீனா அபு அக்லே, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய படைகள் நடத்திய சோதனையில் மே மாதம் கொல்லப்பட்ட அல் ஜசீரா நிருபரும் பாலத்தீன-அமெரிக்க பத்திரிகையாளருமான ஷிரீன் அபு அக்லேவின் உறவினர். இஸ்ரேலிய ராணுவம், தமது வீரர்களில் ஒருவர் அவரை தவறுதலாக கொன்றதற்கு “அதிக வாய்ப்பு” உள்ளது என்று கூறியது.

லினா இப்போது தனது அத்தையின் கொலைக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான பிரசாரத்தின் முகமாக மாறியுள்ளார். மனித உரிமைகளை மையமாகக் கொண்ட சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் தனது வாதத்திற்காக 2022ஆம் ஆண்டில் ‘TIME100’ என்ற ‘அடுத்து வளர்ந்து வரும் தலைவர்கள்’ பட்டியலில் இடம்பிடித்தார்.

எனது அத்தை ஷிரீன் அபு அக்லே விட்டுச் சென்ற இடத்திலிருந்து பெண்களின் பார்வையை விரிவுபடுத்த வேண்டும். அதன் மூலமே நாங்கள் சொல்லும் கதைகள் மற்றும் சேகரிக்கும் தகவல்கள் சமமாகவும், துல்லியமாகவும், முழுமையாகவும் இருப்பதை உறுதி செய்ய முடியும் – பெண்கள் இல்லாமல், அது சாத்தியமில்லை.

லினா அபு அக்லே

பாத்திமா அமிரி

பாத்திமா அமிரி, ஆஃப்கானிஸ்தான்

மாணவர்

ஆஃப்கானிஸ்தான் இளம்பெண், பாத்திமா அமிரி காபூலில் உள்ள டியூஷன் சென்டரில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகக் காரணமான தற்கொலைத் தாக்குதலில் இருந்து தப்பியவர்களில் ஒருவர். இறந்தவர்களில் பெரும்பாலோர் மாணவிகள். கண்ணை இழந்தது, தாடை மற்றும் காதில் பலத்த சேதம் உள்ளிட்ட பலத்த காயங்களுக்கு இவர் ஆளானார்.

குணமடைந்த நிலையில், தனது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்குப் படித்து, அக்டோபரில் 85%-க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றார். காபூல் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலைப் படிக்க வேண்டும் என்பது இவரது கனவு. மேலும் தாக்குதலில் கண்ணை இழந்தது தன்னை வலிமையாகவும் உறுதியுடனும் ஆக்கியது என்று கூறுகிறார்.

ஸார் அமீர்-எப்ராஹிமி

ஸார் அமீர்-எப்ராஹிமி, இரான்

நடிகை

இந்த ஆண்டு, விருது பெற்ற நடிகையும் திரைப்பட தயாரிப்பாளருமான ஸார் அமீர்-எப்ராஹிமி, பாலியல் தொழிலாளர்களைக் குறிவைத்த தொடர் கொலையாளியின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட திரைப்படமான ஹோலி ஸ்பைடரில் நடித்ததற்காக கேன்ஸில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற முதல் இரானியர் ஆனார்.

அமீர்-எப்ராஹிமி துன்புறுத்துதல் மற்றும் வழக்கை தவிர்ப்பதற்காக இரானை விட்டு வெளியேற நேர்ந்தது. அப்போது இவரது அந்தரங்க காணொளி கசிந்தது. மேலும் கடந்த கால காதல் வாழ்க்கை தொடர்பான அவதூறு பிரசாரத்துக்கு இலக்கானார். 2008ஆம் ஆண்டில், இவர் பாரிஸுக்கு சென்றார். அலம்பிக் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி, கேமராவுக்கு முன்னாலும் பின்னாலும் ஈர்க்கக்கூடிய வாழ்க்கையைத் தொடர்ந்து உருவாக்கினார்.

ஜெபினா யாஸ்மின் இஸ்லாம்

ஜெபினா யாஸ்மின் இஸ்லாம், பிரிட்டன்

பிரசாரகர்

2021இல் லண்டன் பூங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியை சபீனா நெஸ்ஸாவின் சகோதரி ஜெபினா யாஸ்மின் இஸ்லாம். பிரிட்டனில் பெண்களுக்கு வீதிகளில் பாதுகாப்பு கிடைப்பை உறுதிப்படுத்த குரல் கொடுக்கும் நபராக இருக்கிறார். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவதை கட்டாயமாக்கும் வகையில் சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் இவர் பிரசாரம் செய்கிறார்.

இவரது சகோதரியின் கொலைக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு இல்லாததை கடுமையாக விமர்சித்தார் இஸ்லாம். இது ஆண் செய்யும் வன்முறைக்கு எத்தனை முக்கியத்துவத்தை கொடுக்கிறது என்பதை காட்டுகிறது என்று அவர் கூறினார். இன பாகுபாடு பற்றி பேசுகையில், “இதுவே சாதாரண பிரிட்டிஷ் வெள்ளை இனத்தவர் குடும்பமாக” இருந்திருந்தால், அவர்கள் சிறந்த விதமாக நடத்தப்பட்டிருப்பார்கள் என்று அவர் தெரிவித்தார். இஸ்லாம் தமது சகோதரியை “அதிசயமான முன்மாதிரி” என்று அழைக்கிறார். “சக்திவாய்ந்த, அச்சமற்ற மற்றும் பிரகாசமானவர் அவர்” என்கிறார் இஸ்லாம்.

“பூமியில் உள்ள அனைவரையும் விட உங்களை அதிகமாக நேசிக்கவும்.”

சபீனா நெஸ்ஸா

சபீனா நெஸ்ஸாவின் ஜர்னலில் இருந்த இத்தகவல், அவரது சகோதரி ஜெபினாவால் பகிரப்பட்டது

சந்தியா எக்னலிகொட

சந்தியா எக்னலிகொட, இலங்கை

மனித உரிமைகள் செயல்பாட்டாளர் மற்றும் பிரச்சாரகர். சந்தியா எக்னலிகொட இலங்கை உள்நாட்டு போரின்போது அன்புக்குரிய உறவுகளை இழந்த ஆயிரக்கணக்கான தாய்மார்கள் மற்றும் மனைவிகளுக்கு உதவுபவர். இவரது கணவர், பிரபல புலனாய்வு ஊடகவியலாளர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பிரகீத் எக்னலிகொட, 2010, ஜனவரியில் காணாமல் போனார். அரசாங்கத்தின் கடுமையான விமர்சகராகவும் தமிழ் புலிகள் பிரிவினைவாதிகளுக்கு எதிரானதாக கூறப்பட்ட நடவடிக்கைள் குறித்தும் புலனாய்வு செய்தி சேகரித்தவர்.

பிரகீத் காணாமல் போனதில் இருந்து, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாரான சந்தியா நீதி கேட்டு வருகிறார். தனது கணவர் கடத்தப்பட்டதற்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களே காரணம் என இவர் குற்றம்சாட்டுகிறார். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்ட ரோசும் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிறர் சார்பாகப் போராடி, ஆக்கபூர்வ போராட்டத்தில் ஈடுபட்டு, அவமானங்கள் மற்றும் அவதூறுகளுக்கு மத்தியில் சவால்களை அர்ப்பணிப்பு மற்றும் தியாகம் மூலம் சமாளித்து வரும் பெண் நான்.”

சந்தியா எக்னலிகொட

பில்லி எல்லிஷ்

பில்லி எல்லிஷ், அமெரிக்கா

பாடகி-பாடலாசிரியர்

கிராமி விருது பெற்ற மற்றும் சாதனை படைத்த சூப்பர் ஸ்டார் பில்லி எய்லிஷ், தனது இசையின் மூலம் எல்லைகளைக் கடந்து புகழ் பெற்றவர் – சின்னஞ்சிறு சிறுமிகளை சுரண்டி துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிரான தனது சிங்கில்ஸ் பாடலான ‘யுவர் பவர்’ முதல் காலநிலை மாற்றம் தொடர்பான ஆல் தி குட் கேர்ள்ஸ் கோ டு ஹெல் வரை என இவரது அனைத்துப் பாடல்களும் உலக பிரபலம்

கருக்கலைப்புக்கான அரசியலமைப்பு உரிமையை முடிவுக்குக் கொண்டு வரும் அமெரிக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமது ஆல்பத்தை வெளியிட்டதன் மூலம் கிளாஸ்டன்பரி நிகழ்கலை நாயகியாக விளங்கி வரலாற்றை உருவாக்கினார். உடல் தோற்றம், மன சோர்வுக் காலங்கள் மற்றும் டூரெட்ஸ் நோய் குறைபாட்டுடன் வாழ்வது பற்றிப் பேச அவர் தமது மேடையை பயன்படுத்தினார்.

நாம் இப்போது இருக்கும் நேரத்தை நினைத்து பிரமிக்கிறேன். பெண்கள் உச்சத்தில் உள்ளனர். என்னைப் போன்ற பெண்கள் பேசுவது பெரிதாக எடுத்துக் கொள்ளப்படாததால், நான் நம்பிக்கையற்ற குழியில் வாழ்ந்த ஒரு காலமும் இருந்தது.

பில்லி எல்லிஷ்

கோஹர் எஷ்கி

கோஹர் எஷ்கி, இரான்

சிவில் செயல்பாட்டாளர்

கோஹர் எஷ்கி இரானில் சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் அடையாளமாக மாறியுள்ளார். இவரது மகனும் ப்ளாக்கருமான சத்தர் பெஹெஷ்டி, பத்து வருடங்களுக்கு முன்பு காவலில் இறந்து போனார். அப்போது முதல் இரானிய அதிகாரிகள் சித்ரவதை மற்றும் கொலையில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி நீதிக்காக எஷ்கி அழைப்பு விடுத்து வருகிறார்.

ஆட்சியாளர்கள் மீது புகார் தெரிவிக்கும் இரானிய தாய்மார்களில் ஒருவரான கோஹர், தங்கள் குழந்தைகளின் கொலைக்கு நீதி கேட்டு வருகிறார். இதற்கு இரானிய மூத்த மத தலைவரான ஆயடூலா அலி காமேனெயி தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்று ராஜிநாமா செய்ய வேண்டும் என்று 2019இல் எழுதப்பட்ட கடிதத்தில் கையெழுத்திட்டவர்களில் கோஹரும் ஒருவர். மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடந்த போராட்டங்களின் போது, அரசு எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக கோஹர் எஷ்கி தனது ஹிஜாப்பை கழற்றினார்.

ஜாய் என்கோஸி எஸீலோ

ஜாய் என்கோஸி எஸீலோ, நைஜீரியா

சட்டத்துறை பேராசிரியர்

நைஜீரியா பல்கலைக்கழகத்தில் எமரிட்டஸ் மரியாதையுடன் கல்லூரி முதல்வர் பணியை நிறைவு செய்தவர் ஜாய் என்கோஸி. தனிநபர்கள் கடத்தல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதியாக இருந்தவர். ஜாய் எஸீலோ சர்வதேச மனித உரிமைகள் துறையில் தலைமை அதிகாரியாக உள்ளார்.

கடந்த 25 ஆண்டுகளில் நைஜீரியாவில் 60,000 பாதிக்கப்படக்கூடிய பெண்களுக்கு இலவச சட்ட உதவி மற்றும் தங்குமிடம் வழங்கிய மகளிர் உதவிக் குழுவின் (WACOL) நிறுவன இயக்குநராக எஸீலோ உள்ளார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதில் தப்பிப்பிழைத்தவர்களுக்கும் விரைவான தீர்வு கிடைக்க உதவும் டாமர் பாலியல் வல்லுறவு தடுப்புக்கான பரிந்துரை மையத்தை இவர் நிறுவினார்.

Chimamanda Ngozi Adichie

2021 வெற்றியாளர் எழுத்தாளர் சிமாமண்டா என்கோஸி ஆதிச்சியால் பரிந்துரைக்கப்பட்டவர்.

“பேராசிரியர் எஸீலோ ஏழைகளுக்கு, குறிப்பாக மனித உரிமைகள் மீறலை அனுபவித்த பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குவதன் மூலம் பல உயிர்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.”

ஏய் நீயின் தூ

ஏய் நீயின் தூ, மியான்மர்

மருத்துவர்

மியான்மரின் நெருக்கடியான பகுதிகளில், தொலைதூர மற்றும் வறிய நிலையில் உள்ள சின் மாநிலத்தில் முன்கள தன்னார்வலராக இருப்பவர் அய் நீயின் தூ. 2021, நவம்பரில் ஒரு சிறிய அறுவை சிகிச்சை வசதி கொண்ட ஒரு நடமாடும் மருத்துவமனையை எழுப்பினார். பின்னர் நோய்வாய்ப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

தனது ஓய்வு நேரத்தில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த நபர்கள் உட்பட உள்ளூர் நோயாளிகளுக்கு ஆதரவாக, மருத்துவ சிகிச்சை பெரும்பாலும் கிடைக்காத பிற பகுதிகளுக்குச் செல்கிறார். இவரது பணியின் போது, ‘வன்முறையைத் தூண்டும்’ குற்றச்சாட்டுகளை மியான்மர் ராணுவம் சுமத்தியது. மக்கள் பாதுகாப்புப் படைகள் எனப்படும் உள்ளூர் அரசாங்க எதிர்ப்பு போராளிக் குழுக்களுக்கு இவர் ஆதரவளிப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டார்.

மெய்ன் அல் ஒபைதி

மெய்ன் அல் ஒபைதி, யேமன்

வழக்கறிஞர்

இந்த ஆண்டு யேமனில் உள்நாட்டுப் போர் மிகப்பெரிய வன்முறையாக தீவிரம் அடைந்த நிலையில், முற்றுகையிடப்பட்ட நகரமான டைஸில் அமைதியைக் கட்டியெழுப்புவதில் வழக்கறிஞர் மெய்ன் அல்-ஒபைதி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். முரண்பட்ட குழுக்களிடையே கைதிகள் பரிமாற்றத்தை எளிதாக்கும் ஒரு மத்தியஸ்தராக அவர் பொறுப்பேற்றுள்ளார். போராளிகளை உயிருடன் அவர்களது குடும்பங்களுக்குத் திரும்ப அனுப்புவதில் இவரது முயற்சிகள் எப்போதும் வெற்றி பெறவில்லை என்றாலும், இறந்தவர்களின் உடல்கள் திரும்பப் பெறப்படுவதை உறுதிசெய்ய இவரால் முடிந்திருக்கிறது.

யேமனிய பெண்கள் சங்கத்திற்கு தன்னார்வ தொண்டு செய்து வருகிறார். இவர் சிறையில் அடைக்கப்பட்ட பெண்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். மனித உரிமைகள் மற்றும் விடுதலைக் குழுவை மேற்பார்வையிட்டு, வழக்கறிஞர்கள் கவுன்சிலுக்கு பதவி உயர்வு பெற்ற முதல் பெண்மணியும் இவரே.

இஃபியோமா ஓஸோமா

இஃபியோமா ஓஸோமா, அமெரிக்கா

பொது கொள்கை மற்றும் தொழில்நுட்ப நிபுணர்

தனது முன்னாள் முதலாளியான Pinterest மீது பாலினம் மற்றும் இன பாகுபாடு காட்டுவதாக குற்றம்சாட்டுவதற்காக, தகவலை வெளிப்படுத்தக்கூடாத ஒப்பந்தத்தை (NDA) மீறினார். அதன் பிறகு, இஃபியோமா ஓஸோமா, வேலையில் தவறாக நடத்தப்படுவதை எதிர்த்து ஊழியர்கள் போராடுவதற்கு துணையாக இருக்கிறார். என்டிஏ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும் பாரபட்சம் அல்லது துன்புறுத்தல் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொள்ள கலிஃபோர்னியாவில் உள்ள ஒவ்வொரு ஊழியரையும் அனுமதிக்கும் ‘சைலன்ட் நோ மோர்’ சட்டத்தின் இணை-ஸ்பான்சர் ஆனார் இவர். ஓஸோமாவின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து Pinterest ஒரு பணியிட மதிப்பாய்வை மேற்கொண்டது. பிறகு அது அந்த சட்டத்தை ஆதரிப்பதாகக் கூறியது.

ஓஸோமா , தி டெக் வொர்க்கர் ஹேண்ட்புக்கை உருவாக்கினார். இது ஊழியர்கள் பேசுவதற்கு உதவும் ஆதாரங்களின் தொகுப்பாகும். மேலும் தொழில்நுட்பத் துறையில் சமபங்கு குறித்து நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் எர்த்சீட் நிறுவனத்தையும் நிறுவியுள்ளார்.

சேனல் கான்டோஸ்

சேனல் கான்டோஸ், ஆஸ்திரேலியா

பாலியல் ஒப்புகை செயல்பாட்டாளர்

முழுமையான ஒப்புகை மற்றும் பாலியல் கல்விக்காக பரப்புரை செய்யும் ‘டீச் அஸ் கன்சென்ட்’ என்ற இயக்கத்தின் நிறுவனர் இவர். சேனல் காண்டோஸ், 2021இல் இன்ஸ்டாகிராமில் ஒரு இடுகையை பதிவிட்டார். அதில் தன்னை அறிந்தவர்கள் மற்றும் பின்தொடர்வோர் தங்களுடைய பள்ளியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்களா என்று கேள்வி எழுப்பினார். 24 மணி நேரத்துக்குள்ளாக 200க்கும் மேற்பட்டோர் “ஆம்” என்று பதிலளித்தனர்.

ஆஸ்திரேலியாவில் பாலியல் உறவுக்கு முந்தைய ஒப்புகை பெறுவது தொடர்பான கல்விக்கு அழைப்பு விடுக்கும் மனுவில் கையெழுத்திடும் இயக்கத்தை இவர் தொடங்கினார். அதன் பலனாக மழலையர் பள்ளி முதல் 10 ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் ஒப்புகை கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இப்போது இணக்கமற்ற ஆணுறை அகற்றுதல் அல்லது தவிர்த்தல் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதுடன் அந்த செயலை குற்றமாக்கவும் பிரசாரம் செய்து வருகிறார்.

ஜெரால்டினா குரேரா கார்செஸ்

ஜெரால்டினா குரேரா கார்செஸ், எக்வடோர்

பெண்ணுரிமை செயல்பாட்டாளர்

17 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருபவர். ஜெரால்டினா குரேரா கார்செஸ் எக்வடோரில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் நோக்குடன் பணியாற்றுகிறார். பெண் கொலைகள் – அவர்களின் பாலினம் காரணமாக நடக்கும் கொலைகள் பற்றிய தகவல்களை சேகரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.

கார்ட்டோகிராஃபீஸ் ஆஃப் மெமரி என்ற திட்ட முன்முயற்சியின் பின்னணியில் இருப்பவர். பெண்ணிய கொலையால் பாதிக்கப்பட்டவர்களின் “வாழ்க்கை படங்களை” உருவாக்க முயலும் திட்டமாகும். இறந்தவர்களின் நினைவை உயிர்ப்புடன் வைத்து, பெண்கள் மீதான அணுகுமுறைகளில் கலாசார மாற்றத்தைத் தூண்ட இத்திட்டம் உதவுகிறது. பாலின வன்முறைகளுக்கு எதிரான ஃபெமினிஸ்ட் அல்லயான்ஸ் மற்றும் லத்தீன் அமெரிக்கன் நெட்வொர்க் அமைப்புக்காக பாதிக்கப்பட்டவர்களின் தகவல்களை குரேரா கண்காணித்து அதை தரவுகளாக்குகிறார். ஆல்டியா ஃபவுண்டேஷன் மற்றும் பெண்கள் தங்குமிடங்களின் வலையமைப்பின் பிரதிநிதியாகவும் அவர் இருக்கிறார்.

பெண் கொலைகளைத் தடுக்க வலுவான நடவடிக்கை இல்லை என்றால், முன்னேற்றம் என்பதே யாருக்கும் இருக்காது. புதிய சட்டம் நடைமுறைக்கு வந்தபோதும், இன்னும் நாங்கள் கொல்லப்படுகிறோம், அது மாற வேண்டும்.

ஜெரால்டினா குரேரா கார்செஸ்

ஒனா கார்பொனெல்

ஒனா கார்பொனெல், ஸ்பெயின்

நீச்சல் வீராங்கனை

ஸ்பானிஷ் கலை நீச்சல் வீராங்கனை ஓனா கார்பனெல் ஒரு தாயாகவும் இருந்தபடி உயரடுக்கு நீச்சல் வீராங்கனையாகலாம் என்ற உணர்வை இயல்பாக்க பிரசாரம் செய்பவர். மூன்று முறை ஒலிம்பிக்கில் வென்ற அவர், ஒலிம்பிக் வெள்ளி, வெண்கலம் உட்பட 30க்கும் மேற்பட்ட முக்கிய பதக்கங்களை வென்றுள்ளார்.

2020இல், இவர் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு டோக்யோ ஒலிம்பிக்குக்கு தேர்வாக பயிற்சியைத் தொடங்கினார். அந்த காலத்தில் தனது மகனுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாத விதிகள் தொடர்பான தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இந்த ஆண்டு, அவர் இரண்டாவது முறையாக தாயானார். தாய்மை என்பது விளையாட்டோடு ஒத்துப்போகும் என்பதை மற்ற விளையாட்டு வீராங்கனைகளுக்கு காட்டுவதற்காக ஒரு ஆவணப்படத்தில் அவர் தனது கதையை விவரித்தார்.

மரியா பெர்னாண்டா காஸ்ட்ரோ மாயா

மரியா பெர்னாண்டா காஸ்ட்ரோ மாயா, மெக்ஸிகோ

மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர்

ஒரு அறிவுசார் குறைபாடுள்ள பெண்ணாக, பெர்னாண்டா காஸ்ட்ரோ தன்னைப் போன்றவர்கள் அரசியலில் பங்கேற்க வேண்டும் என்று போராடி வருகிறார். ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமைகள் அமைப்பு ஆதரிக்கும் மாற்றுத்திறனாளி உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் குழுவினருள் இவரும் ஒருவர். மெக்ஸிகோவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவுசார் மற்றும் கற்றல் குறைபாடுகள் கொண்டவர்களை தங்களுடைய அங்கமாக்க வேண்டும் என்று இந்த இவர்கள் கேட்டு வருகின்றனர்.

அரசியல் முடிவுகள் தொடர்பான ஆவணங்களை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையிலும் அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் நிகழ்வுகளில் அவர்களை சேர்க்கவும் இவர் குரல் கொடுத்து வருகிறார். காஸ்ட்ரோ ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்ஸிகன் தூதுக்குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இந்தக் குழு மாற்றுத்திறனாளி உரிமைகள் பற்றிய அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் உலகளாவிய நெட்வொர்க் இன்க்லூஷன் இன்டர்நேஷனல் என்ற அமைப்பின் பிரதிநிதியாக காஸ்ட்ரோ இருக்கிறார்.

கத்ரி கியூங்

கத்ரி கியூங், ஹாங்காங்

ஆடை வடிவமைப்பாளர்

முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி உடல்களுக்கான அழகியல் சார்ந்த ஆடைகளை வடிவமைப்பதில் கத்ரி கியூங்கிற்கு ஒரு பேரார்வம். கத்ரி தமது பாட்டியை கவனித்துக்கொள்வதன் மூலம் ஈர்க்கப்பட்டு, வயதானவர்களுக்கான ஆடைகள் பெரும்பாலும் ஸ்டைல் மற்றும் செயல்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதை உணர்ந்து, 2018ஆம் ஆண்டில் தனது தாயார் ஓபிலியா கியுங்குடன் இணைந்து RHYS என்ற அடாப்டிவ் ஃபேஷன் பிராண்டைத் தொடங்கினார்.

ஆடை வடிவமைப்பு பட்டதாரியாக, கியூங் தனது அறிவை வாடிக்கையாளரின் தேவைகளுடன் ஒருங்கிணைக்கிறார். அது வெல்க்ரோ ஃபாஸ்டென்சிங் அல்லது வடிகுழாயை வைத்திருக்கும் பையாக இருக்கலாம். அவரது பிராண்ட் 90 தாழ்த்தப்பட்ட பெண்களை வேலைக்கு அமர்த்தியது மற்றும் பயிற்சி அளித்தது. இதில் சில குறைபாடுகள் உள்ளன. 2022இல், கியூங் பவுண்ட்லெஸைத் தொடங்கினார். இது நாகரிகமான செயல்பாட்டு பொருட்களை ஊக்குவிக்கும் உள்ளடக்கிய பிராண்டாகும்.

ஜூடி கிஹும்பா

ஜூடி கிஹும்பா, கென்யா

சைகை மொழிபெயர்ப்பாளர்

தாய்வழி மனநலம், காதுகேளாத பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியம் ஆகியவற்றுக்காக குரல் கொடுப்பவர் என்ற முறையில், கென்யாவில் உள்ள சில மருத்துவமனைகளில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் இல்லை என்பதை உணர்ந்த ஜூடி கிஹும்பா, அனைத்துப் பெண்களுக்கும் உடல்நல பாதுகாப்புத் தகவல்களைக் கிடைக்க உதவினார்.

டாக்கிங் ஹேண்ட்ஸ், லிசனிங் அய்ஸ் ஆன் போஸ்ட்பார்ட்டம் டிப்ரெஷ்ஷன் (THLEP) என்ற அமைப்பின் நிறுவனர் மற்றும் தாய்மை அடைவதில் குறைபாடுள்ள பெண்களுக்கு உதவுகிறார் ஜூடி. 2019இல் மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வை அனுபவித்த ஜூடி கிஹும்பா இந்த அமைப்பை உருவாக்கினார். இந்த ஆண்டு இவர்களின் முதல் குழு வளைகாப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. அதில் 78 செவித்திறன் குறைபாடுடைய தாய்மார்களை சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் ஆலோசகர்களுடன் ஒன்றிணைத்தது.

திலேக் குர்சோய்

திலேக் குர்சோய், ஜெர்மனி

இதய அறுவை சிகிச்சை நிபுணர்

துருக்கிய குடியேறி பெற்றோருக்கு ஜெர்மனியில் பிறந்தவர் டாக்டர் டிலெக் குர்சோய். தற்போது அந்நாட்டில் ஒரு முன்னணி இதய அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் செயற்கை இதயம் பொருத்தும் மருத்துவ சிகிச்சை நிபுணர். ஐரோப்பாவில் செயற்கை இதயத்தை பொருத்திய ஜெர்மனியின் முதல் பெண் அறுவை சிகிச்சை நிபுணர் என புகழாரம் செய்த ஃபோர்ப்ஸ் பத்திரிகை, இவரை தனது அட்டைப்படத்தில் பிரசுரித்துப் பாராட்டியது.

ஒரு தசாப்தத்துக்கும் மேலாக செயற்கை இதய ஆராய்ச்சியில் முன்னோடியாக உள்ளார். பெண் உடற்கூறியல் மீது சிறப்பு கவனம் செலுத்தி வரும் இவர், உடல் உறுப்பு தான விகிதங்கள் குறைந்து வரும் வேளையில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக செயற்கை இதயத்தை உருவாக்கி வருகிறார். ஒரு சுயசரிதையை எழுதியிருக்கிறார். இப்போது சொந்தமாக ஒரு இதய மருத்துவமனையைத் தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வெகாடா கெப்ரியோஹன்னஸ் அபேரா

வெகாடா கெப்ரியோஹன்னஸ் அபேரா, டீக்ரே, எத்தியோப்பியா

மனிதாபிமான உதவி ஊழியர்

வெகாதா கெப்ரியோஹன்னஸ் அபேரா ஒரு மனிதாபிமான உதவி ஊழியர். டீக்ரேயில் போரால் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டை அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு லாப நோக்கற்ற ஹ்ட்ரீனா என்ற அமைப்பின் நிறுவனர். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் முகாமில் (IDP) அவசர உணவுத் திட்டம் மற்றும் நகர்ப்புற தோட்டக்கலை திட்டம் உட்படபோரால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவ பல திட்டங்களை ஹ்டீரனா கொண்டுள்ளது.

மோதல்கள் தொடர்பான பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர்கள் மற்றும் போரினால் ஏற்பட்ட வறுமையின் விளைவாக பாலியல் தொழிலாளிகளாக மாறிய பெண்களுக்கான அதிகாரமளிக்கும் திட்டத்தையும் இந்த அமைப்பு நடத்துகிறது.

சேண்டி கேப்ரெரா ஆர்டெயாகா

சேண்டி கேப்ரெரா ஆர்டெயாகா, ஹோண்டியூரஸ்

கருக்கலைப்பு உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்

தத்துவ மாணவர், எழுத்தாளர் மற்றும் பெண்ணிய ஆர்வலர் சாண்டி கேப்ரெரா ஆர்டியேகா, பாலியல் மற்றும் கருக்கலைப்பு உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர். இவர் கருத்தடை மாத்திரை பற்றிய பட்டறைகளில் பயிற்றுவிப்பவர் மற்றும் ‘ஹேபிள்மோஸ் லோ கியூ எஸ்’ (அது என்ன என்பதைப் பற்றி பேசலாம்) என்ற ஒரு கல்வி பிரசாரம் மற்றும் அவசர கருத்தடை பற்றிய டிஜிட்டல் தளத்தின் செய்தித் தொடர்பாளர்.

இளைஞர்களின் மனித, பாலியல் மற்றும் இனப்பெருக்க உரிமைகளில் கவனம் செலுத்தும் யூத் ஆக்ஷன் அமைப்புக்காக பணியாற்றுகிறார். ஹோண்ட்யூரன் சைகை மொழியில் சரளமாகப் பேசக்கூடியவர். மேலும், காது கேளாத ஒற்றைத் தாயின் ஒரே மகளாக, உள்ளடக்கிய மற்றும் அக்கறையுள்ள வளர்ப்பின்பால் பெருமிதம் கொள்பவர்.

அசோனேலே கொடு

அசோனேலே கொடு, தென்னாஃப்ரிக்கா

தொழில்நுட்ப தொழில்முனைவோர்

அசோனேலே கொடு தனது சொந்த கருத்தடை சாதனத்தை அகற்ற விரும்பிய போதும், அதை செய்ய எவரும் கிடைக்கவில்லை. பிறகு ஃபெம்கனெக்ட் நிறுவனத்தை உருவாக்கினார். இது பருவகால வறுமையைப் போக்கவும், பதின்ம பருவ கர்ப்பங்களைக் குறைக்கவும் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குகிறது.

தயக்கம் அல்லது பாகுபாடு இல்லாமல் பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான மருந்துகளை அணுக பயனர்களை இந்த தளம் அனுமதிக்கிறது. இதே போல் பெண்களுக்கான சுகாதார தயாரிப்புகள் மற்றும் கருத்தடை தயாரிப்புகளை ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்வது போலவே வாங்கவும் ஊக்குவிக்கிறது. அசோனேலே கொடு வறுமையை ஒழிப்பதிலும், குறிப்பாக ஆபத்தில் உள்ள இளம் வயதினர் மற்றும் ஒதுக்கப்பட்ட, பின்தங்கிய சமூகத்தினருக்கு தரமான சுகாதார வசதிகளை மேம்படுத்துவதிலும் ஆர்வமாக உள்ளார்.

தங்களின் பெற்றோர் அனுபவித்த அதே போராட்டங்களைப் போல இல்லாமல், பிரச்னைகளுக்கு தீர்வு கிடைப்பதில் இளம் தலைமுறையினர் உறுதியாக இருப்பதை காண்பது அழகானது.

அசோனேலே கொடு

ஐரினா கோண்ட்ராடோவா

ஐரினா கோண்ட்ராடோவா, யுக்ரேன்

குழந்தை நல மருத்துவர்

கடுமையான ஷெல் தாக்குதலுக்கு உள்ளான போதிலும், டாக்டர் ஐரினா கோண்ட்ரடோவா மற்றும் அவரது குழுவினர் கார்கிவ் பிராந்திய தாய்-சேய் பராமரிப்பகத்தில் கர்ப்பிணிகள், புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் தாய்மார்களை அயராது தொடர்ந்து கவனித்து வந்தனர். இவர்கள் மருத்துவமனையின் அடித்தளத்தில் ஒரு பிரசவ வார்டை அமைத்து, வான்வழி தாக்குதல் சைரன் ஒலிக்குப் பிறகும் நகர்த்த முடியாத நிலையில் உள்ள தீவிர சிகிச்சை பெறும் குழந்தைகளுடன் தங்குவதற்கு தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர்.

சிகிச்சை மையத்தின் தலைவராக, டாக்டர் கோண்ட்ராடோவா எதிர்கொள்ளும் சவால்களை முன்னிலைப்படுத்த, கடந்த மார்ச் மாதம் டேவிட் பெக்காமின் இன்ஸ்டாகிராமை எடுத்துக் கொண்டார். இவரது குழு 2014 முதல் லூஹான்ஸ்க், டோனியூட்ஸ்கில் இருந்து 3,000 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு மருத்துவ மற்றும் உளவியல் ஆதரவை வழங்கியுள்ளது.

எங்கள் வீடுகள், சாலைகள், மின் நிலையங்கள், மருத்துவமனைகள் – மற்றும் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. ஆனால் எங்களுடைய கனவுகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கை போன்றவை முன்னெப்போதையும் விட வலிமையாக உள்ளன.

ஐரினா கோண்ட்ராடோவா

ஈவா கோபா

ஈவா கோபா, பொலிவியா

அரசியல்வாதி

அய்மாரா வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் மாணவர் தலைவரான ஈவா கோபா, பொலிவியா அரசியலை உலுக்கி வருகிறார். நாட்டின் இரண்டாவது பெரிய நகரான எல் ஆல்டோவின் மேயராக தனது கட்சியின் வேட்பு மனுவை வெல்லத் தவறிய பிறகு, கட்சி நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக களம் கண்டு 69% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சமீபத்தில் பெண்களுக்கான நகரத்தின் திட்டத்தை அறிவித்தார். இந்த திட்டம், கொள்கை மற்றும் முதலீடு மூலம் பெண்களின் உரிமைகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.

கோபா அரசியலுக்கு புதியவரல்ல. 2015 மற்றும் 2020க்கு இடையில் செனட்டர் ஆக பணியாற்றினார். ஆளும் கட்சியுடனான அவரது பிளவு பொலிவியாவில் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் நிலப்பரப்பை நோக்கிய மாற்றமாக பலரால் பார்க்கப்படுகிறது.

“எங்களுக்கு அதிகமான பெண் தலைவர்கள் தேவை: பெண்கள் எப்போதும் தங்கள் காலில் நிற்கக் கூடியவர்கள், முழங்காலில் அல்ல.”

ஈவா கோபா

மூட் கோபா

மூட் கோபா, பிரிட்டன்

LGBTQI+ செயல்பாட்டாளர்

ஒரு அகதியாக, மூட் கோபா கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக அகதிகளின் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அடிமட்ட அமைப்புகளுடன் பணியாற்றியுள்ளார். இவர் தற்போது மைக்ரோ ரெயின்போவின் தேசிய மேலாளராக உள்ளார். இந்த அமைப்பு, LGBTQI+ அடைக்கலம் கோரும் குடியேறிகளுக்கும் அகதிகளுக்கும் பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்குகிறது. வீடற்றவர்களுக்கு ஆண்டுதோறும் இரவு நேர தேவைக்கான 25 ஆயிரம் படுக்கைகளை இந்த அமைப்பு வழங்குகிறது. இது தொடர்பான வீட்டுவசதி மற்றும் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சமீபத்தில் கோபா ஆப்கானிஸ்தானில் இருந்து பிரிட்டனுக்கு வந்த LGBTQI+ பிறரை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை கவனித்தார். பிரிட்டன் ‘பிளாக் பிரைட்’ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், அவர்களின் அறக்கட்டளையின் தற்போதைய தலைவராகவும் உள்ளார்.

செபிதே கோலியான்

செபிதே கோலியான், இரான்

அரசியல் பிரசாரகர்

தென்மேற்கு இரானில் உள்ள குசெஸ்தான் மாகாணத்தில் தொழிலாளர்களின் உரிமைகளை ஆதரித்ததற்காக சட்டக்கல்லூரி மாணவர் செபிதே கோலியானுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 2021, அக்டோபரில் அரசியல் கைதிகளை வைக்க கட்டப்பட்ட எவின் சிறை உள்பட நான்கு வெவ்வேறு இரானிய சிறைகளில் கடந்த நான்கு ஆண்டுகளை இவர் கழித்துள்ளார்.

சிறையில் இருந்தபோதும், இவர் தனது பணியைத் தொடர்கிறார். இவர் எதிர்கொண்ட ‘மனிதாபிமானமற்ற’ நடவடிக்கை பற்றிய ஆடியோ டேப்பை அனுப்பினார். சக பெண் கைதிகளின் குரலாகவும் செயல்படுகிறார். பிணையில் வெளியே வந்தபோது, இரானிய சிறைகளில் பெண்கள் அனுபவிக்கும் ​​’சித்ரவதை’ மற்றும் ‘அநீதி’ தொடர்பான புத்தகத்தை எழுதினார்.

மேரி கிறிஸ்டினா கோலோ

மேரி கிறிஸ்டினா கோலோ, மடகாஸ்கர்

காலநிலை தொழில்முனைவோர்

பசுமை சமூக தொழில்முனைவோரும் சுற்றுச்சூழல் பெண்ணியவாதியுமான மேரி கிறிஸ்டினா கோலோ, COP27 மாநாட்டுக்கான மடகாஸ்கரின் அதிகாரபூர்வ குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். காலநிலை மாற்றத்தின் மனித உரிமைகள் மற்றும் பாலின அம்சங்கள் தொடர்பாக இவர் குரல் கொடுத்து வருகிறார். ஏனெனில் இவரது நாடு மில்லியன் கணக்கான மக்களுக்கு உணவு கிடைக்க முடியாத சவாலை வறட்சியைத் தாங்குகிறது. உலகின் முதல் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பஞ்சம் என்று ஐ.நா.

பசுமை பொருளாதாரத்தின் மூலம் வறுமையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட தன்னார்வ தொண்டு அமைப்பான பீப்பிள் பவர் இன்குளூசன் பிராந்திய இயக்குநராக கோலோ உள்ளார். அவரது சமூக அமைப்பான கிரீன் ‘என்’ கூல் காலநிலை நீதிக்கான முன்னணி தேசிய தளமாகும். பாலின அடிப்படையிலான வன்முறையில் இருந்து தப்பியவர், பாலியல் வல்லுறவு கலாசாரத்துக்கு எதிராகப் போராடும் பெண்கள் அமைதியை களைந்தெறியும் இயக்கத்தை நிறுவினார்.

“காலநிலை பாதிப்பு, ஆணாதிக்கம், வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஏழைகளாக மட்டுமே நாங்கள் பார்க்கப்பட விரும்பவில்லை. எல்லா சிரமங்களையும் மீறி, பெண்களால் நெகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்பதைப் பார்க்கும்போது, நான் மிகவும் நம்பிக்கையுடனும் பெருமையுடனும் உணர்கிறேன்.”

மேரி கிறிஸ்டினா கோலோ

ஹெய்டி க்ரோட்டர்

ஹெய்டி க்ரோட்டர், பிரிட்டன்

மாற்றுத்திறனாளிகளுக்காக பிரசாரம் செய்பவர்

டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்களைப் பற்றிய எண்ணத்தை மாற்ற ஹெய்டி க்ரோட்டர் பிரசாரம் செய்கிறார். பிறக்கும் வரை கருவை கலைக்க அனுமதிக்கும் சட்ட விவகாரத்தில் இவர் பிரிட்டன் அரசாங்கத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அரசின் நடவடிக்கை பாரபட்சமானது என்று கூறினார். இவரது முறையீடுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. பிறக்காத குழந்தை மற்றும் பெண்களின் உரிமைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துவதை இந்த சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நவம்பரில், க்ரோட்டர் தனது மேல்முறையீட்டு வாய்ப்பை இழந்தார். ஆனாலும் இவரும் இவரது குழுவும் “போராட்டத்தைத் தொடர” திட்டமிட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாகவும் கூறினார்.

பாசிட்டிவ் அபௌட் டவுன் என்ற அமைப்பின் புரவலர் இவர். மேலும் நேஷனல் டவுன் சிண்ட்ரோம் பாலிசி குழுமத்தின் அதிகாரியாகவும் இருக்கிறார். இவரது புத்தகமான ‘ஐ ஆம் ஜஸ்ட் ஹெய்டி’ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது.

டவுன் சிண்ட்ரோம் பற்றி கர்ப்பிணிகள் சரியான தகவலைப் பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்கள் காலத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும், நாம் உண்மையில் யார் என்பதைப் பார்க்கவும் நான் விரும்புகிறேன்!

ஹெய்டி க்ரோட்டர்

யூலியா சச்சுக்

யூலியா சச்சுக், யுக்ரேன்

மாற்றுத்திறனாளி தலைவர்

யுக்ரேனிய மனித உரிமை பாதுகாவலரான யூலியா சச்சுக், மாற்றுத்திறனாளி பெண்கள் தலைமையிலான ஃபைட் ஃபார் ரைட் அமைப்பின் தலைவராக உள்ளார். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுத்தவுடன் அவர் அவசரகால மீட்புக்குழுவை தொடங்கினார், மாற்றுத்திறனாளிகளாக உள்ள ஆயிரக்கணக்கான யுக்ரேனியர்களின் உயிரைக் காக்க அவர்களை சர்வதேச அமைப்புகளின் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றும் திட்டங்களை ஒருங்கிணைக்க 24 மணிநேரமும் வேலை செய்தார்.

சச்சுக், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களை முடிவெடுப்பதில் அதிகாரம் மிக்கவர்களாக ஆக்குவதில் ஆர்வம் கொண்டவர். இவர் ஒபாமா அறக்கட்டளையின் ‘லீடர் – ஐரோப்பா’ திட்டத்தில் பங்கேற்று வருகிறார். 2020இல் தேசிய மனித உரிமைகள் விருது பரிசு பெற்றவர் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களின் உரிமைகளுக்கான ஐநா குழுவில் யுக்ரேனிய பிரதிநிதியாக உள்ளார்.

அய்னுரா சாகின்

அய்னுரா சாகின், கிர்கிஸ்தான்

பொறியாளர்

கணினி பொறியாளர், சுற்றுச்சூழல் பெண்ணியவாதி மற்றும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என அய்னுரா சாகின் சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க தனது திறமைகளை பயன்படுத்துகிறார். கழிவு உற்பத்தியாளர்களை – வீடுகள் மற்றும் தனிநபர்கள் முதல் உணவகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமான தளங்கள் வரை – மறுசுழற்சி செய்பவர்களுடன் இணைக்கும் ஒரு செயலியான Tazar ஐ இவர் நிறுவினார். இந்தச் செயலி, நிலப்பரப்புகளில் சேரும் கழிவுகளைக் குறைப்பதையும், இறுதியில் மத்திய ஆசிய நாடுகளில் நிலைத்தன்மையின் சிக்கலைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

கிர்கிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளுக்கு நடத்தப்பட்டகுறியீட்டு முறை மற்றும் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) பட்டறைகளை இவர் வழிநடத்தியுள்ளார்.

இன்று பெண்களின் தலைமைத்துவம் மற்றும் காலநிலை மறுமொழிகளில் பங்கேற்பு இல்லாமல், நிலையான கிரகம் மற்றும் பாலின சமமான நாளைக்கான தீர்வுகள் நிறைவேறுவது சாத்தியமில்லை.

அய்னுரா சாகின்

சாரா சான்

சாரா சான், தெற்கு சூடான்

என்பிஏ மதிப்பீட்டாளர்

முன்னாள் தொழில்முறை கூடைப்பந்து வீராங்கனையான சாரா சான் இப்போது ஆஃப்ரிக்கா முழுவதும் உள்ள பதின்ம வயதினருக்கு வழிகாட்டி ஆக இருந்து விளையாட்டை கற்பித்து வருகிறார். என்பிஏ டொராண்டோ ராப்டர்ஸ் கூடைப்பந்து அணிக்காக ஆஃப்ரிக்காவில் பயிற்சி வழங்கும் முதல் பெண் மேலாளர் ஆகவும் உள்ளார்.

சூடானின் கார்ட்டூமில் நடந்த போரிலிருந்து தப்பி ஓடிய பிறகு, இவரது இவரது குடும்பமும் கென்யாவுக்கு குடிபெயர்ந்தனர். அங்குதான் சானின் கூடைப்பந்து வாழ்க்கை தொடங்கியது. இவர் டென்னசி, ஜாக்சனில் உள்ள யூனியன் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாட ஊக்கத்தொகை பெற்றார். ஆஃப்ரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழில் ரீதியாக விளையாடினார். சான் ஹோம் அட் ஹோம்/அபெடியட் அறக்கட்டளையை நிறுவினார். சிறுவயது திருமணங்களை எதிர்த்துப் போராடும் தன்னார்வ தொண்டு அமைப்பாக , இது சிறார் கல்விக்காக குரல் கொடுத்து வருகிறது. இளைஞர்கள் கல்வி கற்பதற்கு விளையாட்டுகளை பயன்படுத்துகிறது.

உங்களைப் பற்றி நீங்கள் என்ன நம்புகிறீர்களோ, அதுவே உங்கள் கனவுகள் மற்றும் அபிலாஷைகளுக்கு தகுதியான எதிர்காலத்தை உங்களுக்கு வழங்கும்.

சாரா சான்

ரோஸா சாலிஹ்

ரோஸா சாலிஹ், ஸ்காட்லாந்து

அரசியல்வாதி

மே 2022இல், ரோஸா சாலிஹ் கிளாஸ்கோ நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அகதி ஆனார். ஒரு இளம் பெண்ணாக ஸ்காட்லாந்திற்கு வந்ததன் மூலம் இவரது குடும்பம் இராக்கை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இப்போது கிரேட்டர் பொல்லாக் வார்டுக்கான என்என்பி கவுன்சிலர் ஆக இருக்கும் சாலிஹ் தனது பதின்ம வயதிலிருந்தே அகதிகள் உரிமைகளுக்காக பிரசாரம் செய்தார். இவரதும் சக பள்ளி நண்பர்களும் சேர்ந்து ஒரு நண்பர் தடுத்து வைக்கப்பட்டதை எதிர்த்துப் போராடினர்.

இவர்களின் பிரசார இயக்கமான ‘கிளாஸ்கோ பெண்கள்’, அடைக்கலம் கோருவோர் நடத்தப்படும் விதம் தொடர்பாக நடத்திய போராட்டம் தேசிய கவனத்தை ஈர்த்தது. சாலிஹ் குர்திஸ்தானுடனான ஸ்காட்டிஷ் ஆதரவை காட்ட ஒரு மனித உரிமை செயல்பாட்டாளராக துருக்கியில் உள்ள குர்திஷ் பகுதிகளைப் பார்வையிட்டார்.

மோனிகா சிம்ப்சன்

மோனிகா சிம்ப்சன், அமெரிக்கா

கருக்கலைப்பு உரிமை சட்ட செயல்பாட்டாளர்

தென் அமெரிக்க மாகாணங்களில் கருக்கலைப்பு நீதிக்காகப் போராடும் பெண்கள் அமைப்பான சிஸ்டர் சாங்கின் நிர்வாக இயக்குநர் மோனிகா சிம்ப்சன். பாலியல் மற்றும் கருக்கலைப்பு சுதந்திரத்திற்காகப் போராடுவதில் இவர் கவனம் செலுத்துகிறார். இந்த ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரோ – வேட் வழக்கின் முந்தைய தீர்ப்பை ரத்து செய்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் கவனம் பெற்றது. அந்த தீர்ப்பு சட்டபூர்வ கருக்கலைப்புக்கான அணுகலை நாடு முழுவதும் உரிமையாக்கியது.

சிம்ப்சன் ஒரு பாடகர் மற்றும் பேச்சுக் கலைஞரும் ஆவார். தமது கலையுடன் செயல்பாட்டை இவர் இணைக்கிறார். இவர் ஒரு சான்றளிக்கப்பட்ட டூலா மற்றும் பிளாக் மாமாஸ் மேட்டர் அல்லையான்ஸின் நிறுவனக்குழு உறுப்பினர் ஆக இருக்கிறார். கருப்பின மகப்பேறு ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறார்.

நானா டார்கோவா செக்கியாமா

நானா டார்கோவா செக்கியாமா, கானா

நூலாசிரியர்

பப்ளிஷர்ஸ் வீக்லியின் திகைப்பூட்டும் மதிப்பாய்வில், இவரது ‘தி செக்ஸ் லைவ்ஸ் ஆஃப் ஆ_ப்ரிக்கன் வுமென்’ புத்தகத்தில் இடம்பெற்ற தகவல்கள் ‘பாலியல் விடுதலைக்கான தேடலின் வியப்பூட்டும் தகவல்கள்’ என்று விவரிக்கப்பட்டுள்ளன. கண்டம் மற்றும் உலகளாவிய புலம்பெயர்ந்தோரின் பலதரப்பட்ட குரல்களை பிரதிபலிக்கும் வகையில், இந்த ஆண்டின் சிறந்த புத்தகங்களில் ஒன்றாக ‘தி எகனாமிஸ்ட்’ இவரை பட்டியலிட்டுள்ளது.

எழுத்தாளரும் பெண்ணிய செயல்பாட்டாளருமான நானா டார்கோவா செக்கியாமாவும், ‘அட்வென்ச்சர்ஸ் ஃப்ரம் தி பெட்ரூம் ஆஃப் ஆப்ரிக்கன் வுமென்’ – என்ற இணையதளம், போட்காஸ்ட் மற்றும் ஆப்ரிக்க பெண்களின் பாலியல் மற்றும் இன்பம் பற்றிய அனுபவங்களை விவரிக்கும் உள்ளடக்கத்தை உணர்த்தும் திருவிழாவின் இணை நிறுவனராக உள்ளார்.

எல்லா பெண்களும் சுயமாக இயங்குவதற்கான இடத்தை உருவாக்குவதில் பெண்ணியவாதிகள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் நாங்கள் ஒரு பின்னடைவை எதிர்கொள்கிறோம். இது எங்களின் ஆதாயங்களின் விளைவாகும் – இந்த பின்னடைவு குறிப்பாக பாலினம் மற்றும் பாலினத்திற்கு இணங்காதவர்களை பாதிக்கச் செய்கிறது.

நானா டார்கோவா செக்கியாமா

சுவதா செலிமோவிக்

சுவதா செலிமோவிக், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா

அமைதியை வலியுறுத்தி பிரசாரம் செய்பவர்

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா போரால் அழிந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. இப்போது சுவாடா செலிமோவிக் இப்போது ஒரு கிராமத்தில் வசிக்கிறார். தாயகம் திரும்பிய மற்ற இடம்பெயர்ந்த பெண்களுடன் சேர்ந்து மீண்டும் அந்த பகுதியை கட்டியெழுப்ப உதவினார். கணவரை இழந்த மற்றும் சிறு குழந்தைகளுக்குத் தாயான செலிமோவிக், அமைதி வழிச் செயல்பாட்டையும் பெண்களுக்கு அதிகாரமளிப்பதையும் நோக்கமாகக் கொண்ட அனிமா என்ற அமைப்பை நிறுவினார்.

2008இல் இவரது கணவரின் எச்சங்கள் வெகுஜன புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அவர் போர்க்குற்ற நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார். தன்னை போல பாதிக்கப்பட்ட பிற பெண்களையும் அவ்வாறே செய்ய ஊக்குவித்தார். இன்று, போர் அதிர்ச்சியை எதிர்கொள்ளும் பெண்களுக்கான பட்டறைகளை அனிமா அமைப்பு நடத்துகிறது. மேலும் சுயமாக தயாரிக்கும் பொருட்களை தாங்களே விற்கும் வாய்ப்புகளையும் அனிமா அமைத்துக் கொடுத்துள்ளது.

பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

பிரியங்கா சோப்ரா ஜோனஸ், இந்தியா

நடிகை மற்றும் தயாரிப்பாளர்

60க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் பாலிவுட்டின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களில் ஒருவர். 2002இல் இவரது திரைப்பட அறிமுகத்திற்குப் பிறகு, இந்த முன்னாள் உலக அழகிக்கு ஹாலிவுட்டில் திருப்பம் ஏற்பட்டது. அமெரிக்க தொடரில் (குவாண்டிகோ, 2015) முக்கிய வேடத்தில் நடித்த முதல் தெற்காசிய நடிகையாக பிரியங்கா வரலாறு படைத்தார்.

இவரது ஹாலிவுட் நடிப்பு முத்திரைகளில் ‘இஸ்ஸன்ட் இட் ரொமான்டிக்’ மற்றும் ‘தி மேட்ரிக்ஸ் ரீசரக்ஷன்ஸ்’ ஆகியவை முக்கியமானவை. இவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தியாவில் திரைப்படங்களைத் தயாரிக்கிறார். யுனிசெஃப் நல்லெண்ண தூதராகவும் இருக்கிறார். குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பெண் கல்விக்காக பிரசாரம் செய்கிறார்.

MeToo இயக்கம் மற்றும் கூட்டுப் பெண்களின் குரல்கள் ஒன்று கூடுவது, ஒருவரையொருவர் பாதுகாத்துக்கொள்வது மற்றும் ஒருவருக்கு ஒருவர் துணை நிற்பது – ஒற்றுமையில் மிகவும் சக்திவாய்ந்த ஒன்று உள்ளது.

பிரியங்கா சோப்ரா ஜோனஸ்

சஞ்சிதா இஸ்லாம் சோயா

சஞ்சிதா இஸ்லாம் சோயா, வங்கதேசம்

மாணவர்

உலகிலேயே அதிக குழந்தைத் திருமண விகிதங்களைக் கொண்ட நாடுகளில் வங்கதேசமும் ஒன்று. ஆனால் சஞ்சிதா இஸ்லாம் சோயா அதை மாற்ற முயற்சிக்கிறார். இவரது சொந்த தாய் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். ஆனால் குழந்தை திருமணத்தின் விளைவுகள் பற்றிய பள்ளி விளக்கக்காட்சியால் சோயா ஈர்க்கப்பட்ட பிறகு, இவர் நடிக்க முடிவு செய்தார்.

இவர் தமது தோழிகள், ஆசிரியர்கள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுடன் சேர்ந்து தங்களை காஷ்ஃபோரிங் (வெட்டுக்கிளிகள்) என்று அழைத்துக் கொண்டு, குழந்தைத் திருமணம் தொடர்பான சம்பவங்கள் குறித்து போலீஸில் புகாரளிக்கின்றனர். பல்கலைக்கழகத்தில் வெட்டுக்கிளிகள் பிரசாரத்துடன் சோயாவின் பிரசாரம் நிற்கவில்லை. இவர் குழுவின் புதிய உறுப்பினர்களுக்கும் வழிகாட்டியாக இருக்கிறார். இதுவரை 50 குழந்தை திருமணங்களை இவரது குழு தடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சினேகா ஜவாலே

சினேகா ஜவாலே, இந்தியா

சமூக சேவகர்

2000 டிசம்பரில் அதிக வரதட்சணையை வழங்க இவரது பெற்றோர் தவறியதால், சினேகா ஜவாலேயின் கணவர் அவரை மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக் கொளுத்தினார். அந்த குடும்பத்தினர் போலீஸில் புகார் தரவில்லை. பிறகு தனது கணவர் தங்கள் மகனுடன் வெளியேறினர். அதன் பிறகு, முகத்தை மக்கள் பார்க்க அவசியமற்ற பணிகளாக கருதப்படும் டாரட் கார்டு ரீடர் எனப்படும் அதிர்ஷ்ட அட்டை படிப்பவராக, திரைக்கதை எழுத்தாளராக இவர் இருக்கிறார். இதன் மூலம் தனது வாழ்வை மீள்கட்டியெழுப்ப சினேகா தீர்மானித்தார்.

தற்போது சமூக சேவகியாக இருக்கும் ஜவாலே, 2012ஆம் ஆண்டு டெல்லி கூட்டுப் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைக்க பயன்படுத்தப்படும் நிர்பயா என்ற பெயரிலான நாடகத்தில் நடிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டார். உலகெங்கிலும் உள்ளவர்கள் முன்பு நடிப்பது, இவரது பயத்தை போக்க உதவியது.

“கடந்த 10 ஆண்டுகளில், தீக்காயம் மற்றும் அமில வீச்சு போன்றவற்றில் இருந்து உயிர் பிழைப்பவர்கள் மீதான சமூகத்தின் அணுகுமுறை மாறிவிட்டது. உலக அழகி அல்லது பிரபஞ்ச அழகி என்று நான் என்னைக் கருதவில்லை. நான் அழகாக இருக்கிறேன் என்று சொல்கிறேன். அதனால் நான் வாழ்கிறேன்.”

சினேகா ஜவாலே

நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப்

நசானின் ஜாகரி-ராட்க்ளிஃப், பிரிட்டன்/இரான்

தொண்டு ஊழியர்

“தாங்கள் செய்யாத ஒன்றுக்காக பணயக்கைதியாகவோ அல்லது சிறையில் அடைக்கவோ எவரும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உலகம் ஒன்றுபட வேண்டும்” – இரானிய அதிகாரிகளால் கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்ட பிறகு பிரிட்டிஷ் இரானியரான நசானிடம் இருந்து வந்த வார்த்தைகள் இவை. இவரது கணவர் ரிச்சர்டின் நீண்டகால பிரசாரத்திற்குப் பிறகு, இவரை விடுவிக்கவும், இரானுடனான வரலாற்றுபூர்வ கடன் சர்ச்சையைத் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் தள்ளப்பட்டது.

நசானின் 2016இல் தனது மகளுடன் விடுமுறையில் இருந்தபோது இரானில் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அழுத்தம் தருவதற்காக ஒரு ராஜீய பகடைக்காய் போல பிணைக் கைதியாக வைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் இவர் காவலில் வைக்கப்பட்டார் – இரானிய ஆட்சியை தூக்கியெறிய முயன்றதாகக் கூறி புரட்சிகர நீதிமன்றத்தால் ஆரம்பத்தில் தண்டிக்கப்பட்டார். இவரது முதல் தண்டனை 2021இல் முடிவடைந்தபோது, ​​இரண்டாவது தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு ராஜீய தீர்வு எட்டப்படும் வரை இரானிலேயே அவர் வைக்கப்பட்டார். ஜாகரி-ராட்க்ளிஃப் அனைத்து குற்றச்சாட்டுகளையும் வலுவாக மறுத்தார். மேலும் தனது கணவருடன் சேர்ந்து ஒரு நினைவுக் குறிப்பை எழுதி வருகிறார்.

ஆன்ஸ் ஜாபெர்

ஆன்ஸ் ஜாபெர், துனீசியா

டென்னிஸ் வீரர்

2022 விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் ஒரு வரலாறை படைத்த பிறகு, துனீசிய டென்னிஸ் நட்சத்திரம் ஆன்ஸ் ஜாபெர், ஓபன் சகாப்தத்தில் கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டிய முதல் அரபு அல்லது ஆஃப்ரிக்க வீராங்கனை ஆனார். சில மாதங்களுக்குப் பிறகு, இவர் யுஎஸ் ஓபனின் இறுதிப் போட்டிக்கும் முன்னேறினார்.

28 வயதாகும் இவர், தனது மூன்று வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கினார். மகளிர் டென்னிஸ் சங்கம் (WTA) தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார் – வீரரோ வீராங்கனையோ ஒரு ஆஃப்ரிக்க அல்லது அரேபியர் இதுவரை பெற்ற மிக உயர்ந்த நிலையாக இது கருதப்படுகிறது. ஜாபெர் மூன்று முறை கேரியர் சிங்கிள்ஸ் பட்டங்களை வென்றுள்ளார். மேலும் புதிய தலைமுறை வீரர்களை ஊக்கப்படுத்திய பெருமைக்குரியவர்.

பார்க் ஜி-ஹியூன்

பார்க் ஜி-ஹியூன், தென் கொரியா

அரசியல் சீர்திருத்தவாதி

ஒரு பல்கலைக்கழக மாணவியாக, பார்க் ஜி-ஹியூன் அநாமதேயமாக தென் கொரியாவின் ‘Nth அறைகள்’ எனப்படும் மிகப்பெரிய ஆன்லைன் பாலியல் குற்ற வளையங்களை வெளிப்படுத்த உதவினார். இந்த ஆண்டு தனது அனுபவத்துடன் மக்களை சந்திக்க அரசியலில் இறங்கினார். இளம் பெண் வாக்காளர்களை அணுகினார்.

அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி தோல்வியடைந்தபோது, இவரை அந்த கட்சி மேலிடம் இணை இடைக்கால தலைவராக்கியது. டிஜிட்டல் பாலியல் குற்றங்களைக் கையாள்வதில் கவனம் செலுத்திய பெண்கள் குழுவிலும் இவர் இருந்தார். கடந்த ஜூனில் இவரது கட்சி மேலும் சில சரிவை சந்தித்தது. அதில் அலுவல்பூர்வமாக இவருக்கு தொடர்பு இல்லை. ஆனாலும், பதவியை விட்டு விலகினார். அரசியலில் பாலின சமத்துவத்தை வலியுறுத்துவதில் இன்னும் இவர் உறுதி காட்டுகிறார்.

உலகளவில் டிஜிட்டல் பாலியல் குற்றங்கள், பெண்களின் உரிமைகளை அச்சுறுத்துகின்றன. இந்த பிரச்சனையை நாம் ஒற்றுமையுடன் தீர்க்க வேண்டும்.

பார்க் ஜி-ஹியூன்

யானா ஜின்கேவிச்

யானா ஜின்கேவிச், யுக்ரேன்

அரசியல்வாதி மற்றும் முன்கள மருத்துவ தன்னார்வலர்

போர்க்களத்தில் உயிர்களைக் காப்பாற்றும் ‘ஹாஸ்பிட்டல்லர்ஸ்’ ஒரு தன்னார்வ அமைப்பாகும். யானா ஜின்கேவிச் தலைமையில், இந்த அமைப்பில் உள்ளவர்கள் போர்க்களத்தில் சிக்கியவர்களை வெளியேற்ற உதவி செய்கிறார்கள். பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு ஜின்கேவிச் ஒரு மருத்துவ தொண்டரானார். 2014இல் தன்னைப் போன்ற தன்னார்வலர்கள் அணியை நிறுவி பாதிக்கப்பட்டவர்களை மீட்க உதவி வருகிறார்.

இவர் தனிப்பட்ட முறையில் 200 காயமடைந்த வீரர்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளார். இவரது குழு காயமடைந்த வீரர்கள் மற்றும் குடிமக்களுக்கு முதலுதவி செய்து வருகிறது. மருத்துவ பயிலரங்கை நடத்துகிறது. இவரது குழுவினர் சுமார் 6,000 பேரை போர் பகுதிகளில் இருந்து வெளியேற்றி இருக்கிறது. 27 வயதாகும் இவர் யுக்ரேனிய நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினர்களில் ஒருவர். ராணுவ மருத்துவ துணைக்குழுவின் தலைவராகவும் இருக்கிறார்.

ரீமா ஜுஃபாலி

ரீமா ஜுஃபாலி, செளதி அரேபியா

பந்தய ஓட்டுநர்

2018இல், ரீமா ஜுஃபாலி செளதி அரேபியாவின் முதல் பெண் தொழில்முறை கார் பந்தய ஓட்டுநராகி வரலாறு படைத்தார். இந்த ஆண்டு, தனது சொந்த அணியான தீபா மோட்டார் ஸ்போர்ட்டை நிறுவி, சர்வதேச ஜிடி ஓபனில் போட்டியிடவும் மோட்டார் பந்தயத்தில் செளதி அரேபியாவின் பங்கேற்பை மேம்படுத்தவும் முயன்றார். தமது அணி உதவியுடன் பல்வேறு கல்வி வாய்ப்புகள் மற்றும் விளையாட்டில் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்களை உருவாக்குகிறார்.

உலகெங்கிலும் உள்ள மற்ற பெண் பந்தய ஓட்டுநர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்கும் ஜுஃபாலி, மற்றொரு முதல் இடமாக மதிப்புமிக்க Le Mans என்ற 24 மணி நேர பந்தயத்தில் தீபா மோட்டார் ஸ்போர்ட்ஸுடன் இணைந்து போட்டியிட விரும்புகிறார்.

சமூகத்தில் பெண்கள் பற்றி ஒரே மாதிரியாக சிந்திக்கும் போக்கு இருக்கிறது. அர்த்தமுள்ள மற்றும் நீடித்த மாற்றம் நிகழ வேண்டுமானால் அது வீட்டில் இருந்தும் சமூகத்திலிருந்தும் வர வேண்டும்.

ரீமா ஜுஃபாலி

சஹ்ரா ஜோயா

சஹ்ரா ஜோயா, ஆஃப்கானிஸ்தான்

பத்திரிகையாளர்

தாலிபன் ஆளுகையின் கீழ் ஆறு ஆண்டுகளாக, சஹ்ரா ஜோயா ‘முகமது’ ஆனார். பள்ளிக்குச் செல்வதற்காக ஒரு பையனாக உடை அணிந்தார். 2001ஆம் ஆண்டில் அமெரிக்க தலைமையிலான படைகள் தாலிபன்களை வீழ்த்தியபோது மீண்டும் இவர் பள்ளிக்கு சஹ்ராவாக திரும்பினார். 2011இல் ஒரு பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கினார். செய்தி அறையில் பணியாற்றும் ஒரே பெண் நிருபராக விளங்கினார்.

ஆப்கானிஸ்தானின் முதலாவது பெண்ணிய செய்தி நிறுவனமான ருக்ஷானா மீடியாவின் நிறுவனர் இவர். தாலிபன்களால் கல்லெறிந்து கொல்லப்பட்ட 19 வயது இளைஞனின் பெயரை இந்நிறுவனம் கொண்டுள்ளது. ஜோயா 2021இல் ஆஃப்கானிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போடு நாட்டை விட்டு வெளியேறி பிரிட்டனில்இருந்தபடி ருக்ஷானா மீடியாவை நடத்தி வருகிறார். இவர் கேட்ஸ் அறக்கட்டளையின் ‘2022 சேஞ்ச்மேக்கர்’ விருதை வென்றார்.

வார்த்தைகளின் மென்மையான சக்தியை நான் நம்புகிறேன், பெண்களுக்கு எதிரான அநீதிகளைப் பற்றி நாம் பேச வேண்டும்.

சஹ்ரா ஜோயா

எஃப்ராட் டில்மா

எஃப்ராட் டில்மா, இஸ்ரேல்

தன்னார்வலர்

இஸ்ரேலிய காவல்துறையில் முதல் திருநங்கை தன்னார்வலராக, எஃப்ராட் டில்மா அவசர அழைப்புகளுக்கு பதிலளிகக் கூடியவராக உள்ளார். போலீஸ் படைகளுக்கும் LGBTQ+ சமூகத்திற்கும் இடையிலான உறவை மேம்படுத்துவதற்காக இவர் பணியாற்றுகிறார். டில்மா தனது குடும்பத்தினரால் நிராகரிக்கப்பட்டு, காவல்துறையின் துன்புறுத்தலை அனுபவித்ததால், இளம் வயதிலேயே இஸ்ரேலை விட்டு வெளியேறினார். ஐரோப்பாவில் பெரும்பாலும் தடை செய்யப்பட்டு இருந்த பாலின மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை 1969இல் காசாபிளாங்காவில் இவர் மேற்கொண்டார்.

பெர்லினில் விமான பணிப்பெண்ணாக சேர்ந்து திருமணம் செய்து கொண்டார். விவாகரத்துக்குப் பிறகு 2005இல் இஸ்ரேலுக்கு திரும்பினார். பாலியல் சிறுபான்மையினருக்கு மிகவும் வரவேற்கத்தக்க இடமாக இஸ்ரேல் மாறி இருப்பதைக் கண்டார். அதுவே காவல்துறையில் தன்னார்வ தொண்டு செய்ய இவரை ஊக்குவித்தது.

கிசானெட் டெட்ரோஸ்

கிசானெட் டெட்ரோஸ், எரிட்ரேயா

கல்வி தொழில்முனைவோர்

“பெலஸ் புபு என்பது எரிட்ரேய குழந்தைகளுக்கு அவர்களின் மொழி மற்றும் கலாசாரத்தை கற்றுக்கொடுக்கும் ஒரு யூடியூப் சேனல். நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் தொழில்முனைவோராகவும் இருந்து இதை நிறுவியவர் கிசானெட் டெட்ரோஸ். எத்தியோப்பியாவில் பிறந்து வளர்ந்த அவர், ஒருவரின் வேர்களுடன் இணைந்திருப்பதை உணர மொழியைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை ஊக்குவிப்பவர்.

இவரது தயாரிப்புக் குழு டிஜிட்டல் நிகழ்ச்சியை தயாரிக்க எரிட்ரேயா, உகாண்டா, காங்கோ ஜனநாயக குடியரசு ஆகியவற்றிலிருந்து சுயமாக கற்பிக்கக் கூடியவர்களின் குரல்களையும் டிஜிட்டல் கலைஞர்களையும் ஒன்றிணைக்கிறது. இந்த காணொளியின் பார்வையாளர்களாக எரிட்ரேயா மற்றும் எத்தியோப்பியாவை சேர்ந்த டிக்ரின்யா மொழி பேசும் பெற்றோர் மற்றும் அவர்களின் குழந்தைகள் உள்ளனர். உகாண்டாவின் கம்பாலாவில் அகதிகளுக்கான முதல் பெலஸ் புபு கிட்ஸ் திருவிழாவையும் டெட்ரோஸ் ஏற்பாடு செய்தார்.

சைமன் டெபெட்

சைமன் டெபெட், பிரேஸில்

பிரேஸிலிய செனட் சபை உறுப்பினர்

நாட்டின் ஆழமாகி வரும் துருவமுனைப்பைக் குறைக்கும் ஒரு மத்தியவாத பிரேஸிலியராக கருதப்படுபவர் செனட்டர் சைமன் டெபெட். இந்த ஆண்டு அதிபர் போட்டியில் மூன்றாவது இடத்தைப் பிடித்தார். 2002இல் மாகாண பிரதிநிதியாகவும், 2004 மற்றும் 2008இல் சொந்த ஊரான ட்ரெஸ் லாகோவின் மேயராகவும் தேர்வானார். 2014இல், இவர் 52% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று செனட் சபைக்கு தேர்வானார்.

செனட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதிக் குழுவின் தலைவராக இருந்த முதல் பெண்மணி இவர். செனட் சபையின் முக்கிய குழுவாக இது கருதப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் பேராசிரியை ஆக இருந்த டெபெட், பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டுக் குழுவின் தலைவராகவும் இருந்தார்.

எதிர்காலம் பெண் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும், ஒரு பெண்ணின் இடம் அவள் விரும்பும் இடத்தில் உள்ளது.

சைமன் டெபெட்

ஆலிஸ் படாக்ஸோ

ஆலிஸ் படாக்ஸோ, பிரேஸில்

பூர்வகுடி செயல்பாட்டாளர்

காலநிலை பிரச்சாரகர், பத்திரிகையாளர் மற்றும் காலநிலை மாற்ற விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தக்கூடியவர். ஆலிஸ் படாக்ஸோ பிரேஸில் அரசின் சமீபத்திய சுற்றுச்சூழல் மற்றும் விவசாய கொள்கைகள். பூர்வகுடி நில உரிமைகளை எவ்வாறு அச்சுறுத்துகின்றன என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இவர் நோக்கமாகக் கொண்டுள்ளார். படாக்ஸோ – மக்களுக்கான குரலாக, பழங்குடி சமூகங்கள் பற்றிய காலனித்துவக் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்ற விரும்புபவர். சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர்களின் கொலைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் விரும்புபவர்.

ஆலிஸ் படாக்ஸோ கொலபோராவின் பத்திரிகையாளர். இவரது யூடியூப் சேனலான Nuhé, பிரேஸில் பழங்குடி மக்களின் எதிர்ப்பாற்றலை குறிப்பதாக உள்ளது.

Malala Yousafzai

2021 வெற்றியாளர், கல்விக்கான செயல்பாட்டாளர் மலாலா யூசுப்சாயால் முன்மொழியப்பட்டவர்.

“இந்த ஆண்டுக்கான பிபிசி 100 பெண்கள் பட்டியலுக்கு ஆலிஸ் படாக்ஸோவை பரிந்துரைப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். காலநிலை நடவடிக்கை, பாலின சமத்துவம் மற்றும் பூர்வீக உரிமைகளுக்காக போராடுவதில் ஆலிஸின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஒரு நிலையான மற்றும் மிகவும் சமமான உலகை எட்ட உதவும் என்ற நம்பிக்கையை எனக்கு அளிக்கிறது.”

சிரிஷா பண்ட்லா

சிரிஷா பண்ட்லா, இந்தியா

விமானப் பொறியாளர்

சிரிஷா பண்ட்லா 2021இல் நடந்த ‘யூனிட்டி 22’ என்ற விண்வெளி பணியின் ஒரு பகுதியாக விண்வெளியின் விளிம்புவரை சென்றவர். விர்ஜின் கேலக்டிக்கின் முதல் முழு குழுவின் அங்கமாக, துணை சுற்றுப்பாதையில் விண்வெளிப் பயணம் செய்தார். இதன் மூலம் விண்வெளிக்குச் செல்லும் இந்தியாவில் பிறந்த இரண்டாவது பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.

சிறு வயதிலேயே விண்வெளியில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட பண்ட்லா, அமெரிக்காவில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் படிக்கச் சென்றார். அவர் இப்போது விர்ஜின் கேலக்டிக்கிற்கான அரசாங்க விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக உள்ளார். விர்ஜின் கேலக்டிக்கின் விண்கலனில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சோதனைக்காக வாடிக்கையாளர்களை விண்வெளிக்கு அனுப்புவேத இந்த விண்வெளி திட்டம்.

Sunny Leone

2016 வெற்றியாளரான நடிகை சன்னி லியோனால் பரிந்துரைக்கப்பட்டார்.

“ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் துறையில், சிரிஷா தனது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் எல்லாவற்றையும் சமாளித்து முன்னேறிச் செல்வது எனக்கும், அதை விட முக்கியமாக, இதே போன்ற கனவுகளைக் கொண்ட அனைத்து இளம் பெண்களுக்கும் ஒரு உத்வேகத்தைத் தருகிறது.”

வேல்மாரிரி பம்பாரி

வேல்மாரிரி பம்பாரி, இந்தோனீசியா

செயல்பாட்டாளர்

இந்தோனீசியாவின் தொலைதூர பகுதியில் பணிபுரியும் வேல்மரிரி பம்பாரி, மத்திய சூலவேசி பகுதியில் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் போராடி வருகிறார். பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கும் சடங்கை மீறி இயங்குவதற்கு உள்ளூர் கவுன்சில் உறுப்பினர்களை இவர் இணங்கச் செய்துள்ளார்.

உள்ளூர் சட்டத்தில், “கிராமத்தை கழுவுதல்” என்ற பெயரில் தங்கள் பகுதியின் பாரம்பரிய மதிப்புகளை மாசுபடுத்தியதாகக் கருதப்படும் பாலியல் வல்லுறவு குற்றவாளிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த விதி பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொருந்தும். வேல்மாரிரியின் பிரசாரத்தின் பயனாக, பாலியல் வன்முறைகள் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், உதவிக்காக காவல்துறையினரால் அடிக்கடி தொடர்பு கொள்ளப்படும் முதல் நபர் ஆகியிருக்கிரார் பம்பாரி. இந்த ஆண்டு பல வழக்குகளை அவர் சமாளித்தார்.

நான் மாற்றுத்திறனாளி ஆக இருந்தாலும், என் சுற்றுப்புறத்தில் உள்ள பெண்களுக்கு அவர்களுக்கு நிதி சுதந்திரத்தை அளிக்கும் வாய்ப்புகளை உருவாக்கி அவர்களுக்கு அதிகாரம் கிடைக்க எனது ஆற்றலைச் செலவிட விரும்புகிறேன்.

வேல்மாரிரி பம்பாரி

நிலோஃபர் பயானி

நிலோஃபர் பயானி, இரான்

சூழலியலாளர்

2018ஆம் ஆண்டில் இரானில் அழிந்து வரும் உயிரினங்களை கண்காணிக்க கேமராக்களைப் பயன்படுத்திய பிறகு தடுத்து வைக்கப்பட்டிருந்த பல சுற்றுச்சூழலியலாளர்களில் நிலூஃபர் பயானியும் ஒருவர். கேந்திர நுட்பம் வாய்ந்த அந்த பகுதிகள் பற்றிய ரகசிய தகவல்களை சேகரித்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதில் பயானிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆசிய சிறுத்தைகள் மற்றும் பிற உயிரினங்களை காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்ட பெர்ஷிய வனவிலங்கு பாரம்பரிய அறக்கட்டளையின் திட்ட மேலாளராக பயானி இருந்தார். பிபிசி பெர்ஷிய சேவை சேகரித்த ஆவணத்தில், இரானிய இஸ்லாமிய புரட்சிகர காவலர்கள் தன்னை குறைந்தது 1,200 மணி நேரங்களுக்கும் மேலாக மிகக் கடுமையான மனம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான சித்ரவதைகள் மற்றும் பாலியல் அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளை இரான் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

தரனா பர்க்

தரனா பர்க், அமெரிக்கா

செயல்பாட்டாளர்

#MeToo ஹேஷ்டேக் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வைரலானது, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானோர் தங்கள் பாலியல் துன்புறுத்தல் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இந்த இயக்கம் 2016இல் உயிர் பிழைத்த மற்றும் செயல்பாட்டாளரான தரனா பர்க் என்பவரால் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இவர் #MeToo என்ற சொற்றொடரை உருவாக்கினார்.

நடிகை அலிசா மிலானோவின் 2017ஆம் ஆண்டு ட்வீட்டில் #MeToo என குறிப்பிட்டதும் அது வைரலானது. ​​பெண்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பது பற்றிய உலகளாவிய விவாதத்தை அது தூண்டியது. சம்பவத்தில் தப்பியவர்களுக்கு சக்திவாய்ந்த குரலாக அது மாறியது. பண்பாடு மற்றும் கட்டமைப்பு மாற்றத்துக்காக அவர் தொடர்ந்து போராடுவதால், துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்காக வாதிடுவதில் பர்க் உறுதியாக இருக்கிறார்.

தமனா ஸரியாப் பர்யாணி

தமனா ஸரியாப் பர்யாணி, ஆஃப்கானிஸ்தான்

செயல்பாட்டாளர்

கல்வி மற்றும் வேலைக்கான உரிமைக்கு அழைப்பு விடுக்கும் ஜனவரி பேரணியில் பங்கேற்ற சில நாட்களுக்குப் பிறகு, தமனா ஜரியாப் பரியானி மற்றும் அவரது சகோதரிகள் ஆயுதம் ஏந்திய நபர்களால் அவர்களது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டனர். சர்வதேச கண்டனங்கள் மற்றும் அவர்களின் விடுதலைக்கான அழைப்புகளுக்கு மத்தியில், அந்த குற்றச்சாட்டுகளை தாலிபன்கள் மறுத்தனர்.

தமனா தன் மீதான கைது நடவடிக்கைக்கான எதிர்வினைகளை படம்பிடித்து ஆன்லைனில் வெளியிடுவதில் வெற்றி பெற்றார். வைரலான இவரது காணொளி, காணாமல் போகும் பெண் செயல்பாட்டாளர்கள் தொடர்பான கவனத்தை ஈர்த்தது. விடுவிக்கப்படுவதற்கு முன்பு மூன்று வாரங்களை அவர் காவலில் கழித்தார். இப்போது அவர் ஜெர்மனியில் வசித்து வருகிறார். ஆப்கானிஸ்தானிய பெண்களுக்கு ஆதரவாக அவர் தனது தலையில் போட்டிருந்த ஹிஜாபை தீயிட்டுக் கொளுத்தினார். இது பல ஆஃப்கானிய பெண்களால் சர்ச்சைக்குரியதாகக் காணப்பட்டது.

உலக அளவில் பெண்கள் முன்னேறி வரும் நிலையில், ஆஃப்கானிஸ்தானிய பெண்கள் 20 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பெண்களின் 20 வருட சாதனைகள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன.

தமனா ஸரியாப் பர்யாணி

விக்டோரியா பாப்டிஸ்ட்

விக்டோரியா பாப்டிஸ்ட், அமெரிக்கா

செவிலியர் மற்றும் தடுப்பூசி கல்வியாளர்

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள செவிலியர் விக்டோரியா பாப்டிஸ்ட், தடுப்பூசிகளின் நன்மை பற்றி மக்களுக்குக் கற்பிக்கிறார். கருப்பின சமூகம் மருத்துவத் தலையீடுகளில் ஏன் சந்தேகம் கொள்கிறது என்பதை அவள் புரிந்துகொள்கிறார். 1951இல் கருப்பைவாய்ப் புற்றுநோயால் இறந்த ஹென்றிட்டா லாக்ஸ் என்ற கருப்பின பெண்ணின் வழித்தோன்றலில் வந்தவர் பாப்டிஸ்ட். இவரது அனுமதியின்றி எடுக்கப்பட்ட செல்கள், முதலில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டன.

ஹெலா செல்கள் என்று அழைக்கப்படும் அணுக்கள், மருத்துவ ஆராய்ச்சியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பல தசாப்தங்களாக அது பற்றி அவரது குடும்பத்திற்கு தெரியாது. இப்போது ஹென்றிட்டா லாக்ஸ் அறக்கட்டளையின் ஒரு பகுதியாக, பாப்டிஸ்ட் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஒழிப்புக்கான உலக சுகாதார அமைப்பின் நல்லெண்ண தூதராகவும் உள்ளார்.

ரோயா பிரேயி

ரோயா பிரேயி, இரான்

செயல்பாட்டாளர்

கடந்த செப்டம்பரில், ரோயா பிரேயியின் படம் வைரலானது. இவரது தாயார், 62 வயதான மினூ மஜிதி, இரானில் குர்திஷ் மொழி பேசும் மிகப்பெரிய நகரான கெர்மன்ஷாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பிரேயி தன் தாயின் கல்லறையில் தலை மொட்டையடித்து, தலைமுடியை கைகளில் பிடித்துக்கொண்டு கேமராவை வெறித்துப் பார்த்தபடி இருந்தார்.

22 வயதான குர்திஷ் பெண்ணான மஹ்சா அமினியின் மரணத்தைத் தொடர்ந்து இரான் முழுவதும் பரவியுள்ள அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்கள், குர்திஷ் பிராந்தியத்தில் தொடங்கியது. தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு சர்வதேச ஆதரவைப் பெறுவதற்காக பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்கை இவர் சந்தித்தார்

செல்மா பிளேர்

செல்மா பிளேர், அமெரிக்கா

நடிகை

பாப்-கலாசார கிளாசிக்குகளான க்ரூயல் இன்டென்ஷன்ஸ், லீகல்லி பிளாண்ட், ஹெல்பாய் ஃபிரான்சைஸ் போன்றவற்றில் தமது பாத்திரங்களுக்காக பெயர் பெற்ற செல்மா பிளேர், ஒரு அமெரிக்க திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை.

2018ஆம் ஆண்டில் இவர் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டார். அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காகவும், அவரது உடல்நலம் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதற்காகவும் பாராட்டப்பட்டார். இந்த ஆண்டு, அவர் தனது நினைவுக் குறிப்பான ‘மீன் பேபி’-ஐ வெளியிட்டார். மேலும் இவர் அனைவருக்கும் பயன்படுத்த எளிதான பணிச்சூழலியல் அழகு சாதன பொருட்களை உருவாக்கும் குறிக்கோளைக் கொண்ட திறன்சார் ஒப்பனை பிராண்டின் அங்கமானார்.

நிறைய விஷயங்களுக்காக தீர்மானிக்கப்படக் கூடிய மற்றும் எனது சக்தியை எளிதாக சிதைக்கக் கூடிய கடினமான கடந்த காலத்தைக் கொண்ட பெண் நான். ஆனால் மற்ற பெண்களின் ஆதரவால் நான் இங்கு இருக்கிறேன்.

செல்மா பிளேர்

அல்லா புகச்சேவா

அல்லா புகச்சேவா, ரஷ்யா

இசைக்கலைஞர்

நடிகரும் இசையமைப்பாளருமான அல்லா புகச்சேவா, 250 மில்லியனுக்கும் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவரது 500க்கும் மேற்பட்ட பாடல்கள் மற்றும் 100 ஆல்பங்களின் தொகுப்பில், ‘Tsarina of Russian pop’ கலாசார பிரதிபலிப்பின் உச்சமாகும். இப்போது இசையமைப்பதில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் கூட தனது தெளிவான மெஸ்ஸோ-சோப்ரானோ குரலால் ரசிகர்களிடையே நீங்காமல் இருக்கிறார் அல்லா புகச்சேவா.

இவரது இசைக்காக ரஷ்ய அரசால் பலமுறை கௌரவிக்கப்பட்டார், இருப்பினும் புகச்சேவா பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்திற்கு எதிராகப் பேசினார். சமீபத்தில் யுக்ரைனில் நடந்த போரை கண்டித்து இன்ஸ்டாகிராமில் தனது 3.6 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு இவர் ஒரு செய்தியை வெளியிட்டார். அதற்கு இவருக்கு பாராட்டுகளை மட்டுமின்றி தேச துரோக குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டார்.

பெண்கள் கல்விக்கான அணுகல் மற்றும் நிதி சுதந்திரத்திற்கான போராட்டத்தில் உலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. இருப்பினும், பல நாடுகளில் குடும்ப வன்முறை இன்னும் ஒரு பெரிய பிரச்னை ஆகவே இருக்கிறது.

அல்லா புகச்சேவா

செசி புளோரஸ்

செசி புளோரஸ், மெக்ஸிகோ

செயல்பாட்டாளர்

ஆயுததாரிகள் 2015இல் செசி புளோரஸின் 21 வயது மகன் அலெஜாண்ட்ரோவை அழைத்துச் சென்றனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இவரது மற்றொரு மகன் மார்கோ அன்டோனியோ (31), ஒரு குற்றக் குழுவால் கடத்தப்பட்டார். மெக்ஸிகோவில் வலுக்கட்டாயமாக காணாமல் போனதால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைகளுக்கு என்ன நடந்தது என்பதை அறியாமல் இறந்து விடுவோமோ என்ற பயம் தனது செயல்பாட்டால் உந்தப்பட்டதாக புளோரஸ் கூறுகிறார்.

இந்த ஆண்டு, இவரது நாடு ஒரு பயங்கரமான கட்டத்தை எட்டியது. அதாவது அங்கு ஒரு லட்சம் பேர் இப்போது காணாமல் போயிருப்பதாக ஐ.நா பட்டியலிட்டு, “இது பெரிய விகிதாசாரத்தின் சோகம்” என்று அழைத்துள்ளது. புளோரஸின் தலைமையின் கீழ், மெட்ரெஸ் பஸ்கடோரெஸ் டி சொனோரா (Sonora’s Searching Mothers) என்ற அமைப்பு, காணாமல் போனதாக கருதப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கண்டுபிடிக்க உதவியது.

தைசியா பெக்புலடோவா

தைசியா பெக்புலடோவா, ரஷ்யா

பத்திரிகையாளர்

ஒரு புகழ்பெற்ற ரஷ்ய பத்திரிகையாளர், தைசியா பெக்புலடோவா 2019இல் சுதந்திர ஊடக நிறுவனமான Holod-ஐ நிறுவினார். இந்த அமைப்பு யுக்ரேனில் நடந்த போரைப் பற்றியும், சமத்துவமின்மை, வன்முறை மற்றும் பெண்கள் உரிமைகள் பற்றிய கதைகளை வெளியிடுவது பற்றியும் விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது. சுதந்திர ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறையின் போது, ஏப்ரலில் இவரது இணையதளம் ரஷ்யாவில் அதிகாரிகளால் முடக்கப்பட்டது.

இதற்கு மத்தியிலும் பெக்புலடோவாவும் இவரது குழுவினரும் தங்கள் பணியைத் தொடர உறுதியளித்துள்ளனர். இவர்களின் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தனர். ‘வெளிநாட்டு முகவர்’ என்று முத்திரை குத்தப்பட்டு 2021இல் ரஷ்யாவை விட்டு வெளியேற்றப்பட்ட பெக்புலடோவா, போர்க்களத்தில் இருந்து அது பற்றிய தகவல்களை வழங்க யுக்ரேனுக்குச் சென்றுள்ளார்.

தவிர்க்க முடியாத முன்னேற்றத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. நவீன நாகரிகம் எப்போதும் உடையக்கூடியதாகவும் அழிக்கக்கூடியதாகவும் உள்ளதாகத் தோன்றுகிறது. அதில் பெண்களின் உரிமைகளே பொதுவாக முதலில் மறையக் கூடியதாக உள்ளன.

தைசியா பெக்புலடோவா

நதாலி பெக்வார்ட்

நதாலி பெக்வார்ட், வத்திகான்

கன்னியாஸ்திரி

ஆயர் பேரவையின் துணைச் செயலாளராக போப் பிரான்சிஸால் நியமிக்கப்பட்டதன் மூலம், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நதாலி. கத்தோலிக்க திருச்சபைக்கான முக்கிய விஷயங்களில் போப்புக்கு ஆலோசனை வழங்கும் பல தலைவர்களில் இவரும் ஒருவர். இதே போல் வாக்களிக்கும் உரிமை உள்ள ஒரே பெண்மணியும் இவரே. 2021ஆம் ஆண்டில், இவரது நியமனம் அறிவிக்கப்பட்டபோது, பெண்களுக்கு “ஒரு கதவு திறக்கப்பட்டுள்ளது” என்று ஆயர் பேரவையின் பொதுச் செயலாளர் கூறினார்.

முன்னதாக, சேவியர்ஸ் சபையின் பிரெஞ்சு கன்னியாஸ்திரி ஒருவர் பிரான்சில் இளைஞர்கள் மற்றும் தொழில்களின் சுவிசேஷத்திற்கான தேசிய சேவையின் முதல் பெண் இயக்குநராக பணியாற்றினார்.

போப் பிரான்சிஸ் கூறுவது போல், பெண்கள் மீதான ‘அனைத்து பாகுபாடுகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராகப் போராடுவது நீதியின் கடமையாகும்’… ஒன்றாக, அனைத்து மட்டங்களிலும் தலைமைப் பதவிகளில் அதிக பெண்களை ஈடுபடுத்துவதற்கு நாம் எல்லா வகையிலும் ஆதரவளிக்க வேண்டும்.

நதாலி பெக்வார்ட்

தன் தலைமுடியை வெட்டிக் கொண்ட பெண்

தன் தலைமுடியை வெட்டிக் கொண்ட பெண், இரான்

போராட்டக்காரர்

இரானின் கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி, செப்டம்பர் 13 அன்று டெஹ்ரானில் அறநெறி போலீஸாரால் கைது செய்யப்பட்ட 22 வயதான குர்திஷ் பெண் மஹ்சா அமினி மரணம் அடைந்த பிறகு இந்த ஆண்டு இரானில் பரவலான எதிர்ப்புகள் வெடித்தன.

இந்த ஆண்டு தங்கள் சுதந்திரத்துக்காகவும் கட்டாய ஹிஜாபிற்கு எதிராகவும் நடந்த போராட்டங்களில் பெண்கள் ஆற்றிய பங்கை அங்கீகரிக்க விரும்பினோம்.

உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிரசாரகர்கள் வரை பரவியிருக்கும் ஒரு இயக்கமாக ‘ஒன்றாக முடி வெட்டுதல்’ மாறியுள்ளது. இது இரானில் உள்ள சில சமூகங்களால் துக்கத்தின் பாரம்பரிய அடையாளமாக பார்க்கப்படுகிறது.

கிறிஸ்டினா பெர்டின்ஸ்கிக்

கிறிஸ்டினா பெர்டின்ஸ்கிக், யுக்ரேன்

பத்திரிகையாளர்

யுக்ரேனில் நடந்த போரின் போது, விருது பெற்ற பத்திரிகையாளர் கிறிஸ்டினா பெர்டின்ஸ்கிக் தனது நாட்டைச் சுற்றிப் பயணம் செய்து, ரஷ்ய ஷெல் தாக்குதலுக்கு உள்ளான பகுதிகளில் இருந்து தகவல்களை தயாரித்தார். அவரது சில படைப்புகள் குறிப்பாக மோதலில் உள்ள நகரின் அன்றாட வாழ்க்கையின் விவரங்களில் கவனம் செலுத்துகின்றன.

கெர்சனில் பிறந்த பெர்டின்ஸ்கிக், என்வி பத்திரிகை, பல்வேறு தொலைக்காட்சி மற்றும் வானொலி திட்டங்கள் உட்பட கியவில் 14 ஆண்டுகள் அரசியல் பத்திரிகையாளராக பணியாற்றியுள்ளார். யுக்ரேனின் யூரோமைடன் புரட்சியில் பங்கேற்பவர்கள் பற்றிய சமூக ஊடகத் திட்டமான e-People ஐ உருவாக்கினார், அது பின்னர் ஒரு புத்தகமாக மாறியது.

யூலியா பைவ்ஸ்கா

யூலியா பைவ்ஸ்கா, யுக்ரேன்

துணை மருத்துவர்

அரசால் கெளரவிக்கப்பட்டயுக்ரேனிய சிவிலியன் துணை மருத்துவர் இவர். நூற்றுக்கணக்கான காயமடைந்த பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெருமைக்குரிய ஒரு தன்னார்வ மருத்துவப் பிரிவான தைராஸ் ஏஞ்சல்ஸ் அமைப்பின் நிறுவனர். தைரா என்று அழைக்கப்படும் யூலியா பைவ்ஸ்கா, கடந்த மார்ச் மாதம் குடிமக்களை மேரியுபோலில் இருந்து வெளியேற்ற உதவியபோது, ரஷ்ய படையால் பிடிக்கப்பட்டார்.

முற்றுகையிடப்பட்ட நகரில் தனது குழுவின் பணியை ஆவணப்படுத்த இவர் ‘பாடி கேம்’ என்ற உடல் கேமராவைப் பயன்படுத்தினார். அந்த காட்சிகள் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டதும், சிறைப்பிடிக்கப்பட்டபோது அவர் எதிர்கொண்ட கடுமையான நிலைமைகள் மற்றும் கொடூரமாக நடத்தப்பட்டது பற்றி பைவ்ஸ்கா பேசினார். காவலில் வைக்கப்பட்ட சூழல் “நரகம்” என்று இவர் அழைத்தார்.

ஹடிசடோ மனி

ஹடிசடோ மனி, நீஜேர்

அடிமைத்தனத்துக்கு எதிராக பிரசாரம் செய்பவர்

12 வயதில் ‘ஐந்தாவது மனைவி’ ஆக விற்கப்பட்ட ஹடிசடோ மனி வஹாயா நடைமுறையின் கீழ் அடிமைப்படுத்தப்பட்டார். அந்த நடைமுறையின்படி செல்வாக்கு மிக்க ஒருவர் தனது நான்கு சட்டபூர்வ மனைவிகளுக்கு சேவை செய்ய அதிகாரபூர்வமற்ற மனைவியை அழைத்துச் செல்லலாம் என உள்ளது. 2005இல் சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்ட பிறகு, மனி ‘மறுமணம்’ செய்து கொண்டார். ஆனால் இவரது முன்னாள் எஜமானர் இவர் மீது இரு தார மணம் செய்ததாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்தார். அதில் மனி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மனி இந்த தீர்ப்பை எதிர்த்து நீஜேர் உச்ச நீதிமன்றத்தில் 2019இல் தொடர்ந்த வழக்கில் இவரது தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதன் விளைவாக வஹாயா நடைமுறைக்கும் தடை விதிக்கப்பட்டது. இப்போது இவர் அடிமைத்தனத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். தன்னைப் போல இருந்த பிற பெண்கள் தப்பிப்பதற்கு தமது தளத்தின் மூலம் உதவி வருகிறார்.

ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக்

ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக், யுக்ரேன்

மனித உரிமைகள் வழக்கறிஞர்

15 ஆண்டுகளாக, ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக், சிவில் உரிமைகளுக்கான மையத்திற்கு (CCL) தலைமை தாங்கினார். இந்த அமைப்புக்கு, யுக்ரேன் படையெடுப்புக்குப் பிறகு ரஷ்ய போர்க்குற்றங்களை ஆவணப்படுத்திய பணிக்காக கூட்டாக 2022ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

சிசிஎல் 1960களின் யுக்ரேனிய அதிருப்தியாளர்களின் மரபைச் சுமந்து வரும் அமைப்பாகும். மனித உரிமைகள் மீது கவனம் செலுத்தும் இந்த அமைப்பு, 2014ஆம் ஆண்டில், போர்க் குற்றங்களை ஆவணப்படுத்த கிரைமியா, லூஹான்ஸ்க், டோனியூட்ஸ்க் ஆகிய இடங்களுக்குச் சென்ற முதல் மனித உரிமைகள் அமைப்பாகும். இப்போது செச்சினியா, மால்டோவா, ஜார்ஜியா, சிரியா, மாலி மற்றும் யுக்ரேனில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ரஷ்யாவை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்திற்கு சிசிஎல் அழைப்பு விடுத்துள்ளது.

வீரத்திற்கு பாலினம் இல்லை.

ஒலெக்ஸாண்ட்ரா மாட்விச்சுக்

நிகார் மார்ஃப்

நிகார் மார்ஃப், இராக்

செவிலியர்

இராக்கிய குர்திஸ்தானில் உள்ள மருத்துவமனையின் தீக்காயங்கள் பிரிவில் தலைமை செவிலியராக, நிகார் மார்ஃப் உள்ளார். தீயிட்டுக் கொளுத்திக் கொண்ட பெண்களுக்கு சிகிச்சை அளிப்பது இவரது பணிகளில் ஒன்று. இராக்கில் இப்படி சுயமாகவே தீயிட்டுக் கொளுத்திக் கொள்ளும் வழக்கம் அப்பகுதியில் உள்ள இளம் பெண்கள் மத்தியில் இன்னும் ஒரு போராட்ட வடிவமாக உள்ளது.

குழந்தைகளுக்கான தீக்காயங்கள் மற்றும் தீவிர சிகிச்சை ஆகிய இரண்டிலும் மார்ஃப் சுமார் 25 ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார். இவரது வார்டில் தற்செயலாக தீக்காயம் அடைந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கிறார். இவர் சிகிச்சை அளிக்கும் பெண்களில் பலர் தீக்குளிப்பதற்கு முன்பு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர். அவர்களில் சிலர் 16 வயதுக்குட்பட்டவர்கள்.

ஆயிஷா மாலிக்

ஆயிஷா மாலிக், பாகிஸ்தான்

நீதிபதி

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக இந்த ஆண்டு நியமிக்கப்பட்டவர் நீதிபதி ஆயிஷா ஏ. மாலிக். பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தீர்ப்புகள் பலவற்றை இவர் எழுதியுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான இரு விரல் பரிசோதனை முறைக்கு தடை விதித்த தீர்ப்பும் இதில் அடங்கும். இந்த தடை விதிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுவரை பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமையை அனுபவித்த, புகார் கூறிய பெண்கள் இந்த சர்ச்சைக்குரிய ‘கன்னித்தன்மை பரிசோதனைகளை’ எதிர்கொண்டனர்.

உச்ச நீதிமன்ற பணியுடன் சேர்த்து, உலகெங்கிலும் உள்ள நீதிபதிகளுக்கான பயிற்சியையும் ஆயிஷா மாலிக் நடத்துகிறார். பாகிஸ்தானில் பெண் நீதிபதிகளுக்கான பிரத்யேக மாநாடுகளைத் தொடங்கி வைத்தார். நீதி அமைப்பில் பாலின முன்னோக்கு உள்ளிட்ட பல விவாதங்களை இவர் ஊக்குவிக்கிறார்.

பெண்கள் ஒரு புதிய கதையை உருவாக்க வேண்டும் – அது அவர்களின் பார்வையை உள்ளடக்கியதாகவும் அவர்களின் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

ஆயிஷா மாலிக்

மில்லி

மில்லி, தாய்லாந்து

ராப் கலைஞர்

கலைஞரும் பாடலாசிரியருமான தனுபா கானதீரகுல், தனது மில்லி என்ற தனது மேடைப்பெயரால் நன்கு அறியப்பட்டவர். யதார்த்தமற்ற அழகு தரநிலைகள் மற்றும் பாலியல் சம்மதம் போன்ற சிக்கல்களைத் தீர்க்க சர்ச்சைக்குரிய பாடல் வரிகளைப் பயன்படுத்துகிறார். இவர் பல மொழிகளிலும் பேச்சுவழக்கு மொழிகளிலும் ராப்பை வெளிப்படுத்துகிறார். தாய்லாந்தின் திருநங்கை சமூக பேச்சு வழக்கையும் இவர் இணைத்துக்கொள்கிறார். சமீபத்தில் தனது முதல் அறிமுக ஆல்பமாக BABB BUM BUM-ஐ இவர் அறிவித்தார்.

இந்த ஆண்டு கோச்செல்லா திருவிழாவில், தாய்லாந்து நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கும் அரசாங்கத்துக்கும் சவால் விடுக்கும் வகையில், தாய்லாந்து பாரம்பரிய இனிப்பு வகையான மாம்பழ ஒட்டும் அரிசியை மேடையில் சாப்பிட்டு வைரலானார். கடந்த ஆண்டு தாய்லாந்து அரசாங்கத்தின் கோவிட்-19 நடவடிக்கையை விமர்சித்ததற்காக அவதூறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். அதன் விளைவாக, #SaveMilli என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆனது.

சலிமா ராடியா முகன்சங்கா

சலிமா ராடியா முகன்சங்கா, ருவாண்டா

நடுவர்

சர்வதேச கால்பந்தின் வரலாற்று தருணத்தில், 2022ஆம் ஆண்டு கத்தாரில் நடந்த ஆண்கள் உலக கோப்பையில் நடுவராக இருந்த முதல் மூன்று பெண் நடுவர்களில் ஒருவராக சலிமா ராடியா முகன்சங்கா ஃபிஃபாவால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 92 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த போட்டியில் பெண்கள் பங்கு வகித்தனர்.

கடந்த ஜனவரி மாதம், ஆடவர் ஆஃப்ரிக்கா நாடுகள் கோப்பை போட்டியில் நடுவராக இருந்த முதல் பெண்மணி இவர். மேலும் டோக்யோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளிலும் இவர் நடுவராக இருந்தார். ஏற்கெனவே சர்வதேச பெண்கள் கால்பந்தில் மிக உயர்ந்த நிலை விளையாட்டுகளுக்கு தலைமை தாங்கினார். விளையாட்டில் பணியாற்றுவதற்கு முன்பு, இவர் மருத்துவச்சி ஆக பயிற்சி பெற்றார்.

நர்கீஸ் முகமதி

நர்கீஸ் முகமதி, இரான்

மனித உரிமைகள் பிரசாரகர்

பத்திரிகையாளரும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவருமான நர்கீஸ் முகமதி இரானில் உள்ள மனித உரிமைகள் பாதுகாவலர் மையத்தின் துணைத் தலைவராக உள்ளார். மரண தண்டனையை ஒழிக்க அயராது பிரசாரம் செய்து வருகிறார். தற்போதைய போராட்டத்தின் அங்கமாக அரசு எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை வழங்குவதை நிறுத்துமாறு இரானை கேட்டுக் கொள்ளும்படி ஐ.நாவை வலியுறுத்தி எவின் சிறையில் இருந்து இவர் கடிதம் அனுப்பினார்.

2010இல் முகமதிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஜாமீனில் இருந்தபோது எவின் கைதிகளை நடத்துவதை விமர்சித்து உரை நிகழ்த்தியதற்காக 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். இவரது ஆவணப்படமான ‘ஒயிட் டார்ச்சர்’ 16 முன்னாள் கைதிகளுடனான நேர்காணல்களின் அடிப்படையில் தனிமைச் சிறை நிலை குறித்து ஆராய்கிறது. இவரது இரண்டு குழந்தைகளும் இவரது கணவரும் அரசியல் செயல்பாட்டாளருமான தாகி ரஹ்மானியுடன் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

மோனிகா முசோண்டா

மோனிகா முசோண்டா, ஜாம்பியா

பெண் தொழிலதிபர்

ஒரு கார்ப்பரேட் வழக்கறிஞர் – தொழில்முனைவோராக மாறிய மோனிகா முசோண்டா, ஜாவா ஃபுட்ஸின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி. ஜாம்பியாவின் வலுவான கோதுமை விளைச்சலைப் பயன்படுத்தி மலிவு விலையில் உணவுப் பொருட்களை உற்பத்தி செய்வதே இவரது பார்வை, அத்துடன் அதிக வசதியான உணவுகளுக்கான தேவை மற்றும் நுகர்வு முறைகளை இவரது நிறுவனம் மாற்றி வருகிறது.

ஊட்டச்சத்து அவசியத்துக்காக குரல் கொடுத்து வரும் முசோண்டா, பல பெண் தொழில்முனைவோருக்கு வழிகாட்டியாக இருக்கிறார். வணிகத்தில் பெண்களைப் பாதிக்கும் பிரச்னைகள் குறித்து பொது தளங்களில் பேசுகிறார். பல விருதுகளையும் வென்றுள்ளார். ஆஃப்ரிக்காவின் விவசாயம் மற்றும் உணவு முறைகளை வலுப்படுத்த இவர் செய்த பணிக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.

லாரா மெக்அலிஸ்டர்

லாரா மெக்அலிஸ்டர், வேல்ஸ்

பேராசிரியர் மற்றும் முன்னாள் கால்பந்து வீரர்

வேல்ஸ் மகளிர் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் லாரா மெக்அலிஸ்டர் விளையாட்டு நிர்வாகத்தில் பல மூத்த பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தற்போது யுஇஎஃப்ஏவின் மகளிர் கால்பந்து குழுவின் துணைத் தலைவராக உள்ளார். 2021ஆம் ஆண்டு ஏப்ரலில் ஃபிஃபா கவுன்சிலில் யுஇஎஃப்ஏ பிரதிநிதியாக தேர்தலில் நின்றார். வேல்ஸ் கால்பந்து சங்கத்தின் வாரிய இயக்குநராகவும் உள்ளார்.

தற்போது கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக உள்ள மெக்அலிஸ்டர், வெல்ஷ் அரசியலில் நிபுணராக கருதப்படுகிறார். இந்த ஆண்டு, கத்தார் உலக கோப்பையில் கலந்து கொள்வதற்காக LGBT விளையாட்டுத் தூதராக வேல்ஸால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் ஸ்டேடியத்திற்குள் நுழைந்ததும் LGBTQI+ சமூகத்திற்கு ஆதரவாக இவர் அணிந்திருந்த ‘ரெயின்போ வால்’ தொப்பியை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்பட்டார்.

ஸாரா மொஹம்மதி

ஸாரா மொஹம்மதி, இரான்

கல்வியாளர்

நோஜின் சமூக-கலாச்சார சங்க நிறுவனர்களில் ஒருவராக, ஸாரா மொஹம்மதி தனது சொந்த ஊரான சனந்தஜில் குர்திஷ் மொழியைக் கற்பிப்பதற்காக ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அர்ப்பணித்துள்ளார்.

இரானிய அரசியலமைப்பு கல்வி அமைப்புகளில் பிராந்திய மற்றும் இன மொழிகளின் பயன்பாடு சுதந்திரமாக அனுமதிக்கப்படுகிறது. ஆனால் வழக்கறிஞர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள், ‘அது நடைமுறையில் இல்லை’ என்கிறார்கள். எனவே சிறார்கள் பள்ளியில் தங்கள் தாய்மொழியை கற்க முடியாது. மொஹம்மதி “தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் நோக்கில் குழுக்கள் மற்றும் சமூகங்களை உருவாக்கினார் என்று இரானிய அரசாங்கம் குற்றம்சாட்டியது. மேலும் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவர் சிறையில் உள்ளார்.

மியா மோட்லி

மியா மோட்லி, பார்பேடோஸ்

பிரதமர்

பார்பேடோஸின் முதல் பெண் பிரதமராக மியா மோட்லி மகத்தான வெற்றிக்குப் பிறகு, ஜனவரியில் இரண்டாவது முறையாக பதவியேற்றார். 2008ஆம் ஆண்டு முதல் பார்பேடாஸ் தொழிலாளர் கட்சிக்கு அவர் தலைமை தாங்குகிறார். பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான உறவுகளை துண்டித்து, நாட்டின் தலைவராக இருந்த அரசரை நீக்கி, உலகின் புதிய குடியரசாக கரீபியன் தீவு உருப்பெற அந்த நாட்டை இவர் வழிநடத்தினார்.

மோட்லி காலநிலை மாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசுபவராக அறியப்படுபவர். COP27 உச்சிமாநாட்டில் அவர் காலநிலை நெருக்கடியை பணக்கார நாடுகள் சமாளிக்கத் தவறியதாக விமர்சித்தார். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் 2050க்குள் 100 கோடி காலநிலை அகதிகள் உருவாகலாம் என்று என்று எச்சரித்தார்.

ரீடா மோரேனோ

ரீடா மோரேனோ, பியூர்ட்டோ ரீக்கோ/அமெரிக்கா

நடிகை

வெகு சில கலைஞர்களே எம்மி, கிராமி, ஆஸ்கார் மற்றும் டோனி விருதை குறிக்கும் EGOT அந்தஸ்தைப் பெறுகிறார்கள் – வெல்வதற்கான மிகச்சிறந்த சாதனைக்கான ஒரு சொல் இது. ரீடா மோரேனோ அத்தகையவர்களில் ஒருவர். பியூர்ட்டோ ரீக்கோ நடிகை, பாடகி மற்றும் நடன கலைஞர். தனது 13 வயதில் பிராட்வேயில் அறிமுகமாகி ஏழு தசாப்தங்களாக புகழ்பெற்ற வாழ்வை வாழ்ந்து வருபவர்.

சிங்கிங் இன் தி ரெயின்’, ‘தி கிங் அண்ட் ஐ’ ஆகியவற்றில் நடித்துள்ளார். ஆனால் வெஸ்ட் சைட் ஸ்டோரியில் அனிதா பாத்திரம் மூலம் ஆஸ்கார் விருதை வென்ற முதல் லத்தீன் அமெரிக்கர் ஆனார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முற்றிலும் புதிய பாத்திரத்தை குறிப்பாக மொரேனோவுக்காகவே ரீமேக் செய்து எழுதினார். வயதில் இவர் தற்போது தொண்ணூறுகளில் இருக்கிறார்.

செங் யென்

செங் யென், தைவான்

பெளத்த கொடையாளர்

தர்ம மாஸ்டர் செங் யென், நவீன தைவானில் காணப்படும் பெளத்த வளர்ச்சியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக காணப்படுகிறார். ட்ஸூ ச்சீ என்ற மனிதாபிமான அறக்கட்டளையின் நிறுவனர் இவர். சில நேரங்களில் ‘ஆசியாவின் அன்னை தெரசா’ என்றும் இவர் அழைக்கப்படுகிறார்.

1966இல் இந்த அமைப்பை செங் யென் தொடங்கினார். வெறும் 30 இல்லத்தரசிகள் தேவைப்படும் குடும்பங்களுக்கு உதவுவதற்காக பணத்தைச் சேமித்தார். பின்னர் இவரது அமைப்பை உலகளவில் மில்லியன் கணக்கானோர் பின்தொடர்ந்தனர். சர்வதேச நிவாரணம் மற்றும் மருத்துவ உதவிகளை வழங்கும் இந்த அமைப்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளையும் நடத்துகிறது. இப்போது வயதில் 80களின் பிற்பகுதியில் இருக்கும் இவரது வழியை கடைப்பிடிக்கும் ஆதரவாளர்கள் பல்வேறு அறப்பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். மிக சமீபத்தில் போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேனில் இருந்து வந்த அகதிகளுக்கு நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்கினர்.

ஜேன் ரிக்பி

ஜேன் ரிக்பி, அமெரிக்கா

வானியலாளர் மற்றும் வானியல் இயற்பியலாளர்

நாசா வானியல் இயற்பியலாளர் டாக்டர் ஜேன் ரிக்பி, அண்டவெளி நேரத்தில் விண்மீன் திரள்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஆய்வு செய்து வருபவர். உலகின் மிகப்பெரிய விண்வெளி தொலைநோக்கியான ஜேம்ஸ் வெப்பை ஏவிய மற்றும் அதை பயன்படுத்திய சர்வதேச குழுவின் முக்கிய விஞ்ஞானிகளில் இவரும் ஒருவர். ஜூலையில், வெப் பதிவு செய்த முதலாவது முழு வண்ணப் படங்கள், இன்றுவரை பிரபஞ்சத்தின் மிக விரிவான அகச்சிவப்புக் காட்சியாகும்.

ரிக்பி 100க்கும் மேற்பட்ட மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஆராய்ச்சிக்காக பல விருதுகளை வென்றுள்ளார். இவர் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) எனப்படும் துறைகளில் சமமான மற்றும் உள்ளடக்கிய பாலின வாய்ப்புக்காக குரல் கொடுத்து வருபவர்.

“எனது மாணவ பருவத்தில், எந்த LGBTQ ரோல் மாடல்களைப் பற்றியும் எனக்குத் தெரியாது. பின்பற்றுவதற்கு விசித்திரமான முன்மாதிரிகள் இல்லாமல் வளர்ந்த கடைசி தலைமுறையின் ஒரு பகுதியாக நான் இருப்பேன் என்று நம்புகிறேன்.”

ஜேன் ரிக்பி

எல்னாஸ் ரெகாபி

எல்னாஸ் ரெகாபி, இரான்

மலையேற்ற வீராங்கனை

தென் கொரியாவில் அக்டோபர் மாதம் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், இரானிய மலையேற்ற வீராங்கனை எல்னாஸ் ரெகாபி, தாயகத்தில் கட்டாய ஹிஜாபை எதிர்த்துப் நடந்து வரும் போராட்டத்துக்கு ஆதரவாக ஹிஜாப் இல்லாமல் போட்டியிட்டார். அவர் சாம்பியன்ஷிப்பில் நான்காவது இடத்தைப் பிடித்தபோதும் இரானிய எதிர்ப்பாளர்களிடையே புகழ் பெற்றார். தாயகம் திரும்பியதும் டெஹ்ரான் விமான நிலையத்தில் பலர் அவரை வரவேற்றனர். சமூக ஊடகங்களில் பாராட்டப்பட்டார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்ட ஓர் இடுகையில், ஹிஜாப் “கவனக்குறைவாக” விழுந்தது என்று கூறியிருந்தார். அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தமது “குழப்பநிலை மற்றும் கவலைகளுக்காக” மன்னிப்பு கேட்டதாக கூறினார். இருப்பினும், இவரது நேர்காணல் கட்டாய ஒப்புதல் வாக்குமூலம் என்று ஒரு வட்டாரம் பிபிசி பெர்ஷிய சேவையிடம் கூறியது.

யூலிமர் ரோஜாஸ்

யூலிமர் ரோஜாஸ், வெனிஸ்வேலா

தடகள வீராங்கனை

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர் (தங்கம் மற்றும் வெள்ளி) மற்றும் மூன்று முறை உலக சாம்பியன் யூலிமர் ரோஜாஸ். மார்ச் மாதம் நடந்த உலக தடகள இன்டோர் சாம்பியன்ஷிப்பில் 15.74 மீ. எறிந்து பெண்களுக்கான ட்ரிபிள் ஜம்ப்பில் உலக சாதனை படைத்தார். இவர் இப்போது இன்னும் பெரிய சாதனையாக 16 மீ குதிப்பதை தமது இலக்காகக் கொண்டுள்ளார்.

வெனில்வேலாவின் கராகஸில் பிறந்து, கரீபியன் கடற்கரையில் ஒரு ஏழ்மையான பகுதியில் வளர்ந்தவர் யூலிமர் ரோஜாஸ். தனது தாழ்மையான தொடக்கமே தமது வெற்றிக்கு உதவியதாக கூறுகிறார். தற்போது பார்சிலோனா எஃப்சி தடகள அணியில் அங்கம் வகிக்கும் ரோஜாஸ், தனது நாட்டில் நாயகியாக போற்றப்படுகிறார். லெஸ்பியன் மற்றும் LGBTQ+ பிரச்னைகளுக்கு வெளிப்படையாக குரல் கொடுப்பவர்.

பெண்களாகிய நாம் பயப்படக் கூடாது. நம்மால் முடியாத காரியங்கள் எதுவும் இல்லை. நம்மை குறைத்து மதிப்பிட முடியும் என்பது ஏற்கெனவே தெளிவாக உள்ளது. ஆனால் நம்மால் முடிந்ததை நாங்கள் பெருமையுடன் ஏற்கெனவே காட்டியுள்ளோம்.

யூலிமர் ரோஜாஸ்

நவோமி லாங்

நவோமி லாங், வட அயர்லாந்து

அரசியல்வாதி

சட்ட அமைச்சராக இருந்தபோது, வடக்கு அயர்லாந்தில் பல புதிய பாலியல் வல்லுறவு குற்றங்களைச் சமாளிக்கும் வகையிலான சட்டத்தைக் கொண்டு வந்தார் நவோமி லாங். அந்த குற்றங்களில் டவுன்-ப்ளௌசிங், சைபர்-ஃப்ளாஷிங் மற்றும் ‘ரஃப் செக்ஸ்’ முறையை ஒழித்தல் அடங்கும். கொலை மிரட்டல்களை எதிர்கொண்டதாக கூறும் இவர், பெண் அரசியல்வாதிகள் சந்திக்கும் துன்புறுத்தல்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

தொழில்முறையில் இவர் ஓர் சிவில் இன்ஜினியர். 1995இல் அல்லயான்ஸ் கட்சியில் சேர்ந்தார். பெல்ஃபாஸ்டின் நகர மேயராக பணியாற்றிய இவர், 2010இல் வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்து எம்பி ஆக தேர்வானார். அந்த தொகுதியை 30 ஆண்டுகளுக்கும் மேலாக தக்க வைத்து வந்த பீட்டர் ராபின்சனை இவர் தேர்தலில் வீழ்த்தினார்.

துஷ்பிரயோகம் பொதுவானதாக இருக்கும் சூழலை உருவாக்கும் அணுகுமுறைகளை நாம் சமாளிக்க வேண்யுள்ளது. அதாவது பெண்கள் அனைவரும் நேரடியாகவும், தொடர்ச்சியாகவும் ஆண் உரிமை, பாலியல் சமமின்மை மற்றும் பெண் வெறுப்புணர்வு போன்ற நிலையை எதிர்கொள்ளவே செய்கிறோம்.

நவோமி லாங்

நஜா லிபர்த்

நஜா லிபர்த், கிரீன்லாந்து

உளவியலாளர்

1960கள் மற்றும் 70களில் டேனிஷ் மருத்துவர்களால் இனுயிட் கிரீன்லாந்தர்கள் என்ற பூர்வகுடியை ஒத்த சமூகத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட பிறப்பு கட்டுப்பாட்டு இயக்கத்தின் ஒரு பகுதியாக, பொதுவாக சுருள் என அழைக்கப்படும் கருப்பையக சாதனம் (IUD) அவர்களின் விருப்பமின்றி பொருத்தப்பட்டபோது அவசரகால சிகிச்சை நிபுணர் நஜா லிபர்த்துக்கு வயது 13. இந்த ஆண்டு டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் சுமார் 4,500 பெண்கள் மற்றும் சிறுமிகளை பாதித்திருக்கக் கூடிய இந்த நடைமுறைகள் குறித்து விசாரணை நடத்த முறைப்படி ஒப்புக்கொண்டன.

இந்த பெண்களுக்கு உதவவும் அவர்களின் கருவுரு பிரச்னைகளுக்கு ‘கருத்தடை சுருளே’ காரணம் என்று சந்தேகிப்பவர்கள் உள்ளிட்ட பெண்களுக்காக ஒருவரையொருவர் இணைத்துக் கொண்டு ஆதரவளிக்கும் பேஸ்புக் குழுவை லிபெர்த் அமைத்தார்.

இந்த பிரச்னையில் உயிர் பிழைத்த மேலதிக பெண்களே மற்ற பெண்களுக்கு முன்மாதிரியாக மாறி வருகின்றனர். நீங்கள் தவறாக நினைக்கப்பட மாட்டீர்கள் என்பதை சுயமாகக் கண்டறியும் போது, அடிக்கடி வெளியே பேசுவதால் மனதில் உள்ள பயம் நீங்கும். நம் பயத்தால் நம்மை கட்டுப்படுத்த முடியாது.

நஜா லிபர்த்

எரிகா லிரியானோ

எரிகா லிரியானோ, டொமினிக்கன் குடியரசு

கோகோ தொழில்முனைவோர்

கோகோ விநியோகச் சங்கிலியை மறுபரிசீலனை செய்வதை நோக்கமாகக் கொண்டு, எரிகா லிரியானோ டொமினிகன் குடியரசில் லாபப் பகிர்வு ஏற்றுமதி நிறுவனத்தை நடத்துகிறார். கோகோவின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை நியாயமானதாகவும் மேலும் நிலையானதாகவும் மாற்றும் நோக்கத்துடன் தனது சகோதரி ஜேனெட்டுடன் இணைந்து INARU-ஐ லிரியானோ நிறுவினார். இந்த ஆண்டு, இவர்களின் நிறுவனத்துக்கு தொடக்க கால முதலீடு கிடைத்தது.

What is 100 Women

உங்கள் சொந்த பாதையை தீர்மானிக்கும் சக்தி, அனைவருக்குமான உரிமையாக இருக்க வேண்டிய ஒன்று. அது தனக்கு எந்த வகையான வாழ்க்கை தேவை என்பதை தேர்ந்தெடுக்கும் பெண்ணின் சக்தியையும் உள்ளடக்கியது.

எரிகா லிரியானோ

மீ கியுங் (மைக்கி) லீ

மீ கியுங் (மைக்கி) லீ, தென் கொரியா

தயாரிப்பாளர்

கலைகளின் தீவிர ஆதரவாளராக, மீ கியுங் லீ கொரிய கலாசார அணியை வழிநடத்துகிறார். K-pop உலக அளவிலான வெற்றியை பெற உந்து சக்தியாகவும் KCON இசை விழாவின் கட்டமைப்பாளராகவும் உள்ளார். சிறந்த படத்துக்கான ஆஸ்கார் விருதை வென்ற முதல் வெளிநாட்டு மொழித் திரைப்படமான பாராசைட்டின் நிர்வாக தயாரிப்பாளரும் மீ கியுங் இருந்துள்ளார்.

CJ ENM என்ற தென் கொரிய பொழுதுபோக்கு நிறுவனத்தின் துணைத் தலைவராக மீ கியுங் உள்ளார். ஆளுமை நிறைந்த திரைப்பட மற்றும் டிவி அரங்கம், கேபிள் ஆபரேட்டர் மற்றும் இசை தயாரிப்பு நிறுவனமாக CJ ENM உள்ளது.

Rebel Wilson

“2021 வெற்றியாளரும் நடிகையுமான ரெபெல் வில்சனால் பரிந்துரைக்கப்பட்டவர்

“அவர் ஒட்டுமொத்த பெண் சக்தி மற்றும் எனக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறார். தனது கலாசாரத்தை உலகுக்கு பிரதிநிதித்துவப்படுத்தி ஊக்குவித்து அனைத்து வகுப்பினருக்குமானவர் ஆக இருப்பவர்.” – ரெபெல் வில்சன்

லேலி

லேலி, இரான்

போராட்டக்காரர்

இரானில் தற்போதைய போராட்டங்களின் சின்னமான படங்கள் ஒன்றில் ஒரு இளம் பெண், தனது குதிரைவால் போல தலைமுடியை வைத்து தெருக்களில் போராட்டத்தைத் தொடரத் தயாராகும் காட்சி இடம்பெற்றிருந்தது. இவரது புகைப்படம் எதிர்ப்பாளர்களின் துணிச்சலின் அடையாளமாக மாறியது. ஆனால் இவரது அடையாளம் நடந்து வரும் போராட்டங்களின்போது கொல்லப்பட்ட 22 வயது ஹாடிஸ் நஜாஃபி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.

பிபிசி பெர்ஷிய சேவையிடம் இந்த புகைப்படத்தின் பின்னணியில் இருக்கும் உண்மையான பெண் பேசுகையில், “ஹாடிஸ் நஜாபி மற்றும் மஹ்சா அமினி போன்றவர்களுக்காக நான் போராடுவேன். இரானிய ஆளுகை மரண அச்சுறுத்தல் மூலம் எங்களை பயமுறுத்த வேண்டாம். இரானிய சுதந்திரம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்தார்.

எஸ்ரா வர்தா

எஸ்ரா வர்தா, அல்ஜீரியா/அமெரிக்கா

நடன கலைஞர்

அல்ஜீரிய வம்சாவளியினருக்குப் பிறந்தவர் எஸ்ரா வார்தா. ஒரு கலாசார போராளியாக நான்கு சுவருக்குள் ஆடப்பட்டு வந்த பாரம்பரிய அல்ஜீரிய நடனத்தை பொதுவெளிக்கு கொண்டு வந்தவர். வட ஆஃப்ரிக்க பெண்கள் தலைமையிலான நடன மரபுகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுத்து வருகிறார் எஸ்ரா. அதிலும் வரலாற்றுடன் தொடர்புடைய சமூக போராட்டம் மீது கவனம் செலுத்தும் வகையில் இவரது நடனம் உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள பாரம்பரிய ராய் நடனத்தை அறிந்த வெகு சில ஆசிரியர்களில் ஒருவரான சேய்கா ராபியாவின் வழிகாட்டி இவர். வர்தா பரவலாக பயணம் செய்யக் கூடிய கலைஞர் மற்றும் கல்வியாளர். இவரது நிகழ்ச்சிகள் மற்றும் பட்டறைகள் வாஷிங்டன் டிசி முதல் லண்டன் வரை உலகம் முழுவதும் தடம் பதித்துள்ளன.

வெலியா விடல்

வெலியா விடல், கொலம்பியா

எழுத்தாளர்

கொலம்பியாவின் எல் சோகோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு கதைசொல்லாளர் மற்றும் கலாசார ஊக்குவிப்பாளர் வெலியா விடல். பகிர்வு வாசிப்பை விரும்புபவர். வாசிப்பு, எழுத்தறிவு மற்றும் சோகோவின் தனித்துவமான கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் அமைப்பான மோட்டேட்டின் நிறுவனர். கொலம்பியாவின் மிகவும் பின்தங்கிய பிராந்தியத்தில் சமத்துவமின்மை மற்றும் இனவெறியை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாக இலக்கியத்தைப் பார்ப்பவர். சோகோ வாசிப்பு மற்றும் எழுதும் ஆற்றலை வெளிப்படுத்தும் திருவிழாவை நடத்துபவர்.

இவரது சமீபத்திய புத்தகம், Aguas de Estuario, கொலம்பிய கலாசார அமைச்சகத்தின் ஆஃப்ரோ-கொலம்பிய எழுத்தாளர்களுக்கான பதிப்பக மானியத்தை பெற்றுத் தந்தது. இவர், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கூட்டு முயற்சியான Afluentes திட்டத்திற்கான ஆராய்ச்சியாளரும் கூட.

பெண்கள் மீதான வரலாற்று அடக்குமுறை மற்றும் அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தைப் பற்றி இப்போது நாம் அதிகம் அறிந்திருக்கிறோம். ஆனால் ஆஃப்ரோ மற்றும் பழங்குடியின மக்கள் மீதான இந்த அடக்குமுறைகளை இனவெறி எவ்வாறு ஆழமாக்குகிறது என்பதை அடையாளம் காணத் தவறிவிட்டோம்.

வெலியா விடல்

மரினா வியாசோவ்ஸ்கா

மரினா வியாசோவ்ஸ்கா, யுக்ரேன்

கணிதவியலாளர்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேனிய கணிதவியலாளர், மதிப்புமிக்க ஃபீல்ட்ஸ் பதக்கத்தை வென்ற இரண்டாவது பெண்மணி ஆகி வரலாறு படைத்தார். இது பெரும்பாலும் கணிதத்திற்கான நோபல் பரிசு என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் நான்கு வருடங்களுக்கும் ஒரு முறை இது வழங்கப்படுகிறது. 400 ஆண்டுகள் பழமையான புதிரில், எட்டு பரிமாணங்களைக் கொண்ட பரப்பில் மிகவும் திறமையான முறையில் கோளங்களை எவ்வாறு சீர்செய்வது என்ற சிக்கலைத் தீர்த்து இந்த விருதை வென்றிருக்கிறார் மரினா.

லாவ்சேனில் உள்ள ஸ்விஸ் ஃபெடரல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் (EPFL), வியாசோவ்ஸ்கா கணிதவியல் துறை பேராசிரியராகவும் தலைவராகவும் உள்ளார்.

ஸோ ஸியாக்ஸ்வான்

ஸோ ஸியாக்ஸ்வான், சீனா

பெண்ணிய செயல்பாட்டாளர்

சீனாவின் MeToo இயக்கத்தின் முகமாக, ஸோ ஸியாக்ஸ்வானின் வழக்கு சீனாவில் பெண்ணியவாதிகள் மற்றும் உலகளவில் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டது. 2018ஆம் ஆண்டில், 2014இன் இன்டர்ன்ஷிப்பின் போது தன்னைத் தடுமாற வைத்து வலுக்கட்டாயமாக முத்தமிட்டதாகக் குற்றம்சாட்டி, அரசுக்குச் சொந்தமான ‘சிசிடிவி’ நிகழ்ச்சியின் நட்சத்திர தொகுப்பாளரான ஜு ஜுன் மீது ஸோ வழக்கு தொடர்ந்தார். ஆனால், குற்றச்சாட்டுகளை மறுத்த ஜுஜுன் ஸோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இவரது வழக்கு போதிய ஆதாரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு இவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. சில வெளிநாட்டு ஊடகங்கள், ‘சீனாவின் MeToo இயக்கத்திற்கு அடி’ என்று மனு தள்ளுபடி நடவடிக்கையை அழைத்தன. ஸோ இப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களுக்கு ஆதரவாக சீனாவில் பெண்ணிய பிரச்னைகளை முன்னிலைப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளார்.

ஒலேனா ஸெலென்ஸ்கா

ஒலேனா ஸெலென்ஸ்கா, யுக்ரேன்

யுக்ரேனிய அதிபரின் மனைவி

திரைக்குப் பின்னால் பணியாற்றிய ஒரு வெற்றிகரமான தொலைக்காட்சி வசன கர்த்தா இவர். 2019இல் யுக்ரேனின் அதிபராக இவரது கணவர் வொலோடிமீர் ஸெலென்ஸ்கி பதவியேற்றபோது, உலக அரங்கில் பிரபலமானார். அதிபரின் மனைவியாக இவர் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் யுக்ரேனிய கலாச்சாரத்தை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு, இவர் யுக்ரேனிய மக்களின் துன்பங்களை முன்னிலைப்படுத்த தனது மேடையைப் பயன்படுத்தி வருகிறார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்ற கிடைத்த வாய்ப்பின் மூலம் அங்கு பேசும் ஒரு வெளிநாட்டு அதிபரின் மனைவி என்ற பெருமையை இவர் பெற்றார். போரால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு மனநல ஆதரவை வழங்குவதில் இவர் இப்போது கவனம் செலுத்துகிறார்.

அமைதிக் காலத்தை விட பெண்கள் இன்னும் கூடுதலான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டுள்ளனர்… இதை (போரை) அனுபவித்த ஒரு பெண் ஒரு படி கூட பின்வாங்க மாட்டாள். மேலும் நமது உள் நம்பிக்கை வளரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒலேனா ஸெலென்ஸ்கா

சாலி ஸ்கேல்ஸ்

சாலி ஸ்கேல்ஸ், ஆஸ்திரேலியா

கலைஞர்

2022 ஆம் ஆண்டில், ‘வாய்ஸ் டு பார்லிமென்ட்’ எனப்படும் வாக்கெடுப்புக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அரசாங்கத்துடன் பணிபுரியும் குழுவிற்கு கலை ஆலோசகர் ஆக சாலி ஸ்கேல்ஸ் நியமிக்கப்பட்டார் – இது ஒரு வரலாற்று ஆலோசனை, இது வெற்றியடைந்தால், பூர்வகுடி மக்களை நாடாளுமன்ற செயல்முறைகளில் நிரந்தரமாக பிரதிநிதித்துவப்படுத்தும்.

ஒரு மரியாதைக்குரிய கலாசார தலைவராகவும் கலைஞராகவும் அறியப்படும் ஸ்கேல்ஸ், தெற்கு ஆஸ்திரேலியாவின் தொலைதூர அனங்கு பிட்ஜன்ட்ஜட்ஜரா யாங்குனிட்ஜட்ஜாரா (APY) லேண்ட்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள பிபல்யட்ஜாராவைச் சேர்ந்த பிட்ஜான்ட்ஜட்ஜாரா பெண் ஆவார். APY தலைவர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்மணி இவர். பழங்குடியினருக்கு சொந்தமான கலாசார அமைப்புகளின் குழுவான APY ஆர்ட் சென்டர் கலெக்டிவின் செய்தித் தொடர்பாளராகவும் இவர் இருக்கிறார்.

Julia Gillard

2018 வெற்றியாளரான முன்னாள் அரசியல்வாதி ஜூலியா கில்லார்ட்டால் இவர் பரிந்துரைக்கப்பட்டார்.

சாலி அற்புதமான கலை மற்றும் மனித புரிதல் இரண்டையும் ஒரு சேர உருவாக்கியவர். மற்றவர்களுக்கு அறிவூட்டி உற்சாகப்படுத்துவதன் மூலம், இனவெறி மற்றும் பாலின பாகுபாட்டின் அழிவுகரமான கலவையை முடிவுக்குக் கொண்டு வருவதற்குத் தேவையான பல மாற்றங்களை சாலி ஊக்குவிக்கிறார்.

அலெக்ஸாண்ட்ரா ஸ்கோச்சிலென்கோ

அலெக்ஸாண்ட்ரா ஸ்கோச்சிலென்கோ, ரஷ்யா

கலைஞர்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் கலைஞரான அலெக்ஸாண்ட்ரா ஸ்கோச்சிலென்கோ, யுக்ரேன் போர் பற்றிய தகவல்களுடன் பல்பொருள் அங்காடி விலை குறிச்சொற்களை மாற்றியதற்காக கைது செய்யப்பட்டார். அவர் பகிர்ந்த தகவல்களில், மேரியுபோல் களத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை பற்றியதும் அடங்கும். மற்றொரு கடைக்காரரால் புகாரளிக்கப்பட்ட பின்னர், ரஷ்ய ஆயுதப் படைகள் பற்றிய ‘தவறான தகவல்களை’ தடை செய்யும் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

தற்போது விசாரணைக்கு முந்தைய தடுப்பு மையத்தில் தண்டனைக்காக காத்திருக்கிறார். இவர் தன்னை மனசாட்சியின் கைதியாக கருதுகிறார். 10 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையை இவர் எதிர்கொள்கிறார்.

ஸ்கோச்சிலென்கோமன ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட காமிக் புத்தகங்களை எழுதியுள்ளார். அதில் மனச்சோர்வு பற்றிய குறிப்புகள் மற்றும் பித்து என்றால் என்ன? என்று விவரித்துள்ளார். தடுப்புக்காவலில் உள்ள ஸ்கோச்சிலென்கோவின் உடல்நிலை மீதான கவலையை அவரது தோழி வெளிப்படுத்தியுள்ளார்.

கீதாஞ்சலி ஸ்ரீ

கீதாஞ்சலி ஸ்ரீ, இந்தியா

நூலாசிரியர்

நாவலாசிரியரும் எழுத்தாளருமான கீதாஞ்சலி ஸ்ரீ, ‘டோம்ப் ஆஃப் தி சாண்ட் என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்காக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் ஹிந்தி எழுத்தாளர் என்ற வரலாற்றை இந்த ஆண்டு படைத்தார். இப்புத்தகத்தின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பும் எமிலி குய்மெட் பரிசுக்கு தேர்வானது.

கீதாஞ்சலி ஸ்ரீ ஹிந்தியில் புனைக்கதை மற்றும் ஆங்கிலத்தில் புனைக்கதை அல்லாத புத்தகங்களையும் எழுதுகிறார். மொழி மற்றும் கட்டமைப்பின் புதுமையான பயன்பாட்டால் குறிக்கப்பட்ட இவரது படைப்புகள் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவர் நிறுவன உறுப்பினராக இருக்கும் ‘விவாடி’ என்ற நாடக குழுவுடன் இணைந்து நாடக ஸ்கிரிப்ட்களிலும் பணியாற்றுகிறார்.

பெண்கள் எப்போதும் தங்களுக்குரிய இடத்துக்காக பேசி வருகிறார்கள். ஆனால் நாம் வாழும் நாட்களில், கலாசாரம் மற்றும் வகுப்புகளில் பெண்கள் சமமற்றவர்களாக இருந்தாலும், வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள்.

கீதாஞ்சலி ஸ்ரீ

கெஹாட் ஹம்டி

கெஹாட் ஹம்டி, எகிப்து

பல் மருத்துவர் மற்றும் மனிதாபிமானி

பல் மருத்துவர் கெஹாட் ஹம்டி ‘ஸ்பீக் அப்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் மேலாளர். 2022ஆம் ஆண்டில் எகிப்து முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் தொடர்வதால் இவரது அமைப்பு அதையே மையப்படுத்தி வேலை செய்து வருகிறது.

இந்த அமைப்பு துஷ்பிரயோகம் பற்றி பேச பெண்களுக்கு ஊக்கம் தருவதுடன் சட்ட மற்றும் உணர்ச்சிபூர்வ ஆதரவையும் வழங்குகிறது. அதிகாரிகளுக்கும் அழுத்தம் தருகிறது. ஹம்டியின் பிரசாரம் உலக நீதி மன்றம் 2022இல் சம உரிமைகள் மற்றும் பாகுபாடு இல்லாத விருதை வென்றது உட்பட பல சந்தர்ப்பங்களில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

செல்ல வேண்டிய தூரம் அதிகம்; நாங்கள் முடிவை நெருங்கவில்லை. உண்மையில், நாங்கள் இன்னும் தொடங்கவில்லை.

கெஹாட் ஹம்டி

ஜூடித் ஹியூமன்

ஜூடித் ஹியூமன், அமெரிக்கா

மாற்றுத்திறனாளி உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்

ஜூடித் ஹியூமன், மார்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராட தன் வாழ்நாளை அர்ப்பணித்துள்ளார். சிறு வயதில் போலியோ நோயால் பாதிக்கப்பட்ட பிறகு, நியூயார்க் நகரில் ஆசிரியையாகப் பணிபுரியும் முதல் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துபவர் என்ற பெருமையைப் பெற்றார்.

மாற்றுத்திறனாளி உரிமைகள் இயக்கத்தின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தலைவராக உள்ளார். அமெரிக்க மத்திய அரசு கட்டடத்துக்குள் நடத்திய மிக நீண்ட உள்ளிருப்பு போராட்டம், முக்கிய சட்டத்தை செயல்படுத்த காரணமாக இருந்தது இவரது செயல்பாட்டுத் திறனின் அடையாளங்கள். கிளின்டன் மற்றும் ஒபாமா நிர்வாகங்களில் ஹியூமன் பணியாற்றினார். லாப நோக்கமில்லா பணியில்20 வருட அனுபவத்தைக் கொண்டவர்.

2020 வெற்றியாளர், மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர் ஷானி தண்டாவால் பரிந்துரைக்கப்பட்டார்.

“உலகளவில் மாற்றுத்திறனாளிகளின் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் ஜூடித்தின் சேவையால் உண்மையிலேயே நான் ஈர்க்கப்பட்டேன். அவர் அயராது குரல் கொடுப்பவராகவும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் இயக்கத்தின் முக்கிய பகுதியாக இருந்துள்ளார்.”

கிமிகோ ஹிராட்டா

கிமிகோ ஹிராட்டா, ஜப்பான்

காலநிலை செயல்பாட்டாளர்

நிலக்கரி சக்தியின் கடுமையான எதிர்ப்பாளரான கிமிகோ ஹிராட்டா, காலநிலை மாற்றத்துக்கு மிகப்பெரிய காரணமான புதைபடிவ எரிபொருட்களை ஜப்பான் சார்ந்திருப்பதைத் தடுக்க தனது வாழ்நாளில் பாதியை செலவிட்டார் – கீழ்நிலையில் தொடங்கிய இவர் நடத்தி வரும் பிரசாரத்தின் விளைவாக 17 திட்டமிடப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் ரத்து செய்யப்பட்டன. கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசை வென்ற முதல் ஜப்பானிய பெண்மணி இவர்.

1990களில் அல் கோரின் ‘எர்த் இன் தி பேலன்ஸ்’ என்ற புத்தகத்தைப் படித்த பிறகு, ஹிராட்டா பதிப்பக நிறுவனத்தில் ஆற்றி வந்த வேலையை கைவிட்டார். 2022 ஜனவரியில் நிறுவப்பட்ட கரிம நீக்கலை கையாளும் கிளைமேட் இன்டெக்ரேஷன் என்ற சுயாதீன அமைப்பின் நிர்வாக இயக்குநராக இவர் தற்போது உள்ளார்.

எரிகா ஹில்டன்

எரிகா ஹில்டன், பிரேஸில்

அரசியல்வாதி

பிரேஸிலின் தேசிய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கருப்பின திருநங்கை எரிகா ஹில்டன். இவர் இனவெறிக்கு எதிராகவும், LGBTQ+ மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புக்காகவும் பிரசாரம் செய்யும் செயல்பாட்டாளர்.

பதின்ம வயதுகளில், பழமைவாத குடும்ப வீட்டிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்கு முன்பு இவர் வீதிகளில் வாழ்ந்தார். மாணவர் பருவ அரசியல் பின்னணி கொண்ட ஹில்டன், சாவோ பாலோவுக்கு சென்று இடதுசாரி பிஎஸ்ஓஎல் கட்சியில் சேர்ந்தார். 2020ஆம் ஆண்டில் அவர் நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரேஸிலின் மிகப்பெரிய நகரில் பசிக்கு எதிராக நகராட்சி நிதியை அறிமுகப்படுத்திய சட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

கருப்பு, லத்தீன், வெள்ளை, ஏழை, பணக்காரர், சிஸ் அல்லது திருநங்கை என எதுவாக இருந்தாலும், எங்களின் சம உரிமைகள், சம ஊதியங்கள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடனேயே நாங்கள் போராடுகிறோம்.

எரிகா ஹில்டன்

சோபியா ஹெய்னோனென்

சோபியா ஹெய்னோனென், அர்ஜென்டீனா

பல்லுயிர் பாதுகாவலர்

பல்லுயிரியலைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள உயிரியலாளர் சோபியா ஹெய்னோனென். அர்ஜென்டீனாவின் முக்கிய ஈரநில சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பான எஸ்டெரோஸ் டெல் ஐபெராவின் மறுவடிவமைப்புடன், தென் அமெரிக்காவில் ஏற்பட்ட அழிவு நெருக்கடியை மாற்றியமைப்பதற்கான முதல் முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்குவதில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்பை வழங்கி வருகிறார்.

இவரது தலைமையின் கீழ், அர்ஜென்டீனா மீள்காடு திட்டம், படகோனியன் புல்வெளி உட்பட நான்கு முக்கிய சுற்றுச்சூழல் பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது. இது தனியார் நிலத்தை பாதுகாக்கப்பட்ட தேசிய பூங்காக்களாக மாற்றுவதையும், சுற்றுச்சூழல் அமைப்புகளை மீட்டெடுக்கவும், நிலையான சுற்றுச்சூழல் சுற்றுலாவை உருவாக்கவும் பூர்வீக இனங்களை மீண்டும் அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Previous Story

சிறுநீரக மோசடி சம்பவ சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Next Story

நாய் சேகர் - சினிமா விமர்சனம்