IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 46 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி, ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதன் மூலம் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. டாக்காவில் உள்ள ஷேர்-ஈ-பங்களா தேசிய மைதானத்தில் உள்ளூர் நேரப்படி மதியம் 12 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கியது.

பந்துவீச்சில் அசத்திய வங்கதேசம்

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் பேட் செய்த இந்திய அணி 41.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் நல்ல தொடக்கத்தைக் கொடுக்கவில்லை.

ரோகித் சர்மா 31 பந்துகளில் 27 ரன்களும், தவான் 17 பந்துகளில் 7 எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் 15 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஷாகிபின் பந்துவீச்சில் லிட்டன் தாசுக்கு கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்தவர்களில் விக்கெட்-கீப்பர் கே.எல். ராகுல் தவிர வேறு யாருமே சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ராகுல் 70 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். இந்திய பேட்ஸ்மேன்களில் இன்று இவரது ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே நூறைக் கடந்தது. தீபக் சாஹர் மற்றும் குல்தீப் சென் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

India's Mohammed Siraj and Virat Kohli

முஷ்ஃபிகர் ரஹீம் அவுட் ஆனதைக் கொண்டாடும் இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் மற்றும் விராட் கோலி.

12 வைடு உள்பட இந்தியாவுக்கு எக்ஸ்ட்ரா ரன்கள் மூலம் மட்டுமே 12 ரன்கள் கிடைத்தன. இல்லாவிட்டால் இந்தியாவின் ஸ்கோர் இன்னும் பரிதாபமாக இருந்திருக்கும்.

முதல் இன்னிங்சில் பந்துவீச்சைப் பொறுத்தவரை வங்கதேச அணி சார்பில் ஷாகிப் அல் ஹசன் ஐந்து விக்கெட்டுகளையும், இபாதத் ஹொசைன் நாக்கு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். மெஹுதி ஹசன் மிராஜ் ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷாகிப் தாம் வீசிய 10 ஓவர்களில் 36 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இரண்டு ஓவர்களில் ஒரு ரன் கூட கொடுக்கவில்லை. எனினும், இந்தியாவுக்காக ஐந்து வைடு பால்களை வீசி எஸ்ட்ரா ரன்கள் கொடுத்தார்.

முதல் பந்திலேயே வங்கதேசத்துக்கு அதிர்ச்சி

எளிதான இலக்குதான் என்றாலும் வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியபோது, முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் நஜ்முல் ஹொசைன் சாண்டோ, இந்தியாவின் தீபக் சாஹர் பந்துவீச்சில் ரோகித் சர்மாவுக்கு கேட்ச் கொடுத்து டக்-அவுட் ஆனார்.

வங்கதேச அணியின் இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் அந்த அணிக்காக அதிகபட்சமாக 63 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர் ரன் எடுக்கவே திணறிய வங்கதேச பேட்ஸ்மேன்கள் 35வது ஓவருக்கு பின்னர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பேட்ஸ்மேன்களே ரன் எடுக்கத் திணறிய நிலையில், பேட்டிங் செய்ய வந்த பௌலர்கள் இபாதத் ஹொசைன் மற்றும் ஹசன் மஹ்மூத் ஆகியோர் டக்-அவுட் ஆகினர்.

எனினும், 24ஆம் ஓவரில் நான்காவது விக்கெட்டை இழந்த வங்கதேசம், 35வது ஓவரில்தான் அடுத்த விக்கெட்டை இழந்தது.

35வது ஓவரின் கடைசி பந்தில் இருந்து 40வது ஓவருக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, ஆட்டம் முடியும் வரை தனது கடைசி விக்கெட்டை இழக்காமல் இருந்தது வெற்றிக்கு வழிவகுத்தது.

இந்திய அணியின் முகமது சிராஜ் ஒரு மெய்டன் ஓவர் உள்பட 10 ஓவர்கள் வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரது எகானமி வெறும் 3.20 ஆகவே இருந்தது.

குல்தீப் சென் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய பந்துவீச்சாளர்கள் வங்கதேசத்துக்கு 17 எக்ஸ்ட்ரா ரன்களைக் கொடுத்து உதவினர்.

Previous Story

ஒரே நபரை, ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

Next Story

சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு.! 'வண்ணக் கனவு'