ஒரே நபரை, ஒரே மேடையில் திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி பாட்கோன்கர் மற்றும் பிங்கி பாட்கோன்கர். இவர்கள் ஐ.டி. துறையில் பணியாற்றும் பொறியாளர்கள்.

இவர்கள் மும்பையில் டிராவல்ஸ் தொழில் செய்துவரும் அதுல் ஆவதாடே என்பவரை டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர். பிங்கி மற்றும் ரிங்கி ஆகியோர் அவர்கள் தாயுடன் வசித்து வந்தனர். ஒருமுறை பிங்கி, ரிங்கி மற்றும் அவர்களின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது அதுல் நடத்தும் நிறுவனத்தின் கார்கள் மூலம் மருத்துவமனைக்குச் சென்று வந்துள்ளனர்.

அப்போது உண்டான பழக்கம் நெருக்கமான உறவாக மாறி, இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது.

சமூக ஊடகங்களில் இந்தத் திருமண நிகழ்வின் படங்களும் காணொளிகளும் வைரலாகி வரும் நிலையில், இந்தத் திருமணம் சட்டப்படி செல்லுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது குறித்து அறிய அக்லுஜ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி அருண் சுகாவ்கரை பிபிசி மராத்தி தொடர்பு கொண்டது.

இரட்டை சகோதரிகள் இருவருமே ஒரே நபரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சிறு வயது முதலே முடிவு செய்தனர். இவர்களின் முடிவுக்கு இவர்கள் குடும்பமும் ஒப்புதல் அளித்தது என்று அவர் தெரிவித்தார்.

Marriage of twin sisters with one son

திருமணம் நடந்த கலான்டே ஹோட்டலின் உரிமையாளர் நானா கலான்டேவை பிபிசி மராத்தி தொடர்பு கொண்டது.

”திருமணம் குறித்து நான் அந்தப் பெண்களிடம் பேசினேன். தாங்கள் படித்தவர்கள் என்றும் தங்கள் சுயவிருப்பத்தின் பெயரிலேயே இந்தத் திருமணத்தைச் செய்துகொள்வதாகவும் அவர்கள் கூறினர். இருவரும் ஒப்புக்கொண்டுதான் திருமணம் செய்கிறார்கள் என்று தெரிந்தபின்னரே எனது இடத்தில் திருமணம் நடத்த அனுமதித்தேன். அவர்கள் விவரங்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டேன்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் இந்தத் திருமணம் நடந்ததற்கு எதிராக இளைஞர் ஒருவர் அக்லுஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

”இது குறித்து விசாரித்து வருகிறோம். அதன் பின்னரே நடவடிக்கை குறித்து கூற முடியும்,” என்று காவல் அதிகாரி அருண் சுகாவ்கர் தெரிவித்தார்.

சட்டம் என்ன சொல்கிறது?

ஒரே நபரை திருமணம் செய்துகொண்ட இரட்டை சகோதரிகள்

இந்திய சட்டப்படி முதல் மனைவி அல்லது கணவர் உயிருடன் இருக்கும்போது, அவரை விவாகரத்து செய்யாமல், இன்னொரு நபரைத் திருமணம் செய்யக்கூடாது.

அதையும் மீறி திருமணம் செய்தால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.

இப்படி சட்டத்துக்கு புறம்பான திருமணம் செய்தவருக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கலாம் என்று இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 494 கூறுகிறது.

முன்னதாக பிபிசி மராத்தி வழக்கறிஞர் அசிம் சரோதேவுடன் பேசியது. ”இந்தியாவில் இருதார மணத்துக்கு எதிராக சட்டம் உள்ளது. ஆனால், இருவர் ஒரே நபருடன், ஒரே நேரத்தில் மண உறவில் இருக்க ஒப்புக்கொண்டு வாழ்ந்தால் அது குற்றமாகாது. ஒருவருடன்தான் வாழ்வோம் என்று இருவருமே சொன்னால், அதற்கு மற்றவர்கள் என்ன செய்ய முடியும்,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Previous Story

ரூபாய் காசும் ரணில் பேச்சும்!

Next Story

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்