இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு! புதின்….?

நாளை தொடங்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளப் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கிளம்பிவிட்ட நிலையில், இதில் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்ள மாட்டார் எனச் சொல்லப்படுகிறது. இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இதில் இருந்து தள்ளியே இருக்கிறார்.

அவர் இதில் கலந்து கொள்ள மாட்டார் என்றே கூறப்படுகிறது. சர்வதேச அளவில் மிக முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இந்த ஜி20 மாநாட்டை அவர் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது ஏன் என்றும் அவர் வேறு ஏதேனும் திட்டமிடுகிறாரா என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை பெறுகிறார் பிரதமர் மோடி- இந்தோனேசியா பயணம் ஜி20 மாநாடு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கடைசி சில ஆண்டுகளாகவே ஜி20 மாநாட்டில் தொடர்ந்து கலந்து கொண்டு வந்தார். அவர் கடைசியாக 2014ஆம் ஆண்டில் தான் G20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.

அதாவது கிரிமியாவைக் கைப்பற்றிய உடனே நடந்த ஜி20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவில்லை. இப்போது 9 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் மீது முழு வீச்சில் போரை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த முறையும் மாநாட்டை அவர் புறக்கணிக்கிறார். என்ன காரணம் இந்தோனேசியாவில் நாளை தொடங்கும் இந்த ஜி20 மாநாட்டிற்குச் சென்றால் நிச்சயம் புதின் மீது விமர்சனங்களை அணிவகுக்கும்.

இதைத் தடுக்கவே அவர் ஜி20 மாநாட்டிற்குச் செல்வதைத் தவிர்த்து இருக்கலாம் என வல்லுநர்கள் கூறுகின்றனர். இருப்பினும், ஏற்கனவே ரஷ்யா மீது உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் புதின் கலந்து கொள்ளாதது ரஷ்யாவுக்கு நிலைமையை மேலும் சிக்கலானதாக மாற்றும்.

அவமானம்

இது தொடர்பாக ரஷ்யாவைத் தொடர்ந்து கண்காணித்து வரும் அலெக்ஸி மலாஷென்கோ கூறுகையில், “மீண்டும் ஒரு முறை புதின் அவமானப்படுத்தப்பட விரும்பவில்லை என்றே இதை நாம் எடுத்துக் கொள்ளலாம். 2014 பிரிஸ்பேன் உச்சி மாநாட்டில் தலைவர்கள் ஒன்றாக இன்று எடுத்துக் கொள்ளும் க்ரூப் போட்டோவில் புதின் ஒரு ஓரத்தில் நிற்க வைக்கப்பட்டார்.

அதுபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடக்கக் கூடாது என்று அவர் நினைக்கிறார். இதுதான் காரணம் மேலும், தற்போதுள்ள சூழலில் புதின் உடன் எந்தவொரு தலைவர்களும் பேசக் கூட தயங்குவார்கள் என்றே நினைக்கிறேன். மேலும், இந்தக் கூட்டத்தில் உக்ரைன் போரால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் உணவு பற்றாக்குறை குறித்து அதிகம் பேசுவார்கள்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருப்பதைத் தவிர்க்கவே புதின் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து உள்ளார்” என்று அவர் தெரிவித்தார். உலக நாடுகள் அதிபர் புதினுக்கு இருந்த இதர வேலைகளால் இந்தக் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்று ரஷ்யா கூறுகிறது.

அவர் வீடியோ மூலம் கூட இந்த உச்சி மாநாட்டில் பேச மாட்டார் என்று கூறப்பட்டு உள்ளது. அதேநேரம் மறுபுறம் வீடியோ மூலம் இதில் உரையாற்ற உள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை நிச்சயம் உலக நாடுகளுக்கு வலியுறுத்துவார். ரஷ்யா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கலந்து கொள்ள இருக்கிறார்.

உக்ரைன் போர் உக்ரைன் நாட்டில் ரஷ்யாவால் எதுவுமே செய்ய முடியாத சூழல் இப்போது இருக்கிறது. பல மாதங்களாகப் போர் தொடரும் நிலையிலும், ரஷ்யாவால் வெல்ல முடியவில்லை. பல முக்கிய நகரங்களில் இருந்தும் ரஷ்யா வரிசையாகப் பின்வாங்கி வருகிறது. இந்தச் சூழலில் இரு தரப்பும் ஒப்புக் கொள்ளக் கூடிய ஒரு முடிவை புதின் தர வாய்ப்புகள் மிகக் குறைவு.

இதுவும் கூட புதின் உச்சி மாநாட்டைப் புறக்கணிக்க ஒரு காரணமாக இருக்கிறது. காய் நகர்த்தும் ரஷ்யா அதேநேரம் இதைப் புறக்கணிப்பதால் ஒட்டுமொத்தமாக உலகில் இருந்தும் ரஷ்யா தனித்து விடப்படுமா என்றால் இல்லை தான். அமெரிக்கா மீது கோபத்தில் இருக்கும் நாடுகளை ஒருங்கிணைத்து தனது அணியில் சேர்த்துக் கொள்ள புதின் முயல்கிறார்.

குறிப்பாக ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளைத் தனது பக்கம் கொண்டு வந்து அமெரிக்காவுக்கு எதிராக ஒரு அணியை உருவாக்க புதின் முயல்கிறார். வாய்ப்புகள் குறைவு ஆனால், இதில் அவர் வெல்ல வாய்ப்புகள் மிக மிகக் குறைவு. ஏனென்றால், உக்ரைன் போரை அவர் தொடங்கிய சமயத்தில் சீனா தவிர எந்தவொரு முக்கிய நாடும் ரஷ்யாவுக்கு ஆதரவாக வந்து நிற்கவில்லை.

ஏற்கனவே, ரஷ்யாவின் அண்டை நாடுகள் எங்கு உக்ரைன் மீதான போரைப் போல ரஷ்யா தங்கள் மீதும் போரை ஆரம்பிக்குமோ என்ற அச்சத்தில் உள்ளன. எனவே, தற்போதுள்ள சூழலில் அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவால் எளிதாக ஒரு அணியை உருவாக்க முடியாது என்பதே உண்மை.

Previous Story

உலகக் கோப்பை: ஈரான் வெளியேற்றப்பட வேண்டும்!

Next Story

மஹிந்த தேசப்பிரிய துரோகியா!