குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து நூற்றுக்கணக்கானோர் ஆற்றில் மூழ்கினர்

குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பாலம் இடிந்ததால் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கானோர் மூழ்கியுள்ளனர். பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் மக்கள் தொங்கிக்கொண்டிருப்பதை காணொளிகளில் பார்க்க முடிகிறது.

பாலம்

அந்த நேரத்தில் 400 பேர் கட்டிடத்தில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலம் பழுதுபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்ட சில நாட்களில் இது நடந்திருக்கிறது.

மூன்று நாள் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, “இந்த சோகத்தால் மிகவும் வருத்தமடைந்தேன்” என்று கூறினார்.

இருள் சூழ்ந்ததால் தண்ணீரில் சிக்கியவர்களைக் காப்பாற்ற பார்வையாளர்கள் முயற்சிக்கும் போது காட்சிகளை வீடியோக்கள் காட்டுகின்றன.

இந்தியக் குடியரசுத் தலைவர் திரவுபதி மூர்முவும் தனது கவலையைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியிருக்கிறார்.

மீட்புப் பணிகளில் உதவ அண்டை மாவட்டங்களில் இருந்து அவசர உதவியாளர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் இயக்குநர் அதுல் கர்வால், மூன்று குழுக்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். காந்திநகரில் இருந்து இரண்டு குழுவும், பரோடாவில் இருந்து ஒரு குழுவும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குஜராத் பாலம்

ட்விட்டரில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் பூபேந்திர படேல் “மோர்பியில் தொங்கு பாலம் இடிந்து விழுந்தது வருத்தமளிக்கிறது. நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தியுள்ளேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்கு 5 நபர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது

தீபாவளிக்குப் பிறகு குஜராத்தி புத்தாண்டு அன்றுதான் இந்தப் புதிய பாலம் திறக்கப்பட்டது.மோர்பியில் உள்ள மச்சு ஆற்றின் மீது கட்டப்பட்ட இந்த ஊஞ்சல் பாலம் நவீன ஐரோப்பிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோர்பிக்கு தனித்துவமான அடையாளத்தை வழங்கும் நோக்கத்துடன் கட்டப்பட்டது.மோர்பி நகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலில், இந்த பாலம் பொறியியலின் அதிசயம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

குஜராத்

இந்த பாலம் 1.25 மீட்டர் அகலமும் 233 மீட்டர் நீளமும் கொண்டது. மச்சு ஆற்றில் உள்ள தர்பார்கர் அரண்மனை மற்றும் லக்திர்ஜி பொறியியல் கல்லூரியை இணைக்கிறது.இந்த விபத்து குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், “மாலை 6.30 மணியளவில் பாலம் இடிந்து விழுந்தது.

அப்போது அங்கு 150 பேர் கூடியிருந்தனர்.” என்றார்.விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் 15 நிமிடங்களில் அங்கு வந்தனர். இதனுடன், கலெக்டர், மாவட்ட எஸ்பி, டாக்டர்கள் மற்றும் ஆம்புலன்ஸ்களும் அங்கு வந்தனர். தாமும் உடனடியாக சம்பவ இடத்திற்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

Previous Story

“பேய்” பார்ட்டி.. மாரடைப்பில் சரிந்த மக்கள்!

Next Story

சோமாலியா தலைநகரில் குண்டுவெடிப்பு - நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு