உலக பக்கவாதம் தினம்: ”தூக்கமின்மையாலும் பாதிப்பு வரலாம்”

கருவில் இருக்கும் குழந்தை முதல், இளம் வயதினர் மற்றும் முதியவர் என பாகுபாடின்றி எல்லா வயதினரையும் ‘பக்கவாதம்’ தாக்குகிறது  மூத்த நரம்பியல் நிபுணர் ஆர் எம் பூபதி.
உலக பக்கவாதம் தினம்

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29ஆம் தேதி பக்கவாத விழிப்புணர்வு தினம் ஆக உலகளவில் கடைப்பிடிக்கப்படுகிறது. பக்கவாத பாதிப்புஏற்பட்ட மூன்று மணிநேரத்திற்குள் ஒரு நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டால், அவர் முழுமையாகவோ அல்லது 50 சதவீத குணமடைய வாய்ப்புகள் உள்ளதால், பக்கவாதம் மூலம் ஏற்படும் ஊனம் மற்றும் மரணத்தை தடுக்கமுடியும் என்கிறார் மருத்துவர் பூபதி. இந்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் நோயாளியாக வேண்டிய சூழல் இந்திய அளவில் இருப்பதாக கூறுகிறார் பூபதி. பேட்டியில் இருந்து:

பக்கவாத பாதிப்பு என்றால் என்ன? அதனை குணப்படுத்த முடியுமா?

உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு சிறப்பு இருக்கும். மூளை என்ற உறுப்புக்கு தனிச்சிறப்பு என்னவென்றால், அதுதான் எல்லா உறுப்புகளும் வேலை செய்வதற்கான கட்டளையை உடலுக்கு உணர்த்துகிறது. மூளைக்கு செல்லும் ரத்தம் தடைப்பட்டு, மூளை இயங்குவது தடைபட்டால், மூளையின் செல் தசைகள் பாதிப்படையும். மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ, அதைப் பொறுத்து உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும். உடலின் ஒரு பக்கம்,கை,கால், முகத்தின் ஒரு பகுதி என பாதிப்பை பொறுத்து அந்த பகுதி செயல் இழக்கும்.

பக்கவாத அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே மருத்துவ உதவி கிடைத்தால், பக்கவாத்தின் பாதிப்புகளை 60 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும். ஒரு சில சமயம் பாதிக்கப்பட்ட நபரை முழுமையாக குணப்படுத்தவும் முடியும்.

பக்கவாதத்தின் முக்கிய அறிகுறிகள் என்ன?

உடல் சமநிலை இழப்பது, ஒன்று அல்லது இரண்டு கண்களிலும் பார்வை இழத்தல், முகம் ஒரு புறமாக இழுத்துக் கொள்ளுதல், ஒரு பக்க கை கால்கள் பலவீனமடைந்து செயலற்றுப்போவது, பேச முடியாத அல்லது பேச்சில் குளறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் எந்த வயதினரிடம் தென்பட்டாலும் அதை அவசர நிலையாக கருதி மருத்துவ உதவியை நாட வேண்டும்.க்கம் ஏற்படும்?

முந்தைய காலங்களில் பக்கவாதம் முதியவர்களுக்குத்தான் ஏற்படும் என்ற கருத்து நீடித்திருந்தது. தற்போது, மருத்துவ உலகத்தில் அறிமுகம் ஆகியுள்ள மேம்படுத்தப்பட்ட கருவிகள் மூலமாக கருவில் இருக்கும் குழந்தைகளுக்கு பக்கவாதம் ஏற்படும்போது அதனை கண்டறியமுடியும். இளம் வயதினர் கூட இதில் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் பலரும் இதில் பாதிக்கப்படுகிறார்கள். இது முதியவர்களின் நோய் அல்ல.

ஆர்.எம். பூபதி

மருத்துவர் ஆர்.எம். பூபதி, நரம்பியல் நிபுணர்

கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படுவது ஏன்?

கருவில் இருக்கும் குழந்தைக்கு தாயின் ஆரோக்கியம்தான் ஆதார சக்தி. தாய்க்கு ரத்தசோகை, தைராய்டு குறைபாடு இருப்பது, குழந்தையின் இதயக் குழாய் அல்லது இதயத்தின் வடிவமைப்பு சரியாக அமையாமல் போவது, தொப்புள்கொடி குழந்தையின் கழுத்துப் பகுதியை சுற்றி இருப்பது உள்ளிட்ட காரணங்களால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படும்.

ஒருசில சமயங்களில், கருவுற்ற தாய் ஒருவேளை விபத்தை சந்தித்தாலோ காயமடைந்தாலோ அவை கூட காரணமாக அமையும். ஒருவேளை தாய்க்கு ஏற்கெனவே இதய குழாய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கும்.

கருவில் இருக்கும் குழந்தைக்கு ஏற்படும் பாதிப்பை கண்டறியலாம்,அதனை முழுமையாக குணப்படுத்துவது என்பது தற்போது சாத்தியமில்லை. ஒரு சில நேரங்களில், குழ்நதை பிறந்த சில மாதங்கள் கழித்துதான் பக்கவாதம் இருப்பதை அறியமுடியும். பேறுகால கவனிப்புதான் கருவில் இருக்கும் குழந்தைக்கு பக்கவாதம் ஏற்படாமல் இருப்பதை தடுக்கும் வழி.

உலக பக்கவாதம் தினம்

இளம்வயதினர் பக்கவாத தாக்குதலுக்கு ஆளாவது எப்படி?

தூக்கமின்மை ஒரு முக்கிய காரணம். இயற்கை விதிப்படி, நாம் இரவு உறங்கவேண்டும். எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம். அதனை நீண்ட காலத்திற்கு ஒத்திவைப்பது, உடற்பயிற்சி இல்லாமல் உட்கார்ந்த நிலையில் பலமணிநேரம் வேலை செய்வது, ஆரோக்கியமான உணவு பழக்கம் இல்லாமல் ஜங் உணவுகளை எடுப்பதால், உடல்எடை அதிகரிக்கும், இதன் விளைவாக சிறிதளவு இதயதுடிப்பு, ரத்த அழுத்தம் என எல்லா காரணிகளும் உயரும்.

எடை குறைப்பு செய்யாவிட்டால், இயற்கைக்கு மாறான வாழ்வியலில் நீண்ட காலம் இருந்தால், அது விரைவில் பக்கவாதத்திற்கு கொண்டு செல்லும். இந்தியாவில் ஒரு லட்சத்தில் 40 -50 நபர்களுக்கு பக்கவாதத்தால் மரணம் ஏற்படும் என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்த எண்ணிக்கையில் கணிசமானவர்கள் இளைஞர்களாக இருப்பதுதான் நமக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.

ரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால், அது பக்கவாதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணியாக அமையும். மது மற்றும் புகை பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் நல குறைபாடுகள் காலப்போக்கில் பக்கவாதத்தை ஏற்படுத்தும். உங்கள் உடல்நலனை நீங்கள் சீர்படுத்த முயற்சி எடுக்கவில்லை எனில், பக்கவாதம் என்ற விளைவை நீங்கள் சந்திக்கவேண்டும். அதிக கொழுப்புச் சத்து இருந்தால், அது ரத்த நாளங்களில் படிந்து, அவற்றின் அளவை (விட்டத்தை) குறைக்கும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டி ரத்த அளவு குறைந்து பக்கவாதம் ஏற்படும். கொழுப்பு இல்லாத உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வது சிறந்தது.

பக்கவாதத்தால் மரணம் ஏற்படுமா?

பக்கவாதத்தின் தாக்கத்தை பொறுத்து மரணம் நிகழும் வாய்ப்பும் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் உடனடி சிகிச்சை கிடைத்தால், உடலில் ஊனத்துடன் அந்த பாதிப்பை தடுக்கமுடியும். சரியான சிகிச்சை இல்லாத பட்சத்தில் மரணம் ஏற்படும். பக்கவாதத்தில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக மாறும் வாய்ப்பும் உள்ளது. உடலில் ஒருபக்கம் முழுவதும் செயல் இழந்த படுக்கையில் இருக்கும் நிலை வரலாம். அது முதியவர்களுக்கு மட்டும் ஏற்படும் என்று சொல்லமுடியாது.

ஒரு வீட்டில் ஒரு நபர் பக்கவாதம் ஏற்பட்ட நபராக இருந்தால், அவருக்கு மட்டுமே சிகிச்சை என அல்லாமல், அவர்கள் எல்லோருக்கும் மனநல ஆலோசனை தேவைப்படும். ஒரு சிலருக்கு குணமாகும் வாய்ப்பு இருக்கும். குணம் பெற வாய்ப்பில்லாதவருக்கு காலம் முழுவதும் சிகிச்சை தேவைப்படும்.

Previous Story

UK:முதல் பெண்மணி: பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி சுவாரசிய தகவல்கள்

Next Story

ஹக்கீமின் புதிய கண்டுபிடிப்பு!