சினம்: சினிமா விமர்சனம்

நடிகர்கள்:

அருண் விஜய், பல்லக் லால்வாணி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர்;

ஒளிப்பதிவு: எஸ். கோபிநாத்;

இசை: ஷபீர்;

இயக்கம்: ஜி.என்.ஆர். குமாரவேலன்.

அருண் விஜய்

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கியிருக்கும் படம் இது. சுமார் இரண்டு மணி நேரமே ஓடக்கூடிய இந்தப் படத்தை கோவிட் பரவல் காரணமாக முதலில், ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. பிறகு முடிவு மாற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.

படத்தின் கதை

சென்னையின் புறநகர்ப் பகுதியில் அமைந்திருக்கும் காவல் நிலையம் ஒன்றில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார் கதாநாயகன் பாரி வெங்கட் (அருண் விஜய்). கடமையும் நேர்மையும் தவறாத அவரது குணத்தை அவ்வப்போது கிண்டலடிக்கிறார் அந்தக் காவல் நிலையத்தின் ஆய்வாளர். இந்த நிலையில், தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் சென்னை திரும்பும் அருண் விஜய்யின் மனைவி மாதங்கி (பாலக் லால்வானி) கொலை செய்யப்படுகிறார்.

அவருடைய உடலுக்கு அருகே மற்றொரு ஆணின் உடல் இருப்பதால் அந்த வழக்கை ‘கள்ளக் காதல்’ வழக்கு என பதிவு செய்கிறார் ஆய்வாளர். இதில் ஆத்திரமடையும் அருண் விஜய், ஆய்வாளரின் கையை உடைக்கிறார். இதையடுத்து அவரைப் பணி இடைநீக்கம் செய்தாலும், அவரிடமே வழக்கு ஒப்படைக்கப்படுகிறது. கொலையாளியையும் கொலைக்கான காரணத்தையும் எப்படி கண்டுபிடிக்கிறார் அருண் விஜய் என்பதே மீதிக் கதை.

சென்டிமென்ட் ஆன காவல் படம்

சினம்: சினிமா விமர்சனம்

காவல்துறையை அடிப்படையாகக் கொண்ட படம் என்றால், அது ஆக்ஷன் படமாக இருக்கும் என்பதை மாற்றி சென்டிமென்ட் ஆன படமாக தந்திருக்கிறார்கள் என்கிறது தினமலர் இணைய தளம்.

“போலீஸ் படம் என்றாலே ஒரு கமர்ஷியல் சினிமாவாக, அதிரடி ஆக்ஷன் படமாகத்தான் கொடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் அதற்கான வாய்ப்புகள் இருந்தும் சென்டிமென்ட்டான ஒரு படமாகக் கொடுக்க வேண்டும் என இயக்குநர் முயன்றிருக்கிறார்.

படத்தின் நாயகன் ஓர் ஆதவற்றவர். அவரது காதலுக்கு காதலி வீட்டில் எதிர்ப்பு, மனைவி இறந்ததும் இறுதி ஊர்வலப் பாடல் என சில காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம். இரண்டாம் பாதியில் மனைவியைக் கொன்றவர்கள் யார் என்பதை விசாரிப்பதில் எந்த சினிமாத்தனமும் வைக்காமல் ஒரு வழக்கின் விசாரணை இப்படித்தான் போகும் என இயல்பாய் காட்டியிருக்கிறார் இயக்குநர்.

போலீஸ் கதாபாத்திரத்தில் எப்போதுமே பொருத்தமாக நடிப்பவர் அருண் விஜய். இந்தப் படத்தில் கடமை தவறாத, நேர்மையான உதவி ஆய்வாளர் ஆக நடித்துள்ளார். காதல் மனைவி பாலக் லால்வானி கொலை செய்யப்பட்ட சோகம் ஒரு பக்கம், மனைவி மீதான அவப் பெயரைத் துடைக்க வேண்டும் என துடிக்கும் கோபம் ஒரு பக்கம் என அன்பான கணவனாக, அப்பாவாக துடிப்புடன் நடித்திருக்கிறார் அருண் விஜய்.

வழக்கமான சினிமாத்தனமான போலீசாகக் காட்டாமல் இயல்பான ஒரு போலீசாக அவரது கதாபாத்திரத்தை சித்தரித்திருக்கிறார் இயக்குநர். கிளைமாக்சில் அருண் விஜய் எடுக்கும் முடிவு சரியா, தவறா என்பதை மீறி அப்படித்தான் இருக்க வேண்டும் என நமக்குள்ளும் ஒரு கோபத்தை வரவழைக்கிறது,” என்கிறது தினமலர்.

இந்த காட்சியை தவிர்த்திருக்கலாம்

சினம்: சினிமா விமர்சனம்

ஒரு பழைய காவல்துறை பழிவாங்கும் கதையை பழைய பாணியில் சொல்லியிருக்கிறது ‘சினம்’ என விமர்சிக்கிறது தி இந்து நாளிதழின் விமர்சனம்.

“படத்தின் துவக்கக் காட்சியில் ஒரு ரவுடியைக் கைது செய்கிறார் கதாநாயகன் பாரி. அதற்குப் பிறகு அந்த வழக்கைப் பற்றி ஏதும் இல்லை. மாறாக, பாரிக்கும் மாதங்கிக்கும் இடையிலான காதல் கதையை அவர்கள் முதலில் சந்தித்ததில் இருந்து சொல்கிறார்கள்.

வழக்கமான காட்சிகளை ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கி, கையில் இருக்கும் தகவல்களை எல்லாம் தந்து விடுகிறார்கள். ஒரு மைல் தூரத்திற்கு அப்பால் என்ன வரப்போகிறது என்பது அப்போதே தெரிந்து விடுகிறது.

கொலை வழக்கை யாரிடம் ஒப்படைத்தாலும் முதலில் சிசிடிவி காட்சிகளை ஆராய்வதிலிருந்துதான் வழக்கைத் தொடங்குவார்கள். ஆனால், கதாநாயகன் பாரி மூன்றாவதாகவோ, நான்காவதாகவோதான் அந்த வேலையை செய்கிறார்.

எந்த விதத்திலும் ஆர்வமூட்டாத, வழக்கமான விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் உண்மையைச் சொல்கிறார்கள். மாதங்கியை அவர்கள் என்ன செய்தார்கள் என்பதைச் சொல்லும்போது அதனை காட்சியாக காட்ட வேண்டிய அவசியம் என்ன?

சராசரி படம் தான்

சினம்: சினிமா விமர்சனம்

ஒரு கட்டத்தில் இந்தப் படத்தில் தென்படும் தவறுகளைக் கண்டு கொள்ளாத நிலைக்கு வந்து விடுகிறோம். நல்ல நோக்கம் என்ற போர்வையில் பார்வையாளர்களின் புத்திசாலித்தனத்தை அவமானப்படுத்துகிறது இந்தப் படம்” என்று விமர்சித்துள்ளது தி இந்து.

ஒரு சராசரி திரைப்படமாக ‘சினம்’ உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

“சினம் படத்தின் ஆரம்ப காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. அவற்றை இயக்குநர் முன்னெடுத்துச் செல்லும்விதம் கதையோடு ஒன்ற உதவுகிறது. கதாநாயகனின் வாழ்வைத் தெரிந்துகொள்ள இந்த முதல் பாதி உதவுகிறது. ஆனால், படம் செல்லச் செல்ல, இன்னும் படத்தோடு ஒன்றவைக்கும் காட்சிகள் தேவைப்படுகின்றன. பார்த்துப் பார்த்து சலித்துப்போன மோதலையும் ஒரு வழக்கமான தீர்வையும் முன்வைப்பதால், ஒரு கச்சிதமான த்ரில்லர் என இந்தப் படத்தைச் சொல்ல முடியாது. படத்தின் இரண்டாம் பாதி வெகுவாக ஊகிக்கும் வகையிலேயே உள்ளது. தவிர, கதைக்கு வசதியாக விசாரணை செல்வதும் படத்தை மிக சராசரி படமாக மாற்றியுள்ளது.

சினம்: சினிமா விமர்சனம்

இயக்குநரின் நோக்கமும் சிந்தனையும் பாராட்டத்தக்கது என்றாலும் பல காட்சிகள் வலியத் திணிக்கப்பட்டிருப்பதோடு, அவை புதிதாகவும் இல்லை.

இந்தப் படத்தில் மிக முக்கியமான அம்சம், அருண் விஜயின் நடிப்புதான். அவர் மிகச் சிறப்பாக அதனைச் செய்திருக்கிறார். முழுப் படத்தையும் அவர்தான் தாங்கிப் பிடிக்கிறார். பாலக் லால்வானியும் தனது பாத்திரத்திற்குப் பொருத்தமான வகையில் நடித்திருக்கிறார்.

இந்தப் படம் பார்வையாளர்களின் கவனத்தைத் தக்கவைக்க முயன்றாலும், பாத்திரங்களோடு ஒன்றவைப்பதில் தவறிவிடுகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் புலனாய்வு காட்சிகளில் ஆழமோ, சுவாரஸ்யமோ இல்லை” என விமர்சித்துள்ளது தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ்.

Previous Story

திருச்செந்துறை கிராமம் வக்ஃப் வாரிய சொத்து?

Next Story

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது நியாயம்-போப் ஆண்டவர்