ஆசிய கோப்பை: இந்திய மோசமாக விளையாடியது ஏன்? ரோஹித் ஷர்மா கேப்டன்சியில்  தவறுகள் என்ன?

இலங்கைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியின்போது கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முகபாவனைகள் பார்க்கத் தரமானவையாக இருந்தன.

ரோஹித் ஷர்மா

சுமார் ஐந்து நிமிடங்கள் காட்சிகளை ஆய்வு செய்த பிறகு மூன்றாவது நடுவர் கேஎல் ராகுலுக்கு எல்பிடபிள்யூ கொடுத்தபோது, ரோஹித் ஷர்மாவின் முகம் இருண்டது.

அதேபோல், மறுமுனையில் விராட் கோலி பூஜ்ஜியத்தில் போல்ட் ஆனபோது, ரோஹித் ஷர்மா அணிக்காக எவ்வளவு கவலைப்பட்டார் என்பதை மீண்டும் ஒருமுறை அவருடைய முகம் காட்டிக் கொடுத்தது.

ஆனால் ரோஹித் ஷர்மாவின் இத்தகைய ஏமாற்றமான வெளிப்பாடுகள், கவலைகள் இந்த போட்டியில் மட்டுமல்ல, ஹாங்காங்கிற்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் காணப்பட்டன.

இலங்கையிடம் அடைந்த தோல்வி, ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் இருந்து இந்திய அணியை கிட்டத்தட்ட வெளியேற்றி விட்டது. பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குச் சென்றுவிட்டதால் இனி இந்திய அணிக்கு வாய்ப்பு இல்லை. அபாரமான நட்சத்திர வீரர்கள் நிறைந்த இந்திய அணி, ஆசிய கோப்பையில் சரியாக விளையாடாமல் போனதற்கு என்ன காரணம்?

பலவீனமான பந்துவீச்சு

ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ஜஸ்பிரித் பும்ரா அணியில் இடம்பெறவில்லை. மேலும் ஹர்ஷல் படேல் காயம் காரணமாக அணியில் இல்லை. அப்படி இருந்தாலும் இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு படுமோசமாகவே இருந்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, போட்டி முழுவதும் இந்திய பந்து வீச்சாளர்கள் ஏமாற்றம் அளித்தனர்.

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய பந்து வீச்சாளர்களின் செயல்பாடு சராசரிக்கும் குறைவாகவே இருந்தது. அந்தப் போட்டியில், ஹாங்காங் அணியின் பேட்ஸ்மேன்கள், ஆவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் 8 ஓவர்களில் 97 ரன்கள் எடுத்தனர்.

ஆவேஷ் 4 ஓவர்களில் 53 ரன்கள் கொடுத்த நிலையில், அர்ஷ்தீப் 4 ஓவர்களில் 44 ரன்கள் அளித்தார். அந்தப் போட்டியை இந்தியா வென்றது. இருப்பினும் கேப்டன் ரோஹித் எவ்வளவு கவலைப்பட்டார் என்பதை அவரது முகம் தெளிவாகக் காட்டிக் கொடுத்தது.

அதே நேரத்தில், பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிகளில், இந்திய பேட்ஸ்மேன்கள் சுமார் 180 ரன்கள் எடுத்தனர். ஆனால் இந்த ஸ்கோரை பந்து வீச்சாளர்களால் பாதுகாக்க முடியாமல் போனது. இந்திய அணி கடைசி ஓவரில் இரண்டு போட்டிகளையும் இழந்தது.

ரோஹித் ஷர்மா

இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் முதல் ஸ்பெல்லை சரியாக வீசினார். ஆயினும் கடைசி ஓவர்களில் வேகம் குறைந்ததால் அடி வாங்கினார். மறுபுறம், அர்ஷ்தீப் சிங் சில ஓவர்கள் நன்றாக வீசினார். ஆனால் அவரது பந்துவீச்சும் அனுபவமின்மையைக் காட்டியது. பேட்ஸ்மேன்கள் அர்ஷ்தீப்பின் பந்துகளில் விலாச முயன்ற போதெல்லாம், அவர்கள் வெற்றி அடைந்தனர்.

இந்திய சுழற்பந்து வீச்சாளர்களும் அவ்வப்போது மட்டுமே நன்றாக பந்து வீசினர். குல்தீப் யாதவை இந்தியா மறந்துவிடக் கூடாது என்றும் அவருக்கும் மீண்டும் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் போட்டியின் போது வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.

ஹர்திக் பாண்டியா பந்துவீச்சு குறித்த கேள்விகள்

ஹர்திக் பாண்டியாவின் பந்து வீச்சு குறித்து பெரும்பாலான கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. அணியில் பாண்டியா மூன்றாவது சீமரா அல்லது நான்காவது சீமரா என்று பல முன்னாள் வீரர்கள் கேள்வி கேட்கிறார்கள். ஆசிய கோப்பையில், நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பாண்டியா விளையாடிய பந்தயத்தில் (பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டி போல) சிறப்பாகச் செயல்பட்டார்.

அதே நேரத்தில் மீதமுள்ள போட்டிகளில் அவர் மூன்றாவது சீமராக எடுக்கப்பட்டார். மேலும் அவருடைய பந்துவீச்சில் வேகமாக ரன் அடிக்க எதிரணி முடிவு செய்ததால் அவருக்கு அழுத்தம் இருந்ததைப் போல் காணப்பட்டார்.

முகமது ஷமி போன்ற அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளர் அணியில் இல்லாததை தன்னால் நம்ப முடியவில்லை என்று வர்ணனையின் போது வாசிம் அக்ரம் கூறினார்.

மூன்று சீமர்களுடன் விளையாடிய இந்திய அணி, நான்காவது வேகப்பந்து வீச்சாளர் இல்லாத குறையை உணர்ந்தது. அணியின் பந்து வீச்சாளர்களால் நல்ல ஸ்கோரை கூட காப்பாற்ற முடியவில்லை.

இந்திய அணி

பேட்டிங்கும் முதல் மூன்று பேரை சார்ந்துள்ளது

டி20யில் நல்ல துவக்கம் கிடைத்தால், பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் கேமியோ ஆட்டம் ஆடினால்கூட அணியால் வெல்ல முடியும் என்று கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார். கேமியோ என்பது குறைவான பந்துகளில் அதிக ஸ்கோர் எடுப்பது. எடுத்துக்காட்டாக 10-12 பந்துகளில் 20-22 ரன்கள் எடுப்பது.

அதாவது பாகிஸ்தானுக்கு எதிராக ராகுலும் ரோஹித்தும் 50 ரன்கள் எடுத்ததைப் போல் ஒரு நல்ல ஓப்பனிங் கிடைத்தால், ஓரிரு கேமியோ இன்னிங்ஸ்கள் மூலம் அணியின் ஸ்கோர் இன்னும் உயர்ந்திருக்கும்.

அதே நேரத்தில், இலங்கைக்கு எதிராக ரோஹித் ஷர்மா, சூர்யகுமார் யாதவ் மூன்றாவது விக்கெட்டுக்கு 97 ரன் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டனர். ஆனால் அடுத்து வந்த வீரர்களால் மிக வேகமாக விளையாடவோ அல்லது ரன்களை எடுக்கவோ முடியவில்லை.

இந்தப் போட்டியின் ஆடுகளத்தைப் பார்க்கும்போது, முதலில் பேட் செய்யும் அணி கண்டிப்பாக 200 ரன்களை எடுக்க வேண்டும் என்று பல நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இரண்டாவது இன்னிங்ஸில் பிட்ச் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளது.

இந்திய பேட்டிங்கிலும் மேல் பகுதியே கனமாகத் தெரிகிறது. பெரிய ஸ்கோரை பெறுவதற்கு ரோஹித், ராகுல் மற்றும் விராட் ஆகிய முதல் 3 பேரை இந்தியா சார்ந்துள்ளது.

பாகிஸ்தான் அணி

காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல். ராகுல் ஒரு இன்னிங்ஸில் கூட 50 ரன்கள் எடுக்கவில்லை. மேலும் அவரது ரன் விகிதமும் மிகக் குறைவாக இருந்தது.

ரோஹித் ஷர்மாவும் சமீப நாட்களில் 30 ரன்களில் அவுட் ஆகிவிடுகிறார். அவர் இலங்கைக்கு எதிராக 72 ரன்கள் எடுத்தார். ஆனால் வேறுவிதமான ஷாட் ஆடி களத்தில் தொடர்ந்து இருந்திருக்க வேண்டிய ஒரு பந்தில் அவர் அவுட் ஆனார் என்பதையும் நாம் இங்கே கவனிக்க வேண்டும்.

அதே நேரத்தில் விராட் கோலியும் இரண்டு அரை சதங்களை அடித்தார். ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்து அணியை மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்.

மிடில் ஆர்டரில், சூர்யகுமார் மற்றும் ஹார்திக் பாண்டியா தலா ஒரு நல்ல இன்னிங்ஸ் விளையாடினர். ஆனால் மற்ற போட்டிகளில் அவர்களால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.

கேப்டன்சியில் தவறுகள்

ரோஹித் ஷர்மா ஐபிஎல்லின் சிறந்த கேப்டனாக கருதப்பட்டாலும், ஆசிய கோப்பையில் அவரது கேப்டன்சியில் பல தவறுகளைக் காணமுடிந்தது.

இந்திய அணி

இந்தியாவால் சமச்சீரான பதினொரு வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்ய முடியவில்லை. அதேநேரம் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சூப்பர் ஃபோர் போட்டிகளில் தீபக் ஹூடாவை பந்துவீசச் செய்யாததும் ஒரு தவறு.

ஒரு பந்து வீச்சாளரின் பந்துகளில் பேட்ஸ்மென் அதிகமாக ரன் அடிக்கும்போது, ஆறாவது பந்து வீச்சாளரை பந்துவீசச் செய்வதன் மூலம் இழப்பைக் குறைக்க முயற்சி செய்யப்படுகிறது.

சுழற்பந்து வீச்சாளர்களின் பந்துகளில் விளையாடுவதற்கு இலங்கை மிகவும் சிரமப்பட்டபோதும் கூட ரோஹித் இதைச் செய்யவில்லை.

ஆசிய கோப்பையில் இந்தியா தொடர்வது மற்ற அணிகளைச் சார்ந்தே உள்ளது. இலங்கையை தோற்கடித்த ஆப்கானிஸ்தான், தன்னை சாதாரணமாக நினைக்க வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அணியை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் தவறை இந்தியா செய்யக்கூடாது.

Previous Story

ஐ.நா.சபை இலங்கைக்கு எதிராக  மோசடிக் குற்றச்சாட்டு

Next Story

பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் - 33 குறிப்புகளில் மொத்த படமும்