பாபர் ஆஸம்: ‘வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்’

‘ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்’ என்று இந்தியாவுடனான ஆசிய கோப்பை டி20 போட்டி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறினார். கடைசி ஓவர் வரை நீடித்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது.
இந்தியா-பாகிஸ்தான்

கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் வீரர் நவாஸ் வீசிய பந்து ஜடேஜாவின் பேட்டையும் கடந்து ஸ்டம்ப்களை பதம் பார்த்தது. ஆடுகளத்தில் பரபரப்பு கூடியது.

அடுத்து வந்த அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் எடுத்து ஸ்டிரைக்கை ஹர்திக் பாண்டியா வசம் வழங்கினார். 3வது பந்து டாட் பாலாக மாறியது.மீதமுள்ள 3 பந்துகளில் இந்தியா 6 ரன்கள் எடுத்தாக வேண்டும்.

ஜடேஜாவின் ஆட்டமிழப்பும் ஒரு டாட் பந்தும் ஹர்திக் பாண்டியாவுக்கு நெருக்கடியை அளிக்கும் என கணிக்கப்பட்டிருந்தாலும் எதையும் பொருட்படுத்தாது தனக்கே உரிய பாணியில் 4வது பந்தை லாங்-ஆனில் சிக்சருக்கு பறக்கவிட்டு வெற்றியை தேடித் தந்தார்.

இரண்டு பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்திய அணி.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் என்ன நடந்தது?

ஆசிய கோப்பை டி20 போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரிட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய வீரர்களின் துல்லியமான பந்து வீச்சால் பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து, 147 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் முகமது ரிஸ்வான் 43 ரன்கள் எடுத்தார். சிறப்பாகப் பந்து வீசிய புவனேஸ்வர் குமார் 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதுவே பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டிகளில் இந்தியாவின் சிறப்பான பந்து வீச்சு. இதேபோல ஹர்திக் பாண்டியா தனது பங்கிற்கு 3 முக்கிய விக்கெட்களை வீழ்த்தினார்.

  • சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் (3499) குவித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோஹித் ஷர்மா. நியூசிலாந்தின் மார்டின் கப்தில் (3497) ரன்கள் எடுத்து 2ம் இடம் வகிக்கிறார்.
  • பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் மூலம் விராட் கோலி தனது 100வது சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய பெருமையைப் பெற்றார்.
  • தான் ஆடியுள்ள 53 டி20 ஆட்டங்களில் கே.எல்.ராகுல் 2வது முறையாக கோல்டன் டக் ஆகிறார். முன்னதாக 2016இல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கோல்டன் டக்கானார் ராகுல்.

தொடக்கத்தில் தடுமாறிய இந்தியா

148 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. நசீம் வீசிய முதல் ஓவரின் 2வது பந்தை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப, ரோஹித் ஷர்மா 12 ரன்களில் ஆட்டமிந்தார்.

100வது டி20 போட்டியில் களமிறங்கிய கோலி தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் பொறுப்புடன் ஆடி, 35 ரன்கள் எடுத்து விடைபெற்றார். 10 ஓவர்களில் இந்தியா 3 முக்கிய விக்கெட்களை இழந்து 62 ரன்கள் மட்டுமே சேர்த்து தடுமாறியது. சூர்யகுமார் 18 ரன்களில் வெளியேறினார். ஆட்டம் மெல்ல மெல்ல பாகிஸ்தான் வசம் நகர்ந்தது.

இந்தியா-பாகிஸ்தான்

முடித்துக் கொடுத்த ஹர்திக் பாண்டியா

இதையடுத்து ஜடேஜாவும் ஹர்திக் பாண்டியாவும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி ரன்களை உயர்த்தினர். 29 பந்துகளில் ஜடேஜா 35 ரன்களும் 17 பந்துகளில் ஹர்திக் பாண்டியா 33 ரன்களும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

இருவரும் இணைந்து 52 ரன்கள் சேர்த்ததே பாகிஸ்தானுக்கு எதிராக 5வது விக்கெட்டிற்கு ஒரு ஜோடி எடுத்த அதிகபட்ச ரன்னாக அமைந்தது. முன்னதாக 2007இல் தோனியும் உத்தப்பாவும் 46 ரன்கள் சேர்த்திருந்தனர்.

2021 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியன் விளைவாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார் ஹர்திக் பாண்டியா. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டங்களின்போது முக்கியமான தருணங்களில் விக்கெட்களை பறிகொடுத்தார். அதே துபாய் மைதானத்தில் இப்போது தன்னை நிரூபித்திருக்கிறார், ஹர்திக். பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்த ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகனாகவும் தேர்வானார்.

துபாயில் நடந்த கடைசி 16 டி20 போட்டிகளில் 15 ஆட்டங்கள் 2வது பேட் செய்த அணியே வெற்றிபெற்றிருக்கிறது.

  • டி20-இல் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக புவனேஸ்வர் குமார் திகழ்கிறார் (9 விக்கெட்).
  • முதல்முறையாக டி20-இல் 10 விக்கெட்களையும் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

ஹர்திக்கை பாராட்டிய பாகிஸ்தான் கேப்டன்

வெற்றிக்குப் பிறகு பேசிய ஹர்திக், “இறுதியில் நவாஸ் பந்துவீச வருவார் என்பதை அறிந்திருந்தேன். எங்களுக்கு 7 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன. ஒருவேளை 15 ரன்கள் தேவைப்பட்டிருந்தாலும் அதை முடித்துக் கொடுத்திருப்பேன்.

பவுலர்கள் என்னைவிட அதிக அழுத்தத்தில் இருப்பதாக உணர்ந்தேன். இறுதி ஓவரில் எனக்கு ஒரேயொரு சிக்சர் மட்டும்தான் தேவைப்பட்டது. மற்ற அனைத்தையும் எளிமையாக அணுக விரும்பினேன்,” என்றார்.

இந்தியா-பாகிஸ்தான்

“சில நேரங்களில் நாங்கள் சவால்களை எதிர்கொண்டோம். ஆனால் அனைத்தையும் சமாளித்து முன்னோக்கிச் செல்கிறோம். ஹர்திக் அணிக்குத் திரும்பியதில் இருந்து திறமையாகச் செயல்படுகிறார். அவருக்கு ஐபிஎல் தொடரும் சிறப்பாகவே அமைந்தது,” என்று கேப்டன் ரோஹித் சர்மா புகழாம் சூட்டினார்.

போட்டியை பாண்டியா அற்புதமாக முடித்ததாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸமும் பாராட்டு தெரிவித்தார். அவர், “நாங்கள் ஒரு 10 -15 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். இருந்தாலும் எங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தஹானி சேர்த்த சில ரன்கள் எங்களுக்கு உதவியது. இருந்தாலும் ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய வீரர்கள் சறுக்கியது எங்கே?

இந்தியாவை பொறுத்தவரை முதல் 7 வீரர்களுமே பேட்டிங் ஆடக்கூடியவர்கள். ஆனால் பேட்டிங்கில் மட்டுமே பங்களிக்கக்கூடிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அவ்வளவாக சோபிக்கவில்லை. பாகிஸ்தான் 160+ ரன் சேர்த்திருந்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு நெருக்கடியை அளித்திருக்கும்.

காரணம் ரோஹித் ஷர்மா, கே.எல்.ராகுல் பார்ட்னர்ஷிப் 3 பந்துகளைக்கூட தாண்டவில்லை. இருவருமே அடுத்தடுத்து விக்கெடைகளை இழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்ய குமார் யாதவ் 18 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்தார். 3 பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம், ஆல்ரவுண்டர்களுக்கு அழுத்தத்தையும் கொடுத்தது. எதிர்வரும் ஆட்டங்களில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் களத்தில் நங்கூரமிட்டால் மட்டுமே அதிக ரன்களை குவிக்க முடியும்.

விராட் கோலி தடுமாறினாரா?

கோலி

42 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு முக்கியமான கிரிக்கெட் போட்டியில் களமிறங்கினார் விராட் கோலி. அவர் எதிர்கொண்ட 2வது பந்தே எட்ஜில் பட்டது. கேட்சை பிடிக்க முயன்ற ஃபாகர் சமானுக்கு முடியாமல் போனது. ஒருவேளை விராட் கோலி அந்த பந்தில் விக்கெட்டை இழந்திருந்தால் நிலைமையே வேறு.

அதேபோன்று இரு முறை இன்சைட் எட்ஜாகி பந்து தப்பிச் சென்றது. தொடக்கத்தில் விராட் கோலி சற்று தடுமாறவே செய்தார். சமீபத்தில் மன நெருக்கடி குறித்து கோலி மனம் திறந்து பேசியிருந்தார். இருப்பினும் பந்துகளை நிதானமாக எதிர்கொண்டு 34 பந்துகளில் 35 ரன்கள் பதிவு செய்தார். இதில் ஒரு சிக்சர், 3 பவுன்டர்கள் அடக்கம்.

ரிஷப் பண்ட் vs தினேஷ் கார்த்திக்: யார் பெஸ்ட்?

ஆசிய கோப்பை

ரிஷப் பண்டிற்கு பதில் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் சேர்க்கப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இருப்பினும் இதைச் சிறந்த முடிவாகக் கருதுகிறார் பயிற்சியாளர் ராகுல் டிராவிட். ஒருநாள், டெஸ்ட் போட்டிகளில் பண்ட் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து வந்தாலும் சமீபத்தில் நடந்த டி20 போட்டிகளில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அவரது ஆட்டம் அமைந்திருக்கவில்லை. கடைசி 10 டி20 போட்டிகளில் பண்ட் சேர்த்தது மொத்தம் 171 ரன்கள் மட்டுமே. சராசரியாக 17.1.

“டி20 போட்டியை முடித்துக் கொடுப்பதில் பண்டை விட தினேஷ் கார்த்திக்கிற்கு அனுபவம் அதிகம். சமீபத்திய டி20 போட்டிகளில் தினேஷ் கார்த்திக் சிறப்பாகவே செயல்பட்டிருக்கிறார். இருப்பினும் ஜடேஜாவை தவிர்த்து இந்தியாவுக்கு ஒரேயொரு இடது கை பேட்ஸ்மேன் மட்டுமே விளையாடுவது இந்தியாவுக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம்,” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

Previous Story

புதிய அமைச்சர்கள் வரவு!

Next Story

பங்களாதேஷ் ஒருபோதும் இலங்கையாக மாறாது - ஹசீனா