சுதந்திர தினம்: வெள்ளையனே வெளியேறு இயக்க வரலாறு- விடுதலைக்கான இறுதிப் போராட்டத்துக்கு பெயர் வைத்த இஸ்லாமியர்

‘வெள்ளையனே வெளியேறு’

-நாம்தேவ் கட்கர்-

அது 1942 ஆகஸ்ட் 8 ஆம் தேதி மாலை. மும்பையில் உள்ள கோவாலியா டேங்க் மைதானத்தில் லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். சுதந்திரத்திற்கு முந்தைய மிகப்பெரிய, கடைசி போராட்டம் இங்கு அறிவிக்கப்பட இருந்தது.

காந்தியும் நேருவும்
சுதந்திரம் என்ற எண்ணத்தால் ஈர்க்கப்பட்ட மக்களால் மைதானம் நிரம்பி வழிந்தது. அவர்களுக்கு முன்னால் 73 வயது முதியவர் ஒருவர் நின்றிருந்தார். எதிரில் இருந்த கூட்டம் ஆவலுடன் அவர் பேசப்போவதற்காக காத்திருந்தது.

‘செய் அல்லது செத்து மடி’ என்று எச்சரிக்கும் தோரணையில் கைகளை உயர்த்திய முதியவர் 2 வார்த்தைகளை அறிவித்தார். இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சியின் கடைசி அத்தியாயம் இப்படித்தான் தொடங்கியது.

அந்த முழக்கம்தான் – ‘வெள்ளையனே வெளியேறு’.

அதை அறிவித்த முதியவர் – மகாத்மா மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

‘வெள்ளையனே வெளியேறு’ என்ற அறிவிப்பு கூட்டத்தில் பெரும் சலசலப்பை உருவாக்கியது.

பிரிட்டிஷ் எதிர்ப்பு முழக்கங்களின் எதிரொலிகளால் நிரம்பிய பம்பாய் வானமும், மறையும் சூரியனும், சுதந்திர விடியலைப் பற்றிய கனவைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

சுதந்திரத்திற்கு முந்தைய மிகப்பெரிய போராட்டம் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் என்று அறியப்படுகிறது. பல இந்தியர்கள் இந்த இயக்கத்தில் மூழ்கினர். நாடு முழுவதும் உள்ள சிறைகள் கைதிகளால் நிரம்பி வழிந்தன. இந்த இயக்கம் ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தது.

சிறைக்குச்சென்றவர்கள், தலைமறைவாக வேலை செய்து சுதந்திர ஜோதியை பற்ற வைத்தவர்கள் பற்றிய சில சம்பவங்களைத்தான் இந்த கட்டுரையில் சொல்லப்போகிறோம்.

அதற்கு முன், முதலில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற பெயர் மற்றும் இந்த இயக்கத்தின் அவசியம் ஆகியவற்றில் இருந்து தொடங்குவோம்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் கதை

வெள்ளையனே வெளியேறு
1942 ஜூலை 14 ஆம் தேதி வார்தாவில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஆங்கிலேயர்கள் உடனடியாக நாட்டை இந்தியர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட வேண்டும்’ என்று இங்குதான் முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு, ஒரு மாதத்திற்குள், அதாவது ஆகஸ்ட் 7-ம் தேதி காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மும்பையில் நடைபெற்று. ஆகஸ்ட் 8-ம் தேதி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் கோவாலியா டேங்க் மைதானத்தில் ஒரு வரலாற்று பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 10 மணிக்கு நிறைவடைந்தது.

இந்தக் கூட்டத்தில் நான்கு உரைகள் நிகழ்த்தப்பட்டன.

காங்கிரஸ் தலைவர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் உரையை நிகழ்த்தினார், பின்னர் பண்டித நேரு காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானங்களை வாசித்தார். பின்னர் நேரு முன்மொழிந்த தீர்மானங்களுக்கு சர்தார் வல்லபாய் படேல் ஒப்புதல் அளித்து உரை நிகழ்த்தினார்.

நான்காவது பேச்சாளர் மகாத்மா காந்தி. இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி மொத்தம் மூன்று உரைகளை நிகழ்த்தினார். இந்த உரைகளில் ஒன்று ஆங்கிலத்தில் இருந்தது, அதில் அவர் பிரபலமான முழக்கத்தை அறிவித்தார்- ‘Quit India’.

இந்த ‘Quit India’ பின்னர் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியில் ‘பாரத் சோடோ’ என்ற இந்த முழக்கம் தமிழில் ‘வெள்ளையனே வெளியேறு’ என்று ஆனது,

இந்த முழக்கம் உருவான கதையும் சுவாரசியமானது.

பிரகடனத்தின் வார்த்தைகளை உருவாக்கிய மும்பை மேயர்

இந்தியாவை விட்டு வெளியேற ஆங்கிலேயர்களுக்கு விடுக்கப்படும் இறுதி எச்சரிக்கை தீவிரமானதாக இருக்க வேண்டும். எனவே மகாத்மா காந்தி உறுதியான ஒரு முழக்கத்தைக் கண்டறிய பலரை கலந்தாலோசித்தார். இதற்கு நிறைய பதில்கள் வந்தன.

அதில் ஒன்று ‘கெட் அவுட்’. ஆனால் இந்த வார்த்தை அத்தனை நாகரீகமாக இல்லை.. எனவே காந்தி இந்த வார்த்தையை நிராகரித்தார்.

பின்னர் சர்தார் படேல் இரண்டு முழக்கங்களை பரிந்துரைத்தார் – ‘இந்தியாவைவிட்டு பின்வாங்கு’ (Retreat India) மற்றும் ‘இந்தியாவை விட்டு திரும்பிச்செல்'(Withdraw India) இவையும் அவ்வளவாக மனதை ஈர்க்காததால் அவையும் நிராகரிக்கப்பட்டன.

இதற்கிடையில், யூசுப் மெஹர் அலி Quit India ‘வெள்ளையனே வெளியேறு’ என்ற வார்த்தையைப் பரிந்துரைத்தார். மகாத்மா காந்தி உடனடியாக அதை ஏற்றுக்கொண்டார். இதற்கு முன் சைமன் கமிஷனை புறக்கணிக்கும் இயக்கம் நடந்தபோது, யூசுப் மெஹ்ரா அலிதான், ‘சைமன் கோ பேக்’ என்ற கோஷத்தையும் உருவாக்கினார்.

யூசுப் மெஹர் அலி காங்கிரஸின் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் காங்கிரஸில் சோஷியலிச சிந்தனையின் ஒரு முக்கிய தலைவராக இருந்தார். இந்த வரலாற்று இயக்கம் அறிவிக்கப்பட்ட இடமான மும்பை நகரத்தின் மேயராக அவர் இருந்தார்.

ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்பட்டது

‘வெள்ளையனே வெளியேறு’ (பாரத் சோடோ அல்லது சாலே ஜாவோ) என்ற முழக்கம் இந்தியா முழுவதையும் எழுப்பி, சுதந்திரப் போராட்டத்தின் இறுதிப் போரில் பங்கேற்கத் தூண்டியது.

மகாத்மா காந்தி சுதந்திரத்திற்கான இறுதிப் போராட்டத்திற்குத் தயாரானார். மறுபுறம் இந்தியர்கள் இந்த இயக்கத்தில் முன்னெப்போதும் இருந்திராத பங்கேற்பைப் பதிவு செய்யத் தொடங்கினர்.

போராட்டத்தின் தீவிரத்தைக் கண்ட ஆங்கிலேயர்கள் தலைவர்கள் மற்றும் ஆர்வலர்களை சிறையில் அடைக்கத் தொடங்கினர். கோவாலியா டேங்க் மைதானத்தில் பேசிய நான்கு தலைவர்கள் அதாவது காந்தி, நேரு, படேல் மற்றும் ஆசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின் இரண்டாவது நாளில் அதாவது ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை நால்வரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

காந்திஜி புனேவில் உள்ள ஆகா கான் அரண்மனையில் வைக்கப்பட்டார். இந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றவர்கள் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டனர். சிலர் விடுதலைக்காக சிறைக்குச் சென்றனர். மேலும் சிலர் இயக்கத்தை வலுப்படுத்த தலைமறைவாயினர். சுதந்திரக் கனவைத் தங்கள் தோளில் சுமந்த இவர்களின் கதைகள் இதயத்தை தொடுபவை. சில சுவாரசியமானவை. அவற்றில் சிலவற்றை இந்தக் கட்டுரையில் காண்போம்.

இயக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் நடத்திய துப்பாக்கிசூடு
இயக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் நடத்திய துப்பாக்கிசூடு

சேட்ஜி வேடத்தில் சானே குருஜி நடமாடிய போது…

பம்பாயிலிருந்து ‘வெள்ளையனே வெளியேறு’ என்று காந்தி அறிவித்தபோது, சானே குருஜி (பாண்டுரங் சதாசிவ் சானே) காந்தேஷில் உள்ள அம்மால்னரில் இருந்தார். நாட்டின் சோஷியலிஸ்டுகள் தலைமறைவாக இருந்து இந்த இயக்கத்தில் பங்கேற்பார்கள் என்பதை அவர் அறிந்தார்.

இந்த காலகட்டத்தில், சானே குருஜி சதாரா மற்றும் காந்தேஷ் பகுதி முழுவதும் பயணம் செய்தார் மற்றும் ஆர்வலர்களுடன் ரகசிய சந்திப்புகளை நடத்தி மற்றவர்களை வழிநடத்தினார் மற்றும் ஊக்குவித்தார்.

பம்பாயில் சானே குருஜி தலைமறைவாக இருந்த ஆர்வலர்களுடன் வாழ்ந்தார். அவர்களுக்கு சமைத்து கொடுத்தார்.

தலைமறைவு ஆர்வலர்கள் வாழ்ந்த இடங்களுக்கு சாந்த்வாடி, ராஜ்காட், ஹடல் ஹவுஸ் மற்றும் மூஷக் மஹால் போன்ற குறியீடு பெயர்கள் வழங்கப்பட்டன. தலைமறைவு ஆர்வலர்களை சந்திக்கச் செல்லும் போது சானே குருஜி மாறுவேடமிட்டுச் செல்வார். சில சமயங்களில் அவர் வேட்டி, கோட், உபாரணா (அங்கவஸ்திரம்) மற்றும் தலைப்பாகை அணிந்து ஒரு சேட்ஜி (தொழிலதிபர்) போல உடையணிவார். மேலும் சில சமயங்களில் அவர் கனமான செருப்புகள் மற்றும் போர்வைகளை அணிந்து ஒரு விவசாயி போல காட்சி அளிப்பார்.

ஒருமுறை டாக்டர் வேடத்தில் சானே குருஜி ஜெயப்பிரகாஷ் நாராயணனை சந்தித்து உணவு கொடுத்தார்.

1943 ஏப்ரல் 18 ஆம் தேதி சானே குருஜியின் தலைமறைவு வேலை நின்றது. ஏனெனில் ‘மூஷக் மஹாலில்’ இருந்து அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சானே குருஜியுடன், ஷிருபாவ் லிமாயே, என்.ஜி .கோர் உட்பட மற்ற 14 ஆர்வலர்ளும் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து அவர் ஏர்வாடா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏற்கனவே சிறையில் இருந்தவர்களின் வாழ்க்கையை எளிதாக்க அவர் முயன்றார். பின்னர் ஏர்வாடாவிலிருந்து அவர் நாசிக்கிற்கு மாற்றப்பட்டார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் மறைந்த பிறகு சானே குருஜி, ஜல்காவ் நகரில், 46 காளைகள் பூட்டப்பட்ட தேரில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார்.

மகாத்மா காந்தி

தன் உயிரை பணயம் வைத்து காந்தியை சந்தித்த அருணா ஆசஃப் அலி.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் முன்னணி பெண்மணியாக அருணா ஆசஃப் அலி காணப்படுகிறார். தலைமறைவாக இருந்து செயல்பட்டு சுதந்திரப் போராட்டத்தை புரட்சிகரமாக மாற்ற நினைத்த அவரின் மன உறுதியை மகாத்மா காந்தியால் கூட மாற்ற முடியவில்லை. இருப்பினும், காந்தியை சந்திக்கச்சென்ற அருணாவின் ஈடு இணையற்ற துணிச்சல் வரலாற்றில் பதிவாகியுள்ளது.

அருணா ஆசஃப் அலி, சித்தாந்தத்தால் ஒரு சோஷியலிஸ்ட் ஆவார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் சோஷியலிஸ ஆர்வலர்கள் ஒருவர் பின் ஒருவராக சிறைக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில், குற்றமன்னிப்பை ஏற்றுக்கொள்ளச்செய்ய ஜெய்பிரகாஷ் நாராயண் ஐஸ் கட்டியில் படுக்கவைக்கப்பட்டதாக செய்தி வெளியானது. நாடே இதனால் அதிர்ந்தது. இந்த நேரத்தில், அருணா அரசு மீது கடுங்கோபம் கொண்டார்.

இயக்கத்தில் பங்கேற்க இளைஞர்களைத் திரட்டுவதற்காக நாடு முழுவதும் அவர் பயணம் மேற்கொண்டிருந்தார். இவை அனைத்தையும் தலைமறைவாக இருந்து செய்யவேண்டி வந்ததால் அவரது உடல்நிலையும் மோசமடைந்தது.

அருணாவின் உடல்நிலை குறித்து காந்தி கவலைகொண்டார். தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார். இந்த வருகைக்கான பொறுப்பு ஜி.பி. பிரதானிடம் ஒப்படைக்கப்பட்டது.

காந்திஜியின் குடிசை புனேயில் பார்சி சானடோரியத்தின் பின்புறம் இருந்தது. சானடோரியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால், அங்கு அதிக போலீஸ் கெடுபிடி இருக்கவில்லை.இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி அருணா அந்த இடத்திற்கு மாறுவேடத்தில் வந்தார். அருணா பார்சி பெண்ணாக மாறுவேடமிட்டிருந்தார். காந்திஜி அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக, அவரை சந்திக்கும்போது ‘கபாடியா’ என்ற குறியீட்டு வார்த்தையை உச்சரிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

அருணா ஆசஃப் அலியை பார்த்த காந்தி, போராட்ட இயக்கத்தை நிறுத்திவிட்டு போலீசில் சரணடையும்படி கேட்டுக் கொண்டார்.

இருப்பினும், அருணாபாய், “நான் உங்களை மிகவும் மதிக்கிறேன். ஆனால் நமது எண்ணங்கள் அடிப்படை பண்பில் ஒத்ததாக இல்லை. நான் ஒரு புரட்சியாளர். புரட்சியாளராகவே செயல்படுவேன். உங்களால் முடிந்தால் என்னை ஆசீர்வதியுங்கள்.”என்றார்.

நமது பாதைகள் வெவ்வேறானவை என்று காந்தியிடம் சொல்லும் துணிச்சல் அவருக்கு இருந்தது. தன் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று தெரிந்தபிறகும் காந்தி தன்னை அழைத்தபோது அவரை சந்திக்கும் தைரியம் அருணாவுக்கு இருந்தது.

இருப்பினும் கடைசி வரை, அருணா ஆசஃப் அலி ஆங்கிலேயர்களின் கைகளில் சிக்கவில்லை. அவரை பிடிக்க உதவிசெய்வோருக்கு 5000 ரூபாய் சன்மானத்தை ஆங்கிலேயர்கள் அறிவித்திருந்தனர்.

‘ஜான்சி ராணி லட்சுமிபாய்க்குப் பிறகு சுதந்திரப் போராட்டத்தின் முன்னணிப் பெண்மணி அருணாதாயி’ என்று யூசுப் மெஹர் அலி, கூறியிருந்தார்.

திருமணமான இரண்டு மாதங்களில் சிறை சென்றார்

மகாராஷ்டிராவின் முதல் முதலமைச்சரான யஷ்வந்த்ராவ் சவான் 1942ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் அவர் மும்முரமாக பங்கேற்றார்.

‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டதால், யஷ்வந்தராவ் சிறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்திருந்தது.

‘நான் ஒரு தேசபக்தரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்’என்று கூறிவந்த வேணுதாயி, 1942 ஜூன் 2 ஆம் தேதி யஷ்வந்த்ராவை மணந்தார். திருமணமான முதல் சில ஆண்டுகளில் பல பிரச்சனைகளை சந்திக்கவேண்டி வந்தது. ஆனால் அவர் மனம் தளரவில்லை.

இந்த இயக்கத்தில் யஷ்வந்தராவ் மும்முரமாக ஈடுபட்டதால் வேணுதாயியும் கைது செய்யப்பட்டார். அன்று சங்கராந்தி பண்டிகை நாள். திருமணமான முதல் சங்கராந்தியன்று தன் மனைவி தன் காரணமாக சிறைக்கு செல்ல நேரிட்டதாக யஷ்வந்த்ராவ் அடிக்கடி வருத்தப்படுவார். இருப்பினும் வேணுதாயி இந்த சம்பவங்களை எல்லாம் மிகுந்த தைரியத்துடன் சமாளித்தார்.

அசாமின் கன்கலதா முதல் மாற்று அரசின் காஷிபாய் ஹனாவர் வரை

1997ஆம் ஆண்டு ‘சாதனா’ இதழில் ரோகிணி கவான்கர் இந்தியப் போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு பற்றி எழுதியிருந்தார். 1942 ஆம் ஆண்டு நடைபெற்ற இயக்கத்தில் பெண்களின் பங்கேற்பு குறித்து இங்கு அவர் சிறப்பாக எழுதியுள்ளார். இந்த இயக்கத்தின் இதயத்தை உலுக்கும் தருணங்களையும் இது பிரதிபலிக்கிறது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி கன்கலதா பருயாவின் துணிச்சல் அழியாத இடம் பெற்றது. 1942 இல் கன்கலதா வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் குதித்தார். காவல் நிலையம் முன்பு கொடி ஏற்றி மரியாதை செலுத்த இளைஞர்களை கூட்டிச் சென்றார். அங்கு கன்கலதா உரையாற்றினார்.

கொடியேற்றத்திற்கு முன் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் கன்கலதா கொல்லப்பட்டார். சுதந்திரத்திற்காக தன் உயிரைத் தியாகம் செய்த முதல் இளம் பெண் என்று வரலாறு பதிவு செய்திருக்கிறது என்று கவான்கர் எழுதுகிறார்.

தலைமறைவு வானொலி நிலையத்தை நடத்தி வந்த காந்தியவாதி டாக்டர்.உஷா மேத்தா இன்று பலருக்கும் தெரிந்தவர். உஷா மேத்தா 1942 இல் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவர் மும்பையில் ஒரு டெரஸ்ட்ரியல் வானொலி நிலையத்தை நடத்தி வந்தார். இந்த வானொலி நிலையத்திலிருந்து, அவர் இரண்டாம் உலகப் போர் பற்றிய தகவல்களையும், நாட்டின் இயக்கங்கள் பற்றிய தகவல்களையும் ஒலிபரப்பினார்.

இந்த வானொலி நிலையத்தை எப்போதும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்ற வேண்டும். இந்த மையத்தை கண்டுபிடிக்க போலீசார் தீவிரம் காட்டினர். உஷா மேத்தாவின் பணி பற்றி அறிந்திருந்த ஒரு துரோகி அவரை காட்டிக்கொடுக்க தீர்மானித்தார். இதன் விளைவாக வானொலியில் செய்திகளை ஒலிபரப்பும்போது அவர் பிடிபட்டதாக கவான்கர் தெரிவித்தார்.

இவற்றில் மிகவும் மனவேதனைக்குரிய மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம், இணை (parallel) சுதந்திர அரசின் காஷிபாய் ஹன்வார் தொடர்பானது.

சதாரா மாவட்டத்தில் நானா பாட்டீல் அமைத்த இணை சுதந்திர அரசின் பெண் ஆர்வலர்கள் ஆங்கிலேயர்களிடமிருந்து கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானார்கள். காஷிபாய் ஹன்வார் என்ற பெண்ணின் பிறப்புறுப்பில் போலீசார் மிளகாய் பொடியை அடைத்தனர். இந்த அவமானத்தையும், சித்ரவதையையும், கொடுமையையும் அவள் தாங்கிக்கொண்டார், ஆனால் கடைசி வரை எந்த தொண்டரின் பெயரையோ, முகவரியையோ கொடுக்கவில்லை.

Previous Story

 ஜனாதிபதி-ரிஷாட் உடன்பாடு:ஒரே நாடு ஒரே சட்டம் குப்பையில்!

Next Story

ஈரான் செயற்கைக்கோள் ரஷ்யாவுக்கு உதவுமா?