கோத்தபயவுக்கு எவ்வித சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை- சிங்கப்பூர்

இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு எந்த சிறப்புச் சலுகையும் அளிக்கப்படவில்லை என்று சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை 14 அன்று மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்ற கோத்தபய ராஜபக்ச நகரத்தின் மையத்தில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து தனியார் இல்லத்திற்கு அவர் மாறியதாகவும் கூறப்படுகிறது. கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரிடம் புகலிடம் கோராமல் தங்கியிருக்கிறார்.

விசா அடிப்படையிலேயே ராஜபக்சவுக்கு சிங்கப்பூர் அரசு அனுமதி அளித்துள்ளது. கோத்தபயாவின் விசா காலம் வரும் 14 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் தங்க கோத்தபயாவுக்கு ஏதேனும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பப்பட்டு வந்தது.

இதற்கு சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பதில் கூறும்போது, “பொதுவாகவே சிங்கப்பூர் அரசு யாருக்கும் சலுகைகள் தராது. வெளிநாடுகளைச் சேர்ந்த முன்னாள் அதிபர்களுக்கும் பிரதமர்களுக்கும் சிறப்பு சலுகைகளை எங்கள் அரசு வழங்குவதில்லை.அதன்படி கோத்தபய ராஜபக்சவுக்கு நாங்கள் எந்த கூடுதல் சலுகையும் அளிக்கவில்லை” என்றார்.

சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் கே.சண்முகம் கூறும்போது,”தகுந்த பயண ஆவணங்கள் உள்ள வெளிநாட்டினரைத் தான் சிங்கப்பூர் அனுமதிக்கிறது. நாட்டிற்கு பாதகமான வெளிநாட்டினரை எந்த நிலையிலும் அனுமதிப்பதில்லை.” என்றார்.

Previous Story

 ஜோசப் ஸ்டாலின் சற்று முன்னர் கைது

Next Story

ஒரே குடும்பத்தில் 4 வைத்தியர்கள் !